Thursday, September 9, 2010

"பாலிடாயில் குடுங்க"

"ஐயோ போய்ட்டியே", "நீ இல்லாம" ங்கிற மாதிரி ஒரே புலம்பல் .அதுல ஒருத்தரோட "ஐயோ" கணக்கு நூற தாண்டிபோய்கிட்டு இருக்கு.பின்ன என்ன சாவு வீட்டுல எந்திரன் பாட்டா போடுவாங்க? நமக்கு மணிக்கு ஒருக்கா தம்மடிக்கலைன்னா நாக்கு நமநமங்கும். வெளிய போக முடியாத இக்கட்டான சூழ்நிலை. இன்னிக்கு இந்தியா நியூஸீலாந்து கிரிக்கட் மேட்ச் வேற. அழுகை சத்தமும் கூச்சலும் சேர்ந்து தலையெல்லாம் வலிக்குறமாதிரி இருக்கு. என்னய பொருத்தவரைக்கும் பரிட்சை பேப்பரும், சாவும் ஒன்னு தான், கேள்விகள படிச்ச அஞ்சு நிமிஷத்துக்கு தான் அதோட தாக்கம், அப்புறமா சகஜ நிலைக்கு வந்துடுவோம்.சொன்னா நம்ப மாட்டிங்க இப்படித்தான் பேச்சு கேக்குது இங்க.


"பெரியவர் கிட்ட சொல்லியாச்சா?"(அக்கரை )

"ஆச்சு கார்ல கெளம்பிட்டாராம்"(விளக்கம்)

"சூமோ தான?"(வம்பு )

"இப்போ இன்னோவா வாங்கிட்டாரு"(அறிவு )

"அப்படியா? சூமோ ப்ரேக் சரியா இல்லன்னு சொல்லிகிட்டே இருப்பாரு , நானின்னும் அம்பாஸிடர மாத்தல".(பெருமை)

இதுக்கு பேசாம என்னய மாதிரி மௌனமா இருக்கறதே மேல் என்ன சொல்றீங்க?ஆண்கள் தான் இப்படின்னு பாத்தா நம்ம தாய்குலம் அதிபயங்கரம்! "காப்பி சொல்லி ஒரு மணி நேரம் ஆகுது இன்னும் வரலை".

யாராவது புதுசா வீட்டுக்குள்ள வந்தா மட்டும் திரும்ப 'ஐயோ' கணக்கு சென்செக்ஸ் மாதிரி எகிறும் அப்புறம் திரும்ப சகஜம்.

"அவன் கூட்டணி விசயத்துல இன்னும் தெளிவா இல்லப்பா"

இல்லேன்னா செல்ஃபோன்ல அசிலி பிசிலி பாட்டு, ரொம்ப பவ்யமா எடுத்து "ஒரு பெரிய காரியத்துல இருக்கேன், அப்புறம் பேசறேன்".

அல்லது "எலக்ட்ரிக் தான?"சரவணன், அவன் தான் ரொம்ப பொறுப்பா இருக்குறதா காட்டிக்கனும்னு , மடக்கின நாற்காலிய விரிக்குறதும் , விரிச்ச நாற்காலிய மடக்குறதும்னு சும்மா கண்ல, கைல மாட்டுனதெல்லாத்தையும் வெச்சி ஒரு வழி பண்ணிக்கிட்டிருந்தான்.எல்லாம் செல்வி முன்னாடி சீன் போடத்தான், என்னோட மொறப்ப கண்டுக்காம "நீ நடத்துடி".

                                                     ------------------------------------------------------

டாக்டர் சொன்னதை கேட்டபோது புவியீர்ப்பு எனக்கு மட்டும் பாரபட்சம் காட்டியது.

"தம்பி ஒனக்கு எவ்வளவு வருசமா இந்த பழக்கம்?"

"பன்னெண்டாவதுலேந்து டாக்டர்"

"அதாவது பதினேழு வயசுலேந்து?"

"அதான் சொன்னேனே பன்னெண்டு வயசுலேந்து". டாக்டர் புருவம் உயர்ந்தது ஆச்சரியமா? அசூசையா எனக்கு அது அவசியமில்லை. வீட்டில் இதை சொன்னால் எனக்கு முன்னால் எல்லாரும் போய் சேர்ந்து விடுவது உறுதி.மரணத்துக்கு பின்னும் சமூகத்தில் அமரத்துவம் கொண்ட நோய்.விரக்தியாகத் தான் வெளியில் வந்தேன்.

திக்கு தெரியாமல் தவித்த என் முன் திக்கை குச்சியால் அலசியபடி ஒரு கண் பார்வையை தவிர்த்திருந்த ஒருவர்.வாழ்க்கையிலே முதல் முறையாக உதவி செய்ய தோன்றியது."கிராஸ் பண்ணனுங்களா?", "ஆமாம் சார்" , அவரைப் பொருத்தவரை 'சார்' என்பது என் குரல்.அவர் சாலையை கடக்க உதவினேன் அவர் சட்டை பையில் இருந்த ஐநூறு ரூபாய் என் கைக்கு வரும்போது சாலையின் மறுபுறம் இருந்தோம்.தொட்டில் பழக்கம் என்று என்னை சபித்துக் கொண்டே, "பணம் கீழ விழுந்துச்சு, இந்தாங்க", சிரித்தபடி," தேவை இல்லாமலா அது உங்க கைக்கு வந்துச்சு, எதோ அவசரம்னு தானே எடுத்தீங்க பரவாயில்ல வெச்சிக்கங்க". என் நோயும் அதன் காரணத்தையும் விட இந்த நொடி என்னை கொன்றது.நேராக கடைக்கு போனேன்..."அண்ணேன்..

அடப்பாவிங்களா சும்மா செந்தமிழ்ல ஃப்லேஷ்பேக் சொல்லி தலைப்புக்கு வரலாம்னாம்னா அதுக்குல்ல நாலு பேரு என்னய தூக்கி கிட்டு ஆம்புலண்ஸ்ல ஏத்துரானுங்க... கோரஸ்ஸா "ஐயோ" வேற,இப்போ தலைவலி இன்னும் ஏறுதே...
இருங்க பாஸ் இப்போ வந்திடரேன்...

Wednesday, September 1, 2010

சைட் டிஷ் 2 - வெள்ளைச்சாமி

எல்லாருக்கும் ஒரு சைட் டிஷ் இருக்குற மாதிரி எல்லாரையும் சைட் டிஷ் ஆக்குறவங்க சில பேர் தான் இருப்பாங்க அந்த வகைல "வெள்ளைச்சாமி"ன்னு பட்டபேரு என்னோட ஒரு நண்பனோட நண்பனோட நண்பனோட நண்பனோட .... நண்பனுக்கு.நெஜ பேரு என்னன்னு மறந்து போச்சு. ஆள பாத்தா "ஷ்"ல பேரு முடியறா மாதிரிதான் இருப்பாரு (அதாங்க அந்த விக்னேஷ், சுரேஷ், சதீஷ் வகைராக்கள்)பட்டப்பெயருக்கு காரணம் மட்டும் நல்லா நியாபகம் இருக்கு. இவர் ராத்திரி எழுந்து "வைதேகி காத்திருந்தாள்" விஜயகாந்த் மாதிரி துடிப்பா இருப்பாரு,ஒரே வித்தியாசம் இவர் பாடமாட்டார் பாடா படுத்துவார்.
என்னோட நண்பர்கள் சிலர் வேலை தேடி பெங்களூருக்கு வருவாங்க, யார் இன்டர்வியூ, வேலைதேடி, அல்லது பரீட்சைன்னாலும் மடிவாலாவுல இருந்த நம்ம தோஸ்த் அருண் அடைக்கலம் குடுப்பார். அங்க போனா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நண்பர் குழாம் இருக்கும். அப்படி ஒரு நண்பனுக்கு அடைக்கலம் கேட்டு போகும்போது தான் வெள்ளைச்சாமிய முதல் முறையா (கடைசியும்) பாத்தேன்.அருண் சொன்னான் , "அடுத்த வாரம்தான உன் ஃப்ரெண்ட் வர்றான், பாத்துக்கலாம்". இது வரை அவன் இல்லயென்று சொன்னதே இல்லை. "நாளைக்கு லீவு தான இங்கையே தங்கிட்டு ரெண்டு ரௌண்ட் ரம்மியும் நாலு ரௌண்ட் MC யும் போட்டு போயேன் " என்றான். "மீட் வெள்ளைச்சாமி"ன்னு அறிமுகபடுத்தினான். நானும் அறையிலிருந்த சகாக்களோட ஐக்கியமாகிட்டேன்.ரம்மி களைகட்ட அப்பப்போ மட்டும் பேசின வெள்ளைச்சாமி கொஞ்சம் சுருதி கூடக்கூட ரொம்பவே பேசினான். ரம்மி, சரக்கு, உணவு எல்லாம் முடிய ராத்திரி 12:30 ஆகிட்டது. எல்லாரும் படுக்கும் முன் வெள்ளைச்சாமி அலாரம் செட் பண்ணிட்டு மெத்தையில படுத்துகிட்டான்.. சரியா ஒரு மணிக்கு அலரம் அடிக்க அரை போதையில் நான் எழுந்து கிட்டேன், அருண் என்னவோ ஆஃபீஸ் போகிறவன் போல் ஃப்ரெஷா உட்கார்ந்துகிட்டான்.வெள்ளைச்சாமி "இன்றைய ஹிட் லிஸ்ட் குடுங்க " என்றதும் என்னைத் தவிர எல்லாருமே ஒரு பெயர், ஃபோன் நம்பர் அப்புறம் சில தகவல் இருந்த பேப்பர குடுத்தாங்க.எல்லாருமே ரொம்ப ஃப்ரெஷா இருந்தது தான் எனக்கு ஒரே ஆச்சரியம்.எனக்கு சரக்கு எஃபக்ட்டு, தூக்க கலக்கம் எல்லாம் போக இந்த வித்தியாசமான சூழல் வேற.என்னோட குழப்பத்த புரிஞ்சிகிட்ட வெள்ளைச்சாமி," பாஸ் உங்களுக்கு யார் மேலியாச்சும் செம காண்டா இருந்தா, அவங்க பேரு, லேன்ட்லைன் நம்பர் மட்டும் குடுங்க, ஒரு பூஜை செஞ்சிடலாம்" அப்டின்னு விளக்கம் குடுத்தான்."இருக்காரு இருக்காரு..எனக்கு தெரிஞ்சு ஒரு..."ன்னு நான் சொல்ல ஆரம்பிக்கும்போதே "ஸ்டாப் பாஸ், அந்த டீட்டெயில ஒரு பேப்பர்ல எழுதி குடுங்க". குலுக்கல் முறையில் குலுக்கி முத சீட்டை எடுத்தான் . "நம்ம முதல் பலி கடா லால்குடி குருநாதன்( என்னால் பரிந்துரைக்கப் பட்டவர்) , ஹௌசோனர்ங்குற திமிரில ஒங்க கிட்ட அலப்பரய குடுத்திருக்காரு ஓகே கொஞ்சமா கலாய்ச்சாப் போதும்னு சொல்றீங்களா?"ன்னு ஃபோன் அடிச்சான் வெள்ளைச்சாமி...மொபைல் ஸ்பீக்கர் ஆன் செஞ்சி விட்டான்.

பதினைந்துக்கும் மேல் ரிங்கடித்ததும் பதட்டமா ஒரு குரல்

குருநாதன்: "யாரு?"

வெள்ளைச்சாமி: "ஹலோ சௌக்கியமா?"

குருநாதன்: "யாரு?"

வெள்ளைச்சாமி: "நான் யாராயிருந்தா சௌக்கியமான்னு சொல்லுவீங்க?"

குருநாதன்: "நான் லால்குடி குருநாதன்"

வெள்ளைச்சாமி:"அது தெரியும் சார்.உங்களுக்கு சுகுமாரன் தெரியுமா?"

குருநாதன்:"சு..கு..மா...ரன்னு யாரையும் தெரியாதே"

வெள்ளைச்சாமி:"கைய குடுங்க சார், சேம் பிஞ்ச், எனக்கும் தெரியாது, கீச் கீச் மரக்கட்டை டோண்ட் டச் மீ, ஒரு மரத்த தொடுங்க சார், அவசரதுக்கு வேணும்னா ஒங்க மண்டைய தொடலாம் இல்லேன்னா உங்க வொய்ஃப் ஒரு கட்டை தானே தொட்டுக்கங்க"

குருநாதன்:"டேய் யாருடா நீ? பொறுக்கி"

வெள்ளைச்சாமி:"கேள்வியையும் நீங்களே கேட்டு பதிலையும் நீங்களே சொன்னா எப்புடி? அப்புறம் சார் சௌக்கியமா? வொய்ஃப் நல்லா இருக்காங்களா?"

குருநாதன்: "போலீஸ்ல புடிச்சி குடுப்பேன், பொறுக்கித் **ழி"

வெள்ளைச்சாமி:"சும்மா சொல்ல கூடாது இந்த 'ழ'கரம் நல்லா வருது சார் ஒங்களுக்கு, தமிழுக்கே அது தான் அழகு"

குருநாதன்:"ஃபோன வெக்க போறியா இல்லயா?"

வெள்ளைச்சாமி:"ஏன் சார் மெண்டல் மாதிரி கத்துறீங்க, ஒரு முத்தா குடுங்க வெக்கிறேன்"

குருநாதன்:"ச்ச ச்ச"ஃபோன கட் பண்ணிட்டாரு பாவம்.எல்லாரும் கொஞ்ச நேரம் கன்னாபின்னான்னு சிரிச்சோம் ஒரு ரெண்டு நிமிஷம் கழிச்சு பண்ணப்ப எங்கேஜ்டு டோன் கேட்டு, திருப்தியா "இனிமே காலைல தான் ஃபோன ஒழுங்கா வெப்பார் ,அடுத்து யாருன்னு பாப்போம் யாருப்பா அது பஜனை வாத்தியார் மூர்த்தி ? "

அவரோட பேர போட்டு குடுத்த பங்காளி "அவரு ரொம்ப சாதி வெறி உள்ளவரு மச்சி. RSS ல இருக்காரு, அதான் கொஞ்சமா கலாய்ச்சா நல்லா இருக்கும்"

வெள்ளைச்சாமி "எப்படி இவர தெரியும்?"ன்னு கேட்டதுக்கு போட்டு குடுத்த பங்காளி "என்னோட கணக்கு வாத்தியார்".

"அத்தச் சொல்லுங்க பங்காளி சும்மா சாதி அது இதுன்னு கதைய விடுற?கணக்கு வாத்தியார் மேல கடுப்பாகாம இருக்க முடியுமா?"

மறுபடியும் ஒரு ஃபோன் கால்.வேற குரல்ல பேசினான் வெள்ளை.மூர்த்தி: "ஹலோ " (செம்ம தூக்கத்துல இருந்திருப்பாருன்னு குரல்லயே தெரிஞ்சிச்சு)

வெள்ளைச்சாமி: "ஹலோ சார், இயேசு கிறிஸ்து மேல விசுவாசம் வெய்யுங்க சார்"

மூர்த்தி:"என்னது?"

வெள்ளைச்சாமி:"அவர் சகல பாவங்களையும் கழுவி உங்களை நல்வழி படுத்துவார் சார்"

மூர்த்தி:"உங்களுக்கு யார் இந்த நம்பர குடுத்தது?"

வெள்ளைச்சாமி:"சார், இயேசு கிறிஸ்து தான் சார் குடுத்தார்"

மூர்த்தி:"நான் யாரு தெரியுமா?"

வெள்ளைச்சாமி:"லைட்ட போடுங்க ஒரே இருட்டா இருக்கு ஒன்னும் தெரியல"

மூர்த்தி:"இப்போ ஒனக்கு என்ன வேனும்டா?"

வெள்ளைச்சாமி: "ஒரு உம்ம தெரிஞ்சாகனும், நீங்க "மேட்டர்"ல எக்ஸ்பர்ட்டா சார் ? அதான் உங்க ஏரியா முழுக்க உங்கள பஜனை வாத்தியார்ன்னு கூப்புடறாங்க"

(இதை எதிர்பார்க்காத நான் சத்தமா சிரிச்சிபுட்டேன். )

மூர்த்தி வாத்தியார் : நாசமா போய்டுவ

வெள்ளைச்சாமி: "விஷ் யூ த சேம் சார், குட் நைட், பஜனை கண்டின்யூ பன்னுங்க ஐ மீன் தூக்கத்த"ன்னு சொல்லி தானே வெச்சிட்டான்.

மறுபடியும் எல்லாரும் சேர்ந்து வெடி சிரிப்பு. இப்போ அருண் சீட்டு "பழைய ஃபிகரோட அம்மா"

வெள்ளை : "அப்பன் எங்க?"

அருண்: "துபாய்ல"ரெண்டாம் தாட்டி தான் அந்தம்மா வந்து எடுத்தாங்க

அந்தம்மா: ஹலோஓஓஓஓஓஓஓஓஓஓஓ

வெள்ளைச்சாமி(கொஞ்சம் அழும் குரலில்): அம்மா மனச கொஞ்சம் திட படுத்திக்கங்க

அந்தம்மா:ஐயோஓஓஓஓஓஓஓஓஓஓ என்னது?

வெள்ளைச்சாமி: மதியம் ஒரு பதினோரு மணிக்கு...ஹு ஹு ஹு(அழுகை)

அந்தம்மா:ஐயோ என்ன??

வெள்ளைச்சாமி: தெகிரியமா கேளுங்கம்மா

அந்தம்மா:ஐயோ என்னாச்சு?

வெள்ளைச்சாமி:ஒரு மீட்டிங்குக்கு போன எடத்துல,

அந்தம்மா:ஐயோ.....

வெள்ளைச்சாமி:காந்திய சுட்டு கொன்னுட்டாம்மா கோட்ஸே

அந்தம்மா: ஐயோ... யாருன்னு சொன்னீங்க?

வெள்ளைச்சாமி சைகை காட்ட ரூமில் இருந்த அனைவரும் சேர்ந்து ஒருமிச்சு அழுதோம்.

அப்பவே ஃபோன கட் செஞ்சிட்டான் வெள்ளைச்சாமி."ஆச்சு, இப்போ ஒரு ஃபாலோ அப் கால் அப்புறம் VIP கால் பாக்கி இருக்கு" ன்னு அலுத்துகிட்டான் வெள்ளை.அருண் டீட்டெயில் சொன்னான்,"நேத்து ஒருதன் கிட்ட ஃபோன் பண்ணி 5 கிலோ உளுந்து அப்பளமும், 700 அரிசி அப்பளமும் ஆர்டர் பண்ணியிருந்தான் வெள்ளை , அந்த ஆளுக்கு தான் ஃபாலோ அப் கால்,VIP கால்ங்குறது பிரபலமானவங்களுக்கு பண்ணுற கால், அத வெள்ளை தான் சஸ்பெண்ஸா செய்வான், வெய்ட் அண்ட் ஸீ".

அடுத்த கால்ல வெத்தலை பாக்கு வாயில போட்டவன் மாதிரி பேசினான் வெள்ளைச்சாமி.

வெள்ளைச்சாமி: "என்ன மிஷ்டழ் ழமேஷ் " (மிஸ்டர் ரமேஷ்)

ரமேஷ்: எஸ் ஸ்பீகிங்க்

வெள்ளைச்சாமி:"நீங்க ரொம்ப நன்னா ஷ்பீக் பண்றேள் ஆனா வொர்க் செரியா இல்லயே"

ரமேஷ்: யார் சார் நீங்க?

வெள்ளைச்சாமி:"புரொஃபஷர் TK பேஷறேன், நேதிக்கி பொண்ணு ஷீமந்தம்னு அப்பளம் ஆர்டர் பண்ணேன் , நன்னா மூஞ்சில கரிய பூஷிட்டேள் சார்"

ரமேஷ்: ஓ சாரி சார்.... நீங்க குடுத்த அட்ரஸ் கண்டுபுடிக்க முடியல...ரொம்ப சாரி சார்

வெள்ளைச்சாமி:" ஷாரி , முடியலன்னு ஈஷியா ஷொல்லிட்டேள், ஆனா ஷீமந்தம் கேன்ஷல் பண்ணிட்டாளே மாப்ளையாத்து பேழ்."

ரமேஷ்: "அப்பளாத்துக்காக. போய்..."

வெள்ளைச்சாமி:"பண்ணிட்டாளே. சரி பாஷ்ட் இஷ் பாஷ்ட், நாளைக்கு வெச்சிழுக்கேன், கொண்டு வந்துடுங்கோ சாழ் ப்லீஷ்"

ரமேஷ்:சார் அட்ரஸ் கொஞ்சம் தெளிவா சொல்லுங்கோ.

வெள்ளைச்சாமி: ஷொல்றேன் , அதுக்கு முன்னாடி மிஷ்டழ் ழமேஷ், ஒரு சின்ன ஃபேவர், வரும் போது கொஞ்சம் ஷ்ரமம் பாக்காம எல்லா அப்பளத்தையும் பொரிச்சி எடுத்துண்டு வந்துடுங்கோஓஓஓஓஓஓ

ரமேஷ்: டேய் யாருடா நீ கைல கெடச்ச வக்கா"

வெள்ளைச்சாமி: "கைல கெடைக்க நான் ஒண்ணும் கொசு இல்லடா...பர்ர்ர்ர்ர்ர்ர்ர் டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்" ஃபோன் கட்!

"இன்றைய யாருன்னு நான் பேசும்போது உங்களுக்கே தெரியும்"

ஃபோன் எடுக்கபட்டதும் ஒரு அப்பாவி இலைஞன் குரலில்

வெள்ளைச்சாமி: பெரிய ஐயா இருக்காருங்களா?

எதிர் முனை: இருக்காருங்க தூங்குறாரு

வெள்ளைச்சாமி: நான் லன்டன்லேந்து பேசறேங்க இங்க பகல்,கண்டிப்பா அவர் கிட்ட பேசனும்.

பெரிய ஐயா கிட்ட ஃபோன் போச்சு, இப்பவும் எனக்கு சஸ்பெண்ஸ் தான்.

ஐயா: யாருப்பா அது?

வெள்ளைச்சாமி:" ஐயா, தாத்தா .. அப்பா என்ன திட்டுங்கப்பா என்ன அடிங்க" (ஒரே அளுவாச்சி)

ஐயா: அளுகாதப்பா நான் இருக்கேன்பா தாத்தா இருக்கேன்பா உனக்கு என்ன ப்ரெச்சனை?

வெள்ளைச்சாமி(தேம்பிகிட்டே):ஐயா..எனக்கு 19 வயசு ஆகுதுங்க, லன்டன்ல 3 வருசமா ரூம் மேட்ஸோட சேர்ந்து..ஹூம்..ஹூம்..தொடர்ந்து மூனு வருசம் தப்பு பண்ணா கோடி ரூபாய் குடுத்தாலும் ஒண்ணும் பண்ண முடியாதுன்னு சொன்னீங்களே

ஐயா: "ஐயோ அத வேண்டாம்னு எவ்வளவு தடவ சொல்லியிருக்கேன் தமிழ்நாட்டு இலைஞர்கள் கிட்ட ஒண்ணும் கவலப் பட வேண்டாம் இந்தியா வந்ததும் என்ன பாரு, ஆனா 25 வயதுக்குள்ளாற இருக்கிறதுனால் ஒண்ணும் பயப்பட வேண்டாம் "

வெள்ளைச்சாமி: அப்போ எனக்கு ஒண்ணும் ப்ரச்சனை இல்லையே?

ஐயா: இல்ல டா கண்ணு

வெள்ளைச்சாமி: அப்டீன்னா நான் இன்னும் ஒரு ஆறு வருசதுக்கு...

ஐயா:6 வருசத்துக்கு?

வெள்ளைச்சாமி: அடிச்சிகட்டூங்களா?

மௌனமா ஃபோன வெச்சிட்டாரு ஐயா!!அடுத்த நாள் கெளம்பும்போது வெள்ளை "டச்ல இருங்க பாஸ், உங்ககிட்ட லேண்ட்லைன் இருக்கான்னு" கேட்டான். நான குடுப்பேன்??

அப்புறம் நொய்டால கால் சென்டர்ல இருந்தான் இப்போ டச்ல இல்லை !