Thursday, December 26, 2013

விலிமுடி




மின்சாரம் தாக்கப் பட்டது போல் அல்லது யாரோ உலுக்கியது போல் கையை விலுக்கென்று உதறி எதன் மீதோ இடுத்துக் கொண்டேன். உறக்கம் கொஞ்சம் மிச்சம் இருந்தது, மீதி இருட்டு,நெற்றியில் வியர்வை .இதுவரை நான் பார்த்திராத, படுத்திராத‌ ஆனால் பரிச்சயமான‌ கட்டில்.நாக்கின் வற‌ட்சியை போக்க எடுக்கும் எந்த முயற்சிக்கும் உடல் ஒத்துழைக்கவில்லை. என் உடலில் நாக்கு மட்டுமே இருப்பது போல் இருந்தது,அதுவும் வற‌ண்டு போய்.வெளிச்சம் கண்களுக்கு பழகத்துவங்க , அல்லது கண்கள் அந்த இருட்டுக்கு பழகத்துவங்க, நாசியில் சூடான பாலாடையின் வாடை தெரிந்தது.தலைமாட்டில் ஒரு 650 மில்லி திரவத்தை சுமக்கும் திறனுள்ள ஒரு கண்ணாடி பாட்டில் இருப்பது அதை நான் பார்க்காமலே தெரிந்தது.ஆறுக்கு மேற்பட்ட பிளேடுகளைக் கொண்ட உத்திர மின் விசிறி அசுர கதியில் சுழன்று என்னை நோக்கி இறங்கியது.கண்க‌ள் மீண்டும் சொருக...

சட்டென்று பிளிறல் ஒலி கேட்டு சற்று சுதாரித்தேன். கிட்டத்தட்ட சாலையின் ஒட்டில் நான் ஓட்டிக் கொண்டிருந்த கார் வகையறியாதிருந்த மரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.பிளிறல் ஒலி எழுப்பியதன் மூலம் என்னை காப்பாற்றிய லாரியை ஓட்டிக் கொண்டிருந்தவர் பார்க்க என் அப்பாவை போல தெரிந்தார் ,ஆனால் லாரியோ, லாரியைப் போல் தெரியவில்லை. வழக்கத்துக்கு மாறாக ஸ்டியரிங் இடப்புறம் இருப்பதாகப் பட்டது.கிளட்ச்சைக் காலால் துளாவியும் கிடைக்கவில்லை.

எத்தனை தூரம் இப்படி தூங்கியபடி ஓட்டினேன் என்று புரியவில்லை. இடம் பரிச்சயமானதாக இல்லை.பிரேக்கை மிதித்து தற்காலிக நிம்மதி பெறலாம் என்று பிரேக்கை மிதித்தேன்.இருந்தும் சீறியது கார். கட்டுப் பாட்டை இழக்க,பள்ளத்தில் இறங்கியது. பக்கத்து இருக்கையில் இருந்த இன்னும் சூடு குறையாத பீட்ஸா , பிளாஸ்டிக் தட்டோடு கீழே சரிந்தது. பள்ளத்தாக்கில் விழ இருக்கும் விபரீதம் உணர்ந்து பிரேக்கை மீண்டும் அழுத்தி மிதிக்க செய்த முயற்சியை வீணாக்கியது, பின்னிருக்கையிலிருந்து உருண்டு வந்து பிரேக்குக்கு அடியில் சொருகிக்கொண்ட அந்த உயரமான காலிக் கண்ணாடி  கல்யாணி பாட்டில்.இவ்வளவு நடந்தும் பிளிறல்  ஒலியை தவிர வேறு எதுவும் எனக்கு நினைவில் இல்லை. என்னை யாராவது உலுக்க மாட்டார்களா?