ம்ம்ம்மே மேஷம்:
~~~~~~~~~~~~~~~~~
மென்மையான மனம் கொண்ட மேஷ ராசிக்கார வாசகர்களே, இந்த ஆண்டு உங்களுக்கு மிகச் சிறப்பான ஆண்டு.கோச்சார அடிப்படையில், கடன் தொல்லை மெல்ல நீங்கும்.இதுவரை உங்களுக்கு கடன் கொடுத்துவிட்டு பின் பணத்தைத் திரும்ப கேட்டு நச்சரித்தவர்கள், வசை பாடி பின் விலகுவார்கள்.புதிய பணியன் , சொக்கா வாங்குபவர்கள் அதில் ஓட்டை இருக்கிறதா என்று பார்த்து கவனமாகப் பார்த்து வாங்கவும்.க்ரெடிட் கார்டுகளைத் தவிர்ப்பது நன்மை அளிக்கும். உங்களுக்கு அனுகுலமான நடிகர் சிம்பு ஆகவே அவர் சம்பந்தப்பட்ட படங்கள் பார்ப்பது நல்ல பலன் அளிக்கும்.மட்டன் பிரியாணியை இரவு நேரங்களில் தவிர்ப்பது நல்லது.
ரிஷபம்:
~~~~~~~~
ரீல் விடுவதில் ரோல் மாடல்களான ரிஷப ராசிக் காரர்களே, முட்டி மோதினால் தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்பது உங்கள் கிரஹ நிலைகளின் நிலை உரைக்கின்றன.புதிய வீடு வாங்குபவர்கள் அதில் குளியலறை இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.பழைய உங்கள் வீட்டை விற்கும் போது அதில் உங்கள் கணவரோ அல்லது மனைவியோ விற்ற பின்னும் இருக்காமலிருப்பதில் கவனம் செலுத்தவும்.காலையில் ஒருமுறை வலது காலால், தரையில், ஜல்லிக்கட்டு காளை போல் காலைத் தேய்த்தால் பித்தவடிப்பு நீங்கி மூட்டி வலி சிறப்பாக வரும்.
மிதுனம்:
~~~~~~~~
மிதமான வென்னீரில் குளிக்கும் மிதுன ராசி அன்பர்களே, நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். சபீனா செலவு மிச்சமாகும்.இரட்டிப்பு என்ற அடிப்படையில் உள்ள மிதுன சின்னத்திற்கேற்ப நீங்கள் அணியும் செருப்பு, சாக்ஸ் எல்லாம் இரட்டிப்பு எண்ணிக்கையில் கிடைக்கும், உங்கள் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.உங்கள் அனுகுலமான நடிகர் ஜெமினி கணேசன், உணவு வெண்டைக்காய் சாம்பார்.வெண்ணிற ஆடை மூர்த்தியின் இரட்டை அர்த்த வசனங்களை தினமும் இரு முறை சொல்வது , உங்கள் தொழில் ஸ்தானத்தைப் (?!)பலப்படுத்தும்.
கட கட கடக ராசி:
~~~~~~~~~~~~~~~~~
கம்பியூட்டர் மூளை கொண்ட கடக ராசி நண்பர்களே. வாகனம் ஓட்டும்போது அதில் பெட்ரோல், டீசல், மாடு, செயின், சக்கரத்தில் காற்று உள்ளதா என்று சரி பார்த்து செல்லவும். கூடவே லைஸென்சும் இருந்த்தால் கூடுதல் பலன் கிட்டும்.கருப்பு உங்கள் அதிர்ஷ்ட நிறமாதலால், நான்கு பேருக்கு பிளாக்கில் டிக்கெட் எடுத்துக் கொடுத்து ஏதாவது படத்திற்கு அனுப்பவும்.தினமும் காலையில் பாலையா போல் ச்ச்ச்சும்ம்ம்ம்ம்ம்மா கட கடன்னு என்று அரை நாழிகை கூச்சலிட்டால் , அண்டை வீட்டார் மூலம் இது வரை இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும்.
சிம்ம ராசி:
~~~~~~~~~~
சின்னப்புள்ளத்தனமா இருக்கும் சிம்ம ராசி செல்வங்களே,உங்கள் அதிர்ஷ்டமான ஹேர் ஸ்டையில் மஷ்ரூம்.சிங்கம் 1 அல்லது 2 இதுவரைப் பார்க்காதவர்களுக்கு இந்த ஆண்டு ஒரு பொன்னான ஆண்டு.சன் டி வியில் வாரம் ஒரு முறைப் பூட்டு சிம்மத்தின் பலத்தை பலப்படுதுவதன் மூலம் , உங்கள் மாமியாரிடம் உங்கள் செல்வாக்கு உயரும்.ஏப்பம் விடும்போது 'ப்பேவ்' என்று சப்தம் வராமல் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
கன்னி ராசி:
~~~~~~~~~~~
கன்னி முயற்சியிலே எதையும் சாதிக்கும் திறன் படைத்தவர்கள் கன்னி ராசி நேயர்களே.இரண்டாம் வீட்டில் உள்ள குரு வாடகை கொடுக்காததால் , சனி என்று திட்டப்பட்டு பெட்டி படுக்கைகளோடு வெளியில் வீசப்படும் காட்சி உங்களை குதூகளப்படுத்தும்.உள்ளாடை அணியும் பழக்கம் உள்ளவர்கள் அதை துவைத்து அணிவது கெட்ட பலன்களை நீக்கும்.அனுகூலமான அம்பையர் தர்ட் அம்பையர், அனுகூலமான ஸ்டம்ப், லெக் ஸ்டம்ப்.
துலா ராசி:
~~~~~~~~~~
தூய எண்ணம் கொண்ட துலா ராசிக் காரர்களே .ஆண்கள் துப்பட்டா அணிவதை தவிர்க்கவும், பெண்கள் உங்கள் சௌகரியம் படி இருக்கவும்.த்த்த்தூ என்று மேலதிகாரியைக் காறித் துப்பாமல் இருப்பது ஊழியர்களுக்கு நல்லது எச்சில் விரையமாகாது.ஊழியர்களால் காறித் துப்பபடும் தொழிலதிபர்களுக்கு அதை துடைத்துப் போடுவது நல்லதல்ல என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.
'தும்பீவா தும்பக் குடத்தின்' பாடலை ஒரு முறையேனும் கேட்டால் நன்மை பயக்கும்.
விருச்சிகம்:
~~~~~~~~~~~
விரும்பி சோதனைகளை எதிர்கொள்ளும் விருச்சிக இராசி தேள்களே.கொட்டும் முன்பு கொடுக்கில் விஷம் போதிய அளவில் இருக்கிறதா என்று சரி பார்ப்பது நல்லது.புகைப் பழக்கம் இருந்தால் அறவே அதை விடுவது நன்று.(இழுத்த புகையை, இழுத்து விடுவது அதனினும் நன்று)கேன்ஸரைத் தவிர்க்கலாம்.புளியோதரை சாப்பிடுவது ஏமாற்றத்தைக் கொடுக்கும்.அனுகுலமான திசை தென் மேற்கு, வட கிழக்கு மற்றும் , தென் வடக்கு!
தனுசு:
~~~~~~
தன்னடக்கம் கொண்ட தனுசு ராசி அன்பர்களே. குறிக்கோளை விடாமல் ....
மன்னிக்கவும் நீளம் அதிகமானதால் இத்தோடு இதை நிறுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம்...அடுத்த புத்தாண்டில் இதே பலன்களோடு திரும்பி வருகிறேன், இன்முகத்தோடு, இளிச்ச வாயோடு நீங்கள் பலன்களைக் கேட்கத் தயாராக இருக்கும் போது விடுவேனா உங்களை?
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!