Thursday, September 9, 2010

"பாலிடாயில் குடுங்க"

"ஐயோ போய்ட்டியே", "நீ இல்லாம" ங்கிற மாதிரி ஒரே புலம்பல் .அதுல ஒருத்தரோட "ஐயோ" கணக்கு நூற தாண்டிபோய்கிட்டு இருக்கு.பின்ன என்ன சாவு வீட்டுல எந்திரன் பாட்டா போடுவாங்க? நமக்கு மணிக்கு ஒருக்கா தம்மடிக்கலைன்னா நாக்கு நமநமங்கும். வெளிய போக முடியாத இக்கட்டான சூழ்நிலை. இன்னிக்கு இந்தியா நியூஸீலாந்து கிரிக்கட் மேட்ச் வேற. அழுகை சத்தமும் கூச்சலும் சேர்ந்து தலையெல்லாம் வலிக்குறமாதிரி இருக்கு. என்னய பொருத்தவரைக்கும் பரிட்சை பேப்பரும், சாவும் ஒன்னு தான், கேள்விகள படிச்ச அஞ்சு நிமிஷத்துக்கு தான் அதோட தாக்கம், அப்புறமா சகஜ நிலைக்கு வந்துடுவோம்.சொன்னா நம்ப மாட்டிங்க இப்படித்தான் பேச்சு கேக்குது இங்க.


"பெரியவர் கிட்ட சொல்லியாச்சா?"(அக்கரை )

"ஆச்சு கார்ல கெளம்பிட்டாராம்"(விளக்கம்)

"சூமோ தான?"(வம்பு )

"இப்போ இன்னோவா வாங்கிட்டாரு"(அறிவு )

"அப்படியா? சூமோ ப்ரேக் சரியா இல்லன்னு சொல்லிகிட்டே இருப்பாரு , நானின்னும் அம்பாஸிடர மாத்தல".(பெருமை)

இதுக்கு பேசாம என்னய மாதிரி மௌனமா இருக்கறதே மேல் என்ன சொல்றீங்க?ஆண்கள் தான் இப்படின்னு பாத்தா நம்ம தாய்குலம் அதிபயங்கரம்! "காப்பி சொல்லி ஒரு மணி நேரம் ஆகுது இன்னும் வரலை".

யாராவது புதுசா வீட்டுக்குள்ள வந்தா மட்டும் திரும்ப 'ஐயோ' கணக்கு சென்செக்ஸ் மாதிரி எகிறும் அப்புறம் திரும்ப சகஜம்.

"அவன் கூட்டணி விசயத்துல இன்னும் தெளிவா இல்லப்பா"

இல்லேன்னா செல்ஃபோன்ல அசிலி பிசிலி பாட்டு, ரொம்ப பவ்யமா எடுத்து "ஒரு பெரிய காரியத்துல இருக்கேன், அப்புறம் பேசறேன்".

அல்லது "எலக்ட்ரிக் தான?"சரவணன், அவன் தான் ரொம்ப பொறுப்பா இருக்குறதா காட்டிக்கனும்னு , மடக்கின நாற்காலிய விரிக்குறதும் , விரிச்ச நாற்காலிய மடக்குறதும்னு சும்மா கண்ல, கைல மாட்டுனதெல்லாத்தையும் வெச்சி ஒரு வழி பண்ணிக்கிட்டிருந்தான்.எல்லாம் செல்வி முன்னாடி சீன் போடத்தான், என்னோட மொறப்ப கண்டுக்காம "நீ நடத்துடி".

                                                     ------------------------------------------------------

டாக்டர் சொன்னதை கேட்டபோது புவியீர்ப்பு எனக்கு மட்டும் பாரபட்சம் காட்டியது.

"தம்பி ஒனக்கு எவ்வளவு வருசமா இந்த பழக்கம்?"

"பன்னெண்டாவதுலேந்து டாக்டர்"

"அதாவது பதினேழு வயசுலேந்து?"

"அதான் சொன்னேனே பன்னெண்டு வயசுலேந்து". டாக்டர் புருவம் உயர்ந்தது ஆச்சரியமா? அசூசையா எனக்கு அது அவசியமில்லை. வீட்டில் இதை சொன்னால் எனக்கு முன்னால் எல்லாரும் போய் சேர்ந்து விடுவது உறுதி.மரணத்துக்கு பின்னும் சமூகத்தில் அமரத்துவம் கொண்ட நோய்.விரக்தியாகத் தான் வெளியில் வந்தேன்.

திக்கு தெரியாமல் தவித்த என் முன் திக்கை குச்சியால் அலசியபடி ஒரு கண் பார்வையை தவிர்த்திருந்த ஒருவர்.வாழ்க்கையிலே முதல் முறையாக உதவி செய்ய தோன்றியது."கிராஸ் பண்ணனுங்களா?", "ஆமாம் சார்" , அவரைப் பொருத்தவரை 'சார்' என்பது என் குரல்.அவர் சாலையை கடக்க உதவினேன் அவர் சட்டை பையில் இருந்த ஐநூறு ரூபாய் என் கைக்கு வரும்போது சாலையின் மறுபுறம் இருந்தோம்.தொட்டில் பழக்கம் என்று என்னை சபித்துக் கொண்டே, "பணம் கீழ விழுந்துச்சு, இந்தாங்க", சிரித்தபடி," தேவை இல்லாமலா அது உங்க கைக்கு வந்துச்சு, எதோ அவசரம்னு தானே எடுத்தீங்க பரவாயில்ல வெச்சிக்கங்க". என் நோயும் அதன் காரணத்தையும் விட இந்த நொடி என்னை கொன்றது.நேராக கடைக்கு போனேன்..."அண்ணேன்..

அடப்பாவிங்களா சும்மா செந்தமிழ்ல ஃப்லேஷ்பேக் சொல்லி தலைப்புக்கு வரலாம்னாம்னா அதுக்குல்ல நாலு பேரு என்னய தூக்கி கிட்டு ஆம்புலண்ஸ்ல ஏத்துரானுங்க... கோரஸ்ஸா "ஐயோ" வேற,இப்போ தலைவலி இன்னும் ஏறுதே...
இருங்க பாஸ் இப்போ வந்திடரேன்...