Thursday, July 25, 2013

மண‌ல் வறுவல்களின் பொற்காலம்


ப்ச் (PS):புரிந்துக்கொள்ளல்திறனை (Understanding ability) உத்தேசித்து சில இடங்களில் ஆங்கிலத்தில் மேற்கோள்/ஸைடுகால் வாங்கியுள்ளேன்.




பொன் வறுவலாக என்ப‌தெல்லாம் கற்காலம் என்று வியக்கும்படி இன்று மண் வறுவல்களின் பொற்காலம் .அண்டசராசர அளவில் மாபெரும் கண்டுபிடிப்பாக அறியப்படும் , இலக்கமுறை மோப்பக் கருவியின் (Digital Sniffer Device) செயல்பாடு, அதன் பின்னால் உள்ள சமூகப் பார்வைகள் , அனுகூலங்கள் , அஷ்டகோணங்கள் (Octal Dimensioning) எல்லாவற்றையும் பற்றி அமெரிக்காவின் , பாஸ்டன் எம்.ஐ.டீ பல்கலைக் கழகத்தில் நான் தமிழில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்.



DSD: பிறந்த கதை , செயல்பாடுகள் குறித்து, எளிய முறையில் பார்ப்போம்.



மனிதனைவிட நாய்களுக்கு நுகரும் தன்மை அதிகம் என்பது கல் தோன்றி மண் தோன்றா காலத்தே , சொல்லப் போனால் நாய்கள் தோன்றும் முன்னரே நமக்கு தெரிந்தது தான். சராசரியாக ஒரு நாய்  இருணூறு கோடி நாசி மோப்பம் வாங்கிகள் (Nasal olfactory receptors) கொண்டது.இராம நாரயண‌னின் வளர்ப்புகளுக்கு அதன் எண்ணிக்கை பதினைந்து முதல் இருபத்தி இரண்டு விழுக்காடு அதிகம்.

*அதாவது ஒரு வாங்கிக்கு ஒரு ரூபாய் என்ற சராசரி விலைக்கு அவைகள் விற்கப்பட்டால் , ஒவ்வொரு நாயும் , கலைஞர் டீவியில் பங்குதாரர் ஆகலாம் என்றால் அதன் எண்ணிக்கையின் பிரம்மாண்டம் நமக்கு புரியும்.

ஒரு தொட்டித் தண்ணீரில், ஒரு துளி பீர் கலந்தாலும், மீதியைக் கண்டு பிடித்து குடிக்காமல் விடாது.மனிதனுக்கு அந்த திறன் இல்லாது போனாலும், நாய்களையும் ,நாய்களின் தனித் தன்மையை பயன்படுத்திக் கொள்ள ஒருபோதும் தவறியதில்லை. இல்லாவிட்டால் வசை சொல்லுக்கு மேலை நாடுகளில் பிட்ச் என்றும் , கீழை நாடுகளில் நாயே , பட்டி, குத்தா ... என்றும் அதன் புகழ் உலகம் முழுவதுமாக‌ விரவியிருந்திருக்காதே!



ஆகவே ஒரு நாயிடம், அதை போன்ற கலவைத் தண்ணீரை மோப்பம் காட்டி , அண்டை வீடுகளில் யார் வீட்டில் இந்நேரம் பாட்டில் கிடைக்கும் என்பது போன்ற தகவல்களை பெற முடியும்.ஆனால் இதில் பல நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன.

-> நாம் மேலே குறிப்பிட்ட நாய் , மற்றும் அண்டை வீட்டில் வளரும் நாய்களின் நட்பு மற்றும் , பாலுணர்வு சம்பந்தப்பட்டது.இதனால் தலையீட்டு சமிக்ஞைகள் (Interference Signals) ஏற்பட்டு நமக்கு நாக்கு வரண்டு போகும் பேராபத்துக்கும் வாய்ப்பு உள்ளது.



->  நாற்ற அலையின் அதித்தீவிர அதீத கவன குவிப்பு (Aromatic Concentration) அதிகம் உள்ள இடத்திற்கு தான் நாய்கள் செல்ல முயற்சி செய்யும். அதாவது பக்கத்து வீட்டில் உள்ள மினி பியரை விட ,அது மதுபானக் கடையிலிருந்து வெளிபடும் நாற்ற அலை அதிகமாக இருக்கும் பட்சத்தில், நம்மை தரதரவென்று இழுத்து சென்று , டாஸ்மாக் வாசலில் நிறுத்தி "மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லு " என்பது போல் நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு மூச்சு வாங்கி நிற்கும். நாய்க்கு சைட் டிஷ்ஷும் , காசு கொடுத்து வாங்கிப் போட்டு , பின் வைத்திய செலவும் செய்ய சாமானியர்களின் பொருளாதாரம் இடம் கொடுக்காது.ஆகவே இதையும் நாம் ஆலோசிக்க வேண்டும்.
மேல் கூறிய மிக முக்கியமான ‌ இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வாக "மரபணு பொறியியலும்" ,"மின்னணுவியல்" தொழில்நுட்பமும் இணைந்ததன் விளைவு தான் இந்த அதி அற்புத கண்டுபிடிப்பு.

விந்தையான‌ ப‌ல‌ மின்ன‌ணுக் க‌ருவிக‌ள் ப‌ல‌ இருப்பினும், ராஜபளையம்  நாய்க‌ளின் விந்தையும் , சில‌ அரை கடத்திகள்(semi conductors),ம‌ண‌ல் வ‌றுவ‌ல்க‌ளையும்(Silicon Chips) ர‌சாய‌ன வைத்திய முறையில் (Chemical Treatment process) ஒன்று ப‌டுத்தி(Amalgamation) [எப்படி என்பதை விரிவாக, பின்னால் வரும் பகுதிகளில் பார்க்கலாம்],விஞ்ஞான உலகை புரட்டி கொத்தி கைமா செய்துவிட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது.

ராஜபளையம் நாய்களுக்கு , முப்பது கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும் , அது பொரித்த புரோட்டா என்றால் "பர்மா கடை புரோட்டா" என்பதை நொடியில் கணித்து, வடக்கே விருதுநகரை நோக்கி ஓடவும், வீசப்பட்ட வீச்சு புரோட்டா பொட்டலத்தை பிரித்தால், சிலோனை நோக்கி பாயவும் தனித் திறன் கொண்டது என்பதையும் கவனிக்கவேண்டும்.

இந்த கண்டுபிடிப்பை அடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்ற பெருமை
வில்பர் தேவராஜ் (இவருக்கு பூர்விகம் மதுரை மாவட்டம் என்பது நமக்கு கூடுதல் பெருமை)மற்றும் ராபர்ட் சுஷ்வாக்ரே*.

*ராபர்ட் சுஷ்வாக்ரே: சுவீடன் நாட்டை சேர்ந்தவர் "Camel" என்ற தலைப்பில், வெண் பக்கங்களைக் கொண்ட‌ "ஒரு கொயர் நோட்டுகள்" வெளியிட்டவரும் இவரே.

இந்தக் கருவியில் , சிட்டுகுருவியின் விந்தணுக்களை செலுத்தி குற்றத் தடுப்பு கருவியாக மற்றி சாதனை படைத்தனர். இது நடந்தது கி.பி.2013.
இதன் பயன்பாடு , செயல்பாடு எல்லாம் சற்று உயர் மட்டத்தில் (High Level) பார்ப்போம்.
சுருக்கமாக சொன்னால், எப்படி கண்கருவிழி, மற்றும் விரல் ரேகை ஒவ்வொருவருக்கு வேறுபடுகிறதோ அதைப் போல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விசேஷமான நறுமணம் (Characteristic Odor) இருக்கிறது என்பது தான் இந்த அற்புதத்தின் சாவி காரணம்.அந்த வாசனையை (அதை டாக்டர். வில்பர் தேவராஜ் 'கப்பு' என்று குறிப்பிடுகிறார்) நுண்செய்திகளாக்கும் "கப்சிப்" என்ற சிப் மூலம் சேகரித்து அதை தரவு தளத்தில் பத்திரப்படுத்தப்படுகிறது.
அந்த மிண் சமிக்ஞைகளை (electronic signals ) "கப்புக்கு சிக்கான் சிக்" (Characteristic odor Silicon Signals )என்றும் சுருக்கமாக அழைக்கப்படுகிறது.கப்சிப் விண்வெளிக் களண்ளோடு தொடர்பில் இருப்பதால், ஒருவர் எந்த ஜவ்வாது, அல்லது மல்லி செண்ட்டு , போட்டாலும், எங்கு சென்றாலும் நொடி நேரத்திற்கும் குறைவாக சிட்டுகுருவியின் சுறுசுறுப்போடு குற்றவாளிகளைப் கண்டு பிடிக்க முடியும்.இது சக்தி மசாலா, ஆச்சி மசாலா முதலிய‌ மிளகாய்த் தூள் கம்பனிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுதினாலும் , திருடர்களுக்கு இந்த கருவி சிம்ம சொப்பனமாக இருக்கும் என்று அகில உலக வேதியியல் காங்கிரஸின் துணைத் தலைவர் 'அக்குள் காந்தி' உறுதிபட தெரிவித்துள்ளார்.இந்த கருவியின் அராய்ச்சி தொடங்கிய காலகட்டம் ஏறக்குறைய கி.பி. 2000 ஆம் ஆண்டிலிருந்து துவங்கியிருக்கிறது என்பதையும் பல அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள்.சிட்டுக் குருவிகள் அதிக அளவில் அழிய இது ஒரு முக்கிய காரணம் என்று பெங்களூரு "யாகவா யுனிவர்ஸிட்டி ஆஃப் ஸ்பேரோ சைண்ஸ் " கவலை தெரிவித்தது. பிரதமருக்கு புறாக் காலில் புகார் அனுப்பியது இன்னும் கிடப்பில் இருப்பது என்பதையும் கவனிக்க வேண்டும்.


இந்தியாவில் ஏற்கனவே சில நிறுவனங்கள் (மெண்டல் , என்ன வூடுயா‌,லேஸ் , ஹாட் சிப்ஸ் ) ஒருமித்து ,சோதனை அடிப்படையில் சில முன்னேறங்களை செய்துள்ளன.இதனால் சில தொண்டு நிறுவனங்களும் (ப்ளூ கிராஸ்) , அரசியல்வாதிகள் , தொழிலதிபர்கள் (பெரும்பாலும் கேரளாவை சேர்ந்த நேந்திரம் சிப்ஸ் அதிபர்கள்) சில எதிர்மறையான கருத்துக்களை முன் வைத்திருக்கிறார்கள்.மணல் கொள்ளை இனி அரசு துணையோடு நடக்கும் . லாரிகளில் மட்டும் அல்லாமல் , கப்பல்கள்/எலிகாப்டர்கள் கொண்டு மணலையும் , நாய்களையும் கடத்த பன்னாட்டு நிறுவனங்கள் ரகசிய ஒப்பந்தமும் போட்டிருப்பதாக "சுப்ர ஹோ மண்ணிய‌ சுவாமி" ச‌ர்ச்சையை கிள‌ப்பி உள்ளார்.


நாய் வண்டி சத்தம் கேட்டால் நான்கு கால் பாய்ச்சலில் ஓடிய நாய்கள் இனி எலிகாப்டர் ஒலிக்கு எங்கே ஓடி ஒளியும்?



'விஞ்ஞானி' பரத் ஷேரி

New York Times (நியூயார்க் - எல்லாம் என் நேரம்)
.