Thursday, July 22, 2010

கல்லூரிக் காதல்(கள்)


இப்படி நடக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

இனிமையாகத் துவங்கியது கல்லூரியின் முதல் நாள்.முதல் நாளன்றே தயக்கமின்றி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான் ராஜ்."ஹலோ ஐ அம் ராஜ்,என்ன பாஸ் மீசை வெச்சிருக்கீங்க?, சீனியர் பாத்தா பிச்சிடுவாங்க மீசையையும் உன்னையும்.ரேக்கிங் தெரியுமா ரேக்கிங்? ".ஒரே வாக்கியத்தில் ஒருமைக்குத் தாவி,நட்பை எளிதாக ஏற்படுத்தினான்."தெரியாதே ரேக்கிங் பன்னுவாங்களா? " எனக்கு அடி வயிற்றில் புளி.

"ஒன்னும் கஷ்டம் இல்ல, துணிக்கடைல ஓஸீ ல தர்ற மஞ்சப்பை தான் எடுத்துக்கிட்டு வரனும், ஹவாய் செருப்பு தான் போடனும், சட்டயை இன் பன்னக்கூடாது,பெல்ட் போடக்கூடாது,கடிகாரம் கட்டக் கூடாது, சீனியர பாத்ததும் சத்தம் வர்ற மாதிரி தரைல கால அடிச்சி சல்யூட் பன்னனும்,தண்ணி பார்ட்டீ வெக்கனும் , அசைன்மெண்ட் எழுதி கொடுத்தா அவங்களுக்கு கொள்ளைப் பிரியம்,பைக்ல வர்ற கூடாது,முக்கியமா பேரு கேட்டா இனிஷியலோட சொல்லனும், அப்பா பேருக்கு மிஸ்டர் போடனும், தாத்தா பேருக்கு ரெண்டு மிஸ்டர்".

"எப்படி இவ்வளவு தெரியும்? " வியந்தபடி நான்.

"எங்க அண்ணன் ரெண்டு வருஷம் முன்னாடி இங்க தான் படிச்சான்"

வகுப்பு துவங்கியது, அறிமுகப்படலத்தோடு.

"ஹலோ ஃப்ரெண்ட்ஸ், ஐ அம் ராம்குமார், ஹெடிங்க் த டிபார்ட்மெண்ட் ஆஃப் ஃபிசிக்ஸ், உங்க க்லாஸ் இன் சார்ஜ், உங்களை நீங்க அறிமுகபடுத்திக்கங்க" சரளமான ஆங்கிலத்திலும், உடைந்த தமிழிலும் ஆர்.கே. எல்லோரும் தங்களது பெயரையும், அடுத்த ஆண்டுமுதல் படிக்கவிருக்கும் துறையையும் சொல்லி

அமர்ந்தார்கள் , அந்த வரிசையில் "சித்ரா ,கம்பியூட்டர் சைண்ஸ்" என்ற குரல் சின்னக் குயிலுக்கு சொந்தமானது போல் இருந்தது,வகுப்பே ஒன்று சேர அது வந்த திசையைத் திரும்பிப் பார்த்தோம். வாஸ்து பார்த்துக் கட்டிய டியூபக்ஸ் வீடு போல் அற்புதமாக இருந்தாள் சித்ரா.ராஜ் தன்னிச்சையாக பேனாவால் பெஞ்சில் சித்ரா என்று எழுதியதை நான் சிறிதும் ரசிக்கவில்லை.

உணவு இடைவேளையின்போது ஒரு ஒழுங்கற்ற பயோ-டேட்டா தயார் செய்து கொண்டு சித்ராவிடம் சென்றான் ராஜ்."க்லாஸ்லயே அழகான பொண்ணுகிட்ட பயோ-டேட்டா வாங்கிவரச் சொன்னார் ஒரு ஸீனியர், ப்லீஸ் இத தரனும் இல்லன்னா எனக்கும் பிரச்சனை, ஒன்னையும் தொல்லை பன்னுவாங்க". சற்று தள்ளி நின்று வயிற்றெரிச்சலோடு பார்த்து கொண்டிருந்தேன்.ஆறு பந்துகளில் அரைச்சதம் அடித்த களிப்போடு திரும்பி வந்தான் ராஜ்.

பெயர் : சித்ரா சீனிவாசன்

வயது : 17

உயரம்: 5.4

முகவரி: நெ. 22, புதுப்படி சந்து , ஆண்டாள் வீதீ, திருச்சி - 2

படித்த பள்ளி: பாஸ்டன் மெட்ரிகுலேஷன், சென்னை.

பிடித்த நடிகர் : ஷாருக் கான்

இந்த விபரங்களைத் தாங்கிய தாளை கண்முன் ஆட்டினான், "எப்புடி நம்ம டெக்னிக்?". நான் வசிக்கும் பாபு சாலைக்கும், ஆன்டாள் வீதிக்கும் பாலம் கட்டும் பணியை மனதிற்குள் துவங்கினேன்.ராஜை அணிலாக்க முடியாது, எனக்கென்னவோ அவன் இராவணன் போல தோன்றினான்.முழு நான்கு வருடங்கள் இருக்கு பொறுத்திருந்துபெண்ணை அடைவோம்.

இரண்டு மூன்று மாதங்களுக்கு இருந்த ரேக்கிங் கெடுபுடிகள் கொஞ்சம் தளர்ந்தது.கல்லூரிப் பேருந்தில் பாடச் சொல்லி கேட்பார்கள், பத்து ஆபாச வார்த்தைகள் சொல்லக்கேட்டு மகிழ்வார்கள், நமக்கு தான் பத்தோடு நிறுத்திக்கொள்ள சற்று கடினமாக இருந்தது! எல்லாம் எங்கள் விருப்பமாகவும் இருந்ததால் ரேக்கிங்கை மகிழ்ச்சியாக ஏற்க துவங்கினோம்.பாடிப்பாடியே ராஜ் சீனியர்கள் மத்தியில் பிரபலம் ஆனான்.எனக்கென்னவோ அவன் பாடுவதற்கும் பேசுவதற்கும் அதிக வேறுபாடு தெரியவில்லை.அவன் கல்லூரியின் இசைக்குழுவில் சேர்ந்தது, என் சித்ரா கனவின் ஒரு சன்னல் மூடியதாகவே எனக்கு பட்டது.இதெல்லாம் ஒரு புறம் இருக்க நாங்கள் இருவரும் ஒன்றாகவே சுற்றித் திரிந்தோம்.

"வெல்கம் பார்ட்டி " என்ற சடங்கு முடியும்வரை சொல்லிக்கொள்ளும்படி சிறப்பாக ஒன்றும் நடக்கவில்லை.காரணம் அதுவரை பெண்களிடம் அதிகம் பேசக்கூடாது என்ற சீனியர்களின் கட்டளையே.வெல்கம் பார்ட்டி அன்று ராஜை சீனியர்கள் பாடச் சொன்னார்கள். அவனும் "பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக..." என்று சற்றும் சுருதியின்றி பாடி கைத்தட்டல்களைப் பெற்றான்.கடைசிவரை நீடித்த சித்ராவின் கைத்தட்டல் எனக்குள் கலவரத்தை ஏற்படுத்தியது.கில்லாடி தான் அவன், இவளுக்கு

பிடித்த ஷாருக் கான் பாடலைப் பாடி முதல் கல்லை எறிந்துவிட்டான். அவன் போல் எனக்கு தனித்திறமை எதுவும் இல்லை, ஆனால் அவனைவிட நான் படிப்பில் அக்கரை கொண்டதால் அதை வைத்தே காய்களை நகர்த்த முடிவு செய்தேன்.ரேக்கிங்க் பயம் விலகிய முதலாமாண்டு மாணவர்களில் பெரும்பாலானவர்கள் கண்ணாடி அணிந்து கொண்டார்கள்.எந்த விதமான கண் கோளாறும் இல்லாதபோதும் கண்ணாடி அணிவது மோஸ்தர்.குறிப்பாக விஜய் கண்ணாடி, அப்போது வெளிவந்திருந்த "கண்ணெதிரே தோன்றினாள்" பிரஷாந்த் கண்ணாடியும் மிகப் பிரபலம்.

ராஜ் மற்றும் சித்ராவும் சகஜமாக பழகினார்கள்.அவனிடம் சிரித்து சிரித்து பேசுவாள், என்னோடு பேசுவாள்! பெரும்பாலும் அவள், "ராஜ் எங்கே?","ராஜ்க்கு எப்போ பிறந்தநாள்?","ராஜ் வீடு எங்கே?" என்ற ரீதியில் அவனைப்பற்றியே தான் .ராஜின் நண்பன் என்ற முறையில் மட்டுமே அவள் என்னோடு பேசியது போல் இருந்தது. போதாக்குறைக்கு "ராசி" என்ற புனைப்பெயரில் கவிதை (என்ற பெயரில்!) எழுதலானான் ராஜ்.புனைப்பெயரில் அவர்களிருவரின் முதல் எழுத்தும் சேர்ந்திருந்தது என்னை மேலும் கலவரமாக்கியது.என்பெயரையும் அது போல் முயற்சி செய்து பார்த்தேன்,அருவருக்கத்தக்க வழுக்கும் பொருளாக அது அமைந்ததில் எனக்கு கொஞ்சம் வருத்தம் தான் ஆகவே அந்த முயற்சியை கை விட்டேன்.வெறும் புனைப்பெயரை வைத்துக்கொண்டு என்ன செய்வது?

சின்ன சின்ன கற்களாக போட்டுக் கொண்டிருந்தவன் அன்று ஒரு மலைக்கோட்டையே தூக்கி போட்டான்.எரிமலையாய் உள்ளுக்குள் சிதறிக் கொண்டிருந்தேன்.

"எவ்வளவு நாளைக்கு தான் , ஒன் சைடா லவ் பன்றது, இன்னிக்கி சொல்லி டபுள் சைட் ஆக்கப் போறேன்". எச்சில் விழுங்கி கொஞ்சம் எரிமலையின் சூட்டை தணித்து கொண்டபடி, "ராஜ் ,லவ் என்ன ஆம்லெட்டா?ஒன் சைட் , டபுள் சைட்ன்னு சொல்ற? ", அதாவது இந்த காதல் கத்திரிக்காய் கசுமாலம் இதிலெல்லாம் சிறிதும் ஆர்வம் இல்லாதது போல் சொன்னேன்.படுபாவி உண்மையிலேயே கல்லூரி மைதானத்தில் வைத்து சொல்லி விட்டான்.இதைக் காண பொறுக்காமல் ஒரு மரத்துக்கு பின் மறைந்து நின்றேன்.அவள் பதில் என்னவென்று தெளிவாக தெரியவில்லை ஆனால், ராஜ் என்ற ராசி, விரக்தியோடு திரும்பி வந்தான்.எனக்கு உள்ளூர மட்டற்ற மகிழ்ச்சி, பின் ஒரு கவலை,"எனக்கும் இந்த விரக்தி தான் மிஞ்சுமா?"

மண்டல பொறியியல் கல்லூரியில் ஒவ்வொரு வருடமும் நடக்கும் ஃபெஸ்டம்பர் கலை நிகழ்ச்சிக்கு எங்கள் கல்லூரிக்கும் அழைப்பு வந்தது.சித்ரா பாடுவதற்கு பெயர் கொடுத்திருந்தாள், எவ்வளவோ எல்லோரும் வற்புறுத்தியும் ராஜ் பாட சம்மதிக்கவில்லை. இதையறிந்த பல நாட்கள் ராஜுடன் பேசாமலிருந்த சித்ரா "ராஜ் நீ பாடனும், இல்லேன்னா நானும் பாடலை".

"பாடறேன் சித்ரா, ஒனக்காக பாடறேன், ஒன்னை பத்தி தான் பாடுவேன் " அன்று அவன் எறிந்தது கடைசிக்கல் அல்ல, கூரான அம்பு.நிகழ்ச்சியன்று ராஜ் தான் முதலில் பாடினான்,பாடலுக்கு இடையில் வரும் வரிகளான "காமங்கள் ஒன்றே என் காதல் அல்ல கண்டேனே உன்னைத் தாயாக", என்று அர்த்ததோடு சித்ராவைப் பார்த்தான்.அடுத்து பாடிய சித்ராவும், "ராசாவே உன்ன நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுய்யா.." என்று தன் சம்மதத்தை சொல்லி விட்டாள்,அளவில்லா சந்தோஷத்தில் அவர்கள் இணைந்து பாடிய அடுத்த பாடல் "வா வா அன்பே அன்பே,காதல் நெஞ்சே நெஞ்சே". முடிந்தளவு மோசமாகப் பாடி, மேடையை விட்டு இறங்கினார்கள் அல்லது ஆரவாரம் செய்து இறக்கிவிடப்பட்டார்கள்.

அழகான சித்ராவுக்கு அறிவில்லாமல் போனதே என்று வெம்பினேன்.எனக்கு ஆசை விட்டு போனது, இருந்தாலும் நப்பாசை மிச்சமிருந்தது. "ஊர்ல யாரும் முறைப்பையன் இருந்தாதான் பிரச்சனை, இவனதான லவ் பன்றா, எப்போ வேணும்னாலும் இத உடைக்கலாம்" என்று மனதை தேற்றிக் கொண்டேன். எனக்கு என் எண்ணத்தை நினைத்து கேவலமாக தோன்றவில்லை! ராஜ் தான் பாட்டுப் போட்டியில் தோள்வியடைந்தாலும், காதலில் வெற்றி பெற்றதை சொன்னான்."அவளுக்கு எங்கே போச்சு அறிவு? என்னவோ இவனே பாட்டெழுதி மெட்டமைச்சா மாதிரி, ச்ச சுலபமா சிக்கிட்டாளே" என்று நொந்தேன்.

அவன் காதலைக் கொண்டாடும் விதமாக ராஜ், சித்ரா மற்றும் நான் ஹோடலுக்கு போனோம். நாங்கள் சென்றது , "தி கிரேட் ரகுநாத்" . அங்கு சித்ராவிடம் பேச எதுவும் இல்லாததால், " அசைண்மெண்ட் எழுதியாச்சா?" என்று உப்பு சப்பில்லாமல் பேசினேன், ஆனால் மனதிற்குள் "ஆமாம் இவ அசைண்மெண்ட் எழுதினா என்ன ஆயின்மெண்ட் போட்டா என்ன? :-(". நான் அப்படி பேசியது அவளுக்கு பிடித்திருந்தது விசித்திரம்.அவள் பாடங்களில் சந்தேகம் கேட்க, நானும் ஒன்றுமே தெரியாத போதும் துணிந்து கதை அளந்தேன்."ஆரம்பிச்சிட்டியா டா நீ? சரியான சொம்பு" என்றான் ராஜ்."சும்மா இரு ராஜ், நீ வேஸ்ட்டு அவனப் பாரு எவ்வளவு, டீப்பா தரோவா படிச்சிருக்கான்னு" அன்று எனக்காக பரிந்து கொண்டாள், ஆஹா, மூடிய சன்னலில் சன்னமாக ஒரு ஓட்டை, அதன் வழியே மெல்லிய காற்று வருவதால் சற்று ஆறுதல் அடைந்தேன் ,அவள் அதை சொல்லும்போது அவன் காதை கிள்ளியதை மனக்குறிப்பிலிருந்து நீக்கியவாரே.எல்லாம் முடிந்து ராஜ் வீட்டிற்கு போனோம் நானும் ராஜும், அங்கு அவன் அப்பா "ஏன்டா ராசு, பில்டிங்க் ஃபீஸ் கட்ட பணம் வாங்கினியே, கட்டியாச்சா?" என்று கேட்கும்போது,ரகுநாத்தில் சாப்பிட்ட நவரத்தின குருமா எனக்கு ஏப்பத்தை தந்தது.

கார்டுகள் இல்லயேல் காதலின் சாதல் என்பது போல், அவர்களின் காதல் காகித அட்டைகளில் பதிக்கபட்டு, பரிமாறிக்கொள்ளப்பட்டது."ஆர்ச்சீஸ்" என்ற கடைக்கு என்னையும் அழைத்து செல்வான்,ஹேப்பி சன்டே, ஹேப்பி மன்டே என்று ஏதாவதொரு டே இவர்களுக்கென்று கிடைத்ததுதான் கொடுமை.இவர்கள் காதலுக்கு உறுதுணையாக இருந்த இரண்டு தோழிகள் ஆற்றிய அரும்தொண்டுகள் எண்ணிலடங்கா.இருவரும் அவளோடு வருவார்கள், நானும் மாப்பிள்ளைத் தோழன் போல் உடனிருப்பேன். சிறிதும் கூச்சமின்றி மூக்கு முட்ட சாப்பிடுவார்கள்.அதற்கான பயன் நிச்சயம் இருந்தது, "ஸ்பெஷல் க்லாஸ்" என்ற நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க பொய்யை சொல்லி சித்ரா வெளியில் வர உதவியாக இருப்பார்கள்.சாப்பிட்டு விட்டு இவர்களை கொஞ்சம் சொறிந்து விட வேண்டும் என்பதற்காக தோழிகளில் ஒருவள்,"பாத்துடீ, ரொம்ப செலவு செய்யறார் ராஜ், கொஞ்சம் பிரீதிக்கும் சேத்து வைங்க" என்று சொல்லி விட்டு கார்ட்டூன் பார்த்தவள் போல் அப்படி சிரிப்பார்கள்.சித்ரா வெட்கப்பட ஒரு முறை விளக்கினான் ராஜ் "பிரீதி எங்க குழந்தையோட பேருடா".

நான் "ஸூப்பர் ஸூப்பர்", மனதிற்குள் "கருமம் கருமம்".

சித்ராவும் ராஜும் என் வீட்டிற்கு வருவார்கள், சித்ரா படிக்க வருவாள், ராஜ் வரும் காரணமும் அதை விட அவன் வருவதே எனக்கு ஒப்பவில்லை.ஒரு நாள் சித்ரா மட்டும் வந்தாள். ராஜ் உடன் இருந்தால் அவனே சித்ராவின் முழு கவனத்தையும் கவர்ந்து விடுவான், என்னை சைட் டிஷ் போல உபயோகிப்பான்.சித்ரா வழக்கத்தைவிட உம்மென்றிருந்தாள். இஷ்டமில்லை என்றாலும் கேட்டுத் தொலைப்போமென்று "ராஜ் வரல?"."அவன பத்தி பேசாத, எனக்கு அவனுக்கும் ஒன்னும் இல்ல இனிமே", "ரமா கஃபே"யின் புதன் கிழைமை பாஸந்தி போல் இனித்தது வெளிக்காட்டாமல் தொடர்ந்து அவள் சொன்னதைக் கேட்டேன்,"என் ஃப்ரெண்ட் வருவா இல்ல, பிரியான்னு, அவளோட ராஜ் சினிமா போனது எனக்கு தெரிஞ்சு போச்சு, அவன் கிட்ட கேட்டா இல்லன்னு பொய் சொல்றான், ரொம்ப சீப் அவன்.". இதை பற்றி பேசி அவள் மனதில் ராஜிற்கு முக்கியத்துவம் வளர நான் விரும்பவில்லை.அவன் பொய் சொன்னதால் இவளுக்கு கோபம் அது போதும் எனக்கு.எங்களுக்கிடையில் அவன் வருவதில்லை. ராஜ் முன்பு போல் என்னோடு பேசுவதில்லை,விரோதமும் பாராட்டவில்லை.அவளுக்கு கோபம் குறைய கூடாதென்பதால், ஒரு முறை அந்த பிரியாவையும் இவனையும் பைக்கில் பார்த்ததாக சொல்லி வைத்தேன்.

கேட்காத கேள்விக்கும் பதில் சொல்லி வந்த ராஜ், இப்போதெல்லாம் கேட்ட கேள்விக்கு கூட பதில் சொல்லாத அளவுக்கு அமைதியானவன் ஆகிவிட்டான். திருச்சியில் "சௌக்" என்று பழைய புத்தகங்களை,ஏமாந்தால் இரண்டு மடங்கு விலைக்கும், சுதாரித்துக்கொண்டால் பாதி விலைக்கும் விற்கும் இடம் உண்டு.அதை புத்தகங்களின் சரணாலயம் என்றே சொல்லலாம்.என் பேரம் பேசும் திறமையால் பத்தில் ஒரு பங்கு விலை கொடுத்து சில ஆங்கில புத்தகங்களை வாங்கி எப்போதும் உடன் வைத்திருப்பேன்.என்னை ஒரு ஞானி போல்,அறிவாளி போல் காட்டி கொள்வதில் கவனம் செலுத்தினேன்.சித்ராவும் என்னை நம்பினாள்!

ஒரு நல்ல நாள் பார்த்து என் காதலை சொன்னேன்."சித்ரா,எல்லா பசங்களும் ஒரே மாதிரி கிடையாது,உனக்கு என்னை பிடிச்சிருக்கா? இல்லேன்னா எப்பவும் போல ஃப்ரெண்ட்ஸா இருக்கலாம்".

"இப்போதைக்கு எனக்கு படிப்பு தான்" என்று அவள் சுறுக்கமாக முடித்து கொண்டாலும், ஒரு மணி நேரம் கழித்து,"தெரியல, எனக்கு என்ன செய்யனும்னு தெரியல, ஆனா நான் தப்பு பன்னலைன்னு தான் நினைக்கிறேன், ஆனா பயமா இருக்கு" என்றாள்.பல முறை அவள் சொன்னதை கிரகித்துக் கொள்ள முயற்சி செய்து தோற்றேன்,குழப்பத்தில் இருக்கிறாள் என்பது எனக்கு புரிந்தது.

நம் முன்னோர்களும் , கோடாணுகோடி தேவர்களும், பூத்தூவி வாழ்த்தும், ஃபெப்ரவரி பதினான்காம் தேதி, பச்சை கொடி காட்டினாள் என் காதலி சித்ரா.எனக்கு ஒரு காதலி இருக்கிறாள் என்ற உணர்வே ஒரு தெம்பை கொடுத்தது, அவளுக்கு பிடிக்காத மீசையை எடுத்தேன், "ரசிக ரஞ்சன" சபாவில் மிருதங்கம் கூட கற்றுகொள்ள ஆரம்பிக்கலாம் என்று யோசித்தேன், "முல்லை தியேட்டரில்" படம் பார்ப்பதில்லை என்று உறுதி மொழி எடுத்தேன்.

கல்லூரியில் தென்படாத ராஜை "லூர்து சாமி" பார்க்கில் கிரிக்கெட் ஆடப் போகும்போது பார்ப்பேன். ஒரு பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு எதையோ எழுதிக் கொண்டிருந்தான் ‘ராசியில்லா ராஜ்’.அவன் செய்த தவறால் தான் சித்ரா அவனை விட்டு விலகினாள் என்று என் குற்ற உணர்ச்சிக்கு சமாதானம் செய்து கொண்டேன்.

இப்படி நடக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை

என் காதல் பராக்கிரமத்தை பறைச்சாற்றும் விதமாக என்னுடன் கிரிக்கெட் ஆடும் நண்பன் கிஷோரை பட்ம பழமுடிர் சோலைக்கு வரச் சொன்னேன். நானும் சித்ராவும் முன்னமே ஆஜர்.அங்கு உட்கார்ந்திருக்கும்போது சித்ரா கேட்டாள் "வர்ஷா பேரு எப்படி இருக்கு?அது தான் நம்ம குழந்தைக்கு பேர்".இம்முறை ஏனோ கருமம் கருமம் என்று நான் நினைக்கவில்லை. காதலிக்க தொடங்கியதுமே தங்கள் குழந்தைக்கு பெயர் சூட்டுவது ஒரு அடிப்படை உரிமை அல்லவா?

கிஷோரும் வந்து விட்டான், அசந்து விட்டான் என் சித்ராவைப் பார்த்து.

இப்படி நடக்கும் என்று நானும் எதிர்பார்க்கவில்லை

கைரேகைப் பார்க்கத் தெரியும் என்று பீலாவிடும் நண்பர்களிடம் காதலியை அறிமுகபடுத்த கூடாது போலும்.கிஷோர் -நண்பனா அவன்? துரோகி

லூர்து சாமி பார்க்கில் ராஜுக்கு நான்கு பெஞ்சு தள்ளி நான் அமர்ந்திருக்கிறேன், நானும் கவிதையெல்லாம் எழுதறேன், ஒன்னு கேளுங்களேன்

கண்ணே படி தாண்டாதே

கல்லரையில் இடமில்லையாம்

உன்னைக் காதலிக்க வரிசையில் பலர்!

இரண்டு பெஞ்சுகள் தள்ளியுள்ள பெஞ்சில் கிஷோர் என்று செங்கலால் எழுதி அவனுக்கு இடம் பிடித்து வைக்க தவறவில்லை.

*டிஸ்கி: இக்கதையில் வரும் கதாபாதிரங்கள் யார் யாரென்று தெரியும்வரை, அவையெல்லாம் கற்பனையே யாரையும் குறிப்பிடுவன அல்ல.