காசியபனின் "அசடு" புதினத்தைப் படித்தால் ஒரு துன்ப உணர்ச்சி ஏற்படுவது நியாயம் தான்.ஆனால் சந்துரு என்ற இந்த அசடு நகைச்சுவை அசடாக உங்கள் மனதில் வளம் வருவான்.பருத்த உருவமும், எத்திசையிலிருந்து பார்த்தாலும், முற்புதரை நினைவூட்டும் தலைமுடி அமைப்பும்,(வாங்கிய புதிதில் ) வெள்ளையாக இருந்த வேட்டியும், சரியாக பராமரிக்கப் படாத கோயில் கதவை திறந்து மூடும்போது வெளிவரும் சத்ததை ஒத்த குரல் வளமும்,இன்ன பிற 'உம்'களும் சேர்ந்து, தன் வயதை பன்மடங்குகளாக்கி நாற்பதுகளில் காட்சி அளிப்பான் சந்துரு. சபரி மலைக்கு மாலை அணிந்திருப்பானோ என்ற ஐய்யத்தை எழுப்பும் அவன் கரிய வேட்டி அவனது சிறப்பம்சம்.அவன் வீட்டுக்கு ஒருமுறை போனபோது அவன் தந்தையின் புலம்பலை சமாளிக்க திணறினேன்."நீயாவது சொல்லப்டாதா?உருப்படர வழியப் பாருன்னு சொல்லு அவன்கிட்ட" என்ற ரீதியில் துவக்கி அவர் பேச்சை முடித்ததும், இடியுடன் கூடிய மழை நின்றதுபோல் பிரமை ஏற்படும்.இடி அவர் குரல், மழை அவர் தெறிக்கும் தாராளமான எச்சில்.
அப்போதுதான் கவனித்தேன்,ஓலையில் செய்யப்பட்ட ஒரு தொப்பியும், திருவிழா மற்றும் திருமண மண்டபங்களில் விற்கப்படும், கலர் கண்ணாடியும் அணிந்துகொண்டு மிரட்டலாக நின்றான் சந்துரு."டேய், நான் துப்பறியும் கம்பெனி ஆரம்பிச்சிருக்கேன், நீயும் சேந்துக்கோ" என்றவன் "நம்ம தோப்புல நடக்குர தேங்காய் திருட்ட கண்டுபிடிக்கறது தான் நம்ம முதல் கேஸ்" என்று ஒரு குண்டை இலவச இணப்பாக தூக்கி போட்டான்.வந்த சிரிப்பை அடக்க மிகக் கடினமாக இருந்தது.பொறுமையிழந்த அவன் தந்தை"மொதல்ல அவன் ஜட்டி எங்க இருக்குன்னு கண்டுபிடிக்க சொல்லு, நாய் ஜென்மம்" என்று வழக்கத்தை விட கூடுதலாக சிகப்பு மையை விநியோகித்தார்.இப்படியாக ஒரு துப்பறியும் 'அ'சிங்கம் எங்கள் ஊரில் உருவானது.அவன் தந்தையின் கோபம் எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை, மாறாக ஷெர்லாக் ஹோம்ஸே தனக்கி உதவியாளராக வருவார் என்ற மிதப்போடு காணப்பட்டான்.
சந்துரு என்னையும் தன்னோடு சேர்ந்து துப்பறிய(!) வற்புருத்தியதால், சில நாட்களுக்கு அவனை சந்திப்பதை தவிர்த்தேன்.அவன் எனது சிறந்த நண்பன் இல்லையென்றாலும், அவன் செய்யும் கோமாளித்தனத்தை ரசிக்கவே அவனோடு சில மணித்துளிகளை விரையம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தேன்.அப்படி ஒரு நாள் சென்றபோது நாளிதழ்களிலிருந்து வெட்டபட்டு தரையில் கோணலாக கிடத்தப்பட்டிருந்தார்கள் சச்சின், கபில் தேவ் மற்றும் கவாஸ்கர்.சம்பவம் நடந்த இடம் ஒன்றை மட்டும் தெளிவுப்'படுத்தியது', சந்துரு கிரிக்கெட் கிளைக்கு தாவிவிட்டது என்று!"டேய் என்னோட கிரிக்கெட் டீம்ல நீயும் சேந்துக்கோ, ஒனக்கு நான் சொல்லி குடுக்கறேன், வீட்ல சும்மா சோம்பேறித்தனமா இருக்காத" என்று தன் கன்னி பேச்சை தொடங்கினான்.அவன் எந்த ஒரு வாக்கியத்தையும் "டேய்" இல்லாமல் துவக்கி நான் அறியேன்.அவன் எனக்கு கற்றுகொடுக்கும் அளவுக்கு நான் ஒன்றும் மோசமான ஆட்டக்காரன் அல்ல.என்னை சோம்பேறி என்று சொன்னால் அவனது சோம்பேரித்தனத்தை விளக்க எந்த மொழியிலும் வார்த்தைகளே இருக்காது.கிரிக்கெட்டை இன்டோர் விளையாட்டாக ஆடுபவன் அவன், எட்டு வயதிற்கு மேல்பட்டவர்க்கு அவன் குழுவில் இடம் இல்லை, தான் எப்போதுமே வெற்றிப் பெற வேண்டும் என்று அவன் செய்த ஏற்பாடு அது, இருப்பினும் தோற்பான் சந்துரு.
சில நாட்களுக்கு இந்த விளையாட்டு அவன் வீட்டில் தொடர்ந்தது.எந்நேரமும் கையில் மட்டையோடு காட்சியளிக்கலானான்.மட்டை என்று நான் சொன்னது கிரிக்கெட் பேட்டின் தமிழாக்கம் என்று தவறாக நினைக்க வேண்டாம், அது சாட்ஷாத் தென்னை மட்டையே.சென்ற வருடத்தின் தினசரி நாட்காட்டி அட்டைகளிரண்டு அவன் முட்டிக்கு கீழ் பாவடை நாடாவால் கட்டபட்டிருந்தது."என்ன அது" என்று கேட்டால் "கிரிக்கெட் பேடு" தெரியாதா உனக்கு என்பான் எனவே எதற்கு வம்பு நான் எதுவும் கேட்பதாய் இல்லை.அவன் அப்பா-அம்மா, மற்றும் தாத்தா-பாட்டி யின் கருப்பு வெள்ளை புகைப்படங்களைத் தாங்கும் பணியை மட்டுமே செவ்வனே செய்துகொண்டிருந்த தொலைகாட்சி பெட்டி என்கிற டப்பாவை அவனது மட்டை பதம் பார்க்கும் வரை இந்த இன்டோர் கிரிக்கெட் தொடர்ந்தது.புகைப்படங்கள் தாங்கி அதாவது தொலைக்காட்சி பெட்டி உடைந்த்தாக நான் கேள்விப்படதற்கு அடுத்த நாள் காலையில்,அவன் நொண்டிக்கொண்டே வந்து மட்டையை சாக்கடையில் வீசினான்.முகம் அழுததால் வீங்கியிருந்தது.கழிவு நீரோடு உறவாடிய மட்டையில்,எழுதுகோளால் சிற்பி சந்துரு செதுக்கியிருந்த எம்.ஆர்.எஃப் (தமிழில்) எழுத்துக்கள் மறைய தொடங்கியது. "என்ன சச்சின் சந்துரு சௌக்கியமா?" என்று கேட்க தொன்றினாலும், அவன் காலில் இருந்த பிளாஸ்திரியும் புண்களும் என்னை மௌனியாக்கியது.இதெல்லாம் முடிந்து ஒரு வாரம் கழிந்தது.பள்ளிகூடம் போகும் வழியில் என்னை நிறுத்தி, என் டிபன் டப்பாவை கேட்டு வாங்கினான்."டேய் சாதம் தானே" என்று உறுதிபடுத்திகொண்டு உடனே மறைந்து சென்றுவிட்டான்.பசி ஒரு புறமும், அவன் செய்கையின் காரணம் அறியும் ஆவல் மறுபுறமும் பள்ளி முடிந்ததும் அவன் வீட்டுக்கு விரைய செய்தது.
பிரபல நாளேடுகள் , நீளமாக வெட்டி லங்கோடு போல் கிடத்தியிருந்தான்.சில விளக்குமாற்று குச்சிகாலுக்கு அருகில் என் டிபன் டப்பா இருந்தது.காத்தாடி செய்யும் இலக்கோடு எதையோ செய்ய முற்படுவது புரிந்தது.வழக்கம் போல்"டேய் இந்த காத்தாடிய கோடி வீட்டு சீனு கடைல வித்தா நாளு காசு பாக்கலாம்" என்று பெரிய மனுஷ தோரணையில் சொன்னான்.சில காத்தாடிகளை காய வைப்பதற்காக திண்ணையில் வைத்துவிட்டு வந்தான்.என்னை நிலைகுலைய வைத்தது அவன் தந்தையின் குரல், "எங்கே அந்த துப்பு கெட்ட கழுதை?அவனால பாரு திண்ணை மேல ஒரு கழுத, இந்த தோஷத்தை கங்கா ஜலத்துல முழுகினாலும் போக்கமுடியாது" என்று நான் இது வரை கேட்காத ஒரு ஐதீகத்தை அள்ளி வீசினார்.அவர் சொன்னது போல் ஒரு கழுதை காத்தாடியை போணி செய்து கொண்டிருந்தது,"தோஷம் கழுதைக்கோ?" என்று எனக்கு தோன்றியது.
"இனிமே தனி ரூம் கிடையாது ஒனக்கு, பெரிய கலக்டர் உத்தியோகம் தட்டு கிட்டு போறது" என்று கத்திக் கொண்டே, அவனது விலை மதிப்புள்ள அல்லது மதிப்பற்ற குப்பைகளை எடுத்து வீசி எறிந்தார், அவற்றுள் என் டிபன் டப்பாவும் அடக்கம்.விழுந்த அதிர்ச்சியிலிருந்து மீளாத டப்பாவின் மூடி நெலிந்துவிட்டது.அதை மூடமுடையாமல் நான் தவித்த தவிப்பு வேதனையானது.
தந்தை என்ற வேதாளம் இப்படி முரண்டு பிடித்தாலும், தன் முயற்சிகளிலிருந்து சற்றும் மனம் தளராத சந்துரு,தன் பரிவாரங்களுடன், மடிப்படிக்கு அடியில் உள்ள இருட்டு பிரதேசத்திற்கு அங்Kஉள்ள எலிகளுக்கும் கரப்பான்களுக்கும் போட்டியாக குடி பெயர்ந்தான்.தந்தைக்கு எதிராக ஒரு "எதிர் நீச்சல்"
அவன் தாயைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே. எங்கள் ஊருக்கு அடுத்துள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியை.பள்ளியில் மாணவிகளையும், வீட்டில் கணவரையும் மிரட்டும் அளவில் கால்பங்காவது சந்துருவை கண்டித்திருந்தால் படிப்பையும் அவன் ஒரு கை பார்த்திருப்பான்.ஆனால் எதுவும் ஒரு மாதத்திற்கு மேல் நீடித்திருக்காது என்பது அறிந்ததே.சந்துருவை தபால் மூலம் எதையோ படிக்க வைக்கும் முயற்சியில் இறங்கியதாக கேள்வி.
நானும் வெளி மாநிலத்தில் பொறியியல் கல்லூரியில் சேர்ந்ததால், இரண்டு வருடங்களுக்கு அவனது துக்ளக் செயல்களிலிருந்து ஓய்வு கிடைத்தது.இரண்டு வருடங்களுக்கு பிறகு விடுமுறைக்காக ஊர் திரும்பிய அந்த காலையே சந்துருவையும் அவன் அப்பாவையும் எதேச்சையாக சந்திக்க நேர்ந்தது.குளிக்காமலே முழு பேண்ட் சட்டை அணிந்திருந்த அவன் வித்தியாசமாக தென்பட்டான்.அவன் அப்பா "எப்படி இருக்க?" என்றுவிட்டு என் பதிலை எதிர்பார்க்காமல்,"சரி நாழி ஆறது, வரேன்" என்று விட்டு போய்கொண்டே இருந்தார்.அவர் "னாழி ஆறது" என்றபோது தெவைக்கு அதிக்மாக அல்லது தேவையே இல்லாமல் சந்துரு தன் இடதுகையை ஆட்டி தான் கடிகாரம் அணிந்துகொண்டிருந்ததை பிரகடனப் படுத்தினான்.என் ஒரு கையில் ஸூட்கேசும் மறு கையில் கனமான தோள்பையும் இருந்ததால் என்னால் தலையில் அடித்துகொள்ள முடியாமல் போயிற்று.
சந்துருவை பற்றி நான் கேள்விப்பட்டது பின் வருமாறு....
"இவன் இனி தேரமாட்டான் " என்றுணர்ந்த அவன் அப்பா அவனை தனது "சந்துரு ஹார்ட்வேர்ஸ்" என்ற கடைக்கு தனக்கு உதவியாக(?!)அழைத்து செல்கிறார்.மகன் இனி தேரமாட்டான் என்று உணர அவருக்கு ஏன் இவ்வளவு ஆண்டுகள் ஆனது என்று தெரியவில்லை.அவரது இந்த முடிவு அவர் மனைவிக்கு அவர் மீதான முதல் மரியாதையை ஏற்படுத்தியிருக்கும்."At last you have taken a fine decision" என்று தன் ஆங்கிலப் புலமையை(!!) வெளிபடுதியிருப்பாள்."அந்த சின்னசனியன் ஒரு ஹிம்சைன்னா இந்த பெரிய சனியன் அதுக்கு மேல, ஆத்துல இருக்கும்போது இங்கிலீஷ் என்ன வேண்டிகெடக்கு" என்று நொந்து போயிருப்பார் அந்தகால ஆறாம் க்லாஸ் அப்பா.மனைவி சொன்ன ஒவ்வொரு ஆங்கில வார்த்தைக்கும் தனித்தனியாக அர்த்தம் தெரிந்தாலும், எல்லாமாக சேர்ந்து அவரை மிரட்டியிருக்கும் பாவம்.
அன்றிரவே சந்துருவை சந்தித்தேன்,தன்னோடு கடைக்கு வரவேண்டும் என்று அவன் வற்புருத்தவே வேறு வழியின்றி அடுத்த நாள் அங்கு சென்றேன்.
தனது தபால் பாட புத்தகங்களையும் தேவையின்றி சுமந்து வந்தான்.அந்த கடையை பற்றி ஒன்றுமே தெரியாதபோதும் எல்லாம் தெரிந்தது போல் பேசினான்.தொலைப்பேசி அழைப்புகளைப் பெரும்பாலும் அவனே தாவித் தாவி எடுத்தது வேடிக்கையாக இருந்தது.மிக ஸ்டைலாக பேசுவதாக ஒரு எண்ணம் இருந்திதிருக்க வேண்டும்.-ணன் அவனை கவனிக்கிறேனா என்று உறுதிபடுத்திகொள்ள தவறவில்லை.மதியம் பசிப்போரட்டம் துவங்கும்போது நல்லவேளையாக அவன் அப்பா, "ரெண்டு பேரும் போய் சாப்டுங்கோ" என்றபடி இருபது ரூபாய் தாளை தாராளமாக நீட்டினார்,அதே சமயம் கௌன்டமணியின் "தலையா","மண்டையா" , "வாயா" விடுபட்ட அனைத்து "யா"க்களும் கச்சிதமாகப் பொருந்தும்படியான உருவத்தில் ஒருவர் சலுகையாக கடைக்குள் வந்தார்."வாய்யா செல்வம்" என்று கடமைக்காக சந்துருவின் அப்பா வரவேற்றார்.
"படிக்க வேண்டிய பைய்யன கடைக்கு கூட்டியார்ரது தான் மனசுக்கு கஸ்டமா இருக்கு" என்று அக்கரையாக சொன்னார்."போதும் இவன் படிச்சு கிழிச்சது, வீட்ல இருந்து படிடான்னு சொன்னா, துப்பறியும் கம்பெனி, காத்தாடி ஃபேக்டரி,கிரிகெட் கிளப்,ரசிகர் மன்றம்னு காச கரியாக்கறான் கம்மனாட்டி" என்று பக்கத்தில் உள்ள எட்டு கடைகளுக்கு மட்டும் கேட்கும்படி கத்தினார் அவன் அப்பா.சினம் கொண்ட சிறுத்தைப் போல் உறுமினான் சந்துரு "ஆந்த ஆள் எப்படி கத்தினான் கேட்டியா?ரொஷம் இருந்த நம்ம அந்த ஆள் தர்ற காசுல சாப்பிடகூடாது" என்று என்னையும் தேவையில்லாமல் தன் ரோஷத்தில் சேர்த்துக்கொண்டாது மனிதாபிமானமற்ற செயல்.
அவன் தந்தையை ஒருமையில் குறிப்பிட்டபோது, அவரை கவனித்தேன் மூக்கு நுனியில் கண்ணாடியை மாட்டிக்கொண்டு ஒரு துருபிடித்த டப்பாவிலிருந்து சில போல்ட் நட்டுகளை எண்ணிக்கொண்டிருந்தது பார்க்க பரிதாபமாக இருந்தது.அவர் குறிப்பிட்ட பட்டியலை கேட்டபின் சந்துருவுக்கு இந்த குரங்கு புத்தி எப்படி வந்தது என்ற கேள்வி என்னுள் விஷ்வரூபம் எடுத்தது.நிலைமையை அமைதிப்படுத்தும் விதமாக செல்வம்"பாவம் சின்ன பையன். இப்போ ஒழுங்கா இருக்கானில்ல விடுங்க சாமி" என்றார்.ஒரு சங்கடமான அமைதி நிலவியது அங்கே,அதை காலவதியாக்கும் விதமாக,தொலைபேசி அழைப்பு வந்தது.சந்துரு தாவும் முன் அவன் அப்பா முந்திக்கொண்டு எடுத்துவிட்டார்,"ஹலோ, சந்துரு ஹார்ட்வேர்ஸ் தான், யாரு ஆசிரியர் சந்த்ரமௌலியா? என்னது மாணவன் மாத இதழா?...ச்சீ வைடா ஃபோன" என்று இரைந்தார் ரௌத்திரமாக.தொடர்ந்து செல்வத்திடம்"என்னவோ வக்காலத்து வாங்கினியே இவனுக்கு, எதோ பத்திரிக்கை ஆரம்பிக்கிறதா சொல்லி இந்த நாய் இப்போ ஃபோன் பன்னவன்கிட்ட ரெண்டாயிரம் ரூபாய் கடன் வாங்கியிருக்கான்,ஒனக்கு தான் புள்ளகுட்டி இல்லயே, என்னொட அவஸ்தை ஒனக்கு எப்படி புரியும்" என்றது தான் தாமதம்.தனது குறையை இடமறியாது அவர் சொன்னது செல்வத்தை பெரிதும் பாதித்தது கண்கூடாக தெரிந்தது."போதும் நிறுத்துங்க சாமி, நீங்க மட்டும் என்ன ஒழுங்கா? மொதல்ல எண்ணை கடை , அப்புரம் துணிக்கடை,பேக்கரி,மளிகைக் கடை, ஹோட்டல் ,இப்போ இந்த கடைன்னு உங்க புத்தி தான புள்ளக்கும் வரும்,எனக்கு புள்ள குட்டியிருந்தா நீங்க கேக்கும்போதெல்லாம் பணம் குடுத்திருப்பேனா?" என்று சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் பாணியில் பேசிவிட்டு சினிமாவில் வரும் கிராமத்து பெரியவர் போல் துண்டை உதறிக்கோண்டு விறுட்டென வெளியேறினார்.சந்துருவின் அப்பா கடைகளில் விடுபட்ட மூன்று எனக்கு சிரிப்பை வரவழைத்தது.என்னுள் விஷ்வரூபம் எடுத்திருந்த அடிக்கோடிட்ட கேள்விக்கு அவர் பேச்சின் மூலம் விடை கிடைத்தது.இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த சந்துரு, ரோஷதிலிருந்து வெளிபட்டவனாக அப்பா கையிலிருந்து இருபது ரூபாய் தாளை வாங்கிக் கொண்டான்.தனது தந்தையைத் தனது பிம்பமாகப் பார்த்தான்.அரை நிமிட மௌனத்திற்குப் பின் "அப்பா நம்ம ஒரு ட்ராவல் ஏஜன்ஸீ ஆரம்பிக்கலாமா?" என்றான்.
காசியபனின் அசடைப் பார்த்து ஞான்கூத்தனுக்கு ஏற்பட்ட அதே எண்ணம் தான் எனக்கும் தோன்றியது "இது ஒண்ணும் நல்லதுக்கா படலை".
பின் குறிப்பு:
என் பயோ-டேட்டாவை சந்துருவுக்கு அனுப்ப சொன்னார் அவன் அப்பா.அவன் கலிஃபோர்னியாவில் மென்பொருள் துறையில் இருப்பதாக சொன்னார். இந்த கதையை இரண்டாம் முறைப் படித்தவர்கள் எனக்கு வயிற்றெரிச்சல் என்கிறார்கள்.
9 comments:
அதில் சந்தேகமே வேண்டாம்.
What a final shot!Why don't u send my c.v. also to chanduru....kashyapan
”என் பயோ-டேட்டாவை சந்துருவுக்கு அனுப்ப சொன்னார் அவன் அப்பா.அவன் கலிஃபோர்னியாவில் மென்பொருள் துறையில் இருப்பதாக சொன்னார்.”
ஹாஹா பாஸு மெய்யாலுமே அப்படி நடந்து இருந்தா அதுக்காக நீங்க வயித்தெரிச்சல் படக்கூடாது....
//அதில் சந்தேகமே வேண்டாம்//
என் வயிதெரிசல்ல சொல்றீங்களா? :-(
//What a final shot!Why don't u send my c.v. also to chanduru....kashyapan//
:-)
//ஹாஹா பாஸு மெய்யாலுமே அப்படி நடந்து இருந்தா அதுக்காக நீங்க வயித்தெரிச்சல் படக்கூடாது....//
எதோ அவன் புண்ணியதில இப்போ நியூயார்க் ல இருக்கேன் பாஸ் :-)
அடேங்கப்பா காஷிய்பனே குஷி ஆகிட்டாரு... இந்த கதை சூப்பருங்க.. அருமையான நடை.. படிக்கும் போது சுஜாதாவின் ஆவி உங்க உடம்புல புகுந்து எழுதியது போல உள்ளது.. விடாமல் எழுதுங்க, நீங்களும் கண்டிப்பா சுஜாத்தா மாதிரி பெரிய ஆளா வருவீங்க
அன்புள்ள அனானி, சுஜாதான்னு சொல்லி என்ன வம்புல மாட்டி விடாதீங்க பாஸ்...அவர் எங்கே நம்ம எங்கே??
"இடியுடன் கூடிய மழை நின்றதுபோல் பிரமை ஏற்படும்.இடி அவர் குரல், மழை அவர் தெறிக்கும் தாராளமான எச்சில்."
""மொதல்ல அவன் ஜட்டி எங்க இருக்குன்னு கண்டுபிடிக்க சொல்லு, நாய் ஜென்மம்" என்று வழக்கத்தை விட கூடுதலாக சிகப்பு மையை விநியோகித்தார்."
"இருப்பினும் தோற்பான் சந்துரு."
""எங்கே அந்த துப்பு கெட்ட கழுதை?அவனால பாரு திண்ணை மேல ஒரு கழுத"
Clever humor sprinkled all over..wow :)
Another good one I loved.
Thanks JK. Cleverness is decided/declared by the cleverness of the reader!!
Post a Comment