கோக்கக் ஃபால்ஸில் தவணை முறையில் நனைந்துவிட்டு , நடையைத் துவக்கினோம்."படங்க்" என்கிற உப்பும் மஞ்சல்பொடி சேர்த்து வருத்த பொரியுடன், கடலை, பொரித்த முழுநீள பச்சை மிளகாய், பச்சை வெங்காயம் , எலும்பிசம்பழச் சாரு கலந்து கொடுக்கப்படும் சமாச்சாரம்.குளித்தவுடன் கொறிக்க ஏற்றதாக இருக்குமென்பதால் அதை வாங்கினோம் .பண்டத்தின் பெயரென்னவோ ஒரு பின்னவீனுத்துவ நாவலின் முதல் ஆறு வரிகள் போல் கரடு முரடாக இருந்தாலும் , அது மிகவும் எளிமையாகவும் சுவையாகவும் இருக்கும் என்பதை உடுப்பி கோவிலில் சத்தியம் செய்யலாம்.வழக்கம் போலவே , பெல்காமில் வேலைக்கு சேர்ந்த இந்த ஐந்தாண்டுகளில் தான் கற்ற எல்லா கன்னட சொற்களையும் ஒரே சொற்றொடரில் பயன்படுத்தியபடி ரவி "காரா ஜாஸ்தி , ஸ்வீட்டு பேடா , ஈருள்ளி ஜாஸ்தி" என்றான்.ஆளுக்கோரு படங்க் பொட்டலதுடன் நடையைத் தொடர்ந்தோம்.படங்க் தீரும்போது அருண் தான் கத்தினான் "ஏய் தமிழ்ல ஏதோ எழுதியிருக்கு இந்த பேப்பர்ல".போன மாத ராணி கிடைத்தால் கூட படிக்கும் அளவுக்கு அங்கு தமிழ் வறுமை எங்களிடத்தில் இருந்ததால் இதைக் கூட விட மனது வரவில்லை.அது ஒரு டைரியிலிருந்து கிழிக்கப்பட்ட காகிதம்.நாள் கிரமப்படி அதை வரிசைபடுத்தினோம்.
இனி டைரி...............
டிசம்பர் 27
"டெல் மீ சம்திங்க் அபௌட் யுவர்செல்ஃப்" என்ற சம்பிரதாயக் கேள்வியோடு நேர்காணலைத் துவக்கினேன்.வசுதாவின் வனப்பின் காரணமாக என் பார்வை நேர்காணலாக இல்லாமல் ,கொஞ்சம் புத்தியின் கோணலுக்கு ஏற்ப தாழ்ந்து நேர்கோணலாக சென்றது."ஐ அம் வசுதா , ஐ ஹாட் மை ப்ரைமரி எஜுகேஷன்..." என்று அவள் சொல்லச் சொல்ல வலுக்கட்டாயமாக என் பார்வையை நேர்படுத்திக்கொண்டேன்."....மை ஃபாதர் இஸ் நோ மோர் , மதர் இஸ் அ டெய்லர்" . ஒரு இந்திய ஏழைக்குடும்ப டெம்ப்ளேட்டில் கச்சிதமாக பொருந்தியது.அழகு , ஏழ்மை , படிப்புத்தகுதி ."எப்போ வேலைல சேரமுடியும்?"என்றேன்.அவசரமாக.கண்களில் நீர் முட்டியவாறே "உடனே , எப்போ வேணும்னாலும்" ."சரி நாளைக்கே சேந்துக்கோ , ஆல் தி பெஸ்ட்" என்று கையை நீட்டினேன்.அவள் கைகுலுக்களில் அழுத்தமும் , கையின் மென்மையும் ,சில்லென்ற ஐஸ்கிரீமில் சூடான குலாப் ஜாமுன் விழுந்தது போல் இனித்தது. இந்த இரவு அலாஸ்கா ஹைவே போல் நீண்ட இரவாக இருக்கும் :-( ..
குட் நைட்!
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
டிசம்பர் 28
இன்று காலை வசுவை ஒருவன் பைக்கில் கொண்டுவிட்டதும் ரொம்பவே பதறிவிட்டேன், அவனைப்பற்றி தெரிய வேண்டியது அவசியம் என்பதால் நானே வலிய சென்று பேச்சு கொடுக்தேன்,"குட் மார்னிங்க் வசு,
சார் யாரு?"."இது எங்க அண்ணன் மோகன் , அண்ணா இது என்னோட MD ரமணி".மோகனின் ஹலோவில் நேற்றுட்கொண்ட மலிவான மதுவின் நெடி லேசாக வந்தது.ஏழ்மை மற்றும் குடிப்பழக்கம் சேர்ந்த,ஒரு
அழகிய பெண்ணின் அண்ணன். மீண்டும் அதே இந்திய ஏழைக்குடும்ப டெம்ப்ளேட்!."மோகனுக்கு அக்கௌன்ட்ஸ் நல்லாத் தெரியும், அதான் உங்க கிட்ட சொல்லி வேலை கேக்கலாம்னு கூட்டி வந்தேன்" என்றாள் வசு.
"தாராளமா...இன்னிக்கே சேரலாம்...பர்ஸனல் டிபார்ட்மெண்ட் சந்தானம் கிட்ட சொல்லி ஒடனே ஜாயின் பன்னிக்கலாம்" என்று நான் சொல்லும்போதே சந்தானம் வந்தது நல்ல சகுனமாகபட்டது.மோகன் சந்தானத்திடம் "சார் நான்.." என்று துவங்கும் முன்பே சந்தானம் எங்கள் நிறுவனக் கொள்கையை சொன்னார், இங்கே சார்-மேடம் பிஸ்னஸ் கிடையாது,ரமணி உள்பட எல்லாரையும் பேர் சொல்லி கூப்பிடலாம்.வசுதாவின் சிரிப்பில் கட்டிலைக் கண்டேன் நான். அவள் தோள் மேல் என் கையை போட்டபடி உள்ளே செல்ல , நன்றியோடு பார்த்தான் மோகன். இவனை வைத்தே நினைத்ததை சாதிக்கலாம்!! குட் நைட், சுவீட் ட்ரீம்ஸ் :-)
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
டிசம்பர் 30
"அவசரமா புனே போகனும், கெளம்பு வசு , கார்லயே போகலாம்" என்றதற்கு கொஞ்சம் தயங்கிப் பின் "அண்ணாவும் கூட வரலாமா?" என்றாள்.அவனை எப்படியாவது கழற்றிவிட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் சம்மதித்து,கிளம்பினோம்.முன் சீட்டில் மோகன் அமர , பின் சீட்டில் நானும் வசுவும் அமர்ந்தோம்.பெல்காமை விட்டு கிளம்பும்போது கொஞ்சம் ஆஃபீஸ் விஷயங்கள் பேசினாலும், சிறிது நேரத்தில் பேச்சு மாறி
என் மேலை நாட்டு படிப்பு மற்றும் , நாற்பதாண்டு கடந்தும் திருமணமாகாத கதை, பல லட்சம் மதிப்புள்ள சொத்து பற்றி எல்லாம் சொன்னேன்.வசு அமைதியாக இருக்க மோகன் பேசினான், "என்னோட அம்மா நான் பதிமூனு வயசிருக்கும்போது போய் சேந்துட்டாங்க , அப்பா ரெண்டாம் கல்யாணமாத்தான் வசுவோட அம்மாவ கட்டிகிட்டார், இவ போறந்த நாலு வயசுலயே, அவரும் போய்ட்டாரு, இவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையனும்.. ஹூம்..."."அதுக்கு நான் இருக்கேனே" என்று அவள் தலையை தடவிக்கொடுக்க அவள் அழுதுகொண்டே என் மீதி சாய்ந்தாள்.அவள் கண்ணத்தின் ஈரம் என் தோல்களில் பரவ புனே வந்து சேர்ந்தோம்.வழக்கமாகத் தங்கும் "ஹோட்டல் மிலன்"இல் ஒரு டபுள் ரூமும் , ஒரு சிங்கிள் ரூமும் வாடகைக்கு எடுத்திருக்கிறோம்."மோகன், நாளைக்கு காலைல வசுவுக்கு கொஞ்சம் பேங்க்ல வேலையிருக்கு, அதை பத்தி கொஞ்சம் பேசனும் அதுனால, நானும் வசுவும் ஒரே ரூம்ல தங்கறோம் " என்று சொன்னதும், மோகன் ஓ யெஸ் என்று சொல்லி விட்டான்."நாளைக்கு வசு பேங்க் போனதும் , நீங்க என்ன பத்து மணிக்கு வந்து பாக்க முடியுமா? உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசனும் மோகன்". "கண்டிப்பா வருவேன், கண்டிப்பா...",அவன் சிரிப்பதைப் பார்த்தால் அவனுக்கு புரிந்தது போல் தான் தோன்றுகிறது, நாளை பார்ப்போம்."கீழே போய் எதாவது சாப்டுங்க மோகன்" என்று பாரின் திசையைக் காட்டி பணமும் கொடுத்தாயிற்று இனி அவன் தொந்தரவு இருக்காது.வசு என்னறையில் தான் இருக்கிறாள்.நான் இதை எழுதும்போது பத்தடி தூரத்தில் நின்றுகொண்டு உடை மாற்றிக் கொண்டிருக்கிறாள்.நான் எழுதுவது அவளைப்பற்றி என்று தெரியாமல். ஏஸியிலும் சூடாக இருக்கிறேன் நான்.இன்று குட் நைட்டாக இருக்குமா என்பது சந்தேகமே :-(
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"ச்ச என்ன ஆச்சுன்னு தெரியலைனா தலையே வெடிச்சிடும்.. வாங்கடா போய் பாக்கலாம்" என்று ரவி முட்டி மோதி படங்க் வண்டியை நோக்கி ஓடினான், நாங்களும் பின் தொடர்ந்தோம் ஓட்டமும் நடையுமாக அந்த தள்ளுவாண்டியை முற்றுகையிட்டோம்.குழம்பியபடி எங்களைப் பார்த்த படங்க் விற்ற பெரியவர், கொஞ்சம் சுதாரித்தபின் அந்த டைரியின் கடைசிப் பக்கத்தை எடுத்து தனது ஹரிக்கேன் விளக்கை துடைக்க துடைக்க, கரியேரிக் கிழிந்தது ஏதொ ஒரு ஆண்டின் கடைசி -நாள்.கீழே எரியபட்ட டைரியின் முன் அட்டையில் எழுதியிருந்த
மிஸ் ரமணி ரதிலீலா MS., MBA.,
மேனேஜிங்க் டைரக்டர்,
ரெயின்போ கார்மெண்ட்ஸ் , பெல்காம்.
என்பதைப் பார்க்க நாங்கள் மூவருமே தவறிவிட்டோம்.
.