Wednesday, March 28, 2012

இருபத்தஞ்சு :எண்பத்தி ரெண்டு


"டாக்டர், நான் ரவி, இவன் கௌதம். நாங்க தான் திவாகர இங்க கூட்டிகிட்டு வந்தது. இப்போ எப்படி இருக்கு அவனுக்கு?"
"மிஸ்டர் ரவி , நீங்க மட்டும் உள்ள வாங்க" என்ற டாக்டர் பத்ரன் , அன்று சரியாக பல் விளக்கவில்லை என்பது சற்று தூரத்திலே தெரிந்தது.
"சொல்லுங்க மிஸ்டர் ரவி என்ன ஆச்சு?"
"அவன எனக்கு ஒரு வருஷமா தெரியும், நல்லா வேலை பாக்கறவன், இது வரைக்கும் லேட்டா கூட வராதவன் , ஒரு மாசமா ஆஃபீஸ் வரவே இல்ல, சரின்னு அவன் வீட்டுக்கு போய் பாத்தப்போ , யார் கிட்டயோ சண்ட போட்டுக்கிட்டிருந்தான்"
"அப்படியா மேல சொல்லுங்க"
"உள்ள போய் பார்த்தா தான் தெரியுது உள்ள யாருமே இல்ல, தனக்கு தானே பேசிக்கிட்டிருந்தான்.கத்தியால தன்னையே குத்திக்க போனான்,தடுக்க போனப்போ எனக்கும்  கைல வெட்டு, இங்க பாருங்க..."
"அடடே, நீங்க வந்து அங்க படுங்க, நான் கட்டு போடறேன்"
"இல்ல பரவாயில்ல டாக்டர், முதல்ல அவன கவனிங்க"
"அவருக்கு இருக்குற ப்ரச்சனைய நீங்க புரிஞ்சிக்கனும்னா, நான் சொல்றத கேளுங்க. அப்போ தான் அவருக்கு குணமாகும்".
குழப்பமாக ரவி சென்று படுத்தான். அருகாமையில் அவர் வாயை சந்திக்கும் அவஸ்தையை நெடு நேரம் அவனுக்கு கொடுக்கவில்லை டாக்டர். முகத்தில் வாயை மூடும்படியான முகமூடியை போட்டதும் நிம்மதி பெருமூச்சு விட்டான் ரவி.
"அப்படியே ரிலாக்ஸ் பண்ணுங்க ரவி, கண்ண மூடுங்க, நான் ஒண்ணுலேந்து பத்து வரைக்கும் எண்ணுவேன் , நீங்க ஆழமா மூச்சு விட்டுட்டு நான் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லுங்க, எப்போவாவது சின்ன வயசுல உங்களுக்கு விபத்து நடந்திருக்கா?"
"காலேஜ் படிக்கும்போது.." என்று தொடங்கி அவன் சொல்ல சொல்ல டாக்டர் அதை பதிவு செய்ய தொடங்கினார்.
அரை மணி நேரம் போனது தெரியாமல் , தாடி கதாநாயகர் போல் வாய்க்கு வந்ததை பேசி தீர்த்துவிட்டான் ரவி.கண் விழித்துப் பார்த்தபோது, டாக்டர் அவனை கூர்ந்து பார்த்துகொண்டிருந்தார், புரியும்படி சொல்லவேண்டுமென்றால் , குறுகுறுன்னு பார்த்தார் .
"என்ன டாக்டர் எனக்கு என்ன ஆcச்சு?"
"ஒண்ணும் இல்ல, நீங்க நேத்திக்கு சரியா தூங்கல போல இருக்கு, அசந்து தூங்கிட்டீங்க , அதான் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு விட்டேன்."
"சரி டாக்டர் , திவாகருக்கு..."
"அவருக்கு ஒண்ணும் ஆகாது பயப்படவேண்டாம்,  சரி கொஞ்சம் வெளியே போய்ட்டு கௌதம உள்ள அனுப்புங்க ப்ளீஸ்".

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

"கூப்டீங்களா டாக்டர்?"
"யெஸ் மிஸ்டர் கௌதம், ரவிக்கு சிவியர் டெல்யூஷன் தான்"
"அவர் ஃப்ளாட்ல நடந்ததா நீங்க சொன்னதெல்லாத்தையும் , திவாகர் வீட்ல நடந்ததா சொன்னார்"
"அவன எனக்கு ஒரு வருஷமா தெரியும், நல்லா...."
"தெரியும் சொன்னார்...நல்லா வேலை பாக்கறவன், இது வரைக்கும் லேட்டா கூட வராதவன் , ஒரு மாசமா ஆஃபீஸ் வரவே இல்ல, சரின்னு அவன் வீட்டுக்கு போய் பாத்தப்போ ,  அதானே?"
"ஆமா"
"ஹூம்.. சில ஸ்கேன் எடுக்கனும், அடுத்த வாரம் கூட்டிகிட்டு வாங்க. அவர பொருத்த வரை திவாகர்னு ஒருத்தர் இருக்கறது நிஜம், அவருக்கு தான் நான் ட்ரீட்மெண்ட் தர்றேன் சரியா?"
வெளியில் நெற்றியில் வியர்வையோடு  நகத்தை கடித்தபடி ரவி உட்கார்ந்திருந்தான். கௌதமும் டாக்டரும் வெளியில் வந்தார்கள்.
"மிஸ்டர் ரவி, திவாகருக்கு செடேஷன் குடுத்திருக்கேன் , நல்லா தூங்கறர், நீங்க அடுத்த வாரம் வந்தா போதும் . ரெண்டு பேரும் வாங்க"
"டாக்டர்... ஃபீஸ்...?" என்று பர்சை எடுக்க எத்தனித்த ரவியை "வேண்டாம் அடுத்த வாரம் பாத்துக்கலாம்" என்று மறுத்த டாக்டர் பத்ரன் அவர்கள் இருவரும் போவதை அசைவின்றி நின்றபடி பார்த்துக் கொன்டிருக்கும் போது பின்னாலிலிருந்து அவரை அழைத்தார் சக டாக்டர் திருமலை.
"ராம பத்ரன் , உங்க கூட நான் பேசனும்"
"ப்ளீஸ் கால் மீ டாக்டர் பத்ரன்" என்று கோபாமாக கத்தினார் ராம பத்ரன்.
"ஓகே.... ஒகே.... டாக்டர் பத்ரன் எப்படி இருக்கீங்க? காலைல மாத்திரை போட்டுக்க மறுத்துட்டீங்களாமே? சுப்பையா சொன்னான்"
"அது கசப்பா இருக்கு, எனக்கு வேண்டாம் எனக்கு ஒண்ணும் இல்லையே எனக்கு எதுக்கு மாத்திரை?" என்றார் ராம பத்ரன்.
யாருமற்ற திசையை காட்டி"அதோ போறரே ரவி , அவர் என்னோட புது பேஷண்ட் " என்றார் இல்லாத ஸ்டெதஸ்கோப்பை கழுத்தில் மாட்டியபடி.
"ஓஹோ அப்படியா , வெரி குட். வாங்க நம்ம என்னோட ரூமுக்கு போய் பேசலாம்" என்று ராம பத்ரன் தோளில் கையைப் போட்டு ஆதரவாகவும் கைத்தாங்களாகவும் அவரை வழி நடத்தி நடக்க தொடங்கினார் டாக்டர் திருமலை.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த டாக்டர் திருமலை அருகில் இல்லாத யாரையோ அணைத்துக்கொண்டு போவதை பின்புறத்திலிருந்து பார்க்க பரிதாபமாக இருந்தது. ஒரு கணத்தில் அவர் நடைத் தடுமாறி படியில் விழத் தெரிய அவரைப் பிடிக்க ஓடினேன்.
"அவர் படில விழப்போறார்" என்று அலறிக்கொண்டே.
"அங்க படியும் இல்ல யாரும் இல்ல, வா என்னோட, தூங்க வேண்டாமா? நேரம் என்ன ஆச்சு பாத்தியா இருபத்தஞ்சு மணி எண்பத்தி ரெண்டு நிமிஷம்" என்று என்னை குரோதமாக தர தரவென்று இழுத்துச் சென்ற திவாகர் கையில் ஒரு கத்தியிருந்தது..

.


Tuesday, March 27, 2012

சதாபிஷேகம்

"சூரியும், வெங்குட்டுவும் தான் வரனும், மத்த எல்லாரும் வந்தாச்சு" என்று அமர் சொல்லும்போதே அவர்களும் வந்து விட்டார்கள்.ஒரு ஓர நாற்காலியில் அமர்ந்திருந்த அந்த பரிதாபமானவரை எல்லோருமாக சேர்ந்து முறைத்தபடி ,

"என்ன சொல்றப்பா நீ?"

"முடியாது, என்னால முடியாது"

"எல்லாருமே அப்படிதான் நினைக்கிறோம், உன்னால் முடியாது, விலகி போய்டு"

"நீங்க சொல்ற முடியாது வேற, நான் சொல்றது வேற. நான் சொன்னது என்னால அத விட முடியாது"

"ஏன் இப்புடி அடம் புடிக்கற? உன்னோட நல்லதுக்கு தான் சொல்றோம், போதுமே"

"அத சொல்ல நீங்க யாரு?"

"நாங்க சொல்லாம யாரு சொல்லுவா?இப்படி பெரியவா எல்லாரையும் , மரியாதையில்லாம பேசப்டாது, நோக்கும் வயசாரது"

"நேக்கும் வயசாரதுன்னு தெரியரதோன்னோ , அப்ப நீங்க எனக்கு மரியாதை குடுங்கோ"

"இப்படி எதிர்த்து எதிர்த்து பேசாத, நாங்க தான் ஒனக்கு செல்லம் குடுத்து குட்டிசுவராக்கிடோம்னு ஊரே பேசறது"

"அன்னிக்கு அப்படிதான் கப்பு மாமா ஏதோ ஆதங்கத்துல யார்கிட்டயோ சொன்னத மனசுல வெச்சிண்டு, அவர இன்னது தான்னு இல்லாம அப்படி பேசியிருக்க நீ?" சற்று காட்டமாகவே அமர்.

"அவர் யாரு என்ன சொல்ல?"

"என்ன எழவுடா இது, யார பாத்தாலும் கொஞ்சம் கூட மட்டு மரியாதை யில்லாம அவா யாரு இவா யாருன்னு கேக்கற?ஒடனடாத்தாப்புல உங்கூட தான் இருந்தான், அன்னிக்கி கல்கட்டால கண்ணீரும் கம்பளையுமா வந்த புள்ள அதுக்கப்பறம் லவலேசம் அத தொடவே இல்லயே.கொழந்தன்னா அது கொழந்தை"


"அவன் பயந்தாங்குளி"

"கப்பு மாமா அன்னிக்கி ஒனக்கு ஷூ வாங்கி குடுக்கும் போது நன்னா இருந்துதா? , இன்னிக்கி வேணும்னா அவர் நமக்கு வேண்டாதவரா இருக்கலாம் , ஆனா நமக்காக எவ்வளவு பண்ணியிருக்கார்னு யோசிச்சிப் பாரு"





"இப்புடியே தர்க்கம் பண்ணாத.தோப்பனார் சாவவிட நோக்கு அதான் பெருசா போச்சா?அன்னிக்கும் திரும்பி பாக்கறதுக்குள்ள கம்பிய நீட்டிட்டயே படவா நீ?"

"ஆமாம் எனக்கு அது தான் முக்கியம்"

சூடான சமோசாக்கள் வந்தது. அதை கடித்தவாறே கிச்சா "உன்ன யாரு அத அப்படியே பொசுக்குனு விட சொன்னா? இதோ இங்க பம்பாய்லயே இருந்துண்டு உள்ளூர்ல மட்டும் ஜோலிய ஒத்துக்கோ, மத்த நேரத்துல ஹோட்டல பாத்துக்கோ, கல்லால நீ பொறுப்பா இல்லேன்னா வியாபாரம் படுத்துரும்"

"அதான் அண்ணா பாத்துக்கறாரே"

"ஆமாம்டா அவனும் எவ்வளவு தான் செய்வான்? அவனுக்கு குடும்பம் குட்டியெல்லாம் இல்லயா?நீ இப்படியே சுத்தற, பாவம் ஒரு கரண்ட் பில்லு கட்டறதுலேந்து, பால் வாங்கறவரைக்கும் அவன் தான் பாவம் போறான்"

"ஒனக்கு வக்காலத்து வாங்கறதுக்கு ஒரு கூட்டம் வேற வெச்சிண்டு ஆர்ப்பாட்டம் செய்யறியே"

"உன்னோட கொழந்த பள்ளிகூடத்துக்கு அப்லிகேஷன் ஃபார்ம்ல கூட நீ கையெழுத்து போடலையாமே? அஞ்சு சொல்லி ஆத்து ஆத்து போயிட்டா"

"இல்ல அப்போ நான் ஃபார்ம்.."

"போதும் அத பத்தி மட்டும் நீ பேசாத. சாய்பாபா மேல சத்தியமா இனிமே அத நீ விடனும் " என்று உஷ்னமாக சொன்ன சூரி , சமோசா தட்டுக்கு அடியில் ரகசியமாக மறைத்து வைக்கபட்டிருந்த சூடத்தை எடுத்து ஏற்றி பலவந்தமாக சத்தியம் வாங்கிவிட்டார்.



தான் ஏமாந்ததை சற்றும் பொறுக்க முடியாமல் தலையை தொங்கப் போட்டுகொண்டே, அறையை விட்டு வெளியேறினார் சச்சின் டெண்டுல்கர்.