Wednesday, April 20, 2011

மாயவலை - (முடிந்து தொலைந்தது)


மாயவலை - 1
டிரிங்க் என்ற சத்தம் கேட்டு விழித்தேன்.நான் இப்போது தோட்டத்தில் .ரோஜாத் தோட்டத்தின் எழிலுக்கு சிறிதும் தொடர்பில்லாமல் ஒரு வெப்ப அலை என் மீது வீசியது. "ஸ்கேனிங்க் ஃபார் வைரஸ்" என்ற எழுத்துக்கள் என் தலைக்கு மேல் மின்ன நான் ஸ்கேன் செய்யப் பட்டேன்.ஸ்கேன் முடிந்ததும் என் மீதான வெப்பம் குறைந்தது. நான் .EXE என்ற அமைப்பில் காப்பாற்றப் பட்டேன் இல்லை சேமித்து வைக்கப் பட்டேன் கோப்பாக.


இதென்ன விபரீதம் என்று பதறியபடி இருக்க இன்னும் சிலர் , அப்ளிகேஷன் களாகவும் , எழுத்து கோப்புக்களாகவும் இருந்தனர்.என்னை பரிவோடு பார்த்த ஒரு பிட்மேப் ரூபமாக இருந்த கோப்பு மனிதரிடம்,

"இங்கிருந்து தப்பிக்க வழி சொல்லுங்கள்" என்று கெஞ்சினேன்."எப்படி வந்தயோ அப்படித்தான் போகமுடியும்" என்றார்.

"நீ அளக்கப் பட்டுவிட்டாயா?"

"அப்படின்னா?"

"இந்த தளத்தில், தினமும் ஒரு முறை எஸ்டிமேட்டர் என்ற , ஒரு மென்பொருள் இயங்கும், உன் புத்திக்கூர்மை, நினைவாற்றல் அடிப்படையில் உனக்கு ஒரு விலை நிர்ணையிக்கப்படும், அந்த விலையை கொடுத்து உன்னை டௌன்லோட் செய்ய யாராவது முன்வந்தால் மட்டுமே வெளியேர முடியும். கணினியிலிருந்து கணிணிக்கு செய்திகள் அனுப்ப தொடங்கும்போது நான் வந்தேன், வலைதளங்களின் ஆரம்பகாலம் என்று கூட சொல்ல முடியாது,இப்போ வெறும் 1.5$ தான் என் விலை, என் கதியே இப்படி,என்னைக்கு விலை 1$ க்கு குறையுதோ அன்னிக்கு ரீஸைக்கிள் பின்னில் போடுவார்கள்" என்றவர் அப்படியே உறைந்து போனார், எனக்கும் அந்த தளம் ஸ்தம்பிப்பது போல் உணர்ந்தேன், வினாடியின் லட்சத்தில் ஒரு கணம் கழிந்ததும் சகஜ நிலைக்கு வந்தோம், அவரே விளக்கினார்,

"எஸ்டிமேட்டர் இயக்கம் தொடங்கும் போது இந்த தளம் சற்று ஹேங்க் ஆகும் , ஒன்றும் கவலை வேண்டாம், இன்னும் சில நொடிகளில் உன் விலை தெரிய வரும்".சற்று நேரத்திற்கெல்லாம் செய்தி டப்பா சொன்னது "வாழ்த்துக்கள் உங்கள் விலை 546,729,423.89 $".பிட்மேப் பரிகாசமாக சிரித்தார் "ஹா ஹா ஒன்னாரூபாய் என்னையே யாரும் எடுக்கல, உங்கள் நிலை கவலைக்கிடம் தான், ஒரு வேளை உங்களை யாரும் மீட்க தயாரானால், என்னை இலவச இணைப்பாக கொண்டு போவீர்களா ?ஹா ஹா ".

அப்படியே அவரது ஹெட்டரை சிதைத்து கரப்ட் சீ சீ அதாவது கழுத்தை நெறித்து கொலை செய்ய வேண்டும் போல் தோன்றியது.

"உன்னை எதாவதொரு உலக விரோத சக்தி நிச்சயம் விலைக்கு வாங்கி, உன் அறிவை அவர்களது நலனுக்கு உபயோகிப்பார்கள்"

"நான் செய்ய மறுத்தால்?"

"என்னப்பா இவ்வளவு அறிவிருக்குற ஒனக்கு காபி பேஸ்ட் பத்தி தெரியாதா?. நீ இனி மனிதன் இல்லை ஒரு மென்பொருள் , அவர்கள் க்ளிக் செய்தால் நீ ஓட வேண்டும் என்பது தானே மென்பொறுளின் விதி? உன்னைப்போல் பல காப்பிகளை உருவாக்கி இதே விலைக்கு விற்பார்கள், "

"எத்தனை வடிவங்களில் இருந்தாலும் நான் அல்லது நானாகிய நாங்கள் உடன்பட மாட்டோம்"

"உன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது உண்மைதான் , ஆனால் நகல்களை மாற்றும் உரிமை உண்டு.புரியவில்லையா? இங்குள்ள நாம் எல்லோருமே ரீட் ஒன்லி (Read only) பாதுகாப்பில் இருக்கிறோம், நமது நகல்களின் வடிவதிலிருந்து இந்த பிடிவாதத்தை மட்டும் எடுத்தெறிய வர்ச்சுவல் க்லிப்பர் க்லேம்பர் என்று ஒரு சேவை இருக்கிறது, அதான் வின்டோஸ் சர்வீஸ்.நகலெடுக்கும் முன் எதாவது செய்ய வேண்டும் வேறு வழி இல்லை"

"என்னறிவு மற்றும் நினைவாற்றல் குறைந்தால்?எனக்கு மூளையில் பெரிய பாதிப்பு ஏற்பட்டால்?என் விலையும் குறையும் , என்னுயிரே போனாலும் என்னை தவறான பயன்பாட்டிற்கு உபயோகிக்க முடியாது இல்லையா?

"ஆமாம் ஆனால் எப்படி அது சாத்தியம்? "

"நான் மட்டும் அல்ல, உங்கள் எல்லோரையும் அப்படி செய்ய முடியும், விடுவிக்க முடியும் "

"நிஜமாகவா?"

"நாம் எல்லோரும் வைரஸாக மாறி ஆட்டொ டௌன்லோட் முறையில் தப்பித்துக் கொள்ளலாம்"

"வைரஸாக மாற வழி?"

"இங்கு யாராவது HTML இருக்கிறிர்களா?"

"நான் இருக்கிறேன்" என்று ஒரு முன்வந்தாள் ஒரு கோப்பு பெண்.

"நல்லது, முதலில் யூட்யூப் பக்கத்திற்கு சென்றடையுங்கள், இங்குள்ள, ஒவ்வொரு நோட்பேட் வடிவ நண்பர்களும் நான் சொல்லும் எழுதுக்களை, அந்த பக்கத்திலிருக்கும் தேடு பெட்டிக்கு கொடுங்கள்"

"வர்ச்சுவல் க்லிப்பர் க்லேம்பர் இயக்கம் இன்னும் 15 நொடிகளில் துவங்கப் போகிறது" என்று பதறினார் பிட்மேப்.ஒரு செய்திப்பெட்டியில் அதன் கௌன்ட் டௌன் துவங்கியது. "15 வினாடிகள் பாக்கியுள்ளது"

"பதட்டம் வேண்டாம்",நான் சொல்ல சொல்ல ஒவ்வொரு எழுத்தாக தானம் செய்தார்கள் நோட்பேட் குடும்ப நண்பர்கள்

"V" - (14 வினாடிகள் பாக்கியுள்ளது):"E" - (13 வினாடிகள் பாக்கியுள்ளது):"E" - (12 வினாடிகள் பாக்கியுள்ளது):"R" - (11 வினாடிகள் பாக்கியுள்ளது):"A" - (10 வினாடிகள் பாக்கியுள்ளது)

"C" - (9 வினாடிகள் பாக்கியுள்ளது):"H" - (8 வினாடிகள் பாக்கியுள்ளது):"A" - (7 வினாடிகள் பாக்கியுள்ளது):"A" - (6 வினாடிகள் பாக்கியுள்ளது):"M" - (5 வினாடிகள் பாக்கியுள்ளது)

"Y" - (4 வினாடிகள் பாக்கியுள்ளது)

தேடு பொத்தானை தட்டி முதல் ரிசல்ட்டை தேர்ந்தெடுத்த அந்த நொடியே (3 வினாடிகள் பாக்கியுள்ளது) எல்லோரது மூளையும் குழம்பியது, அனைத்துக் கோப்புக்களும் வைரஸ்களாக மாறி அந்த தளமே செயலிழந்து போனது.(2 வினாடிகள் பாக்கியுள்ளது).



நிலவிலிருந்து பூமிக்கு தள்ளி விட்டது போல் இருந்தது....எதன்மீதோ மோதி விழித்துக்கொண்டேன்.



இப்போது மேஜையில் , என் அண்ணன் மகளின் நான்காம் வகுப்பு கணித புத்தகம் இருந்தது, தடுமாறி அதை நெருங்கும்போது அறைக்குள்ளே நுழைந்த என் அம்மா கேட்டாள் ," நல்லா தூங்கினியா? இப்போ வைரல் ஃபீவர் பரவாயில்லயா?"





ஆண்டிபையாட்டிக் மாத்திரை பாட்டில் என்னை பார்த்து கண்சிமிட்டியது.

.

Tuesday, April 19, 2011

மாயவலை - 1


காய்ச்சல் வந்தால் கூட "வைரல் ஃபீவராக" இருந்தால் தேவலை என்றெண்ணும் அளவுக்கு எனக்கு வைரஸ் மேல் ஈர்ப்பு.நான் சொல்வது மென்பொருள் கிருமி. ஒரு முறை மிகப் பாதுகாப்பான வங்கி என்று தம்பட்டம் அடித்துகொள்ளும் ஒரு புகழ் பெற்ற வங்கியின் உள்ளே சென்று கல்லா நிலவரம் பார்த்தாகிவிட்டது , மற்றொரு முறை பல்கலைக்கழக மதிப்பெண்களைக் கூட ஒற்று பார்த்திருக்கேன், ஷேர் மார்கெட் வலைக்கு சும்மா மூர்மார்கெட் மாதிரி தினமும் இரு முறை சென்ற ஒரே வெளி நபர் நானாகத் தான் இருக்க முடியும்.இது வரை எந்த முறையும் மாட்டிக்கொள்ளாதது எவ்வளவு பெரிய சாதனை என்பது மென்பொருள் விற்பன்னர்களுக்கு மட்டுமே தெரியும்.எந்த தகவலையும் மாற்றி சுயநலனுக்காக என் அறிவை பயன்படுத்தியது இல்லை. எதெல்லாம் சாத்தியமில்லை என்று கருதப்பட்டதோ அவையனைத்தையும் செய்து முடுத்திவிட்டதால் என் மௌன வெற்றிகள் சலிப்பை ஏற்படுத்தத் தொடங்கும்போது தான் அந்த மின்னஞ்சல் வந்தது.




"அன்புள்ள நண்பரே,

நீங்கள் புவியின் தலை சிறந்த ஹேக்கர் என்பதை நாங்கள் உணர்ந்து பாராட்டுகிறோம்." என்று தொடங்கி நான் எந்தெந்த தேதியில் எந்தெந்த வலைகளை தடைகளை உடைத்து சென்றுள்ளேன் என்பதும் அதற்கு நான் எடுத்து கொண்ட நேரமும் மிகக் கவணமாக பட்டியல் இடபட்டிருந்தது.



"எந்த ஒரு ஹேக்கராலும் எங்கள் வலையை தகர்க்க முடியாது, முயன்று நீங்கள் வென்றால், உங்கள் திறமையை நல்லதொரு நோக்கதிற்கு பயன் படுத்த வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். எங்கள் வலை ஒரு சாதாரண வலைதள வியாபார வலை என்பதால் அலட்சியம் காட்ட வேண்டாம்.தேவைப்பட்டால் ஒரு சோதனை செய்து பாருங்கள், இலவசமாக எதாவதொரு பொருளை நீங்கள் பட்டியலிலிருந்து டௌன்லோட் செய்துக் கொள்ளலாம்."எனக்கு பரபரப்பு தொற்றிக்கொண்டது. பட்டியலில் புத்தகங்கள் என்ற பத்தியை தேர்ந்தெடுத்தேன். புகழ் பெற்ற புத்தகமென்றால் அது மிக எளிமை என்பதால் எனது நான்காம் வகுப்பு தமிழ் நூல் என்று டைப் அடித்தேன். வலை தலைச்சுற்றிப் போகும் என்றெண்ணிய எனக்குத் தான் தலை சுற்றியது.திரையில் "இதுவரை பனிரெண்டு முறை நான்காம் வகுப்பு தமிழ் நூல் மாறியிருப்பதால் வருடத்தை குறிக்கவும்" என்றது. இதில் என்னவோ விஷயம் இருக்கத்தான் செய்கிறது என்று அப்போது தான் உணர்ந்தேன். 1990 என்று டைப்பியது தான் தாமதம், "புத்தகம் சேருமிடத்தை தேர்ந்தெடு" என்று அதட்டியது. பொதுவாகக் கோப்புக்களை சேர்ப்பிக்கும் இடம் கணிணியின் 'C' அல்லது 'D' என்ற ஹார்ட்டிஸ்க்கையே காட்டும், ஆனால் இப்போது என் திரையில் நான் பார்ப்பது என் அறையில் உள்ள மேஜை.நம்பவும் முடியாமல் , புறம்தள்ளவும் முடியாமல் மேஜையின் வலது ஓரத்தை அதில் தேர்ந்தெடுத்தேன். "டௌன்லோடிங்க்....3 வினாடிகள் பாக்கி உள்ளன..." என்று சொன்ன திரையின் மேஜையில் என்னால் புத்தகத்தை பார்க்க முடிந்தது.என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை, உருப்பொருளாக ஒரு புத்தகம் என் மேஜையில் இருந்தது. எல்லா பக்கங்களையும் பார்த்தேன்.உண்மையிலேயே அது புத்தகம் தான், என்னை கிள்ளிப் பார்த்துக்கொண்டேன் வலித்தது, நூலின் ஒரு பக்கத்தை கிழித்தேன் கிழிந்தது!



துணிவிருந்தால் போட்டியை ஒப்புகொள்ள "சம்மதம்" பொத்தானை அழுத்தவும் என்றது."துணிவிருந்தால்" என்ற வார்த்தை ப்ரயோகத்தில் ஒரு கேலி இருந்தது ,பொத்தானை அழுத்து இல்லயென்றால் பொத்திக்கொண்டு போ என்பது போல் இருந்தது. அழுத்தினேன் பொத்தானை.திரையில் ஒரு கனவு ரோஜாத்தோட்டப் பின்னனியில் அப்லோடிங்க் என்றது, எனக்கு லேசாக மயக்கம் வந்தது.முற்றிலும் மயங்கும் முன் ரோஜா வாசனை மட்டும் நியாபகத்தில்....
 
(தொடரும்)