Thursday, December 13, 2012

சினி(க்) செய்திகள் - 1










நாகைய்யா , வீ எஸ் ராகவன் , மற்றும் பாலைய்யா மூவருக்கும் தங்கள் இளம் வயதில் அப்பா வேடத்திற்கு கடுமையான போட்டி நிலவியது.அந்த காலகட்டத்தில் ,இம்மூவரில் இருவர் அண்ணன் தம்பி ரோலில் நடிக்க , மிஞ்சியிருப்பவர் அப்பா ரோலிலும் நடித்தால் யாருக்கு அப்பா வாய்ப்பு என்று பத்திரிகைகளில் புதிர் வரும் அளவிற்கு மிகவும் பொருத்தமானவர்கள் அவர்கள்.இம்மூவரையும் இவர்களது தந்தைகளே அப்பா என்று அழைத்தாகவும் ஆதாரமற்ற தகவல்கள் உ
ள்ளன.



பலரால் மிமிக்ரி செய்யப்பட்ட அப்பா ஆர்டிஸ்ட் வீ எஸ் ராகவன்.மிமிக்ரியை பல முறை , கண்டித்தவர் வீ எஸ் ராகவன். ஒரு முறை மிம்க்ரி சேது
"மிமிக்ரி செய்தா என்ன தப்பு?" என்று கேட்க "மிமிக்ரி பண்ணனும்னா அவனவன் குரல்ல பண்ண்ச் சொல்லுங்கோ , ஏன் இன்னொருத்தர் மாதிரி பண்றா " என்று சீறினார்.யார் வீட்டு கல்யாணத்திற்கு சென்ற போது "மாப்ளை பையனோட அப்பாவ கூப்டுங்கோ" என்று சொல்ல சட்டுன்னு இவர் கிளம்பிப் போக , பெரிய களேபரமே ஆகிவிட்டது. அந்த அளவிற்கு அப்பா(வி) அவர்.


********************************************************************************


பத்திரிகையை பகைத்துக் கொண்ட தொப்பி - பத்து நடிகர் 
"பேசாம அவிங்க மேல மான நஷ்ட்ட வலக்கு போட்டுருவோமா?" என்றதற்கு அவர் மைத்துனர்,
"ஐயோ ஒத்து பாவா ,வேணாம் ... பொய் கேஸ் போட்டா போளீஸ் புடிச்சிக்கும்" என்று எச்சரித்தாராம்.




********************************************************************************



கமலின் விஷ்வரூபம் DTH முறையில் முதல் நாளே வருவது தெரிந்து விஜய டீ ராஜேந்தரும் அதே போல் தனது வீராச்சாமியை வெளியிட, லோக்கல் கேபிள் ஆப்பரேட்டரிடம் கேட்டதற்கு அவர்கள் எல்லோரும் கோரஸாக தலைமறைவாகிவிட்டார்களாம்.ஆகவே தானே ஒர் வாடகை சைக்கிளில்,வீராச்சாமி சீ டீ , டெக் , கலர் டீ வீ சகிதமாக சென்னையை வலம் வருகிறராம் வீ டீ ஆர்.தி நகர் பஸ் ஸ்டேண்டு , மாம்பலம் மார்க்கெட் பகுதி போன்ற மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கூவிக் கூவி யாவாரம் செய்ய திட்டமாம்.சைக்கிள் பாரில் உட்கார்ந்து படம் பார்க்க குறைவான கட்டணம் , சீட்டில் உட்கார கொஞ்சம் அதிகம் , கேரியரில் அனுமதி இல்லை.இந்ததப் புதுமைக்கு முன்வீலுக்கு காற்றடித்து சிம்பு துவக்கி வைக்கத் திட்டமாம்.

கரெக்டா அடிப்பா காத்து, இல்ல கீழவிழுந்து அடிபடும்...பாத்து.


********************************************************************************







ரஜினி எனக்கு மிகப் பிடித்த நடிகர்.அவர் பிறந்த நாளை உலக ஸ்டைல் தினமாக அறிவிக்க வேண்டி இரவு பத்து மணி முதல் காலை ஆறு மணி வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு ,கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக போராட்டம் நடத்துபவன் தான் நான். ரஜினி டயலாக்கில் எனக்கு பிடிக்காதது "நான் ஒரு தடவை சொன்னா..." நல்லா யோசிச்சி பாருங்க அதுல ஏதாவது விஷயம் இருக்கா?ஒரு தடவை சொன்னா என்ன? நூறு தடவை சொன்னா என்ன? செயல் தானே முக்கியம்.சொன்னது ரஜினி என்றதால் எல்லாரும் ரசித்தார்கள்.

இதற்கு தானே ஆசை பட்டாய் பாலகுமாரா?

அதே போல் நாயகன் கமலின் "நாலு பேருக்கு நல்லது..." பற்றி நாளைப் பார்ப்போம் :)







********************************************************************************



.
*செய்திகளில் உண்மை கொஞ்சம் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்.

Thursday, May 3, 2012

முதல் படி - [2]

சனிக்கிழமைகளில் கொஞ்சம் பொறுமையாக எழுந்து , பல் துலக்காமல் காஃபி குடித்து ,என்று பல சோம்பல் நிறைந்த கமாக்களோடு எழுந்திருக்க நினைத்துகொண்டிருந்த என் எண்ணம் வழக்கம் போல் பலிக்கவில்லை. மற்ற நாட்களில் ஏழு மணி வரை அனத்திக்கொண்டே படுத்திருக்கும் தாத்தா பிரதி சனி ஞாயிறுகளில் ஐந்தரைக்கெல்லாம் எழுந்து சத்தமாக சுப்பிரபாதம் அலர வைப்பதும், வீடு முழுக்க தசாங்கமும் , ஊதுபத்தியும் ஏற்றி புகைய விடுவது ,பழைய ட்ரங்க் பெட்டியை கரகரவென்று ஓசைப் படுத்துவது என்று எல்லையில்லா தொல்லைகளைத் தர அவர் தவறுவதே இல்லை.அந்த எரிச்சலில் அவர் பல ஆண்டுகளாக உபயோகிக்கும் டீ.கே.எஸ் பட்டணம் பொடியோடு கொஞ்சம் சிங்கினி பொடியையும் சேர்த்து கலந்து விட்டு அன்றைய தினசரியை மேயத்துவங்கினேன்.சிங்கினியின் வீரியம் தாங்காமல் , கிரிஷ்ஷ்ஷ்ஷ், ப்ருஹாக் , த்ரிஷ்ஷ்ஷ்ஷ் என்று இடைவிடாது தும்மலிசை பின்னனியில் கேட்டுக் கொண்டேயிருந்தது.



அவருடைய தும்மல் சத்தத்தையும் மீறி சன்னல் வழியாக ஒரு "ஐயோ: கேட்டது. மேலும் தொடர்ந்து "அம்மா... , இங்க பாரு , தோ பாரு, ஐயோ....".தினசரியை விட்டு விரைந்து எதிர் ஃப்ளாட்டுகுள் முதல் முறையாக கேள்வி கேட்பாரின்றி ஓடி சென்றேன்.என்னைத் தொடர்ந்தபடி அடுத்த சில வீடுகளிலிருந்தும் சிலர் வந்து விட்டனர்.கடைசியாக தாத்தாவும் வந்தார்.


வந்து ஆறு மாதங்களாகியும் சரியான அறிமுகம் இல்லாத அந்த வீட்டில் எண்பத்தியாறு வயது பாட்டியும், அறுபது வயது மகனும் மட்டும் இருந்தனர். எங்கள் முதல் சந்திப்பே மகனின் ஐயோ குரலுடனும் , பாட்டியின் உயிரற்ற உடலுடனும் நடைப்பெற்றது துரதிர்ஷ்டவசமானது தான்.சற்று சலசலப்பும், தழுதழுத்த அவர் குரலும் மட்டும் இருக்க மத்யே மத்யே தாத்தாவின் "இஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாக் , இஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹு" ஒலித்தது அசந்தர்ப்பமாக இருந்தது.எல்லோரும் அவருக்கு ஆறுதலாக ஏதேதோ பேச முற்பட "இன்று சனிக்கிழமை , சனிப்பிணம்..." என்பதை தாத்தாவின் காதுகளுக்கு மட்டும் கேட்பது போல் சொல்லி அவர் முக பாவனையைப் பார்த்தேன்.அவருக்கு தும்மல் நின்று விக்கல் வந்திருந்தது இப்போது.அப்பா தானே சென்று "நல்ல ஆத்மா பாவம் , அதான் கஷ்டப் படாம, போய் செந்துட்டா மகராஜி" என்று ஆறுதல்(!) சொல்லிக் கொண்டிருந்தார் அவரிடம்(வசதிக்காக அவர் பெயர் கண்ணன் என்று வைத்துக் கொண்டேன்.பாட்டிக்கி இனி பெயர் தேவை இல்லை, மேலும் நம்ம ஊரில் எழுபது வயசுக்கு மேலானாலே பெயருக்கு முக்கியத்துவமோ அவசியமோ இருப்பதில்லையே.பாட்டி அல்லது தாத்தா,பால் குறிப்பிடாமல் எங்க ஊர் பக்கம் 'கிழம்' , சென்னையில் "பெருசு" , ஆகவே பெயர் தேவை இல்லை.)."இந்த துணி உளர்த்தும்போது சண்ட போடுவா சனியன்னு அப்பா சொல்லுவாளே அந்த பாட்டி தான அது?" என்று அம்மாவிடம் கேட்க அம்மா பதில் சொல்லவில்லை.அதற்குள்ளாக ஒரு வழியாக தெற்கு திசையைக் கண்டு பிடித்து அல்லது நிர்ணையித்து ,அந்த பாட்டியின் உடலை கிடத்தி வெள்ளைத்துணி, பஞ்சு எல்லாம் தயாராக இருந்தது.இதற்கென்றே "டெத் கிட்" என்று வைத்திருப்பார்களோ என்று நான் அயர்ந்து போகும் வகையில் தயாராகி இருந்தது.



துணிக் கொடி சண்டை இல்லை என்று உறுதியானதை அடுத்து அப்பாவின் பரோபகாரம் தொடர்ந்து கொண்டிருந்தது.

"யாருக்காவது ஃபோன் பண்ணனும்னா தாராளமா இங்கயிருந்து பண்ணுங்கோ, பால் வாங்கிண்டு வர்றேன் , வர்றவாளுக்கு , காஃபி இங்க போட்டுடறோம்".நம்மாளான உதவியை செய்வோமென்று நானும் அங்கேயே இருக்க, தம்மாலான உபத்திரவம் செய்ய தத்தாவும் உடனிருந்தார்..

கண்ணன் அப்பாவிடம் "அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் சார் , நீங்க இவ்வளவு சொன்னதே ரொம்ப தெம்பா இருக்கு. ஒரே ஒரு ஃபேவர் மட்டும் பண்ணுங்கோ".


"தயங்காம சொல்லுங்கோ"


"ஒரு கை குடுத்தேள்னா இத கீழ கொண்டு வெச்சுடளாம்" என்று அவர் அந்த பாட்டியின் உடலை கை காட்டியதும், தாத்தாவின் வயிற்றிலிருந்து தண்ணீர் வாலியில் தவக்களை விழுந்தது போல் சத்தம் வந்தது தெளிவாக கேட்டது.


எனது வார இறுதி அந்த இறுதிச் சடங்குகளோடு முடிய , தாத்தாவின் முகம் மிக வாடியிருந்தது. நாலடியில் இருந்த அந்த பாட்டியின் உடலை அந்த மாடிப்படி ஹேர் பின் பெண்டுகளில் திருப்ப முடியாமல் திணறியதைப் பார்த்து அடிக்கடி என்னை மௌனமாக பார்த்தார். அந்த மௌனத்திற்கு அர்த்தம் ""நான் தான் அப்பவே சொன்னேனே " என்பது எனக்கு புரிந்தது.இதுவரை நான் அவர் முகத்தில் பார்க்காத ஒரு இனம் புரியாத தவிப்பு அவரிடம் தெரிந்தது.மிகவும் வாடியிருந்த அவர் முகத்தைப் பார்க்க எனக்கு பாவமாக இல்லை.தனக்கும் மர அலமாரியின் கதி தானோ என்று அவர் நினைப்பது அப்படமாக முகத்தில் தெரிந்தது .

அன்று முதல், பதிப்பின் தலைப்பு அவருடைய தலைமைச் செயலகம் ஆகிவிட்டது.இரவு பத்து மணிக்கு ஆஃபீஸ் விட்டு திரும்பும்போது வீட்டுக்கு ஏறும் முதல் படியில் என்றும் இல்லாத திருநாளாய் உட்கார்ந்து பொட்டுக் கடலை சாப்பிட்டு கொண்டிருந்தார்.

"என்ன இங்க ஒக்காந்திருக்கேள்?ஆத்துக்குக்கு போங்கோ" என்றதற்கு சூள் கொட்டியபடி,

"ஆகமாம் பெரிய ஆகம், வீடுன்னு சொல்லு.மார லேச வலிச்சுது , அதான் இங்க வந்துடுவோம்னு வந்துட்டேன்" என்று இருப்பிடத்திற்கு கூட சாதியம் பூசினார். "அது சரி மாரு, வலிக்கு பொட்டு கடலை ரொம்ப நல்லது. (மனதிற்குள்:கண்டத திங்க வேண்டியது அப்புறம் ,சும்மா மாரு வலி, மயிறு வலிங்க வேண்டியது) " என்றவாறு நான் வீட்டுகுள் வந்து விட்டேன்.சின்ன தலைவலி, கால் குடைச்சல் என்றால் கூட அங்கு வந்து விடுவதை பாதுகாப்பாக கருதினார். மழைக்காலமாக இருந்ததால் ஒரு கருப்பு நாயும் மாடிப்படி வளைவில் தூங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்தது."நீங்க கெட்டது போறாதுன்னு அந்த கருப்பு நாயையும் சேத்து கெடுத்து வெச்சிருக்கேள்" என்று சொல்லியும் அவர் அங்கு செல்வதை நிறுத்தவில்லை. இரவு பத்தரைக்கு மேல மாடிப்படியில் விளக்கு எரிந்தால் , அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் சண்டைக்கு வருவார்கள்."காமன் கணக்குல பில்லு எகிறும்" என்பது அவர்களது வாதம்.விளக்கில்லாமல் இவர் போய் உட்காருவதுமில்லை.நாயை (அதற்கும் பெயர் அவசியமில்லை) மிதித்து விட்டால் என்ன ஆகும் என்ற அச்சத்தால், நான் விளக்கை அணைத்ததும், "டேய் கோபாலா விளக்கைப் போடு, தோ வந்துட்டேன்" என்று கத்திக் கொண்டே மேலே வந்தார்.அவர் மேலே ஏறுவதை பின்னாலிருந்து பார்க்க இடுப்புக்கு கீழே, மேல் பகுதி ட்ரௌசர் போலவும் கீழ் பகுதி மட்டும் வேட்டி போலவும் இருந்தது.
மேலே வந்ததும் வராததுமாக புலம்பினார்."பகவானே..செத்ததுக்கப்பறம் நாறாம போகனும்...".கேட்காதது போல் பாவனை செய்த நான் "அம்மா, பருப்பு உசிலி செய்யறன்னிக்கி ஏசீ போடாம, சன்னல் கதவ நன்னா தொறந்து வை.நாத்தம் கொடல பொரட்டறது."என்று ரூம் ஃப்ரெஷ்னர் அடித்து விட்டேன்."இருக்கும்போது எவ்வளவு வேணுமோ நாறலாம் , இல்ல?" என்பது என் செய்கை என்பது அவருக்கு புரிந்ததா என்பதை பற்றி எனக்கு கவலை இல்லை.பொதுவாக விளக்கை அணைப்பதை விட மிகவும் வீரியம் கொண்ட ஒரு உத்தியையும் கைவசம் வைத்திருக்கிறேன்."மெட்டியொலி" நெடுந்தொடரின் துவக்க பாடலை வேலை மெனக்கட்டு பதிவு செய்து வைத்திருக்கிறேன். அதை கொஞ்சம் சத்தமாக வைத்தால் போதும் , கருவாட்டு கூடையை வட்டமிடும் பூனைப் போல் எங்கிருந்தாலும் மேலே வந்துவிடுவார்.ஆச்சு பாட்டு முடியப் போகிறது, இன்னும் சத்ததைக் காணோம்.கீழே போய் பார்க்க எத்தனிக்கும் முன் ஊளை விட்டது பெயரிடப் படாத கருப்பு நாய்.
.

Wednesday, April 18, 2012

முதல் படி




தாத்தாவுக்கு ஆரம்பத்திலிருந்தே அதுல இஷ்டம் இல்லை . "நீ ரொம்ப அவசரப்
படறியோன்னு தோன்றதுடா கோபாலா"ன்னார்.ஊர் உலகமே என்னை ஸ்டைலாக வினய் என்று
அழைக்கும்போது இவர் மட்டும் என்னவோ கோபாலா என்று அழைப்பது கூடத் தான் எனக்கு
இஷ்டமில்லை. "இன்னும் நாலு வீடு பாரு; இப்போ வீடு வாங்க என்ன அவசரம்?ஒனக்கு
இன்னும் வயசு இருக்கு , நிதானமா வாங்கிக்கலாமே" என்றார்.கீழ்கட்டளையில் வெறும்
ஒன்பது லட்ச ரூபாய்க்கு இனி ஒருக்காலும் வீடு வாங்க முடியாதென்பதை அவருக்கு
எப்படி புரிய வைப்பது? மாதாந்திர கடன் தொகை வெறும் ஏழாயிரத்து சொச்சம் தான்.
அதே வீட்டுக்கு வாடகை கொடுத்தால் எப்படியும் ஐயாயிரம் ரூபாய் ஆகும், தவிர
வருமான வரி விலக்கு எப்படியும் இரண்டாயிரத்திற்கு மேல் கிடைக்கும். கூட்டி
கழித்து பார்த்தால் இதைவிட நல்ல இடம் நமக்கு கிடைக்காது என்பது என் கணக்கு.

வீடு பார்க்கப் போகும் வரை உற்சாகமாக இருந்தவர் , வீட்டை பார்த்து விட்டு
திரும்பி வரும்போது ஏற்கனவே  அரை அடி நீளம் கொண்ட தாவாங்கட்டையை மேலும் நீட்டி
தொப்புள் வரை தொங்கப் போட்டுக்கொண்டு வந்தார்.இப்போதெல்லாம் அவரை எனக்கு
பிடிப்பதே இல்லை, முன்பும் அவரை எனக்கு பிடித்ததாகவும் நியாபகம் இல்லை., நான் ஆறாவது படிக்கும்போது அவர் சேர்த்துவிட்ட ஸ்லோக க்லாசில் ஒரு பரீட்சை வைத்தார்கள்.அவர் சேர்த்துவிட்ட ஒரே காரணத்தினால் ஃபெயிலானேன்.அதற்காக கடுங்கோபம் கொண்டவர் "நான் உனக்கு தாத்தாவும் இல்லை, நீ எனக்கு பேரனும் இல்லை. நான் இதுவரைக்கும் எந்த டெஸ்ட்டுலையும் ஃபெயிலானதே இல்லை" என்றது இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது.இப்போ போல் இருந்தால் சொல்லியிருப்பேன் "DNA டெஸ்ட் ஃபெயிலானா மாதிரி ஏன் கத்தறேள்?HIV டெஸ்ட்டுல கூட நீங்க பாஸா?". எல்லா
 விஷயத்திலும் அவர் தலையீடு அதிகமாக இருக்கிறது.அப்பாவும் அவருக்கு ஒரே பிள்ளை
என்பதால் கடைசி வரை அவரை கூட வைத்துகொள்வதை தவிர்க்க முடியாது.அவர் பேச்சை
எந்த காதிலும் வாங்காமல் வீட்டை வாங்கிவிட்டேன்.அவர் வேண்டாம் என்று சொல்லச்
சொல்ல மிக தீவிரமாக செயல்பட்டு வெகு சீக்கிரமே எல்லா வேலையையும்
முடித்தேன்.ஒரு வழியாக கணபதி ஹோமம் முடித்து , பால் காய்ச்சி குடித்து ,
உற்றார் உறவினர்களின் வயிற்றெரிச்சல் எல்லாம் நல்ல விதமாக தொடங்கி ,
குடிப்புகத் தயாரானோம்.

இருபத்தாறு அங்குலத் தொலைகாட்சி பெட்டியை முதல் மாடிக்கு ஏற்றும்போது அவரையும்
அழைத்து சென்றது ,கிழட்டு பூனையை மடியில் கட்டிக்கொண்டு சகுனம் பார்த்தது போல்
ஆகிவிட்டது.அந்த குறுகலான மாடிப்படி திருப்பத்தில் அதை திருப்ப மிகவும்
சிரமப்படும்போது வழக்கம் போல் ஆரம்பித்து விட்டார். நானும் என் ஆஃபீஸ்
நண்பனும் படாதபாடு பட்டுக்கொண்டிருக்க "நான் தான் அப்பவே சொன்னேனே,
வேண்டாம்னு, நாலு காசு பாத்தாச்சுன்னா, நீங்கள்ளாம் பெரியவாளாயிடறேள்.. ஒரு
சாமானையும் மேல ஏத்த முடியல... அவ்ளோ தான் எல்லாத்தையும் நடு வீதில வெச்சிக்க
வேண்டியது தான் ...".எனக்கு மிக சீராக கடுப்பு கிளம்ப , தொ.கா.பெ யை  தொடையில்
தாங்கியவாறே, "தாத்தா ஒங்க சாமானெல்லாம் பத்திரமா இருக்கோனோ?" என்றேன் பல்லைக்
கடித்துக்கொண்டு.என் நண்பன் சிரிக்க தொ.கா.பெ சரியவிட்டு பின் சமாளித்துப்
பிடித்தோம்.

கட்டில் , பீரோ எல்லாம் மேலே ஏற்ற நான் பட்டபாடு , கனவில் கணக்கு பரீட்சை
வருவது போல் இன்றும் என்னை மிரட்டுகிறது.நான் படும் சிரமத்தைப் பார்க்கவென்றே
என்கூடவே இருந்து ஏதாவது நொட்டை சொல்லுவார்."அப்படி கஷ்டப்பட்டு மேல ஏத்தி,
படி வலைவுல ஒடைக்கறதுக்கு, கீழியே வெச்சு ஒடைக்கலாமே, ஒரு வேலை மிச்ச்மாச்சே"
என்பார் நான் பதிலுக்கு "சாதமா சாப்டாம , ஜீரணம் ஆனதையே  சாப்டாகூட வேலை
மிச்சம்" என்பேன். அப்பாவின் முகத்திற்காகப் பார்ப்பேன். அப்பாவும் அவர் செய்ய
முடியாததை நான் செய்வதால் மறைமுகமாக எனக்கு பச்சைக் கொடி காட்டுவதாகத் தான்
எனக்கு தோன்றுகிறது ,ஆனால் அவர் முன்னிலையில் வரம்பு மீற முடியாது.உண்மையிலேயே
அவர் சொன்னதுபோல் ஒரு பழைய மர அலமாரி கீழே வைத்து அதை சின்னதாக ஒரு செருப்பு
வைக்கும் அலமாரியாக மாற்றினோம்.இப்படியே பல பொருட்கள் மாடிப்படி வலைவின்
தயைக்கு ஏற்றார்போல சுருங்க,  "நான் தான் அப்பவே சொன்னேனே" என்ற குரல்
துரத்தத் துரத்த ஒரு பாடாக எல்லாம் முடிந்தது.

தண்ணீர் பற்றாக்குறை, வாகன நிறுத்த சண்டை , சாக்கடை பிரச்சனை என்று எந்த ஒரு
பிரச்சனை வாந்தாலும் , அந்த பிரச்சனையை விட இவர் எள்ளல் தான் எனக்கு மேலும்
உஷ்னத்தை மூட்டும்.வேலை முடிந்து வீடு திரும்பும்போது நிச்சயம் ஒரு புகாரோடு
தான் இருப்பார்."இன்னிக்கி கக்கூஸ் அடைச்சிண்டு , போகவே இல்லை , கடைசில பாத்தா
, குழாய்குள்ள ஒரு வண்டி சிமெண்ட் கலவை கிடக்கு, வீடு கட்டினவன் லட்சனம்
அப்படி , வாங்கினவன் லட்சனம் இப்பிடி. உனக்கு எவனோ கடன் தர்றன்னு வீட்ட
வாங்கிடுவ , நீ ஆஃபீஸ் போய்ட்டு வெறுமன தூங்க மட்டும் தான் வருவ ,
இருக்கறவாளுக்கு தான கஷ்டம் தெரியும்".

"நன்னா பாத்தேளா தாத்தா? அது சிமெண்ட் கலவை தானா?" , "ஏன்டா பாத்தவன் என்ன
முட்டாளா?" என்று இரைந்தார். அவர் கேள்விக்கு ஆமோதிப்பதாக தலையை ஆட்டி
"அதுக்கில்ல, அம்மா நேத்திக்கி நாப்பது அடையும் , பெரிய அடுக்கு நிறைய
அவியலும் பண்ணதா சொன்னா, நான் வரும்போது காலி பாத்திரம் தான் மித்தத்துல
இருந்துது அதான் கேட்டேன்".சின்ன வயதில் என்னை அவர் அடிக்கடி "நன்னா
கொட்டிக்கோ" என்று சொன்னதற்கு இதைதவிர பழி வாங்க எனக்கு நல்ல சந்தர்ப்பம்
கிடைக்காது.நடுகூடத்துல கக்கூச கட்டி வெச்சிருகான் "அதுல உக்காந்தா கீழ்
வீட்டுல இருக்கறவன் பாக்கறானோன்னு பயமா இருக்கு. பிரைவசிங்கற நாமதேயமே
இல்லையே"."அப்புடி அவா பாத்தா , வீட்ட ராத்திரியோட ராத்திரியா காலி பண்ணிண்டு
போயிடுவான் கவலையே வேண்டாம் உங்களுக்கு. பொழுதன்னைக்கும் அங்கியே ஏன்
இருக்கேள்?" என்ற ரீதியில் ,அந்த திருத்தலத்தை சுற்றியே வந்து கொண்டிருந்த
எங்கள் சண்டை வேறு தளத்திற்கு தாவும் ஒரு தருணம் வந்தது.

(இரண்டாம் படியில் சந்திப்போம்)
.

Wednesday, March 28, 2012

இருபத்தஞ்சு :எண்பத்தி ரெண்டு


"டாக்டர், நான் ரவி, இவன் கௌதம். நாங்க தான் திவாகர இங்க கூட்டிகிட்டு வந்தது. இப்போ எப்படி இருக்கு அவனுக்கு?"
"மிஸ்டர் ரவி , நீங்க மட்டும் உள்ள வாங்க" என்ற டாக்டர் பத்ரன் , அன்று சரியாக பல் விளக்கவில்லை என்பது சற்று தூரத்திலே தெரிந்தது.
"சொல்லுங்க மிஸ்டர் ரவி என்ன ஆச்சு?"
"அவன எனக்கு ஒரு வருஷமா தெரியும், நல்லா வேலை பாக்கறவன், இது வரைக்கும் லேட்டா கூட வராதவன் , ஒரு மாசமா ஆஃபீஸ் வரவே இல்ல, சரின்னு அவன் வீட்டுக்கு போய் பாத்தப்போ , யார் கிட்டயோ சண்ட போட்டுக்கிட்டிருந்தான்"
"அப்படியா மேல சொல்லுங்க"
"உள்ள போய் பார்த்தா தான் தெரியுது உள்ள யாருமே இல்ல, தனக்கு தானே பேசிக்கிட்டிருந்தான்.கத்தியால தன்னையே குத்திக்க போனான்,தடுக்க போனப்போ எனக்கும்  கைல வெட்டு, இங்க பாருங்க..."
"அடடே, நீங்க வந்து அங்க படுங்க, நான் கட்டு போடறேன்"
"இல்ல பரவாயில்ல டாக்டர், முதல்ல அவன கவனிங்க"
"அவருக்கு இருக்குற ப்ரச்சனைய நீங்க புரிஞ்சிக்கனும்னா, நான் சொல்றத கேளுங்க. அப்போ தான் அவருக்கு குணமாகும்".
குழப்பமாக ரவி சென்று படுத்தான். அருகாமையில் அவர் வாயை சந்திக்கும் அவஸ்தையை நெடு நேரம் அவனுக்கு கொடுக்கவில்லை டாக்டர். முகத்தில் வாயை மூடும்படியான முகமூடியை போட்டதும் நிம்மதி பெருமூச்சு விட்டான் ரவி.
"அப்படியே ரிலாக்ஸ் பண்ணுங்க ரவி, கண்ண மூடுங்க, நான் ஒண்ணுலேந்து பத்து வரைக்கும் எண்ணுவேன் , நீங்க ஆழமா மூச்சு விட்டுட்டு நான் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லுங்க, எப்போவாவது சின்ன வயசுல உங்களுக்கு விபத்து நடந்திருக்கா?"
"காலேஜ் படிக்கும்போது.." என்று தொடங்கி அவன் சொல்ல சொல்ல டாக்டர் அதை பதிவு செய்ய தொடங்கினார்.
அரை மணி நேரம் போனது தெரியாமல் , தாடி கதாநாயகர் போல் வாய்க்கு வந்ததை பேசி தீர்த்துவிட்டான் ரவி.கண் விழித்துப் பார்த்தபோது, டாக்டர் அவனை கூர்ந்து பார்த்துகொண்டிருந்தார், புரியும்படி சொல்லவேண்டுமென்றால் , குறுகுறுன்னு பார்த்தார் .
"என்ன டாக்டர் எனக்கு என்ன ஆcச்சு?"
"ஒண்ணும் இல்ல, நீங்க நேத்திக்கு சரியா தூங்கல போல இருக்கு, அசந்து தூங்கிட்டீங்க , அதான் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு விட்டேன்."
"சரி டாக்டர் , திவாகருக்கு..."
"அவருக்கு ஒண்ணும் ஆகாது பயப்படவேண்டாம்,  சரி கொஞ்சம் வெளியே போய்ட்டு கௌதம உள்ள அனுப்புங்க ப்ளீஸ்".

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

"கூப்டீங்களா டாக்டர்?"
"யெஸ் மிஸ்டர் கௌதம், ரவிக்கு சிவியர் டெல்யூஷன் தான்"
"அவர் ஃப்ளாட்ல நடந்ததா நீங்க சொன்னதெல்லாத்தையும் , திவாகர் வீட்ல நடந்ததா சொன்னார்"
"அவன எனக்கு ஒரு வருஷமா தெரியும், நல்லா...."
"தெரியும் சொன்னார்...நல்லா வேலை பாக்கறவன், இது வரைக்கும் லேட்டா கூட வராதவன் , ஒரு மாசமா ஆஃபீஸ் வரவே இல்ல, சரின்னு அவன் வீட்டுக்கு போய் பாத்தப்போ ,  அதானே?"
"ஆமா"
"ஹூம்.. சில ஸ்கேன் எடுக்கனும், அடுத்த வாரம் கூட்டிகிட்டு வாங்க. அவர பொருத்த வரை திவாகர்னு ஒருத்தர் இருக்கறது நிஜம், அவருக்கு தான் நான் ட்ரீட்மெண்ட் தர்றேன் சரியா?"
வெளியில் நெற்றியில் வியர்வையோடு  நகத்தை கடித்தபடி ரவி உட்கார்ந்திருந்தான். கௌதமும் டாக்டரும் வெளியில் வந்தார்கள்.
"மிஸ்டர் ரவி, திவாகருக்கு செடேஷன் குடுத்திருக்கேன் , நல்லா தூங்கறர், நீங்க அடுத்த வாரம் வந்தா போதும் . ரெண்டு பேரும் வாங்க"
"டாக்டர்... ஃபீஸ்...?" என்று பர்சை எடுக்க எத்தனித்த ரவியை "வேண்டாம் அடுத்த வாரம் பாத்துக்கலாம்" என்று மறுத்த டாக்டர் பத்ரன் அவர்கள் இருவரும் போவதை அசைவின்றி நின்றபடி பார்த்துக் கொன்டிருக்கும் போது பின்னாலிலிருந்து அவரை அழைத்தார் சக டாக்டர் திருமலை.
"ராம பத்ரன் , உங்க கூட நான் பேசனும்"
"ப்ளீஸ் கால் மீ டாக்டர் பத்ரன்" என்று கோபாமாக கத்தினார் ராம பத்ரன்.
"ஓகே.... ஒகே.... டாக்டர் பத்ரன் எப்படி இருக்கீங்க? காலைல மாத்திரை போட்டுக்க மறுத்துட்டீங்களாமே? சுப்பையா சொன்னான்"
"அது கசப்பா இருக்கு, எனக்கு வேண்டாம் எனக்கு ஒண்ணும் இல்லையே எனக்கு எதுக்கு மாத்திரை?" என்றார் ராம பத்ரன்.
யாருமற்ற திசையை காட்டி"அதோ போறரே ரவி , அவர் என்னோட புது பேஷண்ட் " என்றார் இல்லாத ஸ்டெதஸ்கோப்பை கழுத்தில் மாட்டியபடி.
"ஓஹோ அப்படியா , வெரி குட். வாங்க நம்ம என்னோட ரூமுக்கு போய் பேசலாம்" என்று ராம பத்ரன் தோளில் கையைப் போட்டு ஆதரவாகவும் கைத்தாங்களாகவும் அவரை வழி நடத்தி நடக்க தொடங்கினார் டாக்டர் திருமலை.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த டாக்டர் திருமலை அருகில் இல்லாத யாரையோ அணைத்துக்கொண்டு போவதை பின்புறத்திலிருந்து பார்க்க பரிதாபமாக இருந்தது. ஒரு கணத்தில் அவர் நடைத் தடுமாறி படியில் விழத் தெரிய அவரைப் பிடிக்க ஓடினேன்.
"அவர் படில விழப்போறார்" என்று அலறிக்கொண்டே.
"அங்க படியும் இல்ல யாரும் இல்ல, வா என்னோட, தூங்க வேண்டாமா? நேரம் என்ன ஆச்சு பாத்தியா இருபத்தஞ்சு மணி எண்பத்தி ரெண்டு நிமிஷம்" என்று என்னை குரோதமாக தர தரவென்று இழுத்துச் சென்ற திவாகர் கையில் ஒரு கத்தியிருந்தது..

.


Tuesday, March 27, 2012

சதாபிஷேகம்

"சூரியும், வெங்குட்டுவும் தான் வரனும், மத்த எல்லாரும் வந்தாச்சு" என்று அமர் சொல்லும்போதே அவர்களும் வந்து விட்டார்கள்.ஒரு ஓர நாற்காலியில் அமர்ந்திருந்த அந்த பரிதாபமானவரை எல்லோருமாக சேர்ந்து முறைத்தபடி ,

"என்ன சொல்றப்பா நீ?"

"முடியாது, என்னால முடியாது"

"எல்லாருமே அப்படிதான் நினைக்கிறோம், உன்னால் முடியாது, விலகி போய்டு"

"நீங்க சொல்ற முடியாது வேற, நான் சொல்றது வேற. நான் சொன்னது என்னால அத விட முடியாது"

"ஏன் இப்புடி அடம் புடிக்கற? உன்னோட நல்லதுக்கு தான் சொல்றோம், போதுமே"

"அத சொல்ல நீங்க யாரு?"

"நாங்க சொல்லாம யாரு சொல்லுவா?இப்படி பெரியவா எல்லாரையும் , மரியாதையில்லாம பேசப்டாது, நோக்கும் வயசாரது"

"நேக்கும் வயசாரதுன்னு தெரியரதோன்னோ , அப்ப நீங்க எனக்கு மரியாதை குடுங்கோ"

"இப்படி எதிர்த்து எதிர்த்து பேசாத, நாங்க தான் ஒனக்கு செல்லம் குடுத்து குட்டிசுவராக்கிடோம்னு ஊரே பேசறது"

"அன்னிக்கு அப்படிதான் கப்பு மாமா ஏதோ ஆதங்கத்துல யார்கிட்டயோ சொன்னத மனசுல வெச்சிண்டு, அவர இன்னது தான்னு இல்லாம அப்படி பேசியிருக்க நீ?" சற்று காட்டமாகவே அமர்.

"அவர் யாரு என்ன சொல்ல?"

"என்ன எழவுடா இது, யார பாத்தாலும் கொஞ்சம் கூட மட்டு மரியாதை யில்லாம அவா யாரு இவா யாருன்னு கேக்கற?ஒடனடாத்தாப்புல உங்கூட தான் இருந்தான், அன்னிக்கி கல்கட்டால கண்ணீரும் கம்பளையுமா வந்த புள்ள அதுக்கப்பறம் லவலேசம் அத தொடவே இல்லயே.கொழந்தன்னா அது கொழந்தை"


"அவன் பயந்தாங்குளி"

"கப்பு மாமா அன்னிக்கி ஒனக்கு ஷூ வாங்கி குடுக்கும் போது நன்னா இருந்துதா? , இன்னிக்கி வேணும்னா அவர் நமக்கு வேண்டாதவரா இருக்கலாம் , ஆனா நமக்காக எவ்வளவு பண்ணியிருக்கார்னு யோசிச்சிப் பாரு"





"இப்புடியே தர்க்கம் பண்ணாத.தோப்பனார் சாவவிட நோக்கு அதான் பெருசா போச்சா?அன்னிக்கும் திரும்பி பாக்கறதுக்குள்ள கம்பிய நீட்டிட்டயே படவா நீ?"

"ஆமாம் எனக்கு அது தான் முக்கியம்"

சூடான சமோசாக்கள் வந்தது. அதை கடித்தவாறே கிச்சா "உன்ன யாரு அத அப்படியே பொசுக்குனு விட சொன்னா? இதோ இங்க பம்பாய்லயே இருந்துண்டு உள்ளூர்ல மட்டும் ஜோலிய ஒத்துக்கோ, மத்த நேரத்துல ஹோட்டல பாத்துக்கோ, கல்லால நீ பொறுப்பா இல்லேன்னா வியாபாரம் படுத்துரும்"

"அதான் அண்ணா பாத்துக்கறாரே"

"ஆமாம்டா அவனும் எவ்வளவு தான் செய்வான்? அவனுக்கு குடும்பம் குட்டியெல்லாம் இல்லயா?நீ இப்படியே சுத்தற, பாவம் ஒரு கரண்ட் பில்லு கட்டறதுலேந்து, பால் வாங்கறவரைக்கும் அவன் தான் பாவம் போறான்"

"ஒனக்கு வக்காலத்து வாங்கறதுக்கு ஒரு கூட்டம் வேற வெச்சிண்டு ஆர்ப்பாட்டம் செய்யறியே"

"உன்னோட கொழந்த பள்ளிகூடத்துக்கு அப்லிகேஷன் ஃபார்ம்ல கூட நீ கையெழுத்து போடலையாமே? அஞ்சு சொல்லி ஆத்து ஆத்து போயிட்டா"

"இல்ல அப்போ நான் ஃபார்ம்.."

"போதும் அத பத்தி மட்டும் நீ பேசாத. சாய்பாபா மேல சத்தியமா இனிமே அத நீ விடனும் " என்று உஷ்னமாக சொன்ன சூரி , சமோசா தட்டுக்கு அடியில் ரகசியமாக மறைத்து வைக்கபட்டிருந்த சூடத்தை எடுத்து ஏற்றி பலவந்தமாக சத்தியம் வாங்கிவிட்டார்.



தான் ஏமாந்ததை சற்றும் பொறுக்க முடியாமல் தலையை தொங்கப் போட்டுகொண்டே, அறையை விட்டு வெளியேறினார் சச்சின் டெண்டுல்கர்.