Tuesday, August 23, 2011

பொரி பாலு (இது கதையல்ல கதாபாத்திரம்)






ஹலோ எப்படி இருக்கீங்க? என் பக்கத்து சீட்டுல கதவோரமா சாஞ்சி , குறட்டைவிட்டுக்கிடுருக்காறே அவரப் பத்தி தான் உங்ககிட்ட பேசப் போறேன். அசல் பேர் "பாலு", நாங்கெல்லாம் அவரக் கூப்டறது "பொரி பாலு".லேசா பொளந்த வாயோட...ஒரு நிமிஷம்...போலீஸ் ...சிக்னல் தாண்டினதும் பேசறேன்.. ஒரே நிமிஷம்...


.

.

.

ஹூம் சிக்னல் தாண்டியாச்சு..கேக்குதா?... எங்க விட்டேன்..உம்...? ஆ..ன் ...அவரோட பொளந்த வாய்ல ....பொளந்த வாயோட அவரப் பாக்க பாவமா இருக்கும் ஆனா மனுஷன் படு ஹிம்சை.நல்ல வேளையா ஹியரிங்க் எய்ட கழட்டினதுனால அவரப் பத்தி நான் பேசறது அவருக்கு கேக்காது.அவர் எப்படின்னா வீம்புக்கு...வேண்டாம் என்ன இருந்தாலும் வயசுல பெரியவர் (எனக்கு தாத்தா முறை வேற)...ரொம்ப சவடால் ஆசாமின்னு வெச்சுக்கலாம்.எனக்கு எட்டு வயசா இருக்கும்போது, ஒரு தடவை எங்க வீட்டுக்கு வந்தார், அப்போ நான் பொரி சாப்டுகிட்டுருந்தேன்."என்ன கண்ணு? பொரி புடிக்குமா?"ன்னு கேட்டார்.நானும் ஆமாம்னேன்.அப்பறமா எங்கயோ சூட்கேஸ எடுத்துகிட்டு போனவர், மதியம் மூனு மணிக்கு வந்தார்."உனக்காக தாத்தா என்ன வாங்கிண்டு வந்திருக்கேன் பாரு"அப்டின்னு சொல்லி சூட்கேஸ தொறந்து காட்டினார்.உள்ள லூஸ்ல முப்பது லிட்டர் பொரி பாத்ததும் எனக்கு சந்தோஷம்.எதையுமே இப்படித்தான் ஆர்பாட்டமா,ஆடம்பரமா பன்னுவார்.

பொதுவா சின்ன புள்ளைங்கள பார்க்குல இருக்குற ட்ரெயின்ல கூட்டிகிட்டு போய் கேள்வி பட்டிருப்பீங்க, இல்லேன்னா குதிரைல.இவர் தன்னோட பேத்திகள சதாப்தில மைசூர் கூட்டிகிட்டு போய்ட்டு, திரும்ப அடுத்த சதாப்தில சென்னை வந்திடுவார்.அதுனால இவர 'சதாப்தி பாலு'ன்னும் சொல்லலாம்.



அவரோட அப்பாவுக்கு சதாபிஷேகம் நடத்தினார்.இதுல என்ன அதிசயம்னு கேக்குறீங்களா? அங்க தான் பொரி பாலுவோட தனித்தன்மையே இருக்கு.நிச்சயதார்த்தம், மாப்பிளை அழைப்பு ,ரிசப்ஷன்னு கலக்கிட்டார். அதுலயும் ஒரு வருத்தம் பாவம் அவருக்கு. PC ஷ்ரிராம தான் கேமராவுக்கு ஏற்பாடு பண்ணனும்னு ஆசை, ஆனா முடியலைனு ஒரே பொலம்பல் எல்லார்கிட்டயும்.என்னவோ இவர் புண்ணியத்துல இவரோட அப்பாவுக்கு ஒரு ஷெர்வானியும் , கோட் ஸுட்டும் கெடச்சது.என்ன களுத, அந்த பாட்டிக்குத்தான் அந்த குஜராத்தி புடவைக்கட்டு அவ்வளவு பொருத்தமா இல்ல.இதவிட கூத்து ரெண்டு ப்ராமணாளுக்கு சாப்பாடு போடனும்னு ஜெமினி கனேசனையும், சோவையும் அப்ரோச் பன்னதுதான்.

இப்போ சென்னைலேந்து திருச்சி போய்கிட்டுருக்கோம்.பெரம்பலூர் நெருங்கியாச்சு.சரி இப்போ அதுவா முக்கியம்?



இவருக்கு ஒரு பையன் .சின்ன வயசுல தமிழ்ல ஃபெயிலாட்டான்னு கண்ணதாசன டியூஷனுக்கு ஏற்பாடு பண்ண எவ்வளவோ முயற்சி செஞ்சார்.ஊஹூம் முடியலயே.அப்பறம் தான் அந்த ஸ்கூல வெலைக்கி வாங்கி,பாஸ் பண்ணிட்டான் பையன்... ஆச்சு இருபது வருஷமாகுது.

ஆஸ்பத்திரிக்கு போனப்ப 'சார் உங்க மனைவிக்கு அப்பண்டிசைட்டீஸ்' னு சொன்னப்ப 'சார் என் கிட்ட காசு இல்லைன்னு நினைக்கவேண்டாம், அப்படியே இரண்யா, பைல்ஸ், இத்யாதி, இத்யாதின்னு எது இருந்தாலும் அப்படியே செஞ்சு முடிச்சுடுங்கன்'னு சொன்னாரு.




அவர் பெரிய காந்தியவாதி வீட்டுல காந்தி படத்துக்கு சூடம் காட்டி வழிபடுவார். அதுல ஒண்ணும் தப்பு இல்ல அதுக்காக கொலு அன்னிக்கு காந்தி படத்து முன்னால உக்காந்து ரகுபதி ராகவ ராஜாராம் எல்லாரும் பாடியே ஆகணும்னு சொன்னா எப்படி இருக்கும்? பிள்ளியார் சதுர்த்தி அன்னிக்கு காந்திக்கு தும்பிக்கை வரஞ்சு மகிழ்ச்சி அடைவார். அதோட மட்டும் விட்டுடாம தன் மனைவியை அழைத்து "கண்ணம்மா இங்க பாரு எப்படி இருக்கு? விலை கிடைக்குது கழுத! 2000 ரூபாய் சொன்னான், தும்பிக்கையெல்லாம் இப்படி குறைவா விக்ககூடாதுடா படவா இந்தா 5,000 வச்சுக்கோன்னு கொடுத்துட்டு வந்துட்டேன் கண்ணம்மா! போயிட்டு போறது. நாம் டெய்லி காபி சாப்படறதில்ல? என்று அவரது புரியாத முட்டாள் லாஜிக்குகள் எங்களுக்கு திகைப்பை ஏற்படுத்தியதுண்டு.



பையன் மணி பார்க்கக் கத்துண்டான்னு பெரிய மணிக்கூண்டையே வாங்கிக் கொடுத்தார்னா பாத்துக்குங்களேன். ஆனா அவர் வெறும் அப்பாவி கிடையாது சில சமயம் கொழுப்பா அல்லது தெரியாம உளர்றாரான்னு தெரியாம சில விஷயங்களைச் சொல்வார்.



எங்க மாமா கல்யாணத்தன்னிக்கு வீட்டுக்கு வந்த பயந்த சுபாவ சொந்தக்கார பெண் தான் +2 பாஸ் செய்ததை சொன்னப்போ, இவர் சந்தோஷமா "மார்க் எவ்வளவு?"ன்னு கேட்டார். அந்தப்பொண்ணு அவரது பேச்சை அது வரைக்கும் பாத்துட்டு இருந்ததால கூச்சப்பட்டு பேசாம இருந்தது. உடனே என்ன சொன்னார் தெரியுமா? "சும்மா சொல்லு நாமெல்லாம் பாஸ் செய்றதே பெரிய விஷயம்" பரவால்ல சொல்லுன்னாரே பார்க்கலாம். கழுத்துல மாலையும் கையுமா இருந்த எங்க மாமா சிரிச்ச சிரில மாமாவோட மாமனாரோட பல்செட்டே கழண்டு விழுந்துடுச்சு தெரியுமா? இது மாதிரி முன்னபின்ன தெரியாதவங்க கிட்ட இங்கிதம் (நாம இது போன்ற அச்சுப்பிச்சுக்களையெல்லாம் மனசுல ஒண்ணும் இல்லைன்னு அப்பாவி பட்டம் கொடுத்து தூக்கி வைப்போம்! ) இல்லாம பேசுவார். ஒரு தடவை இப்படித்தான் ஒரு நிச்சயதார்த்ததிற்கு அவரைக் கூட்டிட்டு போய் பெருத்த அவமானமா ஆயிடுச்சு. யாருக்கு எங்களுக்கு இல்லை, அவங்களுக்கு! யாரோ ஒரு மாமி கதவோரமா கூச்சப்பட்டுட்டு பாய், விளக்கமாறு ,ஒரு தண்ணி சொம்பு ,விகடன் , குமுதத்தோட இருந்தாங்க.பாத்தாலே தெரியும் அவங்க நிலைமை .""என்ன மாமி நீங்க லீவா?".அவர அடக்கறதுக்குள்ள அடுத்த கோல் போட்டுப்புட்டார் "எப்போ குளிக்கறேள்?".எல்லார் மூஞ்சியிலும் அசடு வழிய அவருக்கோ உச்சந் தலைல செருப்பால அடிச்ச சந்தோஷம்!



தன்னோட பொண்ணுங்க நல்ல படிக்குதுன்னு தெரிஞ்சவுடனேயே, 6வது படிக்கற அவங்களுக்கு எம்.ஏ. சீட் வாங்கிக் கொடுக்க காலேஜ் காலேஜா ஏறி ஏறங்கினார்னா பாருங்களேன்!



பையன் ஏ, பி. சி அப்படீன்னு எழுத ஆரம்பிச்சவுடனேயே ‘இந்து’ பேப்பர்ல சேத்து விட்டுட வேண்டியதுதான்னு எல்லார்கிட்டையும் பெருமை அடிச்சுகிட்டப்ப தங்கப்பதக்கம் படத்துல கே.ஆர்.விஜயா 'தங்க மகனை பெற்றவள் என்று என்னை உலகம் சொல்லி மகிழும்"னு குழந்தை ஸ்ரீகாந்தைப் பார்த்துப் பாடும்போது நமக்கு எப்படி பாவமாக இருக்குமோ அப்படித்தான் இருந்தது என்று என்னோட தாத்தா அடிக்கடி சொல்வார்.



இப்படித்தான் வாட்ச், செல்போன் எல்லாத்திலும் கணக்கு வழக்கு இல்லாம வாங்குவார். கேல்குலேட்டர் கேட்ட கம்ப்யூட்டர் வாங்குவார். கம்ப்யூட்டர் கேட்டா சூப்பர் கம்ப்யூட்டர் வாங்குவார். கல்யாணம் பண்ணினா 60ஆம் கல்யாணமும் சேர்த்தே செஞ்சிடலாம்பார். குழந்தை பிறந்தா மறுபடியும் அப்படியே எல்லாம் ரிபீட் என்பார். அவரை கிராக்கா இல்ல அப்பாவியான்னு இன்னிவரைக்கும் கண்டே பிடிக்க முடியல்ல.

இவர் தன்னோட காச மட்டும் தான் இப்படி செலவு பண்ணுவார், இவர் பையன் பொதுவுடைமைக் கொள்கைய தவறா புரிஞ்சுகிட்டவன்.வருஷத்துக்கு இவ்வளவு லட்சம்ன்னு டார்கெட் ஒண்ணு செட் பன்ன வேண்டியது, கெடைச்சவங்க கிட்ட ஆட்டைய போடறது , அப்பறம் ஆள் எஸ்கேப் ஆக வேண்டியது. இதுதான் அவனோட பிஸிணஸ் மாடல்.கைல இருக்குற பணம் தீர்ந்து போறவரைக்கும் எங்க இருக்கான்னே தெரியாது.தீர்ந்ததுக்கப்புறம் ஒரே ஒரு ஃபோன் வரும், இந்த ட்ரெயின்ல வர்றேன்னு.சீக்கு வந்த கோழி மாதிரி வருவான், அவன தூக்க ரெண்டு பேரோட போனா புதுசு புதுசா எதாவது சொல்லுவான்.ஆனா வர்றதென்னவோ ஏஸி ல தான். பொதுவா எல்லா வருஷ கதையிலையும் ஒரு ஒற்றும இருக்கும். "பணத்தோட போனேன், என்ன கடத்திட்டாங்க". "குனிஞ்ச தல நிமிராம முயல், காடைன்னு எல்லாம் சாப்டுவான் , கீழ சிந்தாம நல்லா குடிப்பான்.பொழப்பா அதையே செஞ்சாலும் வருஷத்துக்கு 6 - 7 லட்சம் எப்படி தான் செலவு செய்யறான்னு தெரியல" ன்னு பொண்டாட்டிகிட்ட கதறுவார்.உடனே சூனா பானா வடிவேல் மாதிரி சுதாரிச்சிகிட்டு "விட்றா ,விட்றா ஸுனா பானா"ன்னு ஒரு மூனு லட்ச ரூபாய் செலவுல கணபதி ஹோமம் செஞ்சி தன்னோட கெத்த எஸ்டாப்லிஷ் செய்வார்.வருஷம் தவறாம ஹோமம் செஞ்சி வெக்கற 'வைத்தி சாஸ்த்ரிகள்' வருமானம் இல்லேன்னா இவர் கிட்ட வந்து "எங்க சார், சன் வெளியூருக்கு போயிருக்காறா?"ன்னு கேக்கும்போதெல்லாம் புளிய கரைக்கும் பொரி பாலுவுக்கு.அடுத்த தடவை இந்த மாதிரி காணாம போனா எல்லா சொத்தையும் வித்து காசாக்கி எலிகாப்டர்லேந்து பணத்த கீழ வீசுவேன் ஜாக்கிரதைன்னு சொல்லி மெரட்டியும் பாத்துட்டார்; கேட்டா தான அவன்?

இதெல்லாம் விட அவனுக்கு கடன் குடுத்து ஏமாந்தவன் வீட்டுக்கு வசூல் செய்ய வரும்போது அவங்கள சமாளிப்பார் பாக்கனும், நம்ம கண்ணே பட்டுடும். "என்னப்பா இது? நீயாவது ஏமாந்திருக்க, அவன் பாவம்.. ஏமாத்திட்டு எப்படி பரிதாபமா இருக்கான் பாரு, அவன தொந்தரவு செய்யாத போ"ன்னு சொல்லுவார். கடன்காரன் இவர் சொல்றது புரியாம குழம்பிபோய்டுவான், எப்படியும் இவர் எதயாவது வித்து கடன அடைச்சிடுவார்னு தெரியும் அவங்களுக்கும்.



எவ்வளவு வேகமா போனாலும் பின்னாடியே வர்றானே அந்த சூமோ... சரி அத விடுங்க..

அப்புறம்.. ஐயோ எழுந்துட்டார், ஹியரிங்க் எய்ட மாட்டிகிறார்.ஃபோன அப்படியே கட் பண்ணாம வெக்கறேன் கேளுங்க அவர் பேசறத, உங்களுக்கே புரியும்.



"என்ன கண்ணு திருச்சி வந்தாச்சா?"

"வந்தாச்சு"

"என்ன அந்த சூமோ பின்னாலியே வர்றான் போல இருக்கு?"

"ஆமாம் சென்னைலேந்தே இருபதடி பின்னாடி தான் வர்றான்"

"சரி ஒரு ஓரமா நிறுத்து, டெஸ்ட் ட்ரைவ் போதும், வண்டில துளி சத்தம் இல்ல, நல்ல வண்டி, அவனுக்கு ஒரு செக் போட்டு தந்துடலாம், அடுத்த வாரம் டெலிவெரி எடுப்போம்,பின்னால வர்ற டீலர் வண்டிக்கும் போக வர டீசல் பணமும் குடுத்துடலாம்."



ஹியரிங் எய்ட கழட்டிட்டார், சாரி மொபைல்ல சார்ஜ் இல்ல அப்புறம் பேசறேன். பை ஃபார் நவ்!

.