Thursday, September 29, 2011

ஒம்போதுல குரு



இப்போ உங்க கிட்ட "ஒங்கப்பா என்ன செய்யறார்?" அப்படின்னு கேட்டா என்ன சொல்லுவீங்க? "அம்மாவுக்கு பயந்த நேரம் போக, இஞ்சினியரா இருக்கார், டாக்டரா இருக்கார், ரிடையர் ஆகிட்டார்" அப்டின்னு எதாவது ஒண்ணு சொல்லுவீங்களா இல்லையா?ஆனா சில பேர் சொல்ற பதில் ரொம்ப வேதனையா இருக்கும். "எனக்கு ரொம்ப சின்ன வயசா இருக்கும்போதே அவர் ஓடிபோயிட்டார்"ன்னு சொல்லுவாங்க. நமக்கு அப்படியே மனசப் பிழியறா மாதிரி ஆகிடும்."ஓடிப் போறதெல்லாம் ஒரு வேலையா?"ன்னு நமக்கு கேக்கனும் போல இருந்தாலும், அந்த குடும்பத்தோட நிலைமைய பாத்தா வாயமூடிப்போம்.




எங்க மூதாதையர் காலத்துல இது ரொம்ப அதிகமாம். எங்க கொள்ளுத் தாத்தா பெரிய புல்லாங்குழல் வித்வான் "வெங்கடராமன்"ன்னு பேர் . அவரோட சகளையோடப் பேரும் அதே தான். ரெண்டு பேருக்கும் நடுவுல பெயர் குழப்பம் வராம இருக்க , முன்னவர "ஃப்லூட் வெங்கடராமன்"ன்னும் பின்னவர "ஜூட் வெங்கடராமன்"ன்னும் கூப்டறது வழக்கம்.கைல எட்டணா இருந்தா போதும் மனுஷர் ஜூட் விட்டுடுவாராம்.கல்யாணம் நடந்து ஒரே மாசத்துல எங்க போனார் எப்போ போனார்னு தெரியாது... ஜூட்(?!).அவரோட அம்மா, புது பொண்டாட்டி எல்லாம் ஊர விட்டு தஞ்சாவூர்லேந்து , ராமேஸ்வரம் போய்ட்டாங்க. கிட்ட தட்ட ஒரு வருஷம் கழிச்சி வந்தாராம், இவங்கள தேடி.பாவம் மூனு மாச குழந்தையோட அந்த குடும்பம் இருந்திருக்கு. இப்படி எந்த ஊர் மாறிப் போனாலும் சரியா எப்படித்தான் கண்டு பிடிச்சி வர்றார் அப்படிங்கறதப் பத்தி யாரும் பெருசா யோசிக்கலப் போல தெரியிது. அந்த 18 வருஷத்துல,மொத்தம் அவர் இந்த மாதிரி ஆறு தடவை வந்திருக்காராம் வீட்டுக்கு.அப்பறம் ஆளக் காணவே காணோம் பாவம்.அப்படி இப்படி ஏழு குழந்தைகளையும் வெச்சுப் பாவம் அந்தம்மா என்ன கஷ்டபட்டு வளர்த்தாங்களோ?அதவிட கொடுமை அவரோட கடைசிக் குழந்தைகிட்ட "அப்பா எங்க?"ன்னு கேட்டா "அப்பா காக்கா ஊஷ்"ன்னு சொல்லுமாம்.இவர் வீடு திரும்பும்போது அன்னி தேதிக்கு எந்தக் குழந்தை லேட்டஸ்ட்டோ அத மட்டும் கொஞ்சுவாராம்.மற்ற குழந்தைகளோட பேர்கூட தெரியுமாங்கறது அவருக்கு தான் வெளிச்சம்.

இன்னும் எனக்கு புரியாத ஒரு விஷயம், "வீட்டை விட்டு எங்கயோ போய்ட்டார்"ன்னு சொல்றதுக்கு பதிலா அதென்ன "ஓடி போய்ட்டார்"ன்னு சொல்றாங்க?.அப்ப என்னவோ புடிக்காமலோ ,இல்லேன்னா பயந்தோ போனா மாதிரி ஆகிடறதில்லையா? கிட்ட தட்ட அவருக்கு எண்பது வயசா இருக்கும்போது சென்னைல அவர் பையன் நல்ல வசதியா இருக்கும்போது,சியோல் ஒலிம்பிக் நடக்கும்போது திரும்ப வந்தார்.வீட்டுல ஒண்ணும் பெருசா எந்த வேலையும் செய்ய மாட்டார்.டீவில பென் ஜான்ஸன் ஓடறத மட்டும் வெறிகொண்ட கண்களோட பார்த்தது ஒரு அசிங்கமான அடுத்த அத்தியாயத்தின் ஆரம்பமாக பட்டது.இந்த தடவை கிட்ட தட்ட ஆறு வருஷம் இருந்தார், அப்படி மறுபடியும் ஒரு நாள் எஸ்ஸு!. அப்பவும் மனசாட்சியே இல்லாம "ரெண்டு ரின் சோப் கட்டிகள எடுத்துண்டு ஓடி போயிட்டார்"ன்னு தான் சொன்னாங்க அவர.

அப்புறம் பிரசன்னம் பாக்கறதுன்னு ஒரு மலையாள மாந்த்ரீக முறை ஒண்ணு , சோழி போட்டு பாத்து, அவர் இப்போ உயிரோட இல்லைன்னு சொன்னாங்க. அவர் ஜாதகப்படி எப்போ இறந்திருப்பார்னு துல்லியமா(!?) கணிச்சு சொல்லி அவருக்கு ஞானவாப்பில சகல அந்திம காரியங்களும் நடந்தது. "பொரி பாலு" கூட வந்திருந்தார் அதுக்கு. "பாவம் இங்க நம்ம கூடவே கடைசி வரைக்கும் இருந்திருந்தா நிறைய நெய் ஊத்தி, நன்னா சந்தன கட்டைலயே எரிச்சி நன்னா ஜம்முனு ,அமக்களப் படுத்தியிருக்கலாம்"னு ரொம்ப அங்கலாய்த்து போய் சொன்னது இன்னும் நியாபகத்துல இருக்கு.பதிமூனாவது நாள் காரியம் எல்லாம் முடிச்சு விட்டுக்கு வந்து சேரும்போது,பூட்டின கதவுக்கு முன்னாடி ஜூட் வெங்கடராமர் ரொம்ப முடியாம வாசப் படியிலயே படுத்திருந்தது இப்போ நெனைச்சாலும் கண்கள் குளமாகிடும்.ஆசையா அவரே ரெண்டு அதிர்சம் வேற வாங்கி சாப்பிட்டார்.

எங்கதான் போவார்? ஏன் போவார்னு? எதுவும் யாருமே கேட்டுகிட்டா மாதிரியும் தெரியல.ஊருக்கு கெடைச்சது பிள்ளையார் கோயிலாண்டிங்கறா மாதிரி யார கேட்டாலும் "பம்பாய்க்கு போயிட்டார்னு" தான் சொல்லுவாங்க.பம்பாய் எதோ வெளிநாடுன்னு நெனைச்சி பெருமையா சொன்னா மாதிரி தான் எனக்கு தோன்றது.ஒரு விவரிக்க முடியாத ஒரு மனோ நிலை இருக்கும் அவங்க வீட்ல.இவர் காணமல் போனபின்னாடி பெருசா ஒண்ணும் அலட்டிக்க மாட்டாங்க.வீட்டுக்கு வந்ததும் தான் திரும்ப எப்போ ஜூட் விடுவாரோன்னு ரொம்ப பதற்றமாவே இருப்பாங்க.திரும்ப எஸ்கேப் ஆனதும் எல்லாரும் நார்மலாகிடுவாங்க.ஒரு வேளை இவர் கிளம்பும்போது எதாவது அண்டா குண்டானையும் சேர்த்து எடுத்துட்டு போறதுனால இருக்கலாமோ என்னவோ.

பொதுவா இப்படி ஓடிப்போனவர்களோட மனைவிகள் இவர்கள விட குறைந்த பட்சம் இருபது வயது கம்மியா இருப்பாங்க.கண்ணுக்கு லட்சணமாக இருப்பாங்க.கல்யாணம் முடிஞ்சி ஒடனே ஓடிப் போனாக் கூட, சரி, ஏதோ இல் வாழ்க்கைல ஈடுபாடு இல்லைன்னு சொல்லலாம். இவங்க ஃபர்ஸ்ட், செகண்ட்ன்னு ட்வெண்டிஃபைவ் நைட்ஸ் வரைக்கும் பிரம்ம பிரயர்த்தனம் செஞ்சிட்டு தான் போறாங்க.அப்புறம் திரும்பி வரும்போது தன்னோட இயலாமைய மறைக்க ,மனைவிகள் மேல சந்தேகப்பட்டு எதாவது ஒரு பட்டம் கொடுக்கறதும் இவங்க வழக்கம்.





இப்போ இந்த மாதிரி விஷயம் நடக்கறது ரொம்பவே கம்மி தான்." யாரும் இப்போதெல்லாம் முன்ன மாதிரி ஓடிப் போறதில்லை"ன்னு எங்கம்மா அடிக்கடி சொல்லியிருக்காங்க.அப்படி சொல்லும்போது அப்பாவோட மனநிலை எப்படியிருக்கும்னு தெரியல.





பெரும்பாலும் இந்த மாதிரி ஆட்களைப் பற்றி சொல்லும்போது "காலைல காஃபி சாப்ட்டார், திண்ணைல தான் உக்காந்து சீடை சாப்ட்டுண்டிருந்தார், கொள்ளகட்டுல வேலைய முடிச்சிட்டு வந்து பாத்தா காணோம்,ஹூம்.. ஆச்சு பத்து வருஷம்" என்பது பொதுமறையான ஒரு சொல்லாடல்.இன்னுமொரு பையன்,இல்ல ஆள்னு சொல்லனும், இல்ல பையானா இருக்கும்போது காணாமப் போன, இப்போ இருந்தா ஆளா இருக்கனும்.சரி இப்போதைக்கு அதுன்னு வெச்சுப்போம்.ஒரு கொயர் நோட்டு வாங்கிட்டு வர்றேன்னு சொல்லி, போனது போனது தான்.பக்கத்து கடைல வாங்காம எதுக்கு டௌனுக்கு போனான்னு யாரு சந்தேகப் படலை,காரணம் "அவன் ரொம்ப சமத்து, டௌனுக்கு போய் நன்னா பேரம் பேசி வாங்குவான்" அப்படின்னு அந்த வீட்டு அசடுகளும் நம்பிடுச்சுங்க.ஒழுங்கா வீட்டுக்கு அடங்கியிருந்த அதோட தம்பிகள் கிட்ட "அவன் எவ்வளவு சமத்து தெரியுமா, இன்டலிஜெண்ட் தெரியுமா?" அப்படின்னு கொசுறு புலம்பல் வேற. ஒருவேளை நம்மலும் ஓடி போயிட்டா நமக்கும் அந்த சமத்து பட்டம் கெடைக்கும்னு நெனைச்சா எவ்வளவு விபரீதமாகிடும்?இல்லேன்னா "பீரோவுல இருந்த பாட்டியோட தங்கச் சங்கிலி எங்கே?"ன்னு கேட்டா என்ன பதில் சொல்லும் அந்த அசடுகள்?ஓடிப்போன சமத்து வெறும் கைய்யோட போகலைங்கறது கூட தெரியாதா என்ன?



அவங்களுக்கு என்ன புடிக்கும், என்ன புடிக்காது, யார் நண்பர்கள் , படிக்கிற பழக்கம் உண்டா எதுவுமே தெரியாது.எதையுமே தெரிஞ்சிக்காம, நேரா ஜாதகத்தக் கொண்டுப்போய் ஜோசியன்கிட்ட காமிச்சா அவன் என்ன சொல்லுவான்? வாங்கின காசுக்கு , "கவலையே வேண்டாம், பெரிய ஆளா வருவான்,ஏன்னு கேட்டா, ஓடிப்போனவனுக்கு ஒம்போதுல குரு"