Monday, July 8, 2013

மாப்ளைக்கு மூலம்







மதுப் பழக்கம் நாட்டுக்கும் வீட்டுக்கும் உடல் நலத்திற்கும் கேடு
                                   
Our Sincere Thanks to


பொது மக்கள் - எக்மோர் மற்றும் ரெயில்
ஏர்டெல்
ஐ ஃபோன் ஸ்பான்சர் - ஆப்பிள் கார்போரேஷன்
கூத்த பெருமாள் - பஞ்சாயத் தலைவர் கல்லக்குடி
சனீஷ்வரன் - திருநல்லார்
----------------------------------------------------------------------------------


"உங்கள எவன், புக் பண்ணித் தொலைக்கச் சொன்னது? அன்-ரிசர்வ்ட்ல ஏறி ,அப்படியே செகண்ட் கிளாஸ்க்கு , டீ.டீ.ஆர் என் ஃப்ரெண்டு மிஷ்டர் சர்வேஷன் கிட்ட சொல்லி, சகாய விலைல அப்க்ரேட் பண்ணியிருக்கலாமே"
"எனக்கு மிஷ்டர் ரிசர்வேஷன் உங்க ஃப்ரெண்டுன்னு தெரியாதே சார்" சற்று எரிச்சலை கட்டுப்படுத்த முடியமாட்டாமல் சொன்னேன்.
"ச்ச என் ஃப்ரெண்டு பேரு சர்வேஷன்...ரிசர்வேஷன் இல்ல‌,சரி போய் தொலையறது, எத்தனை மூட்டை சொமக்குறீங்க?"
எனக்கு வயது 31 ஐ தாண்டுவதால் பெண் பார்க்கப் போகும் போதிலிருந்தே பெண்ணின் அப்பாவின் நமச்சல் .
 "அங்க வந்து தங்கற உத்தேசம் இல்லை அதுனால" என்பதை மட்டும் மனப் பல்லைக் கடித்து , "ஒண்ணு தான்" என்றேன்.
" சரி ஒழியுது, எமர்ஜென்ஸிக்கு பணம் எல்லாம் இருக்கா?"
"இருக்கு இருபதா.."
"‍நாசமா போச்சு…சார் நிறுத்துங்க‌..மெதுவா.. இப்படி எல்லாருக்கும் கேக்குறா மாதிரியா கத்துவீங்க? வந்து சேர்ற‌ வ‌ரைக்கும் க‌வ‌ன‌மா இருங்க.‌ஆமாம் சொல்லிட்டேன்,போய் ஸீட்டுல செட்டாகுங்க‌, ஃபோன் பண்றேன் அப்புறமா"

இவரொருவர் தான் ஜாதகம் பொருந்தியிருக்கிறது என்று சொன்னதால் இவ்வளவு ஹிம்சையைப் பொருத்துக்கொள்ள வேண்டியதாகி விட்டது.ஆஞ்சநேயர் நட்சத்திரத்தில் மாப்பிள்ளை வந்தால் மாமனாருக்கு ஆகாதாம், உயிருக்கே ஆபத்தாம்! பார்ப்போம் பகவான் கிருபை எனக்கு எப்படி இருக்கிற‌து என்று.
முதல் முறை அவர் ஃபோனில் பேசும்போதே வாத்தியார்கள் கடுங்கோபத்தோடு "என்னது? ஹோம் வொர்க் செய்யலியா?" என்பது போல் "என்னது? அம்மா அப்பாவோடயா இருக்கீங்க?". ஏதோ,நான் செய்த புண்ணியம், கால் செண்டர் (முன்னிரண்டு சொற்களும் ஆங்கில வார்த்தைகள்) துறையில் கோலோச்சியிருப்பதால் , இந்த மாதிரி ஆட்களை சமாளிக்கும் திறன் பெற்றவனாகிவிட்டேன்."ச்ச ச்ச அவங்க வெல் செட்டில்ட்... எப்பவாவது எனக்கு பணம் வேணும்னா கொண்டு குடுக்க மட்டும் வருவாங்க.வந்தமா, பணத்த குடுத்தமான்னு குடு குடுன்னு திரும்ப‌ போயிடுவாங்க‌" என்று சொல்லி வைத்தேன்.திரும்ப எங்க போவாங்க என்று கேட்கும் அளவுக்கு பொறுமை இல்லைப் போல, மேற்கொண்டு எந்த கேள்வியும் கேட்கவில்லை. சும்மாவா ? ராஜ தந்திரியான எனக்கு பி எம் பீ சர்டிஃபிக்கேட் கொடுத்தார்கள்?

ராஜ்ஜிய சபை சீட்டு ஏலம் போல் பர்த் நேக்கு, சைடு நோக்கு என்று வாஸ்து நம்பிக்கை, வயது முதிர்ச்சி சாதகம், வனப்பு கொண்ட பெண்கள் என்று பலரது கோரிக்கைகளை நிறைவேற்றி, எனக்களிக்கப்பட்ட ஸீட்டை தாரை வார்த்து, வேறு ஒரு ஸீட்டில் ( சந்தேகமின்றி கழிவறைக்குப் பக்கத்தில் உள்ள வரிசையில்) அமர்ந்து, ரயில் ஜலம் அருந்தும் முன் மறுபடியும் அவரே தான் "என்ன ஒக்காந்தாச்சா?"
"ஹும் …இப்போ தான்"
"என்ன எழவு இது? இவ்வளவு நேரம் என்ன செஞ்சீங்க? ஒரு ஸீட் கண்டுபிடிக்க இவ்வளவு நேரமா?"
நான் பொய் சொல்லியிருக்கலாம், ஆனால் ,அவர் இருக்கும் ஜோரில் நிச்ச‌யம் அந்த பாழாப்போன டீடீஆரை உள‌வு பார்க்க விடுவாரென்பதால், பொய்யை தற்காலிகமாய் தவிர்த்தேன் மனசாட்சிக்கு விரோதமாய் .
"போகட்டும், என்ன பொது சேவையா? நல்ல வசதியான ஸீட்ட விட்டு இப்போ எங்க இருக்கீங்க?"
"இல்ல அந்த ஸீட், பர்த் எனக்கு வசதியா இல்லைனு நான் தான் மாத்திகிட்டேன்"
"அப்டியா, சரி , ஐ ஃபோன் தான இருக்கு உங்க கிட்ட? எனக்கு உங்க ஸீட்ட ஒரு ஃபோட்டோ எடுத்து அனுப்பி வெச்சிட்டு ஃபோன் பண்ணுங்க‌ " ரோமம் அள‌வும் இங்கிதமின்றி துண்டித்தார் இனைப்பை.
இன்னமும் அவருக்கு! "ர்" விகுதி தேவையா? "ன்" போதுமே! என்று எண்ணிக்கொண்டே  கர்ம சிரத்தையாக ஃபோட்டோ எடுத்து அனுப்பினேன்.அவர் அழைக்கவில்லை , பதில் மட்டும் அனுப்பினார்.. "கக்கூஸ்ல இருந்து ரெண்டாம் வரிசை!"என்று பதில் எஸ்.எம்.எஸ் மட்டும் வந்தது. இத்தோடு ஒழிந்தார் என்று நினைத்து முடிக்கும் முன் "கால் மீ" என்றது அடுத்த குறுஞ்செய்தி.என்ன இது? காதலிப் போல் இந்த லூட்டி அடிக்கிறார் என்று செல்லக் கோபத்தோடு டயலினேன்.
அதே கோபத்தோடு "என்ன?" சற்று ஓங்கிய குரலில்,
"என்ன சத்தம் ஜாஸ்தியாறது?
"இல்லயே , இங்க ஒரே கூட்டம்... சத்தம் ...அதான்..." பம்மிவிட்டேன். ஆனால் இப்படி ஆரம்பம் தொட்டே இவ்வளவு அடிபணிவது பிற்காலத்தில் எனக்கு ரொம்ப ஆதாயமாகவோ அல்லது , மிக கேவலமாகவோ ஆகக்கூடும் என்றெண்ணி முறையே மகிழ்ந்துப் பயந்தேன்.
"சரி ,ஒரு காலி பர்ஸ் எடுத்துகிட்டு வரச் சொன்னேனே கொண்டு வந்திருக்கீங்களா?, அத மட்டும் பார்வைல படறா மாதிரி பாக்கெட்ல வெச்சிக்கங்க , ஒரிஜினல் பர்ஸ ஜாக்கிரதையா..."
"வீட்டுலயே வெச்சியிருக்கனுமோ?"
"என்னது?....குறுக்க பேசாதீங்க சார் இன்டீஸண்டா ...எழவு... எங்க இருந்தேன்?.. ஆ...ன்.. ஜாக்கிரதையா , ஜட்டி பாக்கெட்ல வெச்சிடுங்க.. ஜாக்கில பாக்கெட் வெச்சி ஒரு மாடல் வரும்னும், அத போட்டு வர்ற சொன்னதும் நியாகபம் இருக்கா? இல்ல வேற ஏதாவது அபத்தமா செஞ்சி என் தாலிய அறுக்கப் போறீங்களா?"
" இல்ல அப்டி தான் வர்றேன் , நம்பலைன்ன ஃபோட்டோ அனுப்பட்டுமா?"
"என்ன சார் சர்காஸ்டிக் டோன் வருதே...?"
"ஐயோ இல்ல நான் அத சொல்லல, சாரி சாரி.. வெரி சாரி சார்". ஃபோட்டோவில் பெண் பிரமாதமாக இருப்பது , மட்டுமே உத்வேகக் காரணி
'"சார் இங்க ட்ரெயின்ல பக்கத்துல எல்லாரும் தூங்குவாங்க பாவம் ,மணி பதினொண்ணாகப் போகுது..."
"ஓ ஆமாம் இன்னும் பத்து நிமிஷம் தான் இருக்கா? சரி சரி" அவர் பாணியில் ஒரு இங்கித கட்.

 "லூஸுக்" என்று என்னையும் அறியாமல் சத்தமாக சொல்ல, எதிர்த்த ஸீட்டு மாமா பயந்து முகத்தைத் திருப்ப‌,பாதியில் நான் நிறுத்திக் கொள்ள, நின்றது ரயில் , நின்ற இடம் தாம்பரம்.
வரவழைத்துக் கொண்ட தைரியத்தோடு எதிர் ஸீட்டு மாமா "ட்ட்டான்னு வண்ட்டான்".அவரது பச்சைப் பையில் திலக்ஸ் என்று அச்சாகியிருந்தது.
"எக்மோர்லாயிருந்து இங்க இருக்குற தாம்பரத்துக்குக் கூட‌ ட்ட்டான்னு வர்ரலைன்னா , தண்டவாளத்தை புடுங்கித் தலைய சுத்தி எரிய வேண்டியது தான்"
எதிர்பார்த்த சினேகம் கிடைக்காத விரக்தியில் மாமா மறுபடியும் திருப்ஸ்.
ஒரு வேளை இவருக்கு கல்யாணம் ஆகாத‌ பெண் இருந்தால்?
"ஆனாலும் வரனுமே, கரெக்ட்...நீங்க சொன்னா மாதிரி ட்ட்டான்னு வண்ட்டான்"
அகலமாக‌ சென்ற பந்து சட்டென அகாலமாக‌ ஸ்டம்ப்புக்கு வந்தால் வெளிப்படும் பௌலரின் சிறு வெற்றி கொண்டாட்டம் போல் மாமா தலையை வேகமாக குலுக்ஸ்.

அச்சமயமே என் சட்டைப் பையில் இருந்து குறட்டை உதறல் உணர‌, அவரே தான் !
"பதினோரு மணிக்கு மேல எனக்கு ஃப்ரீ கால்ஸ் தான், அதான் அப்பவே கட் பண்ணேன், எப்படி?"
"பிரமாதம் சார்.. அதானே? எப்படி?"
"போகட்டும்.. மேட்ரிமோனில ஸ்மோக்கிங் அக்கஷனல்லின்னு போட்டிருந்தீங்களே... ட்ரெயின்ல 500 Rupees ஃபைன் போட்டுடுவாங்க ஜாக்கிரதை, பட் ரொம்ப முடியலைன்னா பாத்ரூம்ல ஒண்ணு அடிச்சுக்கங்க என் ஃப்ரெண்டு கிட்ட வேணும்னா ரெக்கமண்டு பண்ணட்டுமா? "
"ச்ச ச்ச , இல்ல வேண்டாம், ஒண்ணுக்கு அடிக்குறதுக்கெல்லாம் சிபாரிசு வேண்டாம் சார்...பரவாயில்லை"
"அதுக்கும் ஒரு டெக்னிக் இருக்கு...
"அதுல என்ன சார் டெக்னிக் இருக்கப் போகுது?"
"லிஸ்ஸன் டு மீ..வெறும் தீக்குச்சியும் ஒரு சின்ன ப‌ட்டியும் மட்டும் எடுத்துகிட்டு லெட்ரின் உள்ள போங்க, அதை உடனே அப்பவே டிஸ்கார்ட் பண்ணிடுங்க...டூத் பிரஷ் பேஸ்ட்டு எடுத்து கிட்டு போய் பிரஷ்ஷும் பண்ணிடுங்க... ஃபைன் கட்ட வேண்டாமே...மோரோவர் உடனே கெள‌ம்பி போகக் கூடாது, முதல்ல ஒரு தடவை எடத்த விட்டு போகனும்,அப்புறம் ரெண்டு நிமிஷத்துல திரும்ப வந்துடனும்..அதே மாதிரி ஒரு நாலஞ்சு தடவை பாவ்லா ரௌண்ட் செய்யனும், ஸோ தட் உங்க பேக எடுக்கனும்னு யாராவது நினைச்சா ஏமாந்துடுவாங்க புரியற‌தா?"

"திருட நினைக்குறவனும் கூடவே வந்தா என்ன செய்யற‌து சார்?"
"வரட்டுமே என்ன மோசமா போச்சு?அவனுக்கு தான அலைச்சல்? விடுங்க..."
"அருமையா சொன்னீங்க சார், ச்ச பேசாம நீங்களும் என் கூடவே வந்திருக்கலாம் சார்"
"உங்க கூட நான் வந்தா, உங்களை யாரு இங்க ரிஸீவ் பண்ணுவாங்க?"
"சார் உங்களுக்கு தூக்கம் வருதுன்னு நெனைக்கிறேன்..."

அவர் நான் பேசுவது புரிந்துதான் பேசுகிறாரா?ஒன்றா அவருக்கு நகைச்சுவை உணர்வு மிக அதிகமாக இருக்க வேண்டும் அல்லது  நகைச்சுவைக்கும், அவருக்கும் குளியல் கிட்டத்திலும் இல்லாமல் இருக்க வேண்டும். நேரில் பார்த்தால் தான் தெரியும்.
இவ்வளவும் பொறுத்துக் கொள்வது அவர் பெண்ணுக்காகத் தான். ஆகவே அவளைப் பற்றி ஏதாவது கேட்க வேண்டுமே,

 "சார் உங்க டாட்டர் என்ன செய்யறாங்க? சார்"என்றேன், ஒரு சாரார் சொல்வது போல் ஒரு சார் அனாவசியமாக விரையம் செய்ய வேண்டியதாகிவிட்டது.

"சொந்தமா ஒரு ஹாஸ்பீடல் இருக்கு, நல்ல ப்ராக்டிஸ், நல்ல கைராசின்னு பேர் , நான் போனா மட்டும் கியூல உக்கார வேண்டாம். ஸ்கூல் வரைக்கும் ஒண்ணா தான் படிச்சோம் நாங்க ரெண்டு பேரும்...அப்புறம் தான் நான் காரைக்குடி அழகப்பால போய் படிச்சி..பாவம் கல்யாணம் பண்ணிக்கலை இன்னும்"
"சர் சர் சர் ஒரு நிமிஷம் ...எனக்கு ஒண்ணும் புரியல‌" பார்ஷியல் அகஸ்டிக் நியுரோமாவின் பாதிப்பு அவருக்கு மட்டும் இருக்கா அல்லது வாழையடி வாழையா என்பதில் எனக்கு சிறு கவலை தான்.
"என்ன எழவ‌ புரியல? சொந்தமா ஒரு.."
"இல்ல அது இல்ல.. நான் உங்க பொண்ணப் பத்தி கேட்டேன்"
"ஓ அவளா?... அவ ...என் டாட்டர், இந்த பழைய இதெல்லாம் இருக்குமே , அதெல்லாம் ஒரு .. இங்க தான் , மெயின் கார்ட் கேட் , போஸ்ட் ஆஃபிஸ் பக்கத்துல... , நல்ல இது சார் அது... அங்க ஒரு ஆறு மாசமா, சும்மா இருக்க வேண்டாம்னு..வெளியூர்ல கூட நெறைய வேலை எல்லாம் வந்தது , நான் தான் உள்ளூர்லயே இருக்கட்டும்னு... நல்ல பேர் அதுக்கு..இந்த ஆர்ச்சுக்கு அடுத்த கட்டடம்..."
"சரி பரவயில்லை சார் விட்டுடுங்க , டாக்டர பத்தியே சொல்லுங்க நான் கேக்குறேன்.. சொல்லுங்க‌ சொல்லுங்க‌...சொந்தமா ஒரு".இந்த‌ தருணத்தில் மேட்ரிமோனியில் அவர்கள் கேட்டிருந்த இன்றியமையாத் தகுதியான ஃப்லெக்ஸிபிலிட்டியை நிறுவினேன்.நேற்றைய என் முதலிரவுக் கனவில் சில பெரும் மாற்றங்கள் இருப்பதை உணர முடிகிறது."அதெப்படி பண்ணனும் தெரியுமா? ஹூம் ஹூம் அப்படி இல்லை சார், முதல்ல நீங்க...ஐய அத இல்ல, தப்பு தப்பு.. ஆ இப்போ கரெக்ட்"  அல்லது குறைந்த பட்சம் பக்கத்திலேயே அமர்ந்து கொண்டு "சௌரியமா இருங்க" இப்படி.
நியாபக மறதியாக 'அந்த அது' நியாபகத்திற்கு வர "ஆங்.. மைக்கேல்ஸ் ! இன்னைக்கும் அங்க ரெண்டு ரூபாக்கு ஐஸ்கிரீம் கெடைக்கும்"
"ரொம்ப சந்தோஷம் சார், டீடீஆர் வர்றார், நான் அப்புறமா கூப்டட்டுமா?"
"என்னது? டீடீஆர் கிட்டஃபோன‌ குடுக்கறீங்களா?தாராளமா குடுங்களேன்,...என்ன மிஸ்டர் சர்வேஷன் நியாபகம் இருக்கா? ஒரு தடவை ட்ரெயின்ல வரும்போது , உங்க பேனா லீக் அடிக்க, நான் அதுக்கு ஒரு டிப்ஸ் சொன்னேனே..."
"சார் சார் , நான் தான் சார்... அவர் கிட்ட குடுக்கல... நீங்க சொன்னவர் இல்ல சார் , இவர் பேர் என்னவோ டீரெயில்னு இருக்கு பேட்ஜுல சரியா தெரியல‌"
"அபசகுனமா இருக்கே"
"ஆமாம் சார், அ.ப. சற்குண‌ம்னு தான் இருக்கு பேட்ஜுல‌ , நீங்க சொன்னது கரெக்ட தான்"
"என்னது???"
எங்கள் பழைய டயனோரா டீவி போல் அவ்வப்போது நான் பேசுவது அவருக்கு சரியாக கேட்கவே செய்தது.
"இல்ல ஒண்ணும் இல்ல,டீடீஆர் பேர் டேனிய‌ல், நான் தான் தப்பா சொல்லிட்டேன் சாரி".
எனக்கு தொண்டை காய்ந்துவிட்டது, "சார் கொஞ்சம் ப்ரேக் குடுங்க.. நான் பாத்ரும் போயிட்டு வர்றேன்" என்று அவர் பாணியில் கட் செய்ய வேண்டியதாயிற்று. ந‌ல்ல ஷெஹரில் கிட்டாத சிக்னல் அத்துவானக் காட்டில் கிடைத்தது அவருக்கு சாதகமாகிவிட்டது.

திலக்ஸ் பை மாமாவுக்கு அருகில் சன்னலோர ஸீட்டில், இருந்த‌ சிவந்த கண்களைக் கொண்டிருந்தவர் தன் சட்டையின் உள்பாக்கெட்டிலிருந்து தீப்பெட்டியும் ஸிகரெட்டும் தனது மூன்றாம் முயற்சியில் வெற்றிகரமாக‌ எடுத்துக் கொண்டு இருந்த இடத்திலேயே தம் பிடித்தார்.எனக்கும் ஆசை தான் இருந்தாலும், ஆனந்தப் புகைக்கு ஒரு ஆத்தரைசேஷன் தேவைப் பட்டது.
"பாத்துங்க டீடீஆர் இல்லேன்னா போளீஸ் வந்துடப் போறங்க?"
ஸிகரெட்டை கையிலெடுத்தபடி "அவனுங்க வந்து என் " என்று உதடுகளை அவர் சேர்க்கவும் , ரயில் அவசர கதியில் ஒரு அசுர பிளிற‌ல் விட்டு ஒயவும் சரியாக இருந்தது.
" ல புடிச்சி ஆட்டுவாங்கப் பார்ப்போம், ங்கோய்ய" .
பிங்க் என்று திரைப் படங்கள் மற்றும் டீவீ நிகழ்ச்சிகளில் சென்ஸார் செய்வது போல் டைமிங்குடன் ப்ப்ப்பா......ம் செய்த இஞ்சின் ட்ரைவ‌ருக்கு அசாத்திய காது கூர்மை போல! காது கூர்மை என்றதும் தான் சட்டென நியாபகம் வந்தவனாக‌ கவனித்தேன் மூன்று மிஸ்ட் கால்.ஒரு ஒரே ஒரு குஞ்செ (குறுஞ்செய்தியின் குறுக்காக்கம்!) "எ‍ந்நேரமானாலும் திரும்ப அழைக்கவும்"
திரும்ப அழைக்கவில்லையென்றால் கோபித்துக்கொள்ள‌ப் போகிறார் என்ன ஒரு குட் நைட்டு சொல்லப் போறார் அவ்வளவு தானே என்று திரும்ப அழைத்தேன்.
"சாரி சார் ட்ரெயின் சத்தத்துல கேட்கல‌"
"ஓஹோ அப்படியா? நான் கண் அசந்துட்டீங்களோன்னு நெனைச்சேன்... மணி சரியா ஒண்ணு.. அஞ்சு நிமிஷம் தான்,விழுப்புறம்ல வண்டி நின்னதும், அறிவு கெட்டதனமா, நாக்கத் தொங்க போட்டுகிட்டு, கீழ இறங்காதீங்க , அங்க விக்குற டீ வாங்க வேண்டாம் , அதை குடிச்சா ராத்திரி தூக்கமே வராது "
"‍‍வெறி நாய் கடிச்சா மாதிரி பேசுறீங்க நீங்க. நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை சார்" கேட்டும் கேளாமலும் இருக்கும்படி சொன்னேன்.
"என்னது? சத்தமா சொல்லுங்க‌"
"வெரி நாய்ஸி ஹியர் சார்.நீங்க சொன்னது ரொம்ப வாஸ்தவம் தான்னு சொன்னேன்,இதுக்கு மேல கத்தினா ட்ரைவர் அண்ணா கோச்சிப்பார்,சார் காலைல அங்க வந்ததும் பேசலாமே , பாவம் நீங்க எதுக்கு அனாவசியமா தூக்கத்த கெடுத்துக்கனும்?"

"அதெல்லாம் பரவாயில்ல, நான் காலைல இன்னிக்கு எழுந்ததே பத்து மணி, குளிச்சு சாப்ட்டு, பதினோறு மணிக்கு கொஞ்ச‌ம் கண் அசந்தேன், அப்புறம் விள‌க்கு வெக்குற நேரம் அதுனால எழுந்து , கோயில்ல கதா காலட்ஷேபம் கேட்டேன்(ஓ அதெல்லாம் கேக்குமா உங்களுக்கு?-என்மன வாய்ஸில்), அப்புறம் வீட்டுக்கு வந்து சாப்ட்டு நியூஸ் பாக்கும் போது ஒரு பவர் நேப். நல்ல வேளை ராத்திரி பத்து மணிக்கு அலார்ம் வெச்சேனோ பொழ‌ச்சோம்.எனக்கு ஒண்ணும் தூக்கம் வரல"
அதாவது குளித்த ,சாப்பிட்ட நேர‌த்தைத் தவிர வெவ்வேறு ரூபத்தில்,ப‌ல்வேறு இடங்களில் நித்ராதேவியோடு கலவிக் கொண்டு விட்டு கின்னென்று முழித்திருக்கிறார்.
எனக்கு காலையிலிருந்து வேலை செய்த அலுப்பு கடுமையாக தாக்கியது.
"உங்களுக்கும் நைட் ஷிஃப்ட் எல்லாம் வேலை செஞ்சி ராமுழிக்கிரது பழகியிருக்குமே?"
அவர் சொன்னால் அப்பீல் உண்டா "சரியா சொன்னீங்க சார்"
"ஹா ஹா.. அப்ப‌ற‌ம் நான் ஃபோன ஃபுல் சார்ஜ்ல போட சொன்னது எவ்வளவு யூஸ்ஃபுல்லா இருக்கு பாருங்க... என்ன?"
"ஐயோ ரொம்ப கரெக்ட்! அது தான் சார் ஹை லைட்டே. "
"அப்பறம் சார் .சத்தியமா டீ குடிக்க மாட்டேன், கொஞ்சம் பாத்ரூம் போயிட்டு வரட்டுமா?"
"வண்டி நிக்கும்போது ரிஸ்க் எடுக்காதீங்க, வண்டி கெளம்பினதும் போங்க, அப்ராக்ஸிமேட்லி 1:05 க்கு கெள‌ம்பும் , அப்புறமா நீங்க‌"
" ஒரு 1:09 க்கு போகலாமா? ஏன்னு கேட்டா நடுவுல அந்த பாவ்லா ரௌண்ட் அடிக்கனுமே? பைய காபந்து பண்ண?"
"ஆஆஆன்...அப்படியே செய்யுங்க".
("சரி அப்புறம் பேசலாம்") ,( "வெச்சிடட்டுமா?" )ஹூம்ஹூம்.. அதெல்லாம் அகராதியிலேயே இல்லை, உடனே ங்கொய் ங்கொய் ங்கொய் என்று துண்டித்த‌ ஓசை ,இரட்டை சுழி மன்டையைப் பிளந்தது!

அதென்ன சாபமோ, ஒரு மணியை தாண்டி விட்டால் அடுத்து தூக்கம் வரவே வராது. என் கம்பெனி பில் கட்டும் மொபைல் எண் என்பதால் அதை ஆஃப் செய்யும் உரிமையை அடகு வைத்திருந்தேன்.

தூக்கமின்மையால் சாதாரண விஷயத்தைக் கூட மிகவும் காம்ப்ளக்ஸாக யோசிக்க தோன்றியது உதாரணத்திற்கு இறங்கநிறையக்கு எதிர்பதமாக எல்லாரும் உற‌ங்கி விட்டனர்.நட்ட நடு நிசியில் நின்றது ரயில்.சற்று அதிர்ந்து எழுந்தார் திலக்ஸ் மாமா. வாயில் வழிந்த கோடுகளைப் பல புள்ளிகளாய்;சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால், வாயை துடைத்துக்கொண்டார்.அவசரமாக எந்த ஸ்டேஷன் என்று எட்டிப் பார்க்க முயல
"அரியலூர் வந்திருக்கோம்"
"க்ஹா ஃப்ரூ.. ம்ப்ரு..."
சட்டைப் பையிலிருந்து ஹால்ஸ் கொடுத்தேன் , இப்போ அவருக்கு சுத்தமாக பயம் இல்லை, வாங்கி கொண்டே மணிக்கட்டையும் , கடிகாரத்தையும், முற்களையும், , மணியையும் ஒரு சேரத் தேட‌
"ட்ட்டான் தான் "
"ஹூம்?"
"இல்ல ட்ட்டான்னு வந் ட்டான். ட்டூ ட்வெண்ட்டி ஆகுது "
"ஓ பரவாயில்லையே.. பைய‌ மேல மாட்றேன் , பாத்துக்கோங்க" என்று தொங்கவிட திலக்ஸ் தற்சமையம் தூக்ஸில் தொங்க, கழிப்பறைக்கு சென்றார்.
"க்ர்ஹா ம்க்ரூஹ்ரும், க்ர்ஹா ம்க்ரூஹ்ரும், ச்த்தூ க்ராஹ்" முடிந்து திரும்பி வந்து விட்ட இடத்தில் (!?) உட்கார்ந்தார் .
"ஹா ரொம்ப தேங்கஸ் சார்"
குற்ற உணர்ச்சியில் அவஸ்தையாக சிரித்தேன்.அந்தப் பையை அதற்குப் பிறகு பார்க்கவே இல்லை.என்னவோ அதை பார்த்துக் கொள்ளத்தான் கண் முழித்திருக்கிறேன் என்று நினைத்தாரோ?
"பை கிழிஞ்சு போச்சு, போல இருக்கே?" குறில் நெடில் குழப்பமின்றி கேட்டேன்.
"க்க்க்ஹா,ஹால்ஸுக்கும் தேங்க்ஸ், இப்போ கொஞ்சம் பெட்டரா இருக்கு சார். ஆமாம் சார் , வீடு போய் சேர்ற வரைக்கும் தாங்கினாப் போதும்"
"எது ஹால்ஸா? இல்லை சார் அதுக்குள கரைஞ்சிடும்.."
"வேடிக்கையா பேசறேள் சந்தானம் மாதிரி, நான் பைய வீடு போய் சேர்ற வரைக்கும் தாங்கினாப் போதும்னு சொன்னேன்,ரொம்ப லேவடியா தான் இருக்கு அது ரொம்ப பழசு, இப்போ சொன்னேனே சந்தானம்னு , அவன் என் மச்சினன் , அவன் கம்பெனி பை அது. க்ஹா ஹ்றூம் ம்ஹூஹ்"
எனது மிச்சமுள்ள ஒரே ஹால்ஸுக்கு அடிப் போடுகிறார் என்பதால் அவசரமாக பிரித்து போட்டுக் கொண்டேன்.
“பை த பை நீங்க எங்க ஒர்க் பண்றிங்க?”
" நான் வேலை பாக்குற கம்பனில பையெல்லாம் தர மாட்டாங்க சார்"
இவன் பாம்பா பழுதா? என்ற‌ க்ஷண‌ நேரக் கடுப்புடன் "க்ராஹ் க்ராஹ் க்ராஹ் , ம்க்ரூஹ்ரும்"
அவரது வினோத ஒலிகளுக்குப் பின்னால் என்னை தொந்தரவு செய்யும் நோக்கம் இருந்தால் அது அவருக்கு தான் நஷ்டம். எனக்கு ஏற்கனவே சட்டைப் பையில் சட்டாம்பிள்ளை , தடியால் அடிக்க தயாராய் இருக்கிறது அவருக்கு எப்படி தெரியும்?தற்போது சற்றொப்ப எல்லா விள‌க்குகளும் எரியத்துவங்க , இடை நிலைப் பிரயாணிகள் தயாராகிக் கொண்டிருந்தார்கள் எத‌ற்கோ.ஐ ஃபோனில் பாடல்கள் கேட்க அரச கட்டளை இடம் தராததால் (அச‌ரிரி: பாட்டு கேட்டா சார்ஜ் போயிடும் சார் அதுனால‌...) , மனச்சோர்வு சற்று அதிகம் தான்.

பக்கத்தில் ஒருவர் ஒரு வாராந்திரியை திற‌ந்த வேகத்தில் மூட,
"சார் சும்மா பாத்துட்டு தர்றேன்"
சிறிதும் தயக்கமின்றி கொடுத்து விட்டு,தனது ஒரே பையை எண்ணிக்கை சரி பார்ப்பதில் மும்முரமாக இருந்தார். மணி மூன்றே முக்கால் கல்லக்குடி ஸ்டேஷன் "இப்ப‌வோ எப்பவோ" தூரநேரத்தில் அல்லது நேரதூரத்தில்.
புத்தகத்தை திரும்ப பெறாமலே அவர் படிகளை நோக்கி செல்ல நானே நேர்மையாக அதைக் கொடுத்தேன். அவர் திலக்ஸ் மாமாவை கண்ணால் காட்ட, திலக்ஸ் மாமா என் கையிலிருந்து அதை பிடுங்கிக் கொண்டார். அவர் பிடுங்கிய விசையில் "அது என்னோடதாக்கும்" என்கிற பொசஸிவ்னெஸ் தெரிந்தது.
ஆங்கிலத்தில் எழுதுவதை விட தமிழில் பொஸசிவ்னெஸ்ஸின் ஸ்பெல்லிங் எளிதாக இருப்பதையும் நான் கவனிக்க தவறவில்லை.
மனரீதியாக ஒரு மௌன யுத்தம் நிலவியது...
"ஹால்ஸுக்கும் பொஸ்தகதுக்கும் சரியா போச்சு "
"அப்போ, நீங்க சுஸ்ஸூ போகும் போது, நான் பைய பாத்துக்கிட்டதுக்கு?"
"நான் கோழை‌ துப்ப தான் போனேன்,மேலும் நீ தான் உன்னோட கம்பனி பை தரலியே, அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு"

தூக்கமின்மை பற்றி வள்ளுவர் என்ன சொல்லியிருக்கிறார் என்றெல்லாம் பலவாறு யோசித்து பார்த்துக் கொண்டிருக்கையில்,
"‍நான் ரெடி, கார அனுப்பு , ...என்னது?.. இல்ல பை கிழிஞ்சி ...ஆமாம்.. .. கார அனுப்பு... புரியற‌தா? காரை.. ஆமாம் கார்லயே.. சரி கார்..ஓகே...க்ராஹ் , ம்க்ரூஹ்ரும்"
அவர் யாரோடு பேசுகிறார் என்று தெரியவில்லை ஆனால் எனக்காகத் தான் பேசுகிறார் என்றுப் புரிந்தது.ஃபோனைத் துண்டிக்கும் போது என்னை வென்ற ஒரு கிளர்ச்சி நிச்சயம் இருந்தது அவர் முகத்தில்.அவர் தேவை இலாமல் சில்லரையை எண்ணி சட்டைபையில் திணித்துக் கொண்டிருந்தார், அவரது கார் ரகசியம் புரிந்து விட்டது.

வெயிட்டீஸ் சொல்லியிருந்தது போல் இருந்த ஃபோன் திடீரென ஜூட் சொன்னது போல் உறுமியது.
"ஹென்ன? வால்குதியா?"
"இல்ல நான் தான் பேசறேன், சாரி ..என்னது? புரியல..!"
"க்ரும்.. என்ன லால்குடி வந்தாச்சா? ஹ்ரும்"
க்ரும் ஹ்ரும் என்ன இந்த ஊர் வழக்கமா, தெரிஞ்சிருந்தா ஒரு ஹால்ஸ் மூட்டையே வாங்கி வந்திருப்பேனே? என்று வியந்து.. ஆமாம் கிட்டத்தட்ட...
"அப்போ இன்னும் இருபத்தஞ்சு நிமிஷம் தான்... சரி நான் கெளம்பிடுவேன் அங்க‌ப் பாக்கறேன்.. டவுன் ஸ்டேஷனுக்கு தான புக் பண்ணியிருக்கீங்க?"
"இல்ல ஜங்ஷனுக்கு"
"படிச்சு படிச்சு சொன்னேன், தண்ட செலவு , என்ன சார் திருவாளத்தானா இருக்கீங்களே?"
"சாரி சார் ,சரி சார் இனிமே பண்ண மாட்டேன்"
"சரி வாங்க நான் ப்ளாட்ஃபார்ம்லயே வெயிட் பண்றேன்"
கொப்பளிப்பு சத்தம் , ஓக்காலிப்பு,"வந்துடறேன்","ஸ்டேஷன் வரட்டும் நான் யார்னு காட்டறேன் " , "எல்லாம் எண்ணிட்டியா? என்றெல்லாம் சூழ வார்த்தைகள் வளம் கொண்டு, ஒரு பாடாக திருவரங்கம் வந்தது ரயில் நேரம் சரியாக நாலு இருபத்தி ஏழு. "ட்ட்ட்டான்னு வராம ஏமாத் திட்ட்ட்ட்டான்" என்று லால்குடியில்  வைரியாக மாறிப்போன திலக்ஸ் மாமாவை நினத்துக் கொண்டேன்.

ஃபோனை குறட்டையிலிருந்து விடிவித்து டட்டேடான் டேடேடேன் என்று ஒலிக்க பணிக்க, மாற்றிய அடுத்த நிமிடமே கடமை உணர்வொடு (உணர்வோடு என்பதும் ஏற்புடைத்தே..ஐய ...விடுங்க.. தூக்க கலக்கத்துலயும் ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் கண்டு புடிச்சிகிட்டு..)அலறியது.
"சார் , தூக்க கலக்கத்துல குட் மார்னிங்க் சொல்லவே இல்லயே நீங்க‌"
"நீங்களும் சொல்லல, அதான் நான் எப்படி சொல்ற‌துன்னு.. தயங்கினேன் ,மென்னு முழுங்கினேன் ..சாரி சார்.. குட் மார்னிங்க் சார்.. வெரி குட் மார்னிங் சார்..."என் நிலையை நினைத்து பெண் சிசுக் கொலைக்காக ஒரு கணம் மனம் வாடியது.


நாலரை மணிக்கு டௌன் ஸ்டேஷன்.அங்கு இறங்கிவர்கள் எல்லோரும் சென்றுவிட, ப்ளாட்ஃபார்ம் காலியாகி விட்டது.விவேகானந்தர் சொன்னது போல் த‌னியாக, தூக்கம் துளியுமின்றி, கப கப பசியோடு இறங்கிவிட்டேன். 
அவர் பேசிய தோரணையை வைத்து உத்தேசித்தால் , அவர் என்னோடு பேசத் துவங்கும் போதே இங்கு நான்கு அட்வாண்ஸ்ட் டைம்ட் பிளாட்ஃபாரம் டிக்கெட்டோடு வந்திருப்பாரென்று நம்பி இருந்தேன்.கம்பிளிப் போர்வையோடு, ஃபோன் ஒலியொடு யாராவது இருப்பார்களா என்று தேடிப் பார்த்தேன். நானே வீட்டுக்கே வர்றேன் அட்ரஸ் குடுங்கன்னு சொன்னப்போ," அதெப்படி முன் பின் தெரியாதவங்க கிட்ட அட்ரஸ் குடுக்கலாம்"னு சொல்லி, முன் பின் தெரியாத என்னை என்னவெல்லாம் பேசினார்?
இன்னும் அவரைக் காணோம்.கண்கள் எரிச்சலில் மசமச‌வென இருக்க , இம்முறையும் ஒலி ரூபமாக தான் வந்தார்.
"வந்தாச்சா? சரி அப்படியே அந்த கடைசி பெஞ்சில, படுத்து ரெஸ்ட் எடுங்க , இதோ பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன்"
"சரி சார், சார் ...குட் மார்னிங்க் சார்" தூக்கத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை.
படுத்தவுடன் உறங்கிவிட்டேன் பத்து நிமடம் கழித்து கண்விழித்துப் பார்த்தால் நடுப்பகல் வெய்யில்  இது தான்டா திருச்சி என்ற‌து.
ஒன்றும் புரியாம‌ல் , எழுந்து, ச‌ற்று சுதாரித்து ,
ஃபோனைத் தேடினேன் ‍ ‍=>ப‌க்!
ஜாக்கிப் பையில் ப‌ர்ஸ் => ப‌கீர்!!
கைப்பை => அம்பேல்!!!
ச‌ட்டை பையில் ம‌ட்டும் ரிட்ட‌ர்ன் டிக்கெட்டும் , காலி ப‌ர்ஸும் பெரிய‌ ம‌ன‌தோடு விட்டுவைக்க‌ப்பட்டிருந்த‌து. ஸ்டெஷ‌ன் மாஸ்ட‌ரிட‌ம் சொல்வ‌தைத் த‌விர‌ வேறு வழி தெரிய‌வில்லை.
"அடாடா! நன்னா இங்கிலிஷ் எல்லாம் பேச‌றேள்.கொஞ்ச‌ம் க‌வனமா இருக்க‌ப்டாதோ?இந்த‌‌ மாச‌த்துல உங்க‌ளோட‌ சேர்த்து நாலாவ‌து கேஸ் இது‌"
"என்ன‌ செய்ய‌லாம் சார் இப்போ?"
"என்ன‌க் கேட்டா? எல்லாம் அவ‌ன் சொன்னா ம‌திரியே கேட்டுட்டு இப்போ ம‌ட்டும் என் கிட்ட‌ கைய‌ பெச‌ஞ்சிண்டு நின்னா? என்ன‌ அர்த்த‌ம்? அதையும் அவ‌னையே கேளுங்கோ!"
"சார் ப்ளீஸ் ஹெல்ப் செய்யுங்க‌ சார்"
"என்ன‌ சார் இது? உங்க‌ளை பாத்தாலும் பாவ‌மா இருக்கு, அவ‌ன் யாரோ டெலித‌க்ஷுன்னு புனைப் பெயர்ல இந்த‌‌ மாதிரி திருட்டுதனம் செய்ய‌ற‌தா கேள்வி. இப்போ த‌னுர் ராசிக்கு நேர‌ம் ச‌ரியில்லை சார்.ச‌னி கொஞ்ச‌‌ம் க‌லாட்டா ப‌ண்ணும்!ஒரு ந‌டை, அப்ப‌டியே திரு‍ந‌ல்லாரு போயிட்டு வந்துடுங்கோ. என்னோட‌ அத்தைப் பைய‌ன் அங்க‌ தான் இருக்கான் , ந‌ல்ல‌ப‌டியா ப‌ரிஹார‌ப் பூஜையெல்லாம் ச‌ப்ஜாடா ப‌ண்ணி வெப்பான். அவ‌ன் ஃபோன் ந‌ம்ப‌ர் த‌ர‌ட்டுமா? "


என் ராசியை ச‌ரியாக ‌சொல்லும் இவ‌ரிட‌ம் நான் முன்பு எப்போவாவ‌து பேசியிருக்கிறேனா என்று சிந்தித்த‌ப‌டி "என் ஃபோன் எல்லாம் தீர்ந்து போச்சு சார்" என்று வ‌ந்த‌ அழுகையை அடக்க‌ அரும்பாடு ப‌ட்டேன்.

டிஸ்கி:ஆறு மணி நேரப் பயணம் என்பது சற்று நீண்டதாகத்தான் இருக்கும்.