Wednesday, April 18, 2012

முதல் படி




தாத்தாவுக்கு ஆரம்பத்திலிருந்தே அதுல இஷ்டம் இல்லை . "நீ ரொம்ப அவசரப்
படறியோன்னு தோன்றதுடா கோபாலா"ன்னார்.ஊர் உலகமே என்னை ஸ்டைலாக வினய் என்று
அழைக்கும்போது இவர் மட்டும் என்னவோ கோபாலா என்று அழைப்பது கூடத் தான் எனக்கு
இஷ்டமில்லை. "இன்னும் நாலு வீடு பாரு; இப்போ வீடு வாங்க என்ன அவசரம்?ஒனக்கு
இன்னும் வயசு இருக்கு , நிதானமா வாங்கிக்கலாமே" என்றார்.கீழ்கட்டளையில் வெறும்
ஒன்பது லட்ச ரூபாய்க்கு இனி ஒருக்காலும் வீடு வாங்க முடியாதென்பதை அவருக்கு
எப்படி புரிய வைப்பது? மாதாந்திர கடன் தொகை வெறும் ஏழாயிரத்து சொச்சம் தான்.
அதே வீட்டுக்கு வாடகை கொடுத்தால் எப்படியும் ஐயாயிரம் ரூபாய் ஆகும், தவிர
வருமான வரி விலக்கு எப்படியும் இரண்டாயிரத்திற்கு மேல் கிடைக்கும். கூட்டி
கழித்து பார்த்தால் இதைவிட நல்ல இடம் நமக்கு கிடைக்காது என்பது என் கணக்கு.

வீடு பார்க்கப் போகும் வரை உற்சாகமாக இருந்தவர் , வீட்டை பார்த்து விட்டு
திரும்பி வரும்போது ஏற்கனவே  அரை அடி நீளம் கொண்ட தாவாங்கட்டையை மேலும் நீட்டி
தொப்புள் வரை தொங்கப் போட்டுக்கொண்டு வந்தார்.இப்போதெல்லாம் அவரை எனக்கு
பிடிப்பதே இல்லை, முன்பும் அவரை எனக்கு பிடித்ததாகவும் நியாபகம் இல்லை., நான் ஆறாவது படிக்கும்போது அவர் சேர்த்துவிட்ட ஸ்லோக க்லாசில் ஒரு பரீட்சை வைத்தார்கள்.அவர் சேர்த்துவிட்ட ஒரே காரணத்தினால் ஃபெயிலானேன்.அதற்காக கடுங்கோபம் கொண்டவர் "நான் உனக்கு தாத்தாவும் இல்லை, நீ எனக்கு பேரனும் இல்லை. நான் இதுவரைக்கும் எந்த டெஸ்ட்டுலையும் ஃபெயிலானதே இல்லை" என்றது இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது.இப்போ போல் இருந்தால் சொல்லியிருப்பேன் "DNA டெஸ்ட் ஃபெயிலானா மாதிரி ஏன் கத்தறேள்?HIV டெஸ்ட்டுல கூட நீங்க பாஸா?". எல்லா
 விஷயத்திலும் அவர் தலையீடு அதிகமாக இருக்கிறது.அப்பாவும் அவருக்கு ஒரே பிள்ளை
என்பதால் கடைசி வரை அவரை கூட வைத்துகொள்வதை தவிர்க்க முடியாது.அவர் பேச்சை
எந்த காதிலும் வாங்காமல் வீட்டை வாங்கிவிட்டேன்.அவர் வேண்டாம் என்று சொல்லச்
சொல்ல மிக தீவிரமாக செயல்பட்டு வெகு சீக்கிரமே எல்லா வேலையையும்
முடித்தேன்.ஒரு வழியாக கணபதி ஹோமம் முடித்து , பால் காய்ச்சி குடித்து ,
உற்றார் உறவினர்களின் வயிற்றெரிச்சல் எல்லாம் நல்ல விதமாக தொடங்கி ,
குடிப்புகத் தயாரானோம்.

இருபத்தாறு அங்குலத் தொலைகாட்சி பெட்டியை முதல் மாடிக்கு ஏற்றும்போது அவரையும்
அழைத்து சென்றது ,கிழட்டு பூனையை மடியில் கட்டிக்கொண்டு சகுனம் பார்த்தது போல்
ஆகிவிட்டது.அந்த குறுகலான மாடிப்படி திருப்பத்தில் அதை திருப்ப மிகவும்
சிரமப்படும்போது வழக்கம் போல் ஆரம்பித்து விட்டார். நானும் என் ஆஃபீஸ்
நண்பனும் படாதபாடு பட்டுக்கொண்டிருக்க "நான் தான் அப்பவே சொன்னேனே,
வேண்டாம்னு, நாலு காசு பாத்தாச்சுன்னா, நீங்கள்ளாம் பெரியவாளாயிடறேள்.. ஒரு
சாமானையும் மேல ஏத்த முடியல... அவ்ளோ தான் எல்லாத்தையும் நடு வீதில வெச்சிக்க
வேண்டியது தான் ...".எனக்கு மிக சீராக கடுப்பு கிளம்ப , தொ.கா.பெ யை  தொடையில்
தாங்கியவாறே, "தாத்தா ஒங்க சாமானெல்லாம் பத்திரமா இருக்கோனோ?" என்றேன் பல்லைக்
கடித்துக்கொண்டு.என் நண்பன் சிரிக்க தொ.கா.பெ சரியவிட்டு பின் சமாளித்துப்
பிடித்தோம்.

கட்டில் , பீரோ எல்லாம் மேலே ஏற்ற நான் பட்டபாடு , கனவில் கணக்கு பரீட்சை
வருவது போல் இன்றும் என்னை மிரட்டுகிறது.நான் படும் சிரமத்தைப் பார்க்கவென்றே
என்கூடவே இருந்து ஏதாவது நொட்டை சொல்லுவார்."அப்படி கஷ்டப்பட்டு மேல ஏத்தி,
படி வலைவுல ஒடைக்கறதுக்கு, கீழியே வெச்சு ஒடைக்கலாமே, ஒரு வேலை மிச்ச்மாச்சே"
என்பார் நான் பதிலுக்கு "சாதமா சாப்டாம , ஜீரணம் ஆனதையே  சாப்டாகூட வேலை
மிச்சம்" என்பேன். அப்பாவின் முகத்திற்காகப் பார்ப்பேன். அப்பாவும் அவர் செய்ய
முடியாததை நான் செய்வதால் மறைமுகமாக எனக்கு பச்சைக் கொடி காட்டுவதாகத் தான்
எனக்கு தோன்றுகிறது ,ஆனால் அவர் முன்னிலையில் வரம்பு மீற முடியாது.உண்மையிலேயே
அவர் சொன்னதுபோல் ஒரு பழைய மர அலமாரி கீழே வைத்து அதை சின்னதாக ஒரு செருப்பு
வைக்கும் அலமாரியாக மாற்றினோம்.இப்படியே பல பொருட்கள் மாடிப்படி வலைவின்
தயைக்கு ஏற்றார்போல சுருங்க,  "நான் தான் அப்பவே சொன்னேனே" என்ற குரல்
துரத்தத் துரத்த ஒரு பாடாக எல்லாம் முடிந்தது.

தண்ணீர் பற்றாக்குறை, வாகன நிறுத்த சண்டை , சாக்கடை பிரச்சனை என்று எந்த ஒரு
பிரச்சனை வாந்தாலும் , அந்த பிரச்சனையை விட இவர் எள்ளல் தான் எனக்கு மேலும்
உஷ்னத்தை மூட்டும்.வேலை முடிந்து வீடு திரும்பும்போது நிச்சயம் ஒரு புகாரோடு
தான் இருப்பார்."இன்னிக்கி கக்கூஸ் அடைச்சிண்டு , போகவே இல்லை , கடைசில பாத்தா
, குழாய்குள்ள ஒரு வண்டி சிமெண்ட் கலவை கிடக்கு, வீடு கட்டினவன் லட்சனம்
அப்படி , வாங்கினவன் லட்சனம் இப்பிடி. உனக்கு எவனோ கடன் தர்றன்னு வீட்ட
வாங்கிடுவ , நீ ஆஃபீஸ் போய்ட்டு வெறுமன தூங்க மட்டும் தான் வருவ ,
இருக்கறவாளுக்கு தான கஷ்டம் தெரியும்".

"நன்னா பாத்தேளா தாத்தா? அது சிமெண்ட் கலவை தானா?" , "ஏன்டா பாத்தவன் என்ன
முட்டாளா?" என்று இரைந்தார். அவர் கேள்விக்கு ஆமோதிப்பதாக தலையை ஆட்டி
"அதுக்கில்ல, அம்மா நேத்திக்கி நாப்பது அடையும் , பெரிய அடுக்கு நிறைய
அவியலும் பண்ணதா சொன்னா, நான் வரும்போது காலி பாத்திரம் தான் மித்தத்துல
இருந்துது அதான் கேட்டேன்".சின்ன வயதில் என்னை அவர் அடிக்கடி "நன்னா
கொட்டிக்கோ" என்று சொன்னதற்கு இதைதவிர பழி வாங்க எனக்கு நல்ல சந்தர்ப்பம்
கிடைக்காது.நடுகூடத்துல கக்கூச கட்டி வெச்சிருகான் "அதுல உக்காந்தா கீழ்
வீட்டுல இருக்கறவன் பாக்கறானோன்னு பயமா இருக்கு. பிரைவசிங்கற நாமதேயமே
இல்லையே"."அப்புடி அவா பாத்தா , வீட்ட ராத்திரியோட ராத்திரியா காலி பண்ணிண்டு
போயிடுவான் கவலையே வேண்டாம் உங்களுக்கு. பொழுதன்னைக்கும் அங்கியே ஏன்
இருக்கேள்?" என்ற ரீதியில் ,அந்த திருத்தலத்தை சுற்றியே வந்து கொண்டிருந்த
எங்கள் சண்டை வேறு தளத்திற்கு தாவும் ஒரு தருணம் வந்தது.

(இரண்டாம் படியில் சந்திப்போம்)
.