Wednesday, June 29, 2011

ரைட்டர் மாமா







பீங்கான் கிளோஸட்டின் மேல் உட்கார்ந்திருக்கும்போது தான் அந்த அலைபேசியில் அழைப்பு வந்தது.பெருத்த சிரமங்களுக்கு பிறகு எப்படியோ சமாளித்து பெர்முடாஸ் பாக்கெட்டிலிருந்து எடுத்து பேசினேன்.
"ஹாய் ,ஹௌ இஸ் இட் கோயிங்க்?" என்றது மறுமுனை.லூஸ் மோஷனென்று சொல்லவா முடியும்?"ஃபைன்" என்றேன்.
"உங்களோட சிறுகதைகள் படித்தோம், கண்டிப்பா பப்ளிஷ் செய்யறோம், ஆனா மொத்தம் 12 கதைகளாவது வேணும். நீங்க பதினோறு கதை தான் குடுத்தீங்க.இன்னும் ஒரே ஒரு கதை மட்டும் இன்னிகுள்ள கொடுத்தா போடலாம், இல்லேன்னா எங்க MD வெளிநாடு போறார், திரும்ப வர ஆறு மாசமாகும்".
கதையென்ன மேகி நூடில்ஸா கேட்ட ஒடனே குடுக்க? என்று கடுப்பானேன் மனதிற்குள்.
"சரி அனுப்பறேன்" என்று சொல்லி விட்டு கதை யோசித்தேன்.ஒரு மண்ணாங்கட்டியும் தோன்றவில்லை.ஒரு வித விரக்தியோடு ஃப்லஷ் செய்துவிட்டு வெளியேறினேன்.
தவறு தான் என்று தெரிந்தும் எனக்கு சொந்தமில்லாத அந்த பழுப்படைந்த புத்தகத்தை எடுத்து என்(?!) பனிரெண்டாம் கதையை ப்ரதி எடுக்க ஆரம்பித்தேன்.அந்த புத்தகத்தின் எல்லா பக்கங்களிலும் பிள்ளையார் சுழிக்கு பதிலாக "ரைட்டர் சுவாமிநாதன்" என்ற ரப்பர் ஸ்டாம்ப் என் நினைவலைகளை பின்னோக்கி இழுத்தது.


சுவாமிநாதன் ,ஆரம்பத்தில் "போஸ்ட் ஆஃபீஸ் மாமா" என்று அழைக்கப் பட்டவர், பிற்பாடு "கதை மாமா" என்று பெயர் மாற்றம் கண்டு, கடைசியாக அவரே வைத்துக்கொண்ட பெயர் தான் "ரைட்டர் சுவாமிநாதன்".எந்நேரமும் போஸ்ட் ஆஃபீஸில், கதை அனுப்பவோ அல்லது அனுப்பிய கதையை திரும்பப் பெறவோ இருப்பார் என்பதால் அவருக்கு அப்படி ஒரு பெயர் இருந்தது."தெனமும் கட்டுக் கட்டா கடிதாசி வருது உங்களுக்கு , நீங்களே தெனமும் வந்து வாங்கிக்கங்க. பொணம் கனம் கனக்குது" என்று போஸ்ட்மேன் அலுத்துகொள்ளும் அளவுக்கு அவர் கதைகள் பிரசித்தம்.பெரிய கவிஞர்கள் ஊட்டி , கோடைக்கானலுக்கு போய் கவிதை எழுதுவது போல், இவர் போஸ்ட் ஆஃபீஸில் தான் பெரும்பாலும் கதை எழுதுவார்.பேருக்குத்தான் அவர் வக்கீல் குமாஸ்த்தா.


இவரை வம்பிழுப்பது தான்,அந்த வயதில் எனக்கு ஹீரோவாகத் தெரிந்த ஜெயா சித்தப்பாவுக்கும் , எனக்கும் ஆகச் சிறந்த பணி.சித்தப்பா சிரிக்காமல் எதாவது செய்வார் நான் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து திட்டு வாங்குவேன்.யாரும் தன்னை எழுத்தாளனாக அங்கீகரிக்காத காரணத்தால் , அவரே வெள்ளை பெயிண்ட்டால் "Writer சுவாமிநாதன்" என்று போர்டு போட்டுக் கொண்டார். அப்போ மாமா கிரிஸ்டியனா மாறிட்டார்னு ஊரெல்லாம் சொன்னது அல்லது தட்டி விட்டது சித்தப்பா தான்.ஆங்கிலத்தில் பெயர் இருந்ததால் அப்படித்தான் எல்லோரும் நம்பினார்கள்.
"ஏன்டா அவரப்போய் கோட்டா பன்ற? இங்க வந்து ஒரு குரல் அழுதுட்டு போய்ட்டார் பாவம்" என்று சிரிப்பை அடக்கியவாறே அப்பா கேட்டார்.
"பின்ன என்ன, மனுஷன் நிம்மதியா, பம்பு செட்ல குளிக்க முடியல. கத புஸ்தகத்த எடுத்துண்டு வந்துடறார்.குளிக்கப்போறேன்னு சொன்னா, நீ குளி நான் பம்பு செட் மேல ஒக்காந்துண்டே சத்தமா சொல்றேன் கேளுங்கறார்.யோசிச்சி பாரு , பாவம் பைப் மேல ரெண்டு பக்கமும் காலப் போட்டுண்டு, தொண்ட வத்த யாரு கத்த சொன்னா அவர? "
"என்னவோ இன்சல்ட் பன்றான் ஜெயான்னு சொன்னாரே?"
"அதுவா? கதைய கவனமா கேக்கறேனான்னு ஒரு சந்தேகம் அவருக்கு, சும்மா நடுவுல டெஸ்ட் மாதிரி கேள்வி கேட்டார்."கதைல ராஜாமணி எப்போ வீட்டுக்கு திரும்பினான்னு', அதுக்கு நான் சொன்னேன் நான் கஷ்கத்துக்கு சோப் போடும்போதுன்னேன்.நெஜமாவே அவரோட கதைல ராஜாமணி வீட்டுக்கு வரும்போது அத தான் பண்ணிண்டிருந்தேன்".


அழகு நிலையம் என்ற ஒரு சலூனில் தான் நானும் சித்தப்பாவும் முடி திருத்தம் செய்து கொள்வோம்.நாங்கள் அங்கு செல்லும்போது ரைட்டர் மாமாவும் சில சமயத்தில் ஆஜர் ஆவார்.முதலில் மரியாதையாக இருப்பது போல் சித்தப்பா நடந்து கொள்வார், "மாமா நீங்க இது வரைக்கும் எவ்வளவு கதை எழுதியிருக்கேள்?".தன்னை மதித்து யாரோ பேட்டி எடுப்பதில் மாமாவுக்கும் மகிழ்ச்சிதான்.யோசித்தபடியே "சுமாரா.... எழுவது கதை எழுதியிருக்கேன் இது வரைக்கும்" என்றார்."ஓஹோ எழுபதும் சுமாராதான் எழுதியிருக்கேளா? அதான் போனோம் வந்தோம்னு குடு குடுன்னு திரும்ப வர்றது" என்று சித்தப்பா சொல்லும்போது எனக்கு முடி திருத்தம் செய்தவர் சிரித்ததைப் பார்த்து என் காதை வெட்டிவிடுவாரோ என்று நான் பயந்து விட்டேன்.சிரிப்பை அடக்கியவாறே முடி திருத்தம் செய்பவர், "அந்த லாட்டரி தீர்ந்து போச்சு எடுத்து மாத்து" என்று அங்குள்ள ஒரு அப்ரஸன்டியை பணித்தார்.லாட்டரி டிக்கட் வழக்கதிலிருக்கும்போது காலம் கடந்த டிக்கட்டுகளை சலூனில் உபயோகிப்பார்கள் என்பது உபரித் தகவல். உடனே சற்றும் தாமதிக்காமல் சித்தப்பா "லாட்டரி எல்லாம் வேண்டாம் , மாமா நெறைய வேஸ்ட் பேப்பர் வெச்சிருப்பாரே" என்று சொல்ல இல்லாத முடியை வெட்டிக் கொள்ளாமலே சீற்றத்தோடு வெளியேரினார் ரைட்டர் மாமா."நீங்க Retard ஆனதுக்கப்புறம் தான் கதை எழுத ஆரம்பிச்சேளா? அதாவது Retire ஆனதுக்கப்புறம்" என்று சித்தப்பா செடுக்கு வாரியை எடுத்து தலை வாரிக்கொண்டே கேட்டபோது ஓட்டமும் நடையுமாக சென்றார் ரைட்டர் மாமா.


அன்று என் தாத்தாவுக்கு திவசம். அதற்காக லீவ் வேண்டி லெட்டர் எழுத சித்தப்பாவை கேட்டேன். "நம்ம ஊர்லயே , எல்லா எழுத்தையும் மொத்த குத்தகைக்கு எடுதிருக்காரே ரைட்டர் மாமா அவரப் போய் கேளு" என்று சொல்ல நானும் போய் நன்றாக வாங்கிகட்டிக் கொண்டது தான் மிச்சம்.
"உன்னோட சித்தப்பாவோட சேந்து நீயும் கெட்டுக் குட்டி செவுராப்போர பாத்துக்கோ"என்றபோது அவர் கண்ணில் லேசான கண்ணீர் வந்தது போல் லேசாக நியாபகம்.
"இரு இன்னிக்கி என்னை தான் விஷ்னு எலைக்கு கூப்ட்டிருக்கா, உங்கப்பா கிட்ட சொல்றேன்".


அபயம் தர சித்தப்பா இருப்பதால் எனக்கொரு பயமும் இல்லை.அவர்கள் இருவரையும் ஒரே இடத்தில் பார்ப்பது என்பது எனக்கு தீபாவளி பண்டிகைப்போல் இருக்கும்.
சித்தப்பா மெதுவாக ஆரம்பித்தார் "மாமாவுக்கு , பச்சிடி போடுங்கோ, எலைல அந்த எடம் மட்டும் காலியா இருக்கே...".
அப்பாவியாக மாமா "இல்லே நான் கேட்டு வாங்கிக்கறேன்".
"அதுக்கில்ல , எலைல எடம் காலியா இருக்கேன்னு எதயாவது எழுத ஆரம்பிச்சிடப் போறேள்னு தான் சொன்னேன்". கிண்டல் செய்ய ஆரம்பித்தால் சித்தப்பாவுக்கு ஈவு இறக்கம் என்பது அறவே இருக்காது.அம்மா , அப்பாவுக்கு தான் தர்ம சங்கடமாக இருக்கும். எனக்கு கொண்டாட்டமா இருக்கும்.அப்பா வரவழைத்துக் கொண்ட கோபத்தொடு "நிறுத்து ஜெயா" என்பார்.


அதற்கெல்லாம் கொஞ்ச நேரம் தான் சித்தப்பா அடங்குவார்.பச்சடியைப் பார்த்து பார்த்து சிரித்துக் கொண்டிருந்தேன் நான்."ஒழுங்கா சாப்டுடா" என்று எனக்கும் அர்ச்சனை தொடங்கும் வரை.அடுத்து ரசம் பரிமாற வரும்போது தான் மிகவும் சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு சித்தப்பா கேட்டார்"ஏன் மாமா இந்த சிங்கர்ஸ் எல்லாம் மோர், ஐஸ் எல்லாம் சாப்டாத மாதிரி , இந்த ரைட்டர்ஸுக்கும் எதாவது இருக்கா? காரமா ரசம் பெசஞ்சி சாப்ட்டா வெரல் எரியும் அந்த மாதிரி?".
அப்பா: "ஜெயா.. போறும்"...
"மன்னி, அண்ணாவுக்கு ரசம் போதுமாம்",சற்றும் தளராத சித்தப்பா.
மாமா:"எனக்கு மோர் தான்,ரசம் வேண்டாம்".
சித்தப்பா "ச்ச ச்ச சும்மா கேட்டேன்... நீங்க ரசம் சாப்டுங்கோ, வெரல்ல படாம டம்ப்ளர்ல வேணும்னா ஊத்தி குடிங்கோ, சூடா இருந்தா ஆத்தி குடுங்கோ... மாமா கவனிச்சேலா? நான் கூட கவித மாதிரி பேசறேன் எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான்..இல்ல?".
இப்போது ரசத்தைப் பார்த்து சிரிக்க தொடங்கினேன்.


கோடை விடுமுறைக்கு பெங்களூர் சென்று என் அத்தையையும் அவள் மகனையும் அழைத்து வர நாங்கள் எல்லோரும் போவதாக இருந்தது.ஒரு வாரம் முன்னாலே, ரைட்டர் மாமாவிடம் பால் கார்டுக்கான காசு, EB கார்ட், நியூஸ் பேப்பர் காசு கொடுக்க அப்பா கிளம்பினார்.
"எங்கே ஷேக்ஸ்பியர் ஆத்துக்கா?" என்று கேட்டார் சித்தப்பா.
"ஆமாம் ஒன்ன அனுப்பினா ரசாபாசமாகிடும்" என்று புன் முறுவலோடு சொல்லி அப்பா கிளம்ப., சித்தப்பாவின் கண் சாடையை புரிந்து கொண்டு நாங்களும் பின்னாலே சென்றோம்.நாங்கள் உள்ளே நுழையும்போது எதையோ எழுதிக் கொண்டிருந்த ரைட்டர் மாமா, "வாங்கோ வாங்கோ.. ஒரு த்ரில்லர் எழுதிண்டிருந்தேன்" என்று ஊஞ்சலை காட்டினார்.சித்தப்பா "அடடே அப்படியா? பயப்படாம எழுதுங்கோ, பயமா இருந்தா ஹனுமான் சாலிஜா சொல்லிண்டே எழுதுங்கோ".
"பெங்களூர் ட்ரெயின்ல போகும்போதும் வரும்போதும் வழில படிக்க இந்த ரெண்டு புக்ஸ் வெச்சிக்கோங்கோ.நானே எழுதனது தான்", என்று தானே பைண்டிங்க் செய்த தடிமனான புத்தகங்களை கொடுத்தார்.
"இதுக்கு தனியா லக்கேஜ் போடப் போறா" என்றார் சித்தப்பா, சுவரில் மாட்டியிருந்த ஃபோட்டோவைப் பார்த்தபடி.அதில் ரைட்டர் மாமா, பேனா மூடியை கடித்தபடி போஸ் கொடுத்திருந்தது போனஸ் காமெடி.
எதையும் கவனிக்காமல் மாமா "உஷாவும் அவ புள்ளையும் வருவா இல்லயா, அந்த பையனுக்கு குழந்தைகள் கதைகள்னு வெச்சிருக்கேன்".
"மாமா அவனுக்கு தமிழ் படிக்க தெரியாது, வேனும்னா கன்னடத்துல ட்ரான்ஸ்லேட் பன்னி வையுங்கோ".
"நான் உங்கிட்ட பேசத் தயாரா இல்ல" என்று கொஞ்சம் கோபமாகி சொல்லி அப்பாவிடம் "இதுல ஒரு சாமியர பத்தி ஒரு கதை இருக்கு..அதுல" என்றவரை பாதியில் இடைமறித்த சித்தப்பா "இப்படியே போனா ட்ரெயின விட்டுடுவோம்" என்றார்.
"அடுக்த்த வாரம் தான சொன்னேள்?"
"எதுக்கும் ஒரு முன்னெச்சரிக்கை தான்" என்று கண்ணை சிமிட்டினார் சித்தப்பா.
"மாடர்னா எழுதறேள், போஸ்ட் ஆஃபீஸ்ல எழுதறேள் , நீங்க தான் மாமா போஸ்ட் மாடர்ன் ரைட்டர்"என்று சித்தப்பா சொன்னது அப்போது எனக்கு புரியவில்லை.ஆனாலும் சித்தப்பா சொன்னால் சிரிக்க வேண்டும் என்ற கடமையுணர்ச்சியோடு சிரித்தேன்.
நாங்கள் எல்லோரும் வீட்டை நோக்கி நடக்க தொடங்கினோம். அவர் கொடுத்த புத்தகங்களைத் தவிற இன்னுமோரு புத்தகத்தை ரகசியமாக மறைவாக வேட்டியிலிருந்து எடுத்து கொடுத்த சித்தப்பா, "இது இல்லேன்னா அவர் போய் சேர்ந்துடுவார்.ஒனக்கு எப்போவாவது யூஸ் ஆகும்" என்று கொடுத்தார். அது பழுப்பேரிய ஒரு புத்தகம். இப்போது சிதப்பாவும் இல்லை ரைட்டரும் இல்லை.அவர் கதைகளின் மூலம்(!) இப்போது தான் புரிகிறது. பப்லிஷரிடம் சொல்லி அவருக்கு ஒரு நன்றி சொல்லும் பக்கம் ஒதுக்க வேண்டும். என் சிறுகதை தொகுப்பு முழுமைப்பெற அவரும் ஒருவிதத்தில் காரணம்.








.