Thursday, December 30, 2010

இராமாயணம் ஒரு திரைப்பார்வை

நான் : சினிமா விமர்சனம் எழுதனும்னு ஆசையா இருக்கு, என்ன சொல்றீங்க?


நாரத முனி: நீ எதுவுமே எழுத வேன்டாம்னு நெனைக்கறேன்...;-)

நான்: ஏன் :(?

நாரத முனி: சும்மா சொன்னேன், (சீரியசா சொன்னா மட்டும் கேக்கவா போற?) இப்போ வர்ற எல்லா படமும் ஒரே மாதிரி இருக்கும் போது விமர்சனமும் ஒரே மாதிரி தான் இருக்கும். அதுக்குன்னு ஒரு டெம்ப்லேட்டே வெச்சிருக்காங்க, வெறும் பெயர்கள், ஃபோட்டோ மட்டும் ஃபீட் பன்னா போதும் மற்றபடி விஷயம் ஒண்ணே தான் இருக்கும்.

நான்: ??

நாரத முனி: சரி சும்மா எழுத பழகனும்னா கம்ப ராமாயணத்த சினிமா விமர்ச்னம் பானியில முயற்சி செய்யலாமே? நாரயண நாரயண....

ஹிந்தியில் வந்த 'ராமாயண்'இன் தமிழ் ரீமேக் இது என்பது எல்லோரும் அறிந்ததே.டீ.ராஜேந்தருக்கு அடுத்து தமிழில் கதை , வசனம் எழுதி,பாடல் எழுதி, இயக்கியிருப்பவர் கம்பர். ஆனால் டிக்கெட்டும் கிழித்து கொடுக்கும் TRஐ தன்னால் என்றும் மிஞ்ச முடியுமா என்பது கேள்விக்குறியே என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் கம்பர்.அஷ்வமேத யாகத்தோடு துவங்கி நாயகன் ராமனின் பால்யம் வரை கொஞ்சம் வள வள என்று கதை இருந்தாலும், சிறுவர்கள் ராமன் , லக்குமனன், பரதன் மற்றும் சத்ருக்னனின் துடிப்பான கதாபாத்திரம் நன்றாக இருக்கிறது. அவர்கள் செய்யும் சேட்டைகள் கொஞ்சம் "அஞ்சலி" , "அழகி" யை நினைவூட்டினாலும் ரசிக்க முடிகிறது. ஒற்றுமையாக மூன்று மனைவிகளோடும் நான்கு மகன்களோடும் அரசராக வரும் தசரதர் தனது கதா பாத்திரத்தை உணர்ந்து நன்றாக செய்துள்ளார். ஆரம்பத்தில் நல்லவளாக இருக்கும் கைகேயி , பின் எக்கணமும் மாறக் கூடும் என்பது யூகிக்க முடிவதால் அவ்வளவு சுவாரசியம் இல்லை. மந்திரை கிழவிக்கு நல்ல எதிர்காலம் இருக்கு ஒரு ரௌன்ட் வருவாங்க.மிதிலையில் கண்ட உடனே காதல் வயப்படும் காட்சி ஒரு அழகிய ஹைக்கூ. அதற்காக வில்லை உடைக்கும் காட்சி C செண்டருக்கான பிரதியேக விருந்து.அப்போது வரும் "வில்லு வில்லு வில்லு" பாட்டிற்கு கிழவிகளே தம்மடிக்கப் போனாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. திருமணம் முடிந்து ஊர் திரும்பும் தம்பதிகளை ஊரே வரவேற்கும் பாடல் மனதில் நிற்கவில்லை ஒரே இரைச்சல்.பின் பட்டாபிஷேகம் நடக்கும் போது மந்திரையின் அறிவுரைப்படி கைகேயி தன் மகன் பரதனுக்கு தான் அரசாலும் உரிமை வேண்டும் என்றும் தனக்கு தசரதர் வாக்கு கொடுத்ததை ஃப்லேஷ் பேக்கில் சொல்லுவது நல்ல திருப்பம். ஆனால் கைகேயியின் பாத்திரப் படைப்பு மெகா சீரியல் வில்லியை ஒத்ததாக இருப்பது சலிப்பூட்டுகிறது. 14 வருடங்கள் காட்டில் இருக்க ராமன், லக்குமனன், சீதை கிளம்பி செல்வது மனதில் பாரமாக ஆக்குகிறது "போறாளே பொன்னுத்தாயீ" பாடல்.கதையின் இரண்டாம் பகுதியில் entry கொடுக்கும் அனுமார் கதாப்பாத்திரம் சிரிக்க வைக்க முயற்சி செய்கிறது.காமெடி டிராக் என்று தனியாக இல்லாமல் கதையோடு வருவது ஆறுதல்.குணச்சித்திர வேடமும் நன்றாக வருவதால், இவர் வெகு விரைவில் சிரன்சீவிக்கு போட்டியாக வாய்ப்பு அதிகம்.சீதையின் அழகில் மயங்கிய இராவணன் , வழக்கமான டாட்டா சுமோவை கொண்டு கடத்தாமல் , புஷ்பக விமானத்தை உபயோகிப்பது தமிழுக்கு புதியது.அனுமார், ABT Parcel Service விளம்பரத்தைப் பார்த்து விட்டு தானும் சஞ்சீவி மலையை எடுத்து செல்லும் காட்சி கலகலப்பாக இருக்கிறது.லாஜிக் இல்லாவிட்டாலும் CG சிறப்பாக இருக்கிறது, குழந்தைகளைக் கவரும் என்பதில் ஐயமில்லை.கிலைமாக்ஸில் மாயாவி வித்தைக் காட்டி இராவணன் பல்வேறு இடங்களில் ஒரே சமயத்தில் தோன்றும்போது எந்திரனின் ஆயிரம் 'சிட்டி' நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.வழக்கம் போல் யுத்த கடைசியில் ஹீரோ வெற்றி பெறுவது போன்ற சாதாரண முடிவு சப்பென்று தோன்றுகிறது.இலங்கைப் பிரச்சனையை சற்று மேலோட்டமாக அனுகியிருப்பது கதையின் பெரிய மைனஸ்.நிறைய கதாப்பாத்திரங்கள் இருப்பதால் எல்லா காட்சிகளும் நினைவில் இருப்பது சற்று கடினமாக இருக்கிறது.மொத்தத்தில் கதை சொன்ன விதம் நன்றாக இருப்பதால் , கம்பர் - TIMBER(ஏன் எதுக்குன்னெல்லாம் கேக்கப்டாது).
.

Thursday, September 9, 2010

"பாலிடாயில் குடுங்க"

"ஐயோ போய்ட்டியே", "நீ இல்லாம" ங்கிற மாதிரி ஒரே புலம்பல் .அதுல ஒருத்தரோட "ஐயோ" கணக்கு நூற தாண்டிபோய்கிட்டு இருக்கு.பின்ன என்ன சாவு வீட்டுல எந்திரன் பாட்டா போடுவாங்க? நமக்கு மணிக்கு ஒருக்கா தம்மடிக்கலைன்னா நாக்கு நமநமங்கும். வெளிய போக முடியாத இக்கட்டான சூழ்நிலை. இன்னிக்கு இந்தியா நியூஸீலாந்து கிரிக்கட் மேட்ச் வேற. அழுகை சத்தமும் கூச்சலும் சேர்ந்து தலையெல்லாம் வலிக்குறமாதிரி இருக்கு. என்னய பொருத்தவரைக்கும் பரிட்சை பேப்பரும், சாவும் ஒன்னு தான், கேள்விகள படிச்ச அஞ்சு நிமிஷத்துக்கு தான் அதோட தாக்கம், அப்புறமா சகஜ நிலைக்கு வந்துடுவோம்.சொன்னா நம்ப மாட்டிங்க இப்படித்தான் பேச்சு கேக்குது இங்க.


"பெரியவர் கிட்ட சொல்லியாச்சா?"(அக்கரை )

"ஆச்சு கார்ல கெளம்பிட்டாராம்"(விளக்கம்)

"சூமோ தான?"(வம்பு )

"இப்போ இன்னோவா வாங்கிட்டாரு"(அறிவு )

"அப்படியா? சூமோ ப்ரேக் சரியா இல்லன்னு சொல்லிகிட்டே இருப்பாரு , நானின்னும் அம்பாஸிடர மாத்தல".(பெருமை)

இதுக்கு பேசாம என்னய மாதிரி மௌனமா இருக்கறதே மேல் என்ன சொல்றீங்க?ஆண்கள் தான் இப்படின்னு பாத்தா நம்ம தாய்குலம் அதிபயங்கரம்! "காப்பி சொல்லி ஒரு மணி நேரம் ஆகுது இன்னும் வரலை".

யாராவது புதுசா வீட்டுக்குள்ள வந்தா மட்டும் திரும்ப 'ஐயோ' கணக்கு சென்செக்ஸ் மாதிரி எகிறும் அப்புறம் திரும்ப சகஜம்.

"அவன் கூட்டணி விசயத்துல இன்னும் தெளிவா இல்லப்பா"

இல்லேன்னா செல்ஃபோன்ல அசிலி பிசிலி பாட்டு, ரொம்ப பவ்யமா எடுத்து "ஒரு பெரிய காரியத்துல இருக்கேன், அப்புறம் பேசறேன்".

அல்லது "எலக்ட்ரிக் தான?"சரவணன், அவன் தான் ரொம்ப பொறுப்பா இருக்குறதா காட்டிக்கனும்னு , மடக்கின நாற்காலிய விரிக்குறதும் , விரிச்ச நாற்காலிய மடக்குறதும்னு சும்மா கண்ல, கைல மாட்டுனதெல்லாத்தையும் வெச்சி ஒரு வழி பண்ணிக்கிட்டிருந்தான்.எல்லாம் செல்வி முன்னாடி சீன் போடத்தான், என்னோட மொறப்ப கண்டுக்காம "நீ நடத்துடி".

                                                     ------------------------------------------------------

டாக்டர் சொன்னதை கேட்டபோது புவியீர்ப்பு எனக்கு மட்டும் பாரபட்சம் காட்டியது.

"தம்பி ஒனக்கு எவ்வளவு வருசமா இந்த பழக்கம்?"

"பன்னெண்டாவதுலேந்து டாக்டர்"

"அதாவது பதினேழு வயசுலேந்து?"

"அதான் சொன்னேனே பன்னெண்டு வயசுலேந்து". டாக்டர் புருவம் உயர்ந்தது ஆச்சரியமா? அசூசையா எனக்கு அது அவசியமில்லை. வீட்டில் இதை சொன்னால் எனக்கு முன்னால் எல்லாரும் போய் சேர்ந்து விடுவது உறுதி.மரணத்துக்கு பின்னும் சமூகத்தில் அமரத்துவம் கொண்ட நோய்.விரக்தியாகத் தான் வெளியில் வந்தேன்.

திக்கு தெரியாமல் தவித்த என் முன் திக்கை குச்சியால் அலசியபடி ஒரு கண் பார்வையை தவிர்த்திருந்த ஒருவர்.வாழ்க்கையிலே முதல் முறையாக உதவி செய்ய தோன்றியது."கிராஸ் பண்ணனுங்களா?", "ஆமாம் சார்" , அவரைப் பொருத்தவரை 'சார்' என்பது என் குரல்.அவர் சாலையை கடக்க உதவினேன் அவர் சட்டை பையில் இருந்த ஐநூறு ரூபாய் என் கைக்கு வரும்போது சாலையின் மறுபுறம் இருந்தோம்.தொட்டில் பழக்கம் என்று என்னை சபித்துக் கொண்டே, "பணம் கீழ விழுந்துச்சு, இந்தாங்க", சிரித்தபடி," தேவை இல்லாமலா அது உங்க கைக்கு வந்துச்சு, எதோ அவசரம்னு தானே எடுத்தீங்க பரவாயில்ல வெச்சிக்கங்க". என் நோயும் அதன் காரணத்தையும் விட இந்த நொடி என்னை கொன்றது.நேராக கடைக்கு போனேன்..."அண்ணேன்..

அடப்பாவிங்களா சும்மா செந்தமிழ்ல ஃப்லேஷ்பேக் சொல்லி தலைப்புக்கு வரலாம்னாம்னா அதுக்குல்ல நாலு பேரு என்னய தூக்கி கிட்டு ஆம்புலண்ஸ்ல ஏத்துரானுங்க... கோரஸ்ஸா "ஐயோ" வேற,இப்போ தலைவலி இன்னும் ஏறுதே...
இருங்க பாஸ் இப்போ வந்திடரேன்...

Wednesday, September 1, 2010

சைட் டிஷ் 2 - வெள்ளைச்சாமி

எல்லாருக்கும் ஒரு சைட் டிஷ் இருக்குற மாதிரி எல்லாரையும் சைட் டிஷ் ஆக்குறவங்க சில பேர் தான் இருப்பாங்க அந்த வகைல "வெள்ளைச்சாமி"ன்னு பட்டபேரு என்னோட ஒரு நண்பனோட நண்பனோட நண்பனோட நண்பனோட .... நண்பனுக்கு.நெஜ பேரு என்னன்னு மறந்து போச்சு. ஆள பாத்தா "ஷ்"ல பேரு முடியறா மாதிரிதான் இருப்பாரு (அதாங்க அந்த விக்னேஷ், சுரேஷ், சதீஷ் வகைராக்கள்)பட்டப்பெயருக்கு காரணம் மட்டும் நல்லா நியாபகம் இருக்கு. இவர் ராத்திரி எழுந்து "வைதேகி காத்திருந்தாள்" விஜயகாந்த் மாதிரி துடிப்பா இருப்பாரு,ஒரே வித்தியாசம் இவர் பாடமாட்டார் பாடா படுத்துவார்.
என்னோட நண்பர்கள் சிலர் வேலை தேடி பெங்களூருக்கு வருவாங்க, யார் இன்டர்வியூ, வேலைதேடி, அல்லது பரீட்சைன்னாலும் மடிவாலாவுல இருந்த நம்ம தோஸ்த் அருண் அடைக்கலம் குடுப்பார். அங்க போனா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நண்பர் குழாம் இருக்கும். அப்படி ஒரு நண்பனுக்கு அடைக்கலம் கேட்டு போகும்போது தான் வெள்ளைச்சாமிய முதல் முறையா (கடைசியும்) பாத்தேன்.அருண் சொன்னான் , "அடுத்த வாரம்தான உன் ஃப்ரெண்ட் வர்றான், பாத்துக்கலாம்". இது வரை அவன் இல்லயென்று சொன்னதே இல்லை. "நாளைக்கு லீவு தான இங்கையே தங்கிட்டு ரெண்டு ரௌண்ட் ரம்மியும் நாலு ரௌண்ட் MC யும் போட்டு போயேன் " என்றான். "மீட் வெள்ளைச்சாமி"ன்னு அறிமுகபடுத்தினான். நானும் அறையிலிருந்த சகாக்களோட ஐக்கியமாகிட்டேன்.ரம்மி களைகட்ட அப்பப்போ மட்டும் பேசின வெள்ளைச்சாமி கொஞ்சம் சுருதி கூடக்கூட ரொம்பவே பேசினான். ரம்மி, சரக்கு, உணவு எல்லாம் முடிய ராத்திரி 12:30 ஆகிட்டது. எல்லாரும் படுக்கும் முன் வெள்ளைச்சாமி அலாரம் செட் பண்ணிட்டு மெத்தையில படுத்துகிட்டான்.. சரியா ஒரு மணிக்கு அலரம் அடிக்க அரை போதையில் நான் எழுந்து கிட்டேன், அருண் என்னவோ ஆஃபீஸ் போகிறவன் போல் ஃப்ரெஷா உட்கார்ந்துகிட்டான்.வெள்ளைச்சாமி "இன்றைய ஹிட் லிஸ்ட் குடுங்க " என்றதும் என்னைத் தவிர எல்லாருமே ஒரு பெயர், ஃபோன் நம்பர் அப்புறம் சில தகவல் இருந்த பேப்பர குடுத்தாங்க.எல்லாருமே ரொம்ப ஃப்ரெஷா இருந்தது தான் எனக்கு ஒரே ஆச்சரியம்.எனக்கு சரக்கு எஃபக்ட்டு, தூக்க கலக்கம் எல்லாம் போக இந்த வித்தியாசமான சூழல் வேற.என்னோட குழப்பத்த புரிஞ்சிகிட்ட வெள்ளைச்சாமி," பாஸ் உங்களுக்கு யார் மேலியாச்சும் செம காண்டா இருந்தா, அவங்க பேரு, லேன்ட்லைன் நம்பர் மட்டும் குடுங்க, ஒரு பூஜை செஞ்சிடலாம்" அப்டின்னு விளக்கம் குடுத்தான்."இருக்காரு இருக்காரு..எனக்கு தெரிஞ்சு ஒரு..."ன்னு நான் சொல்ல ஆரம்பிக்கும்போதே "ஸ்டாப் பாஸ், அந்த டீட்டெயில ஒரு பேப்பர்ல எழுதி குடுங்க". குலுக்கல் முறையில் குலுக்கி முத சீட்டை எடுத்தான் . "நம்ம முதல் பலி கடா லால்குடி குருநாதன்( என்னால் பரிந்துரைக்கப் பட்டவர்) , ஹௌசோனர்ங்குற திமிரில ஒங்க கிட்ட அலப்பரய குடுத்திருக்காரு ஓகே கொஞ்சமா கலாய்ச்சாப் போதும்னு சொல்றீங்களா?"ன்னு ஃபோன் அடிச்சான் வெள்ளைச்சாமி...மொபைல் ஸ்பீக்கர் ஆன் செஞ்சி விட்டான்.

பதினைந்துக்கும் மேல் ரிங்கடித்ததும் பதட்டமா ஒரு குரல்

குருநாதன்: "யாரு?"

வெள்ளைச்சாமி: "ஹலோ சௌக்கியமா?"

குருநாதன்: "யாரு?"

வெள்ளைச்சாமி: "நான் யாராயிருந்தா சௌக்கியமான்னு சொல்லுவீங்க?"

குருநாதன்: "நான் லால்குடி குருநாதன்"

வெள்ளைச்சாமி:"அது தெரியும் சார்.உங்களுக்கு சுகுமாரன் தெரியுமா?"

குருநாதன்:"சு..கு..மா...ரன்னு யாரையும் தெரியாதே"

வெள்ளைச்சாமி:"கைய குடுங்க சார், சேம் பிஞ்ச், எனக்கும் தெரியாது, கீச் கீச் மரக்கட்டை டோண்ட் டச் மீ, ஒரு மரத்த தொடுங்க சார், அவசரதுக்கு வேணும்னா ஒங்க மண்டைய தொடலாம் இல்லேன்னா உங்க வொய்ஃப் ஒரு கட்டை தானே தொட்டுக்கங்க"

குருநாதன்:"டேய் யாருடா நீ? பொறுக்கி"

வெள்ளைச்சாமி:"கேள்வியையும் நீங்களே கேட்டு பதிலையும் நீங்களே சொன்னா எப்புடி? அப்புறம் சார் சௌக்கியமா? வொய்ஃப் நல்லா இருக்காங்களா?"

குருநாதன்: "போலீஸ்ல புடிச்சி குடுப்பேன், பொறுக்கித் **ழி"

வெள்ளைச்சாமி:"சும்மா சொல்ல கூடாது இந்த 'ழ'கரம் நல்லா வருது சார் ஒங்களுக்கு, தமிழுக்கே அது தான் அழகு"

குருநாதன்:"ஃபோன வெக்க போறியா இல்லயா?"

வெள்ளைச்சாமி:"ஏன் சார் மெண்டல் மாதிரி கத்துறீங்க, ஒரு முத்தா குடுங்க வெக்கிறேன்"

குருநாதன்:"ச்ச ச்ச"ஃபோன கட் பண்ணிட்டாரு பாவம்.எல்லாரும் கொஞ்ச நேரம் கன்னாபின்னான்னு சிரிச்சோம் ஒரு ரெண்டு நிமிஷம் கழிச்சு பண்ணப்ப எங்கேஜ்டு டோன் கேட்டு, திருப்தியா "இனிமே காலைல தான் ஃபோன ஒழுங்கா வெப்பார் ,அடுத்து யாருன்னு பாப்போம் யாருப்பா அது பஜனை வாத்தியார் மூர்த்தி ? "

அவரோட பேர போட்டு குடுத்த பங்காளி "அவரு ரொம்ப சாதி வெறி உள்ளவரு மச்சி. RSS ல இருக்காரு, அதான் கொஞ்சமா கலாய்ச்சா நல்லா இருக்கும்"

வெள்ளைச்சாமி "எப்படி இவர தெரியும்?"ன்னு கேட்டதுக்கு போட்டு குடுத்த பங்காளி "என்னோட கணக்கு வாத்தியார்".

"அத்தச் சொல்லுங்க பங்காளி சும்மா சாதி அது இதுன்னு கதைய விடுற?கணக்கு வாத்தியார் மேல கடுப்பாகாம இருக்க முடியுமா?"

மறுபடியும் ஒரு ஃபோன் கால்.வேற குரல்ல பேசினான் வெள்ளை.மூர்த்தி: "ஹலோ " (செம்ம தூக்கத்துல இருந்திருப்பாருன்னு குரல்லயே தெரிஞ்சிச்சு)

வெள்ளைச்சாமி: "ஹலோ சார், இயேசு கிறிஸ்து மேல விசுவாசம் வெய்யுங்க சார்"

மூர்த்தி:"என்னது?"

வெள்ளைச்சாமி:"அவர் சகல பாவங்களையும் கழுவி உங்களை நல்வழி படுத்துவார் சார்"

மூர்த்தி:"உங்களுக்கு யார் இந்த நம்பர குடுத்தது?"

வெள்ளைச்சாமி:"சார், இயேசு கிறிஸ்து தான் சார் குடுத்தார்"

மூர்த்தி:"நான் யாரு தெரியுமா?"

வெள்ளைச்சாமி:"லைட்ட போடுங்க ஒரே இருட்டா இருக்கு ஒன்னும் தெரியல"

மூர்த்தி:"இப்போ ஒனக்கு என்ன வேனும்டா?"

வெள்ளைச்சாமி: "ஒரு உம்ம தெரிஞ்சாகனும், நீங்க "மேட்டர்"ல எக்ஸ்பர்ட்டா சார் ? அதான் உங்க ஏரியா முழுக்க உங்கள பஜனை வாத்தியார்ன்னு கூப்புடறாங்க"

(இதை எதிர்பார்க்காத நான் சத்தமா சிரிச்சிபுட்டேன். )

மூர்த்தி வாத்தியார் : நாசமா போய்டுவ

வெள்ளைச்சாமி: "விஷ் யூ த சேம் சார், குட் நைட், பஜனை கண்டின்யூ பன்னுங்க ஐ மீன் தூக்கத்த"ன்னு சொல்லி தானே வெச்சிட்டான்.

மறுபடியும் எல்லாரும் சேர்ந்து வெடி சிரிப்பு. இப்போ அருண் சீட்டு "பழைய ஃபிகரோட அம்மா"

வெள்ளை : "அப்பன் எங்க?"

அருண்: "துபாய்ல"ரெண்டாம் தாட்டி தான் அந்தம்மா வந்து எடுத்தாங்க

அந்தம்மா: ஹலோஓஓஓஓஓஓஓஓஓஓஓ

வெள்ளைச்சாமி(கொஞ்சம் அழும் குரலில்): அம்மா மனச கொஞ்சம் திட படுத்திக்கங்க

அந்தம்மா:ஐயோஓஓஓஓஓஓஓஓஓஓ என்னது?

வெள்ளைச்சாமி: மதியம் ஒரு பதினோரு மணிக்கு...ஹு ஹு ஹு(அழுகை)

அந்தம்மா:ஐயோ என்ன??

வெள்ளைச்சாமி: தெகிரியமா கேளுங்கம்மா

அந்தம்மா:ஐயோ என்னாச்சு?

வெள்ளைச்சாமி:ஒரு மீட்டிங்குக்கு போன எடத்துல,

அந்தம்மா:ஐயோ.....

வெள்ளைச்சாமி:காந்திய சுட்டு கொன்னுட்டாம்மா கோட்ஸே

அந்தம்மா: ஐயோ... யாருன்னு சொன்னீங்க?

வெள்ளைச்சாமி சைகை காட்ட ரூமில் இருந்த அனைவரும் சேர்ந்து ஒருமிச்சு அழுதோம்.

அப்பவே ஃபோன கட் செஞ்சிட்டான் வெள்ளைச்சாமி."ஆச்சு, இப்போ ஒரு ஃபாலோ அப் கால் அப்புறம் VIP கால் பாக்கி இருக்கு" ன்னு அலுத்துகிட்டான் வெள்ளை.அருண் டீட்டெயில் சொன்னான்,"நேத்து ஒருதன் கிட்ட ஃபோன் பண்ணி 5 கிலோ உளுந்து அப்பளமும், 700 அரிசி அப்பளமும் ஆர்டர் பண்ணியிருந்தான் வெள்ளை , அந்த ஆளுக்கு தான் ஃபாலோ அப் கால்,VIP கால்ங்குறது பிரபலமானவங்களுக்கு பண்ணுற கால், அத வெள்ளை தான் சஸ்பெண்ஸா செய்வான், வெய்ட் அண்ட் ஸீ".

அடுத்த கால்ல வெத்தலை பாக்கு வாயில போட்டவன் மாதிரி பேசினான் வெள்ளைச்சாமி.

வெள்ளைச்சாமி: "என்ன மிஷ்டழ் ழமேஷ் " (மிஸ்டர் ரமேஷ்)

ரமேஷ்: எஸ் ஸ்பீகிங்க்

வெள்ளைச்சாமி:"நீங்க ரொம்ப நன்னா ஷ்பீக் பண்றேள் ஆனா வொர்க் செரியா இல்லயே"

ரமேஷ்: யார் சார் நீங்க?

வெள்ளைச்சாமி:"புரொஃபஷர் TK பேஷறேன், நேதிக்கி பொண்ணு ஷீமந்தம்னு அப்பளம் ஆர்டர் பண்ணேன் , நன்னா மூஞ்சில கரிய பூஷிட்டேள் சார்"

ரமேஷ்: ஓ சாரி சார்.... நீங்க குடுத்த அட்ரஸ் கண்டுபுடிக்க முடியல...ரொம்ப சாரி சார்

வெள்ளைச்சாமி:" ஷாரி , முடியலன்னு ஈஷியா ஷொல்லிட்டேள், ஆனா ஷீமந்தம் கேன்ஷல் பண்ணிட்டாளே மாப்ளையாத்து பேழ்."

ரமேஷ்: "அப்பளாத்துக்காக. போய்..."

வெள்ளைச்சாமி:"பண்ணிட்டாளே. சரி பாஷ்ட் இஷ் பாஷ்ட், நாளைக்கு வெச்சிழுக்கேன், கொண்டு வந்துடுங்கோ சாழ் ப்லீஷ்"

ரமேஷ்:சார் அட்ரஸ் கொஞ்சம் தெளிவா சொல்லுங்கோ.

வெள்ளைச்சாமி: ஷொல்றேன் , அதுக்கு முன்னாடி மிஷ்டழ் ழமேஷ், ஒரு சின்ன ஃபேவர், வரும் போது கொஞ்சம் ஷ்ரமம் பாக்காம எல்லா அப்பளத்தையும் பொரிச்சி எடுத்துண்டு வந்துடுங்கோஓஓஓஓஓஓ

ரமேஷ்: டேய் யாருடா நீ கைல கெடச்ச வக்கா"

வெள்ளைச்சாமி: "கைல கெடைக்க நான் ஒண்ணும் கொசு இல்லடா...பர்ர்ர்ர்ர்ர்ர்ர் டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்" ஃபோன் கட்!

"இன்றைய யாருன்னு நான் பேசும்போது உங்களுக்கே தெரியும்"

ஃபோன் எடுக்கபட்டதும் ஒரு அப்பாவி இலைஞன் குரலில்

வெள்ளைச்சாமி: பெரிய ஐயா இருக்காருங்களா?

எதிர் முனை: இருக்காருங்க தூங்குறாரு

வெள்ளைச்சாமி: நான் லன்டன்லேந்து பேசறேங்க இங்க பகல்,கண்டிப்பா அவர் கிட்ட பேசனும்.

பெரிய ஐயா கிட்ட ஃபோன் போச்சு, இப்பவும் எனக்கு சஸ்பெண்ஸ் தான்.

ஐயா: யாருப்பா அது?

வெள்ளைச்சாமி:" ஐயா, தாத்தா .. அப்பா என்ன திட்டுங்கப்பா என்ன அடிங்க" (ஒரே அளுவாச்சி)

ஐயா: அளுகாதப்பா நான் இருக்கேன்பா தாத்தா இருக்கேன்பா உனக்கு என்ன ப்ரெச்சனை?

வெள்ளைச்சாமி(தேம்பிகிட்டே):ஐயா..எனக்கு 19 வயசு ஆகுதுங்க, லன்டன்ல 3 வருசமா ரூம் மேட்ஸோட சேர்ந்து..ஹூம்..ஹூம்..தொடர்ந்து மூனு வருசம் தப்பு பண்ணா கோடி ரூபாய் குடுத்தாலும் ஒண்ணும் பண்ண முடியாதுன்னு சொன்னீங்களே

ஐயா: "ஐயோ அத வேண்டாம்னு எவ்வளவு தடவ சொல்லியிருக்கேன் தமிழ்நாட்டு இலைஞர்கள் கிட்ட ஒண்ணும் கவலப் பட வேண்டாம் இந்தியா வந்ததும் என்ன பாரு, ஆனா 25 வயதுக்குள்ளாற இருக்கிறதுனால் ஒண்ணும் பயப்பட வேண்டாம் "

வெள்ளைச்சாமி: அப்போ எனக்கு ஒண்ணும் ப்ரச்சனை இல்லையே?

ஐயா: இல்ல டா கண்ணு

வெள்ளைச்சாமி: அப்டீன்னா நான் இன்னும் ஒரு ஆறு வருசதுக்கு...

ஐயா:6 வருசத்துக்கு?

வெள்ளைச்சாமி: அடிச்சிகட்டூங்களா?

மௌனமா ஃபோன வெச்சிட்டாரு ஐயா!!அடுத்த நாள் கெளம்பும்போது வெள்ளை "டச்ல இருங்க பாஸ், உங்ககிட்ட லேண்ட்லைன் இருக்கான்னு" கேட்டான். நான குடுப்பேன்??

அப்புறம் நொய்டால கால் சென்டர்ல இருந்தான் இப்போ டச்ல இல்லை !

Thursday, August 26, 2010

சைட் டிஷ் - 1. மாண்புமிகு மாணவன் "செல்வா"விற்கு மரியாதை

நல்ல நண்பர்களுக்கு அடுத்தபடியாக நெருக்கமென்று பார்த்தால் நினைவுக்கு வருபவர்கள் தான் ஊறுகாய்கள் என்று அன்போடு அழைக்கப்படும் அப்பாவி ஜீவராசிகள்.இவர்களுக்கு "சைட் டிஷ்" என்றும் ஒரு பிரபலமான பெயரும் உண்டு. தன்னை வருத்திக் கொண்டு சுற்றி உள்ளவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும் இவர்களுக்கு இந்த இடுகைகள் பாத காணிக்கை. நண்பர் மதன் அவர்கள் அவர் மனதில் முதலிடம் பிடித்த சைட் டிஷ் செல்வாவிலிருந்து தொடங்குமாறு வேண்டியதால்


இதோ செல்வா....

சென்னைல வேலை தேடி வெட்டியா இருந்த காலம் அது. அப்போ அமைந்தகரைல ஒரு வீட்டுல மதன் ,செல்வா இன்னும் நாலு நண்பர்களும் (கஜா,ரவி,பிரகாஷ்,சாமி) தங்கியிருந்தாங்க.மதனுக்கு செல்வா கிட்ட வாய்க்கால் தகராறுன்னு எதுவும் இல்லை ஆனா செல்வாவின் ஹேர் ஸ்டைல் தான் கொஞ்சம் உறுத்தலா இருந்திருக்கு.குருவிக்கூட்டுக்குள்ள கோட்டான் நுழைஞ்ச மாதிரி முன் பக்கம் மட்டும் முறைப்பா வெறைச்சி நிக்கும், அங்க தான் பிரச்சனையேன்னு நம்ப தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல். சரிப் பாவம் முடிக்கு அவன் என்ன செய்வான்னு மதன் பெரிய மனசு பண்ணி மறக்க முயற்சி செஞ்சாலும், இன்னொரு பெரிய விஷயம் அவருக்கு ரொம்பவே உறுத்தியிருக்கு. நியாயமா யாருக்குமே இத மன்னிக்க முடியாது,அந்த காலத்துல யார் கூட வேணும்னாலும் ரூம்ல தங்கலாம் "விஜய்" ரசிகனோட மட்டும் தங்க கூடாதுன்னு புதுசா ஒரு பழமொழியே உண்டு . அப்போ "விஜய்" டாக்டரெல்லாம் இல்ல வெறும் கம்பௌன்டரா இருந்த காலம்.இதுல செல்வா ,பிரகாஷ்,சாமி எல்லாரும் விஜய் ரசிகர்கள், அதுல பாருங்க செல்வா தீவிரமான ரசிகரா இருந்தது தான் மதன், ரவி,கஜாவுக்கும் கொஞ்சம் வருத்தம்.

ஒரு உதாரணம் சொல்லனும்னா நாங்க ஆறு பேரும் ஒன்னாத்தான் சாப்பிடப் போவோம் ஒரு மெஸ்ஸுக்கு.அங்க ஒரு அக்கா தான் சமையல் செய்வாங்க.குடும்பத்துல ஒருத்தர் மாதிரி தான் பழகுவாங்க.அந்த மெஸ்ஸுக்கு பேரு எதுவும் இல்ல,இத பார்த்த செல்வா "அக்கா, மெஸ்ஸுக்கு ஒரு ஸூப்பர் பேரு வெச்சா நல்லா பிக் அப் ஆகும்"னு சொல்லி தானே ஒரு சாக் பீஸ் எடுத்து, தண்ணில நெனைச்சி டிபன் ரெடின்னு இருந்த பலகை மேல "இலைய தலபதி விஜய் மெஸ்"அப்படீன்னு எழுதி வெச்சிப்புட்டாரு."விஜய்" தவிர மத்த எல்லா வார்த்தையும் தப்பா இருந்தது.கடுப்ப அடக்கிகிட்ட மதன், ரவி,கஜா, மதியம் வந்து கொஞ்சமா செல்வா எழுதினத மாத்தியிருக்காங்க. "இலைல பேதி" ங்குற மாதிரி என்னத்தையோ எழுதினது செல்வாவுக்கு செம கடுப்பு.அப்புறம் அத மாத்தி SACJV மெஸ்ஸுன்னு செல்வா மாத்தினதாக தகவல்.அதுக்கு எதுவும் பதிலடி கொடுக்காமலே இருந்திருக்காங்க ரவி, கஜா மற்றும் மதன்.அதையே செல்வா பெரிய வெற்றியா கொண்டாட ஆரம்பிச்சதும் கஜா நேரா மெஸ் அக்கா கிட்ட போய் "அக்கா கடைக்கு பேரு வெச்சா டேக்ஸ் கட்டனும்"னு ஒரு பிட்டப் போட்டதும், "ஐய்ய, அந்த கருமத்த இப்பவே அழிக்கறேன்"ன்னு அழுத்தி அழிச்சப்ப தான் இந்த மூனு பேருக்கும் சந்தோஷம்.ஆரம்பத்துல மதன் உள்ளிட்ட மூனு நண்பர்களையும் அவர் "இளைய தலவலி" கட்சிக்கு மாத்தனும்னு அந்த வீனா போன பாட்டா போட்டு அலரவிட்டு அளப்பரைய குடுக்க ஆரம்பிச்சிருக்காரு நம்ம செல்வா.இத விட கொடுமை மதன் ரொம்ப மதிக்க கூடிய (விவேகானந்தர் இல்லீங்க) ஒரு வெளிநாட்டு டூ பீஸ் ஃபிகர் போஸ்டர் பக்கத்துல பசியில இருக்கறவன் இட்லிய பாக்குறா மாதிரி ஒரு ரியாக்ஷனோட (ரொமாண்டிக் லுக்) இருக்குற பஞ்ச் புகழ் விஜய் படம்.அதுல முன்னாடி ரெண்டு பல்லு மட்டும் வெளிய தெரியும், அதுல மதன் குழுவினர் கலை அம்சத்தோட கருப்பு மைப் பூசி மகிழ்ந்திருக்காங்க.அடுத்த நாள் காலைல புருவம் அடர்த்தியாகும், மதியம் சினிமா ரௌடி மச்சம் ரெடியாகும், இப்படி நாளொரு வண்ணமும் , பொழுதொரு வடிவமும் போஸ்டர்ல அப்டேட் ஆகி, இது யாரு படம்னு செல்வாவே ஆச்சர்யப்படும்படி செய்து செல்வாவோட வவுத்தெரிச்சல நல்லாவே கொட்டிகிட்டிருக்காங்க அந்த மூவர் குழு.அப்பப்போ கொஞ்சம் வேலை கெடைக்காத வருத்தம் வரும்போதெல்லாம் எல்லாரும் ஒன்னா உட்காந்து டிஸ்கஸ் பன்னுவோம், அப்ப செல்வா சேர்ந்தா BPOல தான் சேரணும்னு தன்னோட லட்சியத்த சொல்லியிருக்காரு பலதடவை.மதியம் வேலை தேடி அலையாம சும்மா இருக்கும்போது விஜய் படத்தோட பாட்டு பொஸ்தவம் வாங்கி ரசிகர்கள் பாடி டார்ச்சர் பண்ணதும் அதுக்கு செல்வா தலைமை வகிச்சதும், குவார்ட்டர் கட்டிங்குல மாவா போட்டா மாதிரி ஆகிடுச்சு. மதன் அன் கோ. செல்வாவ கொஞ்சம் வெளிய வெச்சாத்தான் நல்லதுன்னு நெனைச்சு மதன் குழுவினர் ஒரு வேலைய செஞ்சாங்க.BPOல சேர ஒரு கோர்ஸ் இருக்கு சேர்ந்து அத முடிச்சு சர்டிஃபிகேட் வாங்கினா உடனே வேலை தான்னு சொல்ல, உங்களுக்கே நல்லாத் தெரியும் ஆடு யாரை நம்பும்னு...அடுத்த நாளே கோர்ஸ் சேர்ந்துட்டாப்டி செல்வா.செல்வாவுக்கு கோர்ஸோட விவரம் எதுவும் தெரியாது, அது என்னவோ முக்கியமான கோர்ஸ்ன்னு நெனைச்சி ரொம்ப சீரியஸா ரெகுலரா போக ஆரம்பிச்சிருக்கார் செல்வா. யாரவது ஃபோன் செஞ்சா ," நான் ஈவனிங் கொஞ்சம் பிசி, BPO கோர்ஸ் இருக்கு"ன்னு சொல்லும்போது கூட மதன் அன் கோ வுக்கு இறக்கமே இல்லாம ரகசியமா சிரிப்பு வேற சின்னபுள்ளத்தனமா.பின்ன என்னங்க விவேகானந்தால ஸ்போக்கன் இங்க்லீஷ் கோர்ஸ்ல சேர்த்து விட்டவங்கள என்ன சொல்ல முடியும்?வேலை தேடறேன்னு சொல்றத விட கோர்ஸ் செய்யறேன்னு சொல்றது கொஞ்சம் கவுரவமா இருக்கும்னு தொடர்ந்து போயிருக்காரு. "மச்சான் பேசிக்லேந்து எடுக்கராங்க இனிமே தான் BPO வரும்னு நெனைக்கிறேன்"ன்னு சொல்லும்போது எனக்கா இருந்தா கண்ல தண்ணி வந்திருக்கும்.கோர்ஸ் முடிஞ்சதும் அதை ரெஸ்யூம்ல வேற போட்டார்ங்கறது உபரி தகவல்."என்னடா இது கோர்ஸ் பண்ணியும், வேலை கெடைக்கல"ன்னு புலம்ப ஆரம்பிக்கும்போது அடுத்தகட்ட நடவடிக்கையை தொடங்கிட்டாங்க மதன், கஜா மற்றும் ரவி. "ஒன்னோட மைனஸ் உன்னோட ஹேர் ஸ்டைல் தான், நாங்களே அதையும் சரி பண்றோம்னு சொல்லி".ஒரு சுபயோக சுபதினத்தில கையில கத்திரிக்கோளோட எறங்கிட்டாங்க.ஒரு தினமலர தரையில பரப்பி அதுமேல மஞ்ச பூசின ஆடு மாதிரி செல்வாவ உட்கார வெச்சி, தலைல தண்ணிய கொட்டி, எல்லா முடியையும் முன் பக்கமா வழிச்சி வாரி இருக்காரு கஜா,கத்திரியோட தயாரா மதன் , முன்னாடி கண்ணாடியோட ரவி,பின்னாடி நடக்கப் போறத பத்தி கொஞ்சம் கூட வருத்தப்படாத செல்வா நடுவுல இருக்குறாப்ல.

சின்ன புள்ளைங்களுக்கு எடுக்கர மாதிரி வகிடெடுத்து கஜா ஜூட் சொன்னதும் மதன் களத்துல எறங்கி தொழில் பழகியிருக்காரு.

"நல்லா வெட்டுவீங்களா"ன்னு கேக்கும்போதாச்சும் மன்னிச்சு விட்டிருக்களாம், ஆனா அதையே ஒரு சவாலா எடுத்துக்கிட்டங்க மதன் அன் கோ.

வேலையெல்லாம் முடிச்சிசதும்,இன்னிக்கு ஒரு கொலையோ அல்லது மூனு கொலையோ விழும்னு தெரிஞ்சி போச்சு அந்த மூவர் குழுவுக்கு. சரி சாப்ட போகலாம்னு மெஸ்ஸுக்கு கெளம்பியிருக்காங்க எல்லாரும். முகத்த மட்டும் கழுகிட்டு போனதும் மெஸ் அக்கா என்ன செல்வா "ஸ்னேக் பாபு" படத்துல மாதிரி இருக்கன்னு கேக்கும்போது தான் மைல்டா சந்தேகம் வந்திருக்கு.
 
 
 
 
 
என்று இந்த வீடியோ அனுப்பினார்.
 

Friday, August 20, 2010

சந்துரு

காசியபனின் "அசடு" புதினத்தைப் படித்தால் ஒரு துன்ப உணர்ச்சி ஏற்படுவது நியாயம் தான்.ஆனால் சந்துரு என்ற இந்த அசடு நகைச்சுவை அசடாக உங்கள் மனதில் வளம் வருவான்.பருத்த உருவமும், எத்திசையிலிருந்து பார்த்தாலும், முற்புதரை நினைவூட்டும் தலைமுடி அமைப்பும்,(வாங்கிய புதிதில் ) வெள்ளையாக இருந்த வேட்டியும், சரியாக பராமரிக்கப் படாத கோயில் கதவை திறந்து மூடும்போது வெளிவரும் சத்ததை ஒத்த குரல் வளமும்,இன்ன பிற 'உம்'களும் சேர்ந்து, தன் வயதை பன்மடங்குகளாக்கி நாற்பதுகளில் காட்சி அளிப்பான் சந்துரு. சபரி மலைக்கு மாலை அணிந்திருப்பானோ என்ற ஐய்யத்தை எழுப்பும் அவன் கரிய வேட்டி அவனது சிறப்பம்சம்.அவன் வீட்டுக்கு ஒருமுறை போனபோது அவன் தந்தையின் புலம்பலை சமாளிக்க திணறினேன்."நீயாவது சொல்லப்டாதா?உருப்படர வழியப் பாருன்னு சொல்லு அவன்கிட்ட" என்ற ரீதியில் துவக்கி அவர் பேச்சை முடித்ததும், இடியுடன் கூடிய மழை நின்றதுபோல் பிரமை ஏற்படும்.இடி அவர் குரல், மழை அவர் தெறிக்கும் தாராளமான எச்சில்.


அப்போதுதான் கவனித்தேன்,ஓலையில் செய்யப்பட்ட ஒரு தொப்பியும், திருவிழா மற்றும் திருமண மண்டபங்களில் விற்கப்படும், கலர் கண்ணாடியும் அணிந்துகொண்டு மிரட்டலாக நின்றான் சந்துரு."டேய், நான் துப்பறியும் கம்பெனி ஆரம்பிச்சிருக்கேன், நீயும் சேந்துக்கோ" என்றவன் "நம்ம தோப்புல நடக்குர தேங்காய் திருட்ட கண்டுபிடிக்கறது தான் நம்ம முதல் கேஸ்" என்று ஒரு குண்டை இலவச இணப்பாக தூக்கி போட்டான்.வந்த சிரிப்பை அடக்க மிகக் கடினமாக இருந்தது.பொறுமையிழந்த அவன் தந்தை"மொதல்ல அவன் ஜட்டி எங்க இருக்குன்னு கண்டுபிடிக்க சொல்லு, நாய் ஜென்மம்" என்று வழக்கத்தை விட கூடுதலாக சிகப்பு மையை விநியோகித்தார்.இப்படியாக ஒரு துப்பறியும் 'அ'சிங்கம் எங்கள் ஊரில் உருவானது.அவன் தந்தையின் கோபம் எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை, மாறாக ஷெர்லாக் ஹோம்ஸே தனக்கி உதவியாளராக வருவார் என்ற மிதப்போடு காணப்பட்டான்.

சந்துரு என்னையும் தன்னோடு சேர்ந்து துப்பறிய(!) வற்புருத்தியதால், சில நாட்களுக்கு அவனை சந்திப்பதை தவிர்த்தேன்.அவன் எனது சிறந்த நண்பன் இல்லையென்றாலும், அவன் செய்யும் கோமாளித்தனத்தை ரசிக்கவே அவனோடு சில மணித்துளிகளை விரையம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தேன்.அப்படி ஒரு நாள் சென்றபோது நாளிதழ்களிலிருந்து வெட்டபட்டு தரையில் கோணலாக கிடத்தப்பட்டிருந்தார்கள் சச்சின், கபில் தேவ் மற்றும் கவாஸ்கர்.சம்பவம் நடந்த இடம் ஒன்றை மட்டும் தெளிவுப்'படுத்தியது', சந்துரு கிரிக்கெட் கிளைக்கு தாவிவிட்டது என்று!"டேய் என்னோட கிரிக்கெட் டீம்ல நீயும் சேந்துக்கோ, ஒனக்கு நான் சொல்லி குடுக்கறேன், வீட்ல சும்மா சோம்பேறித்தனமா இருக்காத" என்று தன் கன்னி பேச்சை தொடங்கினான்.அவன் எந்த ஒரு வாக்கியத்தையும் "டேய்" இல்லாமல் துவக்கி நான் அறியேன்.அவன் எனக்கு கற்றுகொடுக்கும் அளவுக்கு நான் ஒன்றும் மோசமான ஆட்டக்காரன் அல்ல.என்னை சோம்பேறி என்று சொன்னால் அவனது சோம்பேரித்தனத்தை விளக்க எந்த மொழியிலும் வார்த்தைகளே இருக்காது.கிரிக்கெட்டை இன்டோர் விளையாட்டாக ஆடுபவன் அவன், எட்டு வயதிற்கு மேல்பட்டவர்க்கு அவன் குழுவில் இடம் இல்லை, தான் எப்போதுமே வெற்றிப் பெற வேண்டும் என்று அவன் செய்த ஏற்பாடு அது, இருப்பினும் தோற்பான் சந்துரு.

சில நாட்களுக்கு இந்த விளையாட்டு அவன் வீட்டில் தொடர்ந்தது.எந்நேரமும் கையில் மட்டையோடு காட்சியளிக்கலானான்.மட்டை என்று நான் சொன்னது கிரிக்கெட் பேட்டின் தமிழாக்கம் என்று தவறாக நினைக்க வேண்டாம், அது சாட்ஷாத் தென்னை மட்டையே.சென்ற வருடத்தின் தினசரி நாட்காட்டி அட்டைகளிரண்டு அவன் முட்டிக்கு கீழ் பாவடை நாடாவால் கட்டபட்டிருந்தது."என்ன அது" என்று கேட்டால் "கிரிக்கெட் பேடு" தெரியாதா உனக்கு என்பான் எனவே எதற்கு வம்பு நான் எதுவும் கேட்பதாய் இல்லை.அவன் அப்பா-அம்மா, மற்றும் தாத்தா-பாட்டி யின் கருப்பு வெள்ளை புகைப்படங்களைத் தாங்கும் பணியை மட்டுமே செவ்வனே செய்துகொண்டிருந்த தொலைகாட்சி பெட்டி என்கிற டப்பாவை அவனது மட்டை பதம் பார்க்கும் வரை இந்த இன்டோர் கிரிக்கெட் தொடர்ந்தது.புகைப்படங்கள் தாங்கி அதாவது தொலைக்காட்சி பெட்டி உடைந்த்தாக நான் கேள்விப்படதற்கு அடுத்த நாள் காலையில்,அவன் நொண்டிக்கொண்டே வந்து மட்டையை சாக்கடையில் வீசினான்.முகம் அழுததால் வீங்கியிருந்தது.கழிவு நீரோடு உறவாடிய மட்டையில்,எழுதுகோளால் சிற்பி சந்துரு செதுக்கியிருந்த எம்.ஆர்.எஃப் (தமிழில்) எழுத்துக்கள் மறைய தொடங்கியது. "என்ன சச்சின் சந்துரு சௌக்கியமா?" என்று கேட்க தொன்றினாலும், அவன் காலில் இருந்த பிளாஸ்திரியும் புண்களும் என்னை மௌனியாக்கியது.இதெல்லாம் முடிந்து ஒரு வாரம் கழிந்தது.பள்ளிகூடம் போகும் வழியில் என்னை நிறுத்தி, என் டிபன் டப்பாவை கேட்டு வாங்கினான்."டேய் சாதம் தானே" என்று உறுதிபடுத்திகொண்டு உடனே மறைந்து சென்றுவிட்டான்.பசி ஒரு புறமும், அவன் செய்கையின் காரணம் அறியும் ஆவல் மறுபுறமும் பள்ளி முடிந்ததும் அவன் வீட்டுக்கு விரைய செய்தது.

பிரபல நாளேடுகள் , நீளமாக வெட்டி லங்கோடு போல் கிடத்தியிருந்தான்.சில விளக்குமாற்று குச்சிகாலுக்கு அருகில் என் டிபன் டப்பா இருந்தது.காத்தாடி செய்யும் இலக்கோடு எதையோ செய்ய முற்படுவது புரிந்தது.வழக்கம் போல்"டேய் இந்த காத்தாடிய கோடி வீட்டு சீனு கடைல வித்தா நாளு காசு பாக்கலாம்" என்று பெரிய மனுஷ தோரணையில் சொன்னான்.சில காத்தாடிகளை காய வைப்பதற்காக திண்ணையில் வைத்துவிட்டு வந்தான்.என்னை நிலைகுலைய வைத்தது அவன் தந்தையின் குரல், "எங்கே அந்த துப்பு கெட்ட கழுதை?அவனால பாரு திண்ணை மேல ஒரு கழுத, இந்த தோஷத்தை கங்கா ஜலத்துல முழுகினாலும் போக்கமுடியாது" என்று நான் இது வரை கேட்காத ஒரு ஐதீகத்தை அள்ளி வீசினார்.அவர் சொன்னது போல் ஒரு கழுதை காத்தாடியை போணி செய்து கொண்டிருந்தது,"தோஷம் கழுதைக்கோ?" என்று எனக்கு தோன்றியது.

"இனிமே தனி ரூம் கிடையாது ஒனக்கு, பெரிய கலக்டர் உத்தியோகம் தட்டு கிட்டு போறது" என்று கத்திக் கொண்டே, அவனது விலை மதிப்புள்ள அல்லது மதிப்பற்ற குப்பைகளை எடுத்து வீசி எறிந்தார், அவற்றுள் என் டிபன் டப்பாவும் அடக்கம்.விழுந்த அதிர்ச்சியிலிருந்து மீளாத டப்பாவின் மூடி நெலிந்துவிட்டது.அதை மூடமுடையாமல் நான் தவித்த தவிப்பு வேதனையானது.

தந்தை என்ற வேதாளம் இப்படி முரண்டு பிடித்தாலும், தன் முயற்சிகளிலிருந்து சற்றும் மனம் தளராத சந்துரு,தன் பரிவாரங்களுடன், மடிப்படிக்கு அடியில் உள்ள இருட்டு பிரதேசத்திற்கு அங்Kஉள்ள எலிகளுக்கும் கரப்பான்களுக்கும் போட்டியாக குடி பெயர்ந்தான்.தந்தைக்கு எதிராக ஒரு "எதிர் நீச்சல்"

அவன் தாயைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே. எங்கள் ஊருக்கு அடுத்துள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியை.பள்ளியில் மாணவிகளையும், வீட்டில் கணவரையும் மிரட்டும் அளவில் கால்பங்காவது சந்துருவை கண்டித்திருந்தால் படிப்பையும் அவன் ஒரு கை பார்த்திருப்பான்.ஆனால் எதுவும் ஒரு மாதத்திற்கு மேல் நீடித்திருக்காது என்பது அறிந்ததே.சந்துருவை தபால் மூலம் எதையோ படிக்க வைக்கும் முயற்சியில் இறங்கியதாக கேள்வி.

நானும் வெளி மாநிலத்தில் பொறியியல் கல்லூரியில் சேர்ந்ததால், இரண்டு வருடங்களுக்கு அவனது துக்ளக் செயல்களிலிருந்து ஓய்வு கிடைத்தது.இரண்டு வருடங்களுக்கு பிறகு விடுமுறைக்காக ஊர் திரும்பிய அந்த காலையே சந்துருவையும் அவன் அப்பாவையும் எதேச்சையாக சந்திக்க நேர்ந்தது.குளிக்காமலே முழு பேண்ட் சட்டை அணிந்திருந்த அவன் வித்தியாசமாக தென்பட்டான்.அவன் அப்பா "எப்படி இருக்க?" என்றுவிட்டு என் பதிலை எதிர்பார்க்காமல்,"சரி நாழி ஆறது, வரேன்" என்று விட்டு போய்கொண்டே இருந்தார்.அவர் "னாழி ஆறது" என்றபோது தெவைக்கு அதிக்மாக அல்லது தேவையே இல்லாமல் சந்துரு தன் இடதுகையை ஆட்டி தான் கடிகாரம் அணிந்துகொண்டிருந்ததை பிரகடனப் படுத்தினான்.என் ஒரு கையில் ஸூட்கேசும் மறு கையில் கனமான தோள்பையும் இருந்ததால் என்னால் தலையில் அடித்துகொள்ள முடியாமல் போயிற்று.

சந்துருவை பற்றி நான் கேள்விப்பட்டது பின் வருமாறு....

"இவன் இனி தேரமாட்டான் " என்றுணர்ந்த அவன் அப்பா அவனை தனது "சந்துரு ஹார்ட்வேர்ஸ்" என்ற கடைக்கு தனக்கு உதவியாக(?!)அழைத்து செல்கிறார்.மகன் இனி தேரமாட்டான் என்று உணர அவருக்கு ஏன் இவ்வளவு ஆண்டுகள் ஆனது என்று தெரியவில்லை.அவரது இந்த முடிவு அவர் மனைவிக்கு அவர் மீதான முதல் மரியாதையை ஏற்படுத்தியிருக்கும்."At last you have taken a fine decision" என்று தன் ஆங்கிலப் புலமையை(!!) வெளிபடுதியிருப்பாள்."அந்த சின்னசனியன் ஒரு ஹிம்சைன்னா இந்த பெரிய சனியன் அதுக்கு மேல, ஆத்துல இருக்கும்போது இங்கிலீஷ் என்ன வேண்டிகெடக்கு" என்று நொந்து போயிருப்பார் அந்தகால ஆறாம் க்லாஸ் அப்பா.மனைவி சொன்ன ஒவ்வொரு ஆங்கில வார்த்தைக்கும் தனித்தனியாக அர்த்தம் தெரிந்தாலும், எல்லாமாக சேர்ந்து அவரை மிரட்டியிருக்கும் பாவம்.

அன்றிரவே சந்துருவை சந்தித்தேன்,தன்னோடு கடைக்கு வரவேண்டும் என்று அவன் வற்புருத்தவே வேறு வழியின்றி அடுத்த நாள் அங்கு சென்றேன்.

தனது தபால் பாட புத்தகங்களையும் தேவையின்றி சுமந்து வந்தான்.அந்த கடையை பற்றி ஒன்றுமே தெரியாதபோதும் எல்லாம் தெரிந்தது போல் பேசினான்.தொலைப்பேசி அழைப்புகளைப் பெரும்பாலும் அவனே தாவித் தாவி எடுத்தது வேடிக்கையாக இருந்தது.மிக ஸ்டைலாக பேசுவதாக ஒரு எண்ணம் இருந்திதிருக்க வேண்டும்.-ணன் அவனை கவனிக்கிறேனா என்று உறுதிபடுத்திகொள்ள தவறவில்லை.மதியம் பசிப்போரட்டம் துவங்கும்போது நல்லவேளையாக அவன் அப்பா, "ரெண்டு பேரும் போய் சாப்டுங்கோ" என்றபடி இருபது ரூபாய் தாளை தாராளமாக நீட்டினார்,அதே சமயம் கௌன்டமணியின் "தலையா","மண்டையா" , "வாயா" விடுபட்ட அனைத்து "யா"க்களும் கச்சிதமாகப் பொருந்தும்படியான உருவத்தில் ஒருவர் சலுகையாக கடைக்குள் வந்தார்."வாய்யா செல்வம்" என்று கடமைக்காக சந்துருவின் அப்பா வரவேற்றார்.

"படிக்க வேண்டிய பைய்யன கடைக்கு கூட்டியார்ரது தான் மனசுக்கு கஸ்டமா இருக்கு" என்று அக்கரையாக சொன்னார்."போதும் இவன் படிச்சு கிழிச்சது, வீட்ல இருந்து படிடான்னு சொன்னா, துப்பறியும் கம்பெனி, காத்தாடி ஃபேக்டரி,கிரிகெட் கிளப்,ரசிகர் மன்றம்னு காச கரியாக்கறான் கம்மனாட்டி" என்று பக்கத்தில் உள்ள எட்டு கடைகளுக்கு மட்டும் கேட்கும்படி கத்தினார் அவன் அப்பா.சினம் கொண்ட சிறுத்தைப் போல் உறுமினான் சந்துரு "ஆந்த ஆள் எப்படி கத்தினான் கேட்டியா?ரொஷம் இருந்த நம்ம அந்த ஆள் தர்ற காசுல சாப்பிடகூடாது" என்று என்னையும் தேவையில்லாமல் தன் ரோஷத்தில் சேர்த்துக்கொண்டாது மனிதாபிமானமற்ற செயல்.

அவன் தந்தையை ஒருமையில் குறிப்பிட்டபோது, அவரை கவனித்தேன் மூக்கு நுனியில் கண்ணாடியை மாட்டிக்கொண்டு ஒரு துருபிடித்த டப்பாவிலிருந்து சில போல்ட் நட்டுகளை எண்ணிக்கொண்டிருந்தது பார்க்க பரிதாபமாக இருந்தது.அவர் குறிப்பிட்ட பட்டியலை கேட்டபின் சந்துருவுக்கு இந்த குரங்கு புத்தி எப்படி வந்தது என்ற கேள்வி என்னுள் விஷ்வரூபம் எடுத்தது.நிலைமையை அமைதிப்படுத்தும் விதமாக செல்வம்"பாவம் சின்ன பையன். இப்போ ஒழுங்கா இருக்கானில்ல விடுங்க சாமி" என்றார்.ஒரு சங்கடமான அமைதி நிலவியது அங்கே,அதை காலவதியாக்கும் விதமாக,தொலைபேசி அழைப்பு வந்தது.சந்துரு தாவும் முன் அவன் அப்பா முந்திக்கொண்டு எடுத்துவிட்டார்,"ஹலோ, சந்துரு ஹார்ட்வேர்ஸ் தான், யாரு ஆசிரியர் சந்த்ரமௌலியா? என்னது மாணவன் மாத இதழா?...ச்சீ வைடா ஃபோன" என்று இரைந்தார் ரௌத்திரமாக.தொடர்ந்து செல்வத்திடம்"என்னவோ வக்காலத்து வாங்கினியே இவனுக்கு, எதோ பத்திரிக்கை ஆரம்பிக்கிறதா சொல்லி இந்த நாய் இப்போ ஃபோன் பன்னவன்கிட்ட ரெண்டாயிரம் ரூபாய் கடன் வாங்கியிருக்கான்,ஒனக்கு தான் புள்ளகுட்டி இல்லயே, என்னொட அவஸ்தை ஒனக்கு எப்படி புரியும்" என்றது தான் தாமதம்.தனது குறையை இடமறியாது அவர் சொன்னது செல்வத்தை பெரிதும் பாதித்தது கண்கூடாக தெரிந்தது."போதும் நிறுத்துங்க சாமி, நீங்க மட்டும் என்ன ஒழுங்கா? மொதல்ல எண்ணை கடை , அப்புரம் துணிக்கடை,பேக்கரி,மளிகைக் கடை, ஹோட்டல் ,இப்போ இந்த கடைன்னு உங்க புத்தி தான புள்ளக்கும் வரும்,எனக்கு புள்ள குட்டியிருந்தா நீங்க கேக்கும்போதெல்லாம் பணம் குடுத்திருப்பேனா?" என்று சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் பாணியில் பேசிவிட்டு சினிமாவில் வரும் கிராமத்து பெரியவர் போல் துண்டை உதறிக்கோண்டு விறுட்டென வெளியேறினார்.சந்துருவின் அப்பா கடைகளில் விடுபட்ட மூன்று எனக்கு சிரிப்பை வரவழைத்தது.என்னுள் விஷ்வரூபம் எடுத்திருந்த அடிக்கோடிட்ட கேள்விக்கு அவர் பேச்சின் மூலம் விடை கிடைத்தது.இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த சந்துரு, ரோஷதிலிருந்து வெளிபட்டவனாக அப்பா கையிலிருந்து இருபது ரூபாய் தாளை வாங்கிக் கொண்டான்.தனது தந்தையைத் தனது பிம்பமாகப் பார்த்தான்.அரை நிமிட மௌனத்திற்குப் பின் "அப்பா நம்ம ஒரு ட்ராவல் ஏஜன்ஸீ ஆரம்பிக்கலாமா?" என்றான்.

காசியபனின் அசடைப் பார்த்து ஞான்கூத்தனுக்கு ஏற்பட்ட அதே எண்ணம் தான் எனக்கும் தோன்றியது "இது ஒண்ணும் நல்லதுக்கா படலை".பின் குறிப்பு:

என் பயோ-டேட்டாவை சந்துருவுக்கு அனுப்ப சொன்னார் அவன் அப்பா.அவன் கலிஃபோர்னியாவில் மென்பொருள் துறையில் இருப்பதாக சொன்னார். இந்த கதையை இரண்டாம் முறைப் படித்தவர்கள் எனக்கு வயிற்றெரிச்சல் என்கிறார்கள்.

Tuesday, July 27, 2010

கொள்கையின் நிறம் கருப்பு

வணக்கங்க,எனக்குன்னு யாருமே கெடையாதுங்க, அதான் சும்மா ஒங்ககிட்ட கொஞ்சம் பேசலாம்னு நெனைச்சேன்.எனக்கு சொந்தம்னு சொல்லிக்க என்னோட கொள்கைகள் தான் இருக்கு.யாரும் இல்லாத எனக்கு அதுங்க தான் அம்மா,அப்பா, பாட்டி, மச்சான், ஒண்ணு விட்ட சித்தி எல்லாமே.அப்படி என்னடா உன்னோட கொள்கைன்னு கேட்கற மூடுல நீங்க இல்லேன்னாலும் நான் சொல்ற மூட்ல இருக்கேன்.ஒன்னா ரெண்டா கூட்டு குடும்பம் மாதிரி நெறைய இருக்கு, முதன் முதலா ஒரு பதிமூனு வயசு இருக்கும், அப்ப என்னோட அம்மா உசுரோட இருந்துச்சு, கோவிலுக்கு போனோம். காசு குடுத்து நிக்குற வரிசையில வேகமா போகவிடுறாங்க, தர்ம தரிசனத்துல மட்டும் ஒரே தேக்கம். கொதிச்சி போய் கோபமா நான் வெளிய வந்திட்டேன்.அன்னிக்கு முழுக்க கோபமாவே இருந்தேன். என்னைப் பொறுத்தவரைக்கும் நீண்ட நேரக் கோபத்துக்கு பேரு தான் கொள்கை.கோயிலுக்கே இனி போகக்கூடாதுன்னு ஒரு கொள்கை சும்மா கம் போட்ட மாதிரி ஒட்டிகிச்சு. அடுத்த வருசமே அம்மாவும் போனதுனால யாரும் என்ன வற்புறுத்தலை.இப்படியே டீக்கடை , பஸ்ஸுன்னு போன இடம் எல்லாம் ஒரு கொள்கை வந்து சேர்ந்துகிச்சு. ஒரு சத்திரத்துல தங்கினேன்,ஒரு வக்கீல் எனக்கு பள்ளிகூட ஃபீஸ் எல்லாம் கட்டி படிக்க வெச்சாரு. சத்திரதுல சாப்பாடு, மதியம் சத்துணவு, செல நேரம் ராத்திரிக்கு வக்கீல் ஐயா வீட்ல சில்லரை வேலைகளிருந்தா செஞ்சிட்டு அங்கயே சாப்பாடு, இப்படி நல்லா போய்க்கிட்டு இருந்துச்சு பத்தாப்பு முடிக்குறவரை.அப்புறம் சத்திரத்தை யாரோ ஒரு மந்திரி வாங்கிட்டான்னு வெளிய பத்தி விட்டாங்கிய.ஒரு மாசம் வக்கீலோட வீட்டு திண்ணைல தங்கினேன், எதோ பட்டு புடவை காணாபோச்சுன்னு சொல்லி முதுகெல்லாம் சூடு வெச்சாங்க, வெளிய தொரத்திவிட்டுடாங்க, உங்களுக்கே தெரியும் திருடக்கூடாதுன்னு ஒரு அடிப்படை கொள்கை கூட எனக்கு இல்லாமலா ?.
ஒரு பேப்பர் ஏஜண்ட் கிட்ட காலைல பேப்பர் போடுற வேலைல சேர்ந்துகிட்டேன். ஒரு பெரிய கூடாரம் இருக்கும் அதுல என்ன மாதிரி பத்து பேரு தங்கியிருந்தோம்.வெறும் தரை தான்,நடு ராத்திரி பேப்பர் வந்ததும் எந்திரிச்சி, ஏரியா பிரிச்சி எடுத்துகிட்டு போகனும்.பகல்ல ஏஜண்டோட மச்சான் வெச்சிருக்குற ஹோடல்ல வேலை.குறிப்பா இது தான்னு சொல்லமுடியாது, என்ன வேணும்னாலும் செய்யனும், இந்த டேபிள் கூட தொடச்சிடலாங்க, அந்த கழிப்பறை கீளீனிங்க் தாங்க ரொம்ப கஷ்டம்.காய்கறி மூட்டைய கொண்டு போய் ஸ்டோர் ரூம்ல போடணும். இத்தனைக்கும் அங்க சம்பளம் இல்லை, ரெண்டு வேளை சாப்பாடு தான். பேப்பர் ஏஜண்ட் மாசத்துக்கு நானூறு ரூபாய் தருவாரு, அதுவும் மாசாமாசம் இல்ல, எப்போவாச்சும் , ஊருக்கு போகனும்னா அல்லது தீபாவளி , பொங்கல் பண்டிகைன்னா சேத்து வச்சி குடுப்பாரு, சம்பளம் கூடக் கேட்டா அப்போ தங்குற எடத்த நீயே பாத்துக்கன்னு சொன்னதுனால யாரும் பேச மாட்டோம். ஏஜண்ட் கூட பரவாயில்லைங்க, அந்த சூப்பர்வைசர் தான் ரொம்ப மோசம், அங்க இருந்தவங்கள்ல நான் தான் அதிகம் படிச்சவன், அப்படியும் என்ன மதிக்க மாட்டாரு சூப்பர்வைசர். ஒரு தடவை ஒரு நர்ஸ் வீட்ல பேப்பரோட சேர்த்து அவங்க புருஷனுக்கு தெரியாம ஒரு லெட்டர் தரனும்னு சொன்னாரு, சரியா என்னன்னு புரியலைன்னாலும், என்னோட ஏதாவதொரு கொள்கைக்கு அது எதிராயிருக்கும்னு தோணிச்சு.போயா நீயும் உன்னோட வேலையும்ன்னு விட்டுட்டேன்.சம்பளம் பாக்கி வாங்கும்போது நான் உண்மைய சொன்னா போலிஸ்ல பொய் வழ்க்கு போட்டு உள்ள வைப்பேனுட்டான் சூப்பர்வைசர்.

ஒரு கெமிகல்ஸ் கம்பெனில டெலிவரி பைய்யனா சேர்ந்தேனுங்க,பெரியவரு ஆரம்பிச்ச கம்பெனி அவரு மகங்க ரெண்டு பேரும் பாத்துகிட்டாங்க, மூத்த மகன், பொம்பளை சகவாசம்,ரெண்டாம் மகன் முழுக்குடிகாரன்.ராத்திரிக்கு அப்பாரு வீட்டுக்கு போனதும் ஒரே கூத்தும் கும்மாளமும் நடக்கும் குடௌன்ல,சின்னவருக்கு நான் தான் சரக்கு வாங்க போகனும் , பெரியமகனுக்கு மெடிக்கல் ஷாப்ல போய் அசிங்கம் புடிச்ச பலூன் வாங்கி வரனும். ரெண்டு நாள் பொறுத்து பாத்தேங்க. பொறுக்க முடியல, சரக்கு வாங்க குடுத்த காச நேரா பெரியவர் வீட்ல குடுத்துட்டு வேலைய விட்டே நிக்கலாம்னு போனேன்.அங்க போனா அந்த ராத்திரி நேரத்துல ஆபீஸ் டைபிஸ்ட் அக்கா நைட்டியோட கதவ தொறக்குறாங்க.ரெண்டு நாளைக்கு போய் என்ன சம்பளம் குடுப்பாருன்னு நெனைச்சேன்,ஆனா முன்னூறு ரூபாய் கொடுத்துட்டாரு பெரியவரு.ஒவ்வொரு தடவையும் வேலைய விடும்போது ஒரு அசரிரி சிரிப்பு சத்தம் கேட்கும் எனக்கு. அப்போ நெனைச்சிக்குவேன், செல்வம், கல்வி, வீரம், தரித்திரம்னு எல்லாத்துக்கு ஒரு தேவதை இருக்குறா மாதிரி கொள்கைக்குன்னு ஒரு தேவதை என்னை வாழ்த்துதோன்னு. நான் தான் கலியுகத்துல கொள்கி அவதாரம்னு கூட தோணும். ஊரைவிட்டு போய் சம்பாதிக்கலாம்னு முடிவு செஞ்சு, இருந்த மூனு சட்டை,ரெண்டு பேண்ட், மூனு கைலியோட, கெளம்பி செண்ட்ரல் பஸ் ஸ்டேண்ட்க்கு போய்ட்டேன். ராத்திரி பத்து மணிக்கு மறுபடியும் தேவதையோட சிரிப்பு கேட்டுச்சு அப்போ தான் புரிஞ்சிச்சு அது சிரிப்பு இல்லங்க, பசியில வயிறு சத்தம் போடுது.போய் ரோட்டோரக் கடைல நாளு இட்லி சாப்ட்டேன்.ரேடியோ பெட்டில "ஆனந்த தேன் காற்று தாளாட்டுதே, அலைபாயுதே" பாட்டு மணிப்பூர் மாமியார்ன்னு வெளிவராத ஒரு படத்துலேந்து ஓடிச்சு.பாட்டுல என் முழு வயிறும் நெரம்பிடிச்சுங்க.திரும்ப பஸ் ஸ்டேண்ட் வந்தா அங்க ஒரு நடுத்தர வயசுக்காரரு,இந்நேரத்துக்கு இங்க இருந்தா சந்தேக கேஸ்ல புடிச்சுகிட்டு போகும் போலீஸ் அதுனால பக்கத்துல இருக்குற கொட்டகைல படம் பாக்கலாம்னு சொன்னார். சினிமா பாக்ககூடாதுன்னு ஒரு கொள்கை சினிமா டிக்கெட் விலைய ஏத்தினப்போவே இருந்துச்சு, இப்போ போலிஸா கொள்கையான்னு பட்டி மன்றம் வச்சி பாத்தா, சாலமன் பாப்பையா மாதிரி "போலிஸ் கொள்கை"ன்னோ, "கொள்கையுள்ள போலிஸ்"ன்னோ குழப்பிக்காம, போலிஸ் பயம் தான் ஜெயிச்சுதுங்க."வறுமையின் நிறம் சிகப்பு" படம் ரொம்ப நல்லா இருந்துச்சு, என்ன பத்தின கதை மாதிரி தோணிச்சு எனக்கு.என்ன வித்தியாசம்? அதுல டெல்லி எனக்கு திருச்சி, அவர் எதொ பெரிய படிப்பு நான் பத்தாவது அவ்வளவு தான் வித்யாசம்.படம் பாத்ததும் அந்த நடுத்தரவயசுக்காரரு "நீ ஏன் விந்தி விந்தி நடக்குற ஒனக்கு ஹிரண்யா இருக்கா?"ன்னாரு."அதென்னங்க ஹிரன்யா?"ன்னு கேட்டேன், டாக்டர்கிட்ட போனா ரொம்ப துட்ட புடுங்குவாங்க, நானே பாத்து சொல்றேன், அந்த சந்து மறைவுக்கு வான்னு கூப்பிடாரு.நானும் நம்பி போனேன், நல்ல வேளையா அஹிம்சைக் கொள்கை இல்லாததுனால செவுத்தோட சேத்து நாளு சாத்து சாத்திட்டு வந்தேன்.எதோவொரு வண்டியை புடிச்சு எங்கயோ போகனும்போல இருந்துச்சு.மெட்ராஸ் பஸ்ல ஏறிட்டேன்.ரொம்ப பயமா இருந்துச்சு மெட்ராஸ் சேரும் வரைக்கும்,பஸ்ல பக்கத்துல யாரு உக்காந்தாலும் , நான் தூங்கவே இல்ல. பேரிஸ் கார்னர்ல ஒரு ஹோட்டல்ல வேலைக்கேட்டேன்,நான் ஒருத்தன் நிக்கிறமாதிரியே முதலாளி காட்டிக்கலை.அப்போ ஒரு வெள்ளைவேட்டி சட்டையோட ஒருத்தர் வந்தார், "தம்பி ஊருக்கு புதுசா? சாப்பிட்டியா?"ன்னு கேட்டாருங்க. என்னைய அம்மாவுக்கு அப்புறம் அப்படி கேட்டது அவரு தாங்க."வேலை வேனும்"னு சொன்னதும்,"நல்லா சாப்ட்டா தானே நல்லா வேலை செய்யலாம்"னு சொல்லி "பிடி காசு, சாப்பிடு" என்றார். பூரி கெழங்கு ஒரு பிலேட், ஒரு வெங்காய ஊத்தப்பம் சாப்ட்டேன், மறுபடியும் சிரிப்பு சத்தம் கேட்டுச்சு, வயிறு நன்றி சொல்ற சத்தங்க.ஆனா ஹோடல்ல பக்கத்துல இருந்தவங்க எல்லாம் என்ன மொறைச்சி பாத்து மூக்க மூடிக்கிட்டாங்க."என் மாப்ளை அண்ணா நகர்ல ஆட்டோ ஓட்டுறான் அவன்கிட்ட இந்த பலகாரத்தையும் என் மகளுக்கு கொஞ்சம் மருந்தும் கொடுத்துட்டு இங்க வா"ன்னாரு வெள்ளைவேட்டி சட்டை(பேரு தெரியலங்க)."இந்தா பிடி பைய"ன்னாரு, "எப்படி போனும் தெரியுமா? அதோ நிக்குது பாரு பிடி அந்த பஸ்ஸ, தண்ணி தொட்டி ஸ்டாப்ல எறங்கி ரோட்ட க்ராஸ் பண்ணா ஆட்டோ ஸ்டேண்ட் அங்க, வாசுன்னு ஒரு ஆட்டோ ட்ரைவர் இருப்பாரு அவர்கிட்ட இத கொடுக்கனும், அதே பக்கம் வரும் பஸ்ஸ பிடி திரும்பி இங்க வரலாம்".

பஸ்ஸுக்கும் பணம் குடுத்தாருங்க. அடிக்கடி "பிடி" "பிடி"ன்னு சொன்னதுனால அவர பிடியண்ணன்னு நான் மனசுல ஃபிக்ஸ் பண்ணிகிட்டேன்.பஸ்லயிருந்து கீழ எறங்குறதுதான் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.னல்ல கூட்டம் ஆனலும், பலகாரம் மருந்து பையை பத்திரமா வெச்சிருந்தேன், ரோடு தாண்டி அந்த பக்கம் போகும் போது நெறைய ஆட்டோ நின்னுகிட்டு இருந்துச்சு, எல்லா ஆட்டோகாரங்களும் ஒரு சஃபாரி சட்டைகாரர சுத்தி நின்னு பேசிகிட்டிருந்தாங்க, சவாரியா இருக்கும், வாசு சவாரில போய்ட்டார்ன்னா அப்புறம் புடிக்க முடியாதுன்னு, அவசர அவசரமா ஓடிப் போய் "இங்க யாருங்க வாசு?"ன்னேன். "நீங்க யாரு தொரை"ன்னு சம்மந்தமே இல்லாம அந்த சஃபாரி சட்டைக்காரரு கேட்டாரு," அவர் மாமனார் அனுப்பினாரு சார் இத கொடுக்கச் சொன்னார்"ன்னு சொன்னேன்.

அந்த பையையும் புடிங்கி வெச்சிகிட்டாரு.

"வாசு ஏற்கனவே மாமியார் வீட்ல தான் இருக்காரு , எந்த ஏரியால மாமனாரு இருக்காரு?".."பேரிஸ் கார்னர்லங்க, நான் ஊருக்கு புதுசு, இன்னைக்கி காலைல தான் வந்தேன்"ன்னு சொன்னேன்...

"மாட்டினா இப்படி சொல்லனும்னு சொல்லிக் கொடுத்தாங்களா?"ன்னு பேசிகிட்டே இருந்தவரு பளார்னு அறைஞ்சிட்டாருங்க என்னை.

இடுப்புலேந்து ஒரு பெரிய ஃபோன் எடுத்து, யாருக்கோ ஃபோன் பண்ணாரு,இன்னொரு தடவை ஃபோன எடுத்து "கம்"ன்னாரு ரெண்டு நிமிஷத்துக்கெல்லாம் ஒரு போலிஸ் ஜீப் வந்து நின்னுச்சு.

"பிடிங்க அவன"ன்னு என்ன கைய காட்டினதும், மூனு நோஞ்சான் ஏட்டு வந்து என்ன ஜீப்ல ஏத்திட்டாங்க. காலைலேயிருந்து பிடி பிடி ன்னு கேட்டவனுக்கு இந்த பிடி தாங்க பீதிய கெளப்பிடிச்சு.ஸ்டேஷன் கூட்டிகிட்டு போனாங்க.நம்ம பிடியண்ணே எனக்கு முன்னாடியே அங்க ஆஜர். டௌசரும் பனியனும் அவருக்கு அவ்வளவு நல்லா பொருந்தலைங்க.

பதினஞ்சு நாள் உள்ள வெச்சி நெனைக்கும்போதெல்லாம் அடிப்பாங்க.அப்புறம் வெளிய வந்து, ஊரெல்லாம் சுத்தி,என்னய நீங்க பாத்திருக்கலாம் ஹோட்டல்ல,வீட்டுக்கு தண்ணீ கேன் எடுத்துட்டு வர்றவனா,பார்கிங்க்ல கார் கழுவ கெஞ்சியிருப்பேன், பேப்பர் போட்டிருக்கலாம், சிக்னல்ல ஊதுபத்தியும் துண்டும் விக்கறவனா பாத்திருக்கலாம் அப்பாவியா இருக்கானே அடுத்த தடவை வரும்போது பழய சட்டை தரனும்னு நெனைச்சிருப்பீங்க அதுகுள்ள என் கொள்கை எதாவது என்னை வேலைய விட்டு தூக்கியிருக்கும்,"எங்க அந்த பையன்?"ன்னு நீங்க கடைல கேட்டா"அவன் கல்லால கை வெச்சிட்டான், அவன் ஏற்கனவே ஜெயில்ல இருந்தவன்னு எதாவது கேள்விப் பட்டிருப்பீங்க". இப்போ ரொம்ப வருஷமா இங்க இருக்கேங்க.காலைல குளதாங்கரையில குளியல் வேளைக்கு சோறு,ஒண்ணும் தொந்தரவு இல்லைங்க, எப்போ வந்தேன்னு நெனவு இல்ல,தலை தான் கொஞ்சம் பாரமா இருக்கு, முடி வெட்டனும், எவ்வளவு முடி வளந்திருக்குன்னு பாக்கலாம்னா, முடியல, கைய சங்கிலியால கட்டி வெச்சிருக்காங்க.

காரணமே இல்லாம ஒருத்தர் மட்டும் கையில பிரம்போட வந்து எல்லாரையும் அடிக்கிறாருங்க.

"ஒரு வேளை அவர் பைத்தியமோ?"

Monday, July 26, 2010

கிலிச் சங்கிலி

"மச்சான் இப்பொ கொஞ்சம் கஷ்டம்டா, அமௌண்ட் கெடச்சா நானே உனக்கு ஃபோன் செய்யறேன்டா மச்சி".கேட்டு கேட்டு அலுத்துபோன வசனத்தை மறுபடியும் கேட்டது வெறுப்பேற்றியதால் தொலைப்பேசி இணைப்பை துண்டித்தேன்.இதுவரை ஆறு பேரிடம் கேட்டாயிற்று,எல்லோருமே இதே ரீதியில், வெவ்வேறு வார்த்தை பிரயோகங்களில் தங்கள் இயலாமையை சொல்லிவிட்டார்கள்.எல்லோரும் இரண்டு விஷயத்தில் ஒற்றுமையை கடைப்பிடித்தார்கள், ஒன்று "பணம் இல்லை", அடுத்து "ஃபோன் செய்யாதே" என்பதை நாசூக்காக "நானே ஃபோன் செய்யறேன்"என்கிறார்கள். என் கடந்த கால நண்பர்கள்!

எனக்கும் அறிவில்லாமல் போய்விட்டது, பரீட்சை முடிந்ததும், கோடைக்கானல் போக திட்டமிட்டு , மூன்று பைக்குகளில் ஏழு பேர் சென்று சாகசம் புரிந்ததால் வந்த வினை.எல்லோரும் வர விருப்பம் உண்டு ஆனால்,தற்சமயம் கையில் பணம் இல்லை, திரும்பி வந்ததும் தங்கள் பங்கை தருவதாக, சூடம் தாண்டி, இல்லை துண்டை கொளுத்தி, (வேண்டாம் விடுங்கள் கோபத்தில் உளரல் அதிகமாகிறது) சத்தியம் செய்தார்கள்.

மேலும் "ஃப்ரெண்ட்ஸுக்கு ஒண்ணுன்னா நம்ம கோபி சும்மா இருக்க மாட்டான்டா" என்று சகவிரோதி உசுப்பேற்றியதன் விளைவு, துணிந்து மூன்று பவுன் சங்கிலியை சேட்டிடம் அடகு வைத்தேன்.நாங்கள் ஏழுபேர் தான் போகிறோம் என்று அதுவரை நம்பிக்கொண்டிருந்த எனக்கு ஏழரை சனியனும் உடன் வருவது தெரிந்திருக்கவில்லை.போகும் வழியில் போகக்கூடாத வேகம் போய், "கர்த்தரே" என்று நின்றிருந்த "மாதா லாரி சர்வீஸ்" லாரியில் மோதினான் என் அருமை நண்பன், குதித்து விட்டதால் அவனுக்கு ஒன்றும் ஆகவில்லை.

இரண்டு நாட்களுக்கான போதையையும், கோடைக்கானலின் குளுமையையும் தியாகம் செய்து என் செலவில் வண்டி பழுது பார்க்கப்பட்டது.திரும்பி வந்ததும் பணம் கொடுப்பதில் பெரும்பங்கு அவனுடையது,"இருந்தா தர மாட்டமா?" என்று நெஞ்சில் ஈட்டி பாய்ச்சுகிறான்.என் வேதனை புரியாமல் என் தந்தை "அந்த கரையாண் புத்துல மருந்தடிக்கனும், இல்லேன்னா கந்து வட்டி மாதிரி வளர்ந்துகிட்டே போகும்" என்றார் கொள்ளைபுறத்தில் இருந்த புற்றை நோக்கியவாரே.என் தில்லு முல்லு அவருக்கு தெரிந்து விட்டதோ என்று எனக்கு ஒரு திடுக், பின் எப்போதும் உவமையோடு பேசும்பழக்கம் கொண்டவர் என்பதால் கொஞ்சம் சமாதானம் அடைந்தேன்.

வீட்டில் "சங்கிலி எங்கேடா கோபி?" என்று கேட்டு தொலைத்தால் பதில் சொல்ல இயலாது என்பதால் எந்நேரமும் கழுத்தை மறைக்கும் சட்டையோடு இருந்தேன்.எண்ணெய் குளியலை தவிர்த்தேன்.என் தனியறையை சிறையறையாய் பாவித்து முடங்கி கிடந்தேன். ஒரு வாரம் கழிந்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. நடுத்தெருவில் யார் பார்வைக்கும் படாமல் ஒரு நான்காயிரத்து முன்னூறு ரூபாய் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றெல்லாம் நினைத்தேன். யார் பார்வைக்கு பட்டதோ இல்லையோ என் பார்வைக்கு பத்து பைசா கூட சிக்க வில்லை.யாராவது உதவ மாட்டார்களா? குலதெய்வத்தை முதன் முறையாக வேண்டினேன்.

ஒரு எலிகாப்டர் பறக்கும் ஓசை நெடுந்தூரத்தில் கேட்டு, அதன் வீரியம் பெருகி, என் வீட்டு வாசலில் அடங்கியது.வந்தது குலதெய்வமல்ல என் கல்லூரி நண்பன் உமேஷ், அது எலிகாப்டர் அல்ல அவன் பஜாஜ் எம்80."என்னடா கோபி டல்லா இருக்க?" என்றவாரே என் அறைக்குள் நுழைந்தான்.

நல்ல சட்டை, பேண்ட், ஷூ எல்லாம் அணிந்திருந்தான்.உமேஷ் இதுவரை அவ்வளவு நேர்த்தியாக உடை அணிந்து இப்பூவுலகம் பார்த்திருக்க வாய்ப்பில்லை."என்ன ஆச்சு உனக்கு எதையோ பரிகொடுத்தா மாதிரி இருக்க?" என்று அவன் கேட்டது தான் தாமதம் கோடைக்கானல் முதல் கரையான் புற்று வரை ஒப்பித்தேன்.இவனாவது எனக்கு உதவமாட்டானா என்று நினைக்கும்பொழுதே, "கோபி உன் பிரச்சனை தீர்ந்தது! கவலைய விடு" என்று தோளில் தட்டினான். நான் மெய் சிலிர்த்து நின்றேன்.கூடவே வந்து கூத்தும் கும்மாளமும் அடித்து பின்னர் கை விரிக்கும் துரோகிகள் மத்தியில் தானே வலிய வந்துதவும் உமேஷ் தன் உருவம் போலவே என் மனதில் விஷ்வரூபம் எடுத்து நின்றான்.மானசிகமாக புகழுரைப் புணைந்து கொண்டிருந்த என்னை திசை திருப்பியது அவனது செல்ஃபோன் சத்தம்."ஹலோ உமேஷ் ஹியர், சொல்லுங்க சதீஷ், உங்க செக் அனுப்பிட்டேன், ஓகே பை".மிக சுருக்கமான பேச்சுடன் வைத்து விட்டான்."செல்ஃபோன் வாங்கிட்டியா?" என்றபடி அவனது செல்ஃபோனை வாங்கி பார்த்தேன், எரிக்ஸன் ஒரு கரும்பலகை துடைப்பான் அளவில் கனமாக இருந்தது.ஒரு நிமிடம் வரும் இன்கமிங்க் அழைப்பிற்கு பத்து ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்ட காலம் அது.பங்களா, காருக்கு அடுத்தபடியான அந்தஸ்தைப் பெற்றிருந்தது செல்ஃபோன் என்று சொன்னால் நம்புவதற்கு இப்பொழுது கடினமாகத்தான் இருக்கும்.

"ஆமாம் மாப்ள,என்னோட பிஸ்ணஸுக்கு இது அவசியம் தேவை, மேலும் எனக்கு ஒரு பார்ட்னர் வேனும்,முதல் கூட ரொம்ப போட வேண்டாம், நல்லா உழைக்கிற புத்திசாலி தான் வேணும்,அதான் உன்ன பாக்க வந்தேன், ". என்னைத்தான் புத்திசாலி என்று சொன்னான்!

"ஆனா என்கிட்ட தான் காசில்லையே, ஏற்கனவே சேட்டுகிட்ட வாங்கின 4300 ரூ கடன்". இந்த பொன்னான வாய்ப்பை இழக்கவும் மனதில்லை.

"கஷ்டத்தோட கஷ்டமா, உன்னோட வண்டி புக்க அடமானம் வெய், எப்படியும் பதினஞ்சாயிரம் கெடைக்கும், மீதி பணத்துல ,வெறும் 5550 ரூ குடுத்தா போதும் எனக்கு நீ பார்ட்னர்". பதில் சொல்ல எத்தனிக்கும் முன் போட்டியாக ஒலித்தது, அவனது செல்ஃபோன், "ஹலோ , உமேஷ் ஹியர் நான் முக்கியமான ஒருத்தர்கிட்ட பேசிகிட்டு இருக்கேன், அப்புறமா பேசறேன், பை.".அவன் குறிப்பிட்ட அந்த 'முக்கியமான ஒருத்தர்' நான் தான் என்பது பேரின்பதிர்ச்சியாக இருந்தது,பெருமையாக இருந்தது."யாரு மச்சான் ஃபோன்ல?" என்று கேட்டதற்கு, என்னக்கு மேல ஒரு பாஸ் இருக்காரு அவரு தான் என்று அலட்சியமாக சொன்னான்.தனது பாஸை புறக்கணித்துவிட்டு என்னிடம் பேசுவதை எண்ணி எனக்கு உச்சந்தலையில் என்னவோ செய்தது.மேலும் சில நாட்களுக்கு முன் சாதாரணமாக இருந்தவன் இப்போது வசதியோடு கணப்படுவது தெம்பளித்தது."சரி உமேஷ் நான் முடிவு செஞ்சிட்டேன் "நாடகத்தனமாக கையை நீட்டினேன்."ஆனா, போட்ட பணத்தை எடுக்கலாமா?"

"கோபி, சர்கஸ்ல யானையை கயிறால தான் கட்டி வெப்பாங்க ஆனா அது தப்பிக்காது, குட்டி யானைய சங்கிலியால கட்டுவாங்க, ஏன் தெரியுமா?".

என் கேள்விக்கு தொடர்பின்றி ஒரு கேள்வி பதிலாக வந்ததில் கொஞ்சம் குழம்பினேன், ஒரு வேளை இதற்கு பதில் சொல்லா விட்டால் பார்ட்னர் ஆக்கி கொள்ள மாட்டானோ என்றும் ஒரு பயம். ஆகவே மையமாக மண்டயை ஆட்டி வைத்தேன்.குழப்பம் அறிந்து கொண்டு அவனே விடை முடிச்சை அவிழ்த்தான்."சின்ன வயசுல யானையை சங்கிலியால கட்டினதும் அதை தகர்த்து ஓட முயற்சி செய்யும்,அதால முடியாது, ஸோ எப்பவுமே நம்ம இந்த கட்டுலயிருந்து தப்பிக்க முடியாதுன்னு ஒரு முடிவுக்கு வரும், அப்படி முடிவு செஞ்ச யானைய கட்ட சங்கிலி ஏன் கயிறு கூட வேண்டாம், வெறும் நூலே போதும், மைன்ட் செட் புரியுதா? நல்லதே நெனைச்சா நல்லதே நடக்கும்". "அடேங்கப்பா என்னமா பேசுறான்" என்று வியந்தேன், எனக்கும் அவனது நம்பிக்கை தொற்றிக்கொண்டது, அதுவும் முழு நம்பிக்கை.மேலும் ஒரு நாய் கதை, ஒரு தவளைக் கதை மற்று சில மீன் கதைகளைச் சொல்லி என்னை உற்சாகபடுத்தினான்.

"சரி கோபி, நான் கெளம்புறேன், நாளைக்கு ஒரு கான்ஃபரன்ஸ் இருக்கு நீயும் வரணும்" என்று கூறி விட்டு தனது பஜாஜ் எம்80யை கிளப்பி சென்றான். வரும்போது எலிகாப்டர் போல் தொன்றிய அவன் வாகனம் இப்பொது எனக்கு புஷ்பகவிமானம் போல் தோன்றியது.தெருவில் யாரும் இல்லாதிருந்தால் அவன் வந்து சென்ற திசையை தலை தாழ்த்தி வணங்கியிருப்பேன்.கான்ஃபரன்ஸ் என்றதுமே இனிய உணர்வுகளும், கற்பனைகளும் ப்ரவகிக்க தொடங்கியது.

எனது கற்பனைக் கான்ஃபரன்ஸில் காரசாரமான விவாதம்,அத்தனை பொறுப்புகளையும் யார் சுமப்பது என்று சர்ச்சை, இறுதியில் கோபியை விட்டால் வேறு யாரும் இதை பேணி காக்க முடியாது என்று முடிவு செய்து என்னையே டைரக்டர் ஆக்கிவிடுகிரார்கள் மாதம் பதினைந்தாயிரம் சம்பளம்.நான் தங்குவதற்கு நீச்சல் குளம் கூடிய வீடு, ஃபியட் யூனோ வண்டி ,என்னை வஞ்சித்த அந்த ஆறு பேருக்கும் ,பியூன், செக்யூரிட்டி போன்ற வேலை, இதைத் தவிர ரொக்கமாக 4300ரூ பணம் என்று கற்பனை சென்று கொண்டிருந்தன.

மறுநாள் மாலை டை சகிதம் வந்த உமேஷ், எனக்கும் ஒரு டை கொடுத்து அணியச் சொன்னான்."கெளம்பலாமா?" என்றபடி தனது கருப்புப் பையை என்னிடம் கொடுத்தான்.அவனது சட்டைப் பையில் முக்கியமான காகிதங்கள் இருந்ததால்,அவனுடைய செல்ஃபோனும் என் சட்டைபையில் தஞ்சம் புகுந்தது.டை பை செல்லுடன் நானும் ஒரு தினுசாகத்தான் இருந்தேன்.எதிர் வீட்டு மாலதி முதன் முதலாக என்னைப் பார்த்து சிரித்ததே என் தோற்றத்து மேன்மைக்கு சாட்சி.கான்ஃபரன்ஸ் நடப்பதாக இருந்த ஹோட்டலை தவிர்த்து நேராகப் போனான்.

"என்ன மச்சி இந்த பக்கம் போற?".

"ஒரு சின்ன வேலை இருக்கு முடுச்சிட்டு வந்துடலாம், கான்ஃபரன்ஸ்க்கு இன்னும் நெறைய நேரம் இருக்கு", என்றவன் பஜாஜ் எம் 80ஐ நிறுத்திய இடம் ஒரு வண்டிப் பட்டறை."இது தான் நான் வாங்கியிருக்குற பைக்" என்று ஒரு யமஹாவை காட்டினான்,நாங்கள் யமஹாவிற்குத் தாவி "ஜென்னிஸ் ரெஸிடன்ஸீ" என்று நியான் விளக்குகள் உறுதி செய்த இடத்தை அடைந்தோம்.என் மூச்சே நின்றுவிடும்படி ஒரு அழகு தேவதை முண்டா சுடிதாரில் நின்றுகொண்டிருந்தாள்.எங்களைக் கண்டவுடன் அருகில் வந்தாள்."கோபி இதுதான் வித்யா,நம்ம கூட பிஸ்னஸ் செய்யறாங்க" என்று அறிமுகபடுத்தினான் உமேஷ்."ஓ! இவர் தான் கோபியா? ஸ்மார்ட்டா இருக்காரே" என்றபோது நான் இப்பூவுலகில் இல்லை.போதாக்குறைக்கு என் கையை பிடித்துக் கொண்டு "சரி நேரமாச்சு உள்ள போகலாம்" என்றபடி இழுத்துச் சென்றாள்,அந்த கான்ஃபரன்ஸ் அறையில் என்னருகிலே அமர்ந்தாள்.அதன் பிறகு யார் யாரோ வந்தார்கள்,என்னென்னவோ பேசினார்கள், எதுவும் எனக்கு எட்டவில்லை, எனது கனவு ஃபியட் யூனோ காரின் இடபக்க இருக்கைக்கு இவள் தான் பொறுத்தமானவள் என்று முடிவி செய்து விட்டேன்.அவளை மணம் முடிப்பதாக கற்பனையை துவக்கினால், அது நீண்டச் சங்கிலியைப் போல நீண்டது. களைப்பாக வீடு திரும்பும் நான் சொஃபாவில் அமர்கிறேன், எனது கழுத்து டையை தளர்த்திவிடுகிறாள்.

தனது சேலை தலைப்பால் என் வியர்வையை ஒற்றி எடுக்கிறாள்,தேநீர் கொடுத்து புத்துணர்ச்சி பெறச் செய்கிறாள்,"என்னங்க கோவில் கூட்டிகிட்டு போங்க" என்றதும் நான் குளித்து தயாராகிறேன்.அவள் பெரிய பொட்டும், தலையில் பூவோடும் பட்டுபுடவைக்குள் புகுந்து தேவதையாய் இருக்கிறாள்.இருவரும் காரில் புறப்பட்டு செல்கிறோம், வழியில் உமேஷ் தனது யமஹாவில் வருகிறான், என்னை வண்டியை நிறுத்த சொல்லி அவனோடு பைக்கில் போகிறாள் எனக்கு டாட்டா காட்டியவாபடி.விதிர்விதிர்த்து அசல் உலகுக்கு வந்தேன்.ஒரு வேளை உமேஷுக்கும் இவள் மீது நாட்டம் இருக்குமோ என்ற ஆழ்மதின் ஐயம் தான் இந்த அற்புதமான கற்பனையோட்டதை கெடுத்துவிட்டது.இது எதுவும் அறியாத வித்யா,"எதுக்கு அப்போ கை ஆட்டினீங்க?".

"நானா? எப்போ?"

"நம்ம சீனியர் பேசும்போது"

அப்போதுதான் உணர்ந்தேன், எனது கனவுலகின் அசைவுகள், நிஜத்திலும் பிரதிபளித்தது என்று.சரி சமாளிப்போம்,

"அது ஒண்ணும் இல்ல, ஒரு சந்தேகம்...இப்போ இல்ல..." என்றேன்.இதை விட மோசமாக உளர எவர்க்கும் வாய்ப்பு கிடைக்காது என்பது போல் சிரித்தால் வித்யா.

அப்போது தான் கவனித்தேன், எதிரே உள்ள வெள்ளைப் பலகையில், தடிமனான பேனாவால் சில உருண்டைகளும், ஒவ்வொரு உருண்டையையும் அம்புக்குறிகளால் சிறிய உருண்டைகள் மூன்றுடன் இணைக்கப்பட்டிருந்தன.ஒரு பக்கத்தில் ஆறு முதல் நூற்றியிருபது சதவிகிதம் வரை ஒழுங்கற்ற ஏற்றத்தில் எழுதப்பட்டிருந்தது. பலகையின் கீழ்ப் பகுதியில் ஒரு ஆறு இல்லக்க எண் இருந்தது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

உமேஷ் "எப்படி மீட்டிங்க்?" என்றான்.

"ஸூப்பர் டா"

"எப்போ சேரப் போறீங்க?" என்ற என் எதிர்கால மனைவியைப் பார்த்து "கூடிய சீக்கிரமே" என்றேன் அவள் கண்களை உற்று பார்த்தவாறு."இன்னிகே சேர்ந்தா ரொம்ப நல்லது" என்றாள் கள்ளி, நான் கிளர்ச்சியடைந்தேன் என்று நான் சொல்லி தான் உங்களுக்கு தெரிய வேண்டுமா?

அடுத்த நாளே வண்டியின் பத்திரம் அடகுக் கடையில் அடைக்கலம் பெற்றது சங்கிலி விடுதலை பெற்றது.உமேஷுக்கு பணம் கொடுத்தாயிற்று."சாயங்காலம் வருவேன்,அதுகுள்ள உன்னோட ரூமை ஆஃபீஸ் மாதிரி தயாரா வை"என்று விட்டு கிளம்பிவிட்டான்.நான்கு மணி நேரத்திற்குள் குறைந்தது இருபது முறை என் அறையின் உள்ளமைப்பை மாற்றி பின் ஒரு மாதிரி திருப்தி அடைந்தேன்.ஒரு (வெட்டி) கௌரவம் கருதி ஒரு பழைய ஹிண்டு செய்தித்தாளும் என் மேசையில் ஆஜர்!உமேஷ் எந்நேரமும் வரக்கூடும்,அது வரை கொஞ்சம் கற்பனைகள் வேண்டாமா?இதோ இங்கிருக்கிறேன் என்பது போல் வரத் தொடங்கின."அந்த மேத்தா அண்ட் மேத்தா ஃபைல் எங்க?","அந்த பத்து கோடி கான்ட்ராக்ட் நமக்கு தான்னு உறுதியாச்சு","ப்ரியா இன்டஸ்ட்ரீஸ் செக் வந்தாச்சா?","எனக்கு டெல்லியில ஒரு மீட்டிங்க் இருக்கு ஒரு தனி விமானம் ஏற்பாடு பண்ணுங்க" என்ற ரீதியில் என் கட்டளைகளும் ,கேள்விகளும் வந்தன வந்தன வந்து கொண்டே இருத்தன.
(நன்றி தமிழ் திரைப்படங்கள்).

"அட் எனி காஸ்ட் மந்திரிய பாத்தே ஆகணும்" என்றது கொஞ்சம் டூ மச் ரகம்."இன்னும் ஒரு வருஷத்துக்கு எந்த புது வேலையும் செய்ய முடியாது" இது கொஞ்சம் பரவாயில்லை ரகம்.

"ஏன்டா ஒரு மாவு மில்லுக்கு போய்ட்டு வர்றதுக்கு அவ்வளவு அலுப்பா? செய்ய முடியாதா?" என்றபடி என்னறையில் என் அம்மா.சட்டென என் சுழல் நாற்காலி சுருங்கி சூம்பிப்போன முக்காலியானது, அழகான காரியதரிசி (ரீட்டா என்று அழைத்தாக நியாபகம்) நின்ற இடத்தில் என் அம்மா கையில் அரிசி தூக்கோடு.

"சரி போறேன் உமேஷ் வந்த இருக்க சொல்லுமா" என்று கிளம்பினேன்.திரும்பி வரும்போது வீட்டு வாசலில் உமேஷின் யமஹா ஆறுதலளித்தது."ரூம் நல்லா இருக்கு," என்றவன் ஒரு அட்டைப் பெட்டியிலுருந்த நான்கு பாட்டில்களை எடுத்து எனக்கு விளக்கினான்.

"இது 'நோயின்ஃபெக்' திரவம், இதை காது குடைந்ததும், கொஞ்சம் காதில் விட்டு கொண்டால் இன்ஃபக்ஷன் வராது,இந்த சிகப்பு எண்ணெய் 'மல்டீபர்பஸ்' ஆயில்ன்னு பேரு, இத தினமும் மூனு வேளை சாப்பிட்டா, உடம்பு சூடு குறையும், தலைக்கும் தேய்க்கலாம் , புண்களுக்கும் போடலாம், அதோ அந்த கிரீம் நகத்தை சுத்தப்படுத்தும்"
"சரி இதெல்லாம் வெச்சி நான் என்ன பண்ணனும்?" கொஞ்சம் போல் அழுகை வந்தது.

"அன்னிக்கி மீட்டிங்க்ல கேட்டியேடா, இதெல்லாத்தையும் நீ உபயோகிக்கனும், அப்புறம் விக்கணும்"

என் கற்பனைகளுக்கும் இந்த தொழிலுக்கும் தொடர்பு எதுவும் இல்லை என்று உணர்ந்தேன்.

"5500 ரூபாய்க்கு இவ்வலவு தானா?"

"இங்க பாரு சில புத்தகங்கள், சில சீடீ எல்லாம் இருக்கு, இத கேளு அத படி, பிஸ்ணஸ் தன்னால நடக்கும்"

"ஐயா அம்மா எண்ணெய் வாங்கலியா தென்னைமரக்கொடி எண்ணெய் " என்பது போல் கூவிவிற்கும் எண்ணமே எனக்கு விரக்த்தியை கொடுத்தது.

காதுகுடைய பட் வாங்கினாலே எரிந்து விழும் என் அப்பாவிற்கு அந்த "நோஇன்ஃபெக்"கின் நான்கு இலக்க விலை தெரிய வந்தால், வீட்டில் ஒரு மரணம் உறுதி.என் குழப்பத்தை அறிந்தவனாக, "இன்னிக்கு ஒரு ஃபாலோ அப் இருக்கு நீயும் என் கூட வா, அப்போ தான் உனக்கு தெளிவு கிடைக்கும்"

இருவருமாக கிளம்பினோம்.பலத் தெருக்களை தாண்டியதும் வண்டியை நிறுத்தினான்."இன்னிக்கும் அதே ஹோட்டல்ல கான்ஃபரன்ஸ் இருக்கு" என்றான், உடனே வித்யா கண்முன் வந்து சென்றாள், அடுத்து அடகுகடைக்கார சேட்டும் வந்து சென்றார்.பத்து ரூபாய் தாளை என்னிடம் கொடுத்த உமேஷ்,"ஒரு ஓரமா நின்னு தம்மடிச்சிட்டு இரு, நான் வந்திடுவேன், அஞ்சு நிமிஷதுக்கு ஒரு தடவை எனக்கு ஃபோன் பண்ணுடா". என்றும் இல்லாத் திருநாளாக பணம் கொடுத்து விட்டு மறைந்து சென்றான்.

ஒரு ஆழ்ந்த புகை ஈர்ப்பு வைபோகத்தை கொண்டாடிவிட்டு, அவனுக்கு ஃபோன் செய்தேன் சில்லரை ஃபோனில்.

"ஹலோ உமேஷ் ஹியர்"

"உமேஷ், கோபி பேசறேன் டா, நான் இங்கியே தான் இருக்கேன்"

"அடடா சொல்லுங்க சார் எப்படி இருக்கீங்க?"

"மாப்ள நான் கோபிடா"

"அப்படியா? ஒரு டென் தௌசண்ட் செக்கா குடுங்க மீதிய பணமா குடுங்க, பை" துண்டித்து விட்டான்.

என்னாச்சு அவனுக்கு? ஒரு வேளை க்ராஸ்டாக்காக இருக்கலாம்,சிறிது நேரம் கழித்து செய்வோம் என்று நினைத்தேன்.இன்னுமொரு தம்மை அடித்து விட்டு, மறுபடியும் அழைத்தேன்.

"ஹலோ உமேஷ் ஹியர்"
"உமேஷ், கோபி பேசறேன்"

"நான் முக்கியமான ஒருத்தர் கூட பேசிகிட்டு இருக்கேன்,அப்புறமா கூப்பிடுங்க, பை".இணைப்பு இறந்தது.
அதற்கு பின் பலமுறை அழைத்தும் தவிர்த்தவன் ஒரு முறை மட்டும் எடுத்து கோபி நீ நேரா ஹோட்டலுக்கு போ, நானும் நேரா வர்றேன் என்று நடுத் தெருவில் விட்டுவிட்டு சென்றான். வீட்டுக்கு போய் என் வண்டியை எடுத்து செல்வதா அல்லது இப்போதே பேருந்து பிடித்து செல்வதா என்று குழம்பிய படி நின்றேன்.வித்யவின் நினைவு வரவே ஒரு ஹால்ஸ் வாங்கி போட்டுக்கொண்டு பஸ்ஸில் ஏறிச் சென்றேன்.

உமேஷுடனான அந்த சம்பாஷனைகள் முன்பே ஒரு முறை நடந்ததைபோலவும், ஆனால் இப்போது வேதனை அளிக்கும் அவைகள் முன்பு இன்பமாக இருந்ததும் சிற்றறிவுக்கு எட்டியது.எனது பலவீனமான தருணத்தை பயன்படுத்திக் கொண்டுவிட்டான்.இவனைப் பற்றி வித்யாவிடம் சொல்ல வேண்டும் அவளை இந்த கூட்டத்திலிருந்து காப்பாற்றவேண்டும், உணர்ச்சிவசப்பட்டு"கொஞ்சம் வேகமா போங்க" என்று கத்தி பேருந்தில் பல முறைப்புகளையும் நகைப்புகளையும் சம்பாதித்தது எரிந்த கொள்ளியில் எண்ணெய்.

நான் சென்றடையவும், உமேஷ் இன்னும் ஒரு பலிகடாவுடன் வந்து சேரவும் சரியாக இருந்தது. எல்லோரையும் வரவேற்றுக் கொன்டிருந்த என் தேவதை புடவையில் இருந்தாள்.என்னைப் பார்த்து லேசாக சிரித்து விட்டு உமேஷிடம் சென்றாள்.

"சந்தோஷ் இவங்க தான் வித்யா, நம்ம கூட பிஸ்னஸ் செய்யறாங்க", அதற்கு வித்யா "ஓ, இவர் தான் உங்க ஃப்ரெண்ட் சந்தோஷா, ரொம்ப ஸ்மார்ட்டா இருக்காரே!"

" யூ டூ வித்யா?" என்ன உலகம் இது, எப்படி என் கடன்களை அடைக்கப் போகிறேன்? தலையைச் சுற்றியது எனக்கு.

உங்களுக்கு ஒன்று மட்டும் சொல்கிறேன், "குலதெய்வமாகவே இருந்தாலும், டை அணிந்து கொண்டு, கருப்பு பையோடு, பஞ்ச தந்திரக் கதைகள் சொல்லிக் கொண்டு வீட்டு வாசலுக்கே வந்தாலும், கதவை உள்பக்கம் தாளிட்டு, பூட்டி, கருப்பு கம்பிளி போர்த்திக் கொண்டு கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொள்ளுங்கள்"

Thursday, July 22, 2010

கல்லூரிக் காதல்(கள்)


இப்படி நடக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

இனிமையாகத் துவங்கியது கல்லூரியின் முதல் நாள்.முதல் நாளன்றே தயக்கமின்றி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான் ராஜ்."ஹலோ ஐ அம் ராஜ்,என்ன பாஸ் மீசை வெச்சிருக்கீங்க?, சீனியர் பாத்தா பிச்சிடுவாங்க மீசையையும் உன்னையும்.ரேக்கிங் தெரியுமா ரேக்கிங்? ".ஒரே வாக்கியத்தில் ஒருமைக்குத் தாவி,நட்பை எளிதாக ஏற்படுத்தினான்."தெரியாதே ரேக்கிங் பன்னுவாங்களா? " எனக்கு அடி வயிற்றில் புளி.

"ஒன்னும் கஷ்டம் இல்ல, துணிக்கடைல ஓஸீ ல தர்ற மஞ்சப்பை தான் எடுத்துக்கிட்டு வரனும், ஹவாய் செருப்பு தான் போடனும், சட்டயை இன் பன்னக்கூடாது,பெல்ட் போடக்கூடாது,கடிகாரம் கட்டக் கூடாது, சீனியர பாத்ததும் சத்தம் வர்ற மாதிரி தரைல கால அடிச்சி சல்யூட் பன்னனும்,தண்ணி பார்ட்டீ வெக்கனும் , அசைன்மெண்ட் எழுதி கொடுத்தா அவங்களுக்கு கொள்ளைப் பிரியம்,பைக்ல வர்ற கூடாது,முக்கியமா பேரு கேட்டா இனிஷியலோட சொல்லனும், அப்பா பேருக்கு மிஸ்டர் போடனும், தாத்தா பேருக்கு ரெண்டு மிஸ்டர்".

"எப்படி இவ்வளவு தெரியும்? " வியந்தபடி நான்.

"எங்க அண்ணன் ரெண்டு வருஷம் முன்னாடி இங்க தான் படிச்சான்"

வகுப்பு துவங்கியது, அறிமுகப்படலத்தோடு.

"ஹலோ ஃப்ரெண்ட்ஸ், ஐ அம் ராம்குமார், ஹெடிங்க் த டிபார்ட்மெண்ட் ஆஃப் ஃபிசிக்ஸ், உங்க க்லாஸ் இன் சார்ஜ், உங்களை நீங்க அறிமுகபடுத்திக்கங்க" சரளமான ஆங்கிலத்திலும், உடைந்த தமிழிலும் ஆர்.கே. எல்லோரும் தங்களது பெயரையும், அடுத்த ஆண்டுமுதல் படிக்கவிருக்கும் துறையையும் சொல்லி

அமர்ந்தார்கள் , அந்த வரிசையில் "சித்ரா ,கம்பியூட்டர் சைண்ஸ்" என்ற குரல் சின்னக் குயிலுக்கு சொந்தமானது போல் இருந்தது,வகுப்பே ஒன்று சேர அது வந்த திசையைத் திரும்பிப் பார்த்தோம். வாஸ்து பார்த்துக் கட்டிய டியூபக்ஸ் வீடு போல் அற்புதமாக இருந்தாள் சித்ரா.ராஜ் தன்னிச்சையாக பேனாவால் பெஞ்சில் சித்ரா என்று எழுதியதை நான் சிறிதும் ரசிக்கவில்லை.

உணவு இடைவேளையின்போது ஒரு ஒழுங்கற்ற பயோ-டேட்டா தயார் செய்து கொண்டு சித்ராவிடம் சென்றான் ராஜ்."க்லாஸ்லயே அழகான பொண்ணுகிட்ட பயோ-டேட்டா வாங்கிவரச் சொன்னார் ஒரு ஸீனியர், ப்லீஸ் இத தரனும் இல்லன்னா எனக்கும் பிரச்சனை, ஒன்னையும் தொல்லை பன்னுவாங்க". சற்று தள்ளி நின்று வயிற்றெரிச்சலோடு பார்த்து கொண்டிருந்தேன்.ஆறு பந்துகளில் அரைச்சதம் அடித்த களிப்போடு திரும்பி வந்தான் ராஜ்.

பெயர் : சித்ரா சீனிவாசன்

வயது : 17

உயரம்: 5.4

முகவரி: நெ. 22, புதுப்படி சந்து , ஆண்டாள் வீதீ, திருச்சி - 2

படித்த பள்ளி: பாஸ்டன் மெட்ரிகுலேஷன், சென்னை.

பிடித்த நடிகர் : ஷாருக் கான்

இந்த விபரங்களைத் தாங்கிய தாளை கண்முன் ஆட்டினான், "எப்புடி நம்ம டெக்னிக்?". நான் வசிக்கும் பாபு சாலைக்கும், ஆன்டாள் வீதிக்கும் பாலம் கட்டும் பணியை மனதிற்குள் துவங்கினேன்.ராஜை அணிலாக்க முடியாது, எனக்கென்னவோ அவன் இராவணன் போல தோன்றினான்.முழு நான்கு வருடங்கள் இருக்கு பொறுத்திருந்துபெண்ணை அடைவோம்.

இரண்டு மூன்று மாதங்களுக்கு இருந்த ரேக்கிங் கெடுபுடிகள் கொஞ்சம் தளர்ந்தது.கல்லூரிப் பேருந்தில் பாடச் சொல்லி கேட்பார்கள், பத்து ஆபாச வார்த்தைகள் சொல்லக்கேட்டு மகிழ்வார்கள், நமக்கு தான் பத்தோடு நிறுத்திக்கொள்ள சற்று கடினமாக இருந்தது! எல்லாம் எங்கள் விருப்பமாகவும் இருந்ததால் ரேக்கிங்கை மகிழ்ச்சியாக ஏற்க துவங்கினோம்.பாடிப்பாடியே ராஜ் சீனியர்கள் மத்தியில் பிரபலம் ஆனான்.எனக்கென்னவோ அவன் பாடுவதற்கும் பேசுவதற்கும் அதிக வேறுபாடு தெரியவில்லை.அவன் கல்லூரியின் இசைக்குழுவில் சேர்ந்தது, என் சித்ரா கனவின் ஒரு சன்னல் மூடியதாகவே எனக்கு பட்டது.இதெல்லாம் ஒரு புறம் இருக்க நாங்கள் இருவரும் ஒன்றாகவே சுற்றித் திரிந்தோம்.

"வெல்கம் பார்ட்டி " என்ற சடங்கு முடியும்வரை சொல்லிக்கொள்ளும்படி சிறப்பாக ஒன்றும் நடக்கவில்லை.காரணம் அதுவரை பெண்களிடம் அதிகம் பேசக்கூடாது என்ற சீனியர்களின் கட்டளையே.வெல்கம் பார்ட்டி அன்று ராஜை சீனியர்கள் பாடச் சொன்னார்கள். அவனும் "பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக..." என்று சற்றும் சுருதியின்றி பாடி கைத்தட்டல்களைப் பெற்றான்.கடைசிவரை நீடித்த சித்ராவின் கைத்தட்டல் எனக்குள் கலவரத்தை ஏற்படுத்தியது.கில்லாடி தான் அவன், இவளுக்கு

பிடித்த ஷாருக் கான் பாடலைப் பாடி முதல் கல்லை எறிந்துவிட்டான். அவன் போல் எனக்கு தனித்திறமை எதுவும் இல்லை, ஆனால் அவனைவிட நான் படிப்பில் அக்கரை கொண்டதால் அதை வைத்தே காய்களை நகர்த்த முடிவு செய்தேன்.ரேக்கிங்க் பயம் விலகிய முதலாமாண்டு மாணவர்களில் பெரும்பாலானவர்கள் கண்ணாடி அணிந்து கொண்டார்கள்.எந்த விதமான கண் கோளாறும் இல்லாதபோதும் கண்ணாடி அணிவது மோஸ்தர்.குறிப்பாக விஜய் கண்ணாடி, அப்போது வெளிவந்திருந்த "கண்ணெதிரே தோன்றினாள்" பிரஷாந்த் கண்ணாடியும் மிகப் பிரபலம்.

ராஜ் மற்றும் சித்ராவும் சகஜமாக பழகினார்கள்.அவனிடம் சிரித்து சிரித்து பேசுவாள், என்னோடு பேசுவாள்! பெரும்பாலும் அவள், "ராஜ் எங்கே?","ராஜ்க்கு எப்போ பிறந்தநாள்?","ராஜ் வீடு எங்கே?" என்ற ரீதியில் அவனைப்பற்றியே தான் .ராஜின் நண்பன் என்ற முறையில் மட்டுமே அவள் என்னோடு பேசியது போல் இருந்தது. போதாக்குறைக்கு "ராசி" என்ற புனைப்பெயரில் கவிதை (என்ற பெயரில்!) எழுதலானான் ராஜ்.புனைப்பெயரில் அவர்களிருவரின் முதல் எழுத்தும் சேர்ந்திருந்தது என்னை மேலும் கலவரமாக்கியது.என்பெயரையும் அது போல் முயற்சி செய்து பார்த்தேன்,அருவருக்கத்தக்க வழுக்கும் பொருளாக அது அமைந்ததில் எனக்கு கொஞ்சம் வருத்தம் தான் ஆகவே அந்த முயற்சியை கை விட்டேன்.வெறும் புனைப்பெயரை வைத்துக்கொண்டு என்ன செய்வது?

சின்ன சின்ன கற்களாக போட்டுக் கொண்டிருந்தவன் அன்று ஒரு மலைக்கோட்டையே தூக்கி போட்டான்.எரிமலையாய் உள்ளுக்குள் சிதறிக் கொண்டிருந்தேன்.

"எவ்வளவு நாளைக்கு தான் , ஒன் சைடா லவ் பன்றது, இன்னிக்கி சொல்லி டபுள் சைட் ஆக்கப் போறேன்". எச்சில் விழுங்கி கொஞ்சம் எரிமலையின் சூட்டை தணித்து கொண்டபடி, "ராஜ் ,லவ் என்ன ஆம்லெட்டா?ஒன் சைட் , டபுள் சைட்ன்னு சொல்ற? ", அதாவது இந்த காதல் கத்திரிக்காய் கசுமாலம் இதிலெல்லாம் சிறிதும் ஆர்வம் இல்லாதது போல் சொன்னேன்.படுபாவி உண்மையிலேயே கல்லூரி மைதானத்தில் வைத்து சொல்லி விட்டான்.இதைக் காண பொறுக்காமல் ஒரு மரத்துக்கு பின் மறைந்து நின்றேன்.அவள் பதில் என்னவென்று தெளிவாக தெரியவில்லை ஆனால், ராஜ் என்ற ராசி, விரக்தியோடு திரும்பி வந்தான்.எனக்கு உள்ளூர மட்டற்ற மகிழ்ச்சி, பின் ஒரு கவலை,"எனக்கும் இந்த விரக்தி தான் மிஞ்சுமா?"

மண்டல பொறியியல் கல்லூரியில் ஒவ்வொரு வருடமும் நடக்கும் ஃபெஸ்டம்பர் கலை நிகழ்ச்சிக்கு எங்கள் கல்லூரிக்கும் அழைப்பு வந்தது.சித்ரா பாடுவதற்கு பெயர் கொடுத்திருந்தாள், எவ்வளவோ எல்லோரும் வற்புறுத்தியும் ராஜ் பாட சம்மதிக்கவில்லை. இதையறிந்த பல நாட்கள் ராஜுடன் பேசாமலிருந்த சித்ரா "ராஜ் நீ பாடனும், இல்லேன்னா நானும் பாடலை".

"பாடறேன் சித்ரா, ஒனக்காக பாடறேன், ஒன்னை பத்தி தான் பாடுவேன் " அன்று அவன் எறிந்தது கடைசிக்கல் அல்ல, கூரான அம்பு.நிகழ்ச்சியன்று ராஜ் தான் முதலில் பாடினான்,பாடலுக்கு இடையில் வரும் வரிகளான "காமங்கள் ஒன்றே என் காதல் அல்ல கண்டேனே உன்னைத் தாயாக", என்று அர்த்ததோடு சித்ராவைப் பார்த்தான்.அடுத்து பாடிய சித்ராவும், "ராசாவே உன்ன நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுய்யா.." என்று தன் சம்மதத்தை சொல்லி விட்டாள்,அளவில்லா சந்தோஷத்தில் அவர்கள் இணைந்து பாடிய அடுத்த பாடல் "வா வா அன்பே அன்பே,காதல் நெஞ்சே நெஞ்சே". முடிந்தளவு மோசமாகப் பாடி, மேடையை விட்டு இறங்கினார்கள் அல்லது ஆரவாரம் செய்து இறக்கிவிடப்பட்டார்கள்.

அழகான சித்ராவுக்கு அறிவில்லாமல் போனதே என்று வெம்பினேன்.எனக்கு ஆசை விட்டு போனது, இருந்தாலும் நப்பாசை மிச்சமிருந்தது. "ஊர்ல யாரும் முறைப்பையன் இருந்தாதான் பிரச்சனை, இவனதான லவ் பன்றா, எப்போ வேணும்னாலும் இத உடைக்கலாம்" என்று மனதை தேற்றிக் கொண்டேன். எனக்கு என் எண்ணத்தை நினைத்து கேவலமாக தோன்றவில்லை! ராஜ் தான் பாட்டுப் போட்டியில் தோள்வியடைந்தாலும், காதலில் வெற்றி பெற்றதை சொன்னான்."அவளுக்கு எங்கே போச்சு அறிவு? என்னவோ இவனே பாட்டெழுதி மெட்டமைச்சா மாதிரி, ச்ச சுலபமா சிக்கிட்டாளே" என்று நொந்தேன்.

அவன் காதலைக் கொண்டாடும் விதமாக ராஜ், சித்ரா மற்றும் நான் ஹோடலுக்கு போனோம். நாங்கள் சென்றது , "தி கிரேட் ரகுநாத்" . அங்கு சித்ராவிடம் பேச எதுவும் இல்லாததால், " அசைண்மெண்ட் எழுதியாச்சா?" என்று உப்பு சப்பில்லாமல் பேசினேன், ஆனால் மனதிற்குள் "ஆமாம் இவ அசைண்மெண்ட் எழுதினா என்ன ஆயின்மெண்ட் போட்டா என்ன? :-(". நான் அப்படி பேசியது அவளுக்கு பிடித்திருந்தது விசித்திரம்.அவள் பாடங்களில் சந்தேகம் கேட்க, நானும் ஒன்றுமே தெரியாத போதும் துணிந்து கதை அளந்தேன்."ஆரம்பிச்சிட்டியா டா நீ? சரியான சொம்பு" என்றான் ராஜ்."சும்மா இரு ராஜ், நீ வேஸ்ட்டு அவனப் பாரு எவ்வளவு, டீப்பா தரோவா படிச்சிருக்கான்னு" அன்று எனக்காக பரிந்து கொண்டாள், ஆஹா, மூடிய சன்னலில் சன்னமாக ஒரு ஓட்டை, அதன் வழியே மெல்லிய காற்று வருவதால் சற்று ஆறுதல் அடைந்தேன் ,அவள் அதை சொல்லும்போது அவன் காதை கிள்ளியதை மனக்குறிப்பிலிருந்து நீக்கியவாரே.எல்லாம் முடிந்து ராஜ் வீட்டிற்கு போனோம் நானும் ராஜும், அங்கு அவன் அப்பா "ஏன்டா ராசு, பில்டிங்க் ஃபீஸ் கட்ட பணம் வாங்கினியே, கட்டியாச்சா?" என்று கேட்கும்போது,ரகுநாத்தில் சாப்பிட்ட நவரத்தின குருமா எனக்கு ஏப்பத்தை தந்தது.

கார்டுகள் இல்லயேல் காதலின் சாதல் என்பது போல், அவர்களின் காதல் காகித அட்டைகளில் பதிக்கபட்டு, பரிமாறிக்கொள்ளப்பட்டது."ஆர்ச்சீஸ்" என்ற கடைக்கு என்னையும் அழைத்து செல்வான்,ஹேப்பி சன்டே, ஹேப்பி மன்டே என்று ஏதாவதொரு டே இவர்களுக்கென்று கிடைத்ததுதான் கொடுமை.இவர்கள் காதலுக்கு உறுதுணையாக இருந்த இரண்டு தோழிகள் ஆற்றிய அரும்தொண்டுகள் எண்ணிலடங்கா.இருவரும் அவளோடு வருவார்கள், நானும் மாப்பிள்ளைத் தோழன் போல் உடனிருப்பேன். சிறிதும் கூச்சமின்றி மூக்கு முட்ட சாப்பிடுவார்கள்.அதற்கான பயன் நிச்சயம் இருந்தது, "ஸ்பெஷல் க்லாஸ்" என்ற நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க பொய்யை சொல்லி சித்ரா வெளியில் வர உதவியாக இருப்பார்கள்.சாப்பிட்டு விட்டு இவர்களை கொஞ்சம் சொறிந்து விட வேண்டும் என்பதற்காக தோழிகளில் ஒருவள்,"பாத்துடீ, ரொம்ப செலவு செய்யறார் ராஜ், கொஞ்சம் பிரீதிக்கும் சேத்து வைங்க" என்று சொல்லி விட்டு கார்ட்டூன் பார்த்தவள் போல் அப்படி சிரிப்பார்கள்.சித்ரா வெட்கப்பட ஒரு முறை விளக்கினான் ராஜ் "பிரீதி எங்க குழந்தையோட பேருடா".

நான் "ஸூப்பர் ஸூப்பர்", மனதிற்குள் "கருமம் கருமம்".

சித்ராவும் ராஜும் என் வீட்டிற்கு வருவார்கள், சித்ரா படிக்க வருவாள், ராஜ் வரும் காரணமும் அதை விட அவன் வருவதே எனக்கு ஒப்பவில்லை.ஒரு நாள் சித்ரா மட்டும் வந்தாள். ராஜ் உடன் இருந்தால் அவனே சித்ராவின் முழு கவனத்தையும் கவர்ந்து விடுவான், என்னை சைட் டிஷ் போல உபயோகிப்பான்.சித்ரா வழக்கத்தைவிட உம்மென்றிருந்தாள். இஷ்டமில்லை என்றாலும் கேட்டுத் தொலைப்போமென்று "ராஜ் வரல?"."அவன பத்தி பேசாத, எனக்கு அவனுக்கும் ஒன்னும் இல்ல இனிமே", "ரமா கஃபே"யின் புதன் கிழைமை பாஸந்தி போல் இனித்தது வெளிக்காட்டாமல் தொடர்ந்து அவள் சொன்னதைக் கேட்டேன்,"என் ஃப்ரெண்ட் வருவா இல்ல, பிரியான்னு, அவளோட ராஜ் சினிமா போனது எனக்கு தெரிஞ்சு போச்சு, அவன் கிட்ட கேட்டா இல்லன்னு பொய் சொல்றான், ரொம்ப சீப் அவன்.". இதை பற்றி பேசி அவள் மனதில் ராஜிற்கு முக்கியத்துவம் வளர நான் விரும்பவில்லை.அவன் பொய் சொன்னதால் இவளுக்கு கோபம் அது போதும் எனக்கு.எங்களுக்கிடையில் அவன் வருவதில்லை. ராஜ் முன்பு போல் என்னோடு பேசுவதில்லை,விரோதமும் பாராட்டவில்லை.அவளுக்கு கோபம் குறைய கூடாதென்பதால், ஒரு முறை அந்த பிரியாவையும் இவனையும் பைக்கில் பார்த்ததாக சொல்லி வைத்தேன்.

கேட்காத கேள்விக்கும் பதில் சொல்லி வந்த ராஜ், இப்போதெல்லாம் கேட்ட கேள்விக்கு கூட பதில் சொல்லாத அளவுக்கு அமைதியானவன் ஆகிவிட்டான். திருச்சியில் "சௌக்" என்று பழைய புத்தகங்களை,ஏமாந்தால் இரண்டு மடங்கு விலைக்கும், சுதாரித்துக்கொண்டால் பாதி விலைக்கும் விற்கும் இடம் உண்டு.அதை புத்தகங்களின் சரணாலயம் என்றே சொல்லலாம்.என் பேரம் பேசும் திறமையால் பத்தில் ஒரு பங்கு விலை கொடுத்து சில ஆங்கில புத்தகங்களை வாங்கி எப்போதும் உடன் வைத்திருப்பேன்.என்னை ஒரு ஞானி போல்,அறிவாளி போல் காட்டி கொள்வதில் கவனம் செலுத்தினேன்.சித்ராவும் என்னை நம்பினாள்!

ஒரு நல்ல நாள் பார்த்து என் காதலை சொன்னேன்."சித்ரா,எல்லா பசங்களும் ஒரே மாதிரி கிடையாது,உனக்கு என்னை பிடிச்சிருக்கா? இல்லேன்னா எப்பவும் போல ஃப்ரெண்ட்ஸா இருக்கலாம்".

"இப்போதைக்கு எனக்கு படிப்பு தான்" என்று அவள் சுறுக்கமாக முடித்து கொண்டாலும், ஒரு மணி நேரம் கழித்து,"தெரியல, எனக்கு என்ன செய்யனும்னு தெரியல, ஆனா நான் தப்பு பன்னலைன்னு தான் நினைக்கிறேன், ஆனா பயமா இருக்கு" என்றாள்.பல முறை அவள் சொன்னதை கிரகித்துக் கொள்ள முயற்சி செய்து தோற்றேன்,குழப்பத்தில் இருக்கிறாள் என்பது எனக்கு புரிந்தது.

நம் முன்னோர்களும் , கோடாணுகோடி தேவர்களும், பூத்தூவி வாழ்த்தும், ஃபெப்ரவரி பதினான்காம் தேதி, பச்சை கொடி காட்டினாள் என் காதலி சித்ரா.எனக்கு ஒரு காதலி இருக்கிறாள் என்ற உணர்வே ஒரு தெம்பை கொடுத்தது, அவளுக்கு பிடிக்காத மீசையை எடுத்தேன், "ரசிக ரஞ்சன" சபாவில் மிருதங்கம் கூட கற்றுகொள்ள ஆரம்பிக்கலாம் என்று யோசித்தேன், "முல்லை தியேட்டரில்" படம் பார்ப்பதில்லை என்று உறுதி மொழி எடுத்தேன்.

கல்லூரியில் தென்படாத ராஜை "லூர்து சாமி" பார்க்கில் கிரிக்கெட் ஆடப் போகும்போது பார்ப்பேன். ஒரு பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு எதையோ எழுதிக் கொண்டிருந்தான் ‘ராசியில்லா ராஜ்’.அவன் செய்த தவறால் தான் சித்ரா அவனை விட்டு விலகினாள் என்று என் குற்ற உணர்ச்சிக்கு சமாதானம் செய்து கொண்டேன்.

இப்படி நடக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை

என் காதல் பராக்கிரமத்தை பறைச்சாற்றும் விதமாக என்னுடன் கிரிக்கெட் ஆடும் நண்பன் கிஷோரை பட்ம பழமுடிர் சோலைக்கு வரச் சொன்னேன். நானும் சித்ராவும் முன்னமே ஆஜர்.அங்கு உட்கார்ந்திருக்கும்போது சித்ரா கேட்டாள் "வர்ஷா பேரு எப்படி இருக்கு?அது தான் நம்ம குழந்தைக்கு பேர்".இம்முறை ஏனோ கருமம் கருமம் என்று நான் நினைக்கவில்லை. காதலிக்க தொடங்கியதுமே தங்கள் குழந்தைக்கு பெயர் சூட்டுவது ஒரு அடிப்படை உரிமை அல்லவா?

கிஷோரும் வந்து விட்டான், அசந்து விட்டான் என் சித்ராவைப் பார்த்து.

இப்படி நடக்கும் என்று நானும் எதிர்பார்க்கவில்லை

கைரேகைப் பார்க்கத் தெரியும் என்று பீலாவிடும் நண்பர்களிடம் காதலியை அறிமுகபடுத்த கூடாது போலும்.கிஷோர் -நண்பனா அவன்? துரோகி

லூர்து சாமி பார்க்கில் ராஜுக்கு நான்கு பெஞ்சு தள்ளி நான் அமர்ந்திருக்கிறேன், நானும் கவிதையெல்லாம் எழுதறேன், ஒன்னு கேளுங்களேன்

கண்ணே படி தாண்டாதே

கல்லரையில் இடமில்லையாம்

உன்னைக் காதலிக்க வரிசையில் பலர்!

இரண்டு பெஞ்சுகள் தள்ளியுள்ள பெஞ்சில் கிஷோர் என்று செங்கலால் எழுதி அவனுக்கு இடம் பிடித்து வைக்க தவறவில்லை.

*டிஸ்கி: இக்கதையில் வரும் கதாபாதிரங்கள் யார் யாரென்று தெரியும்வரை, அவையெல்லாம் கற்பனையே யாரையும் குறிப்பிடுவன அல்ல.