Monday, July 26, 2010

கிலிச் சங்கிலி

"மச்சான் இப்பொ கொஞ்சம் கஷ்டம்டா, அமௌண்ட் கெடச்சா நானே உனக்கு ஃபோன் செய்யறேன்டா மச்சி".கேட்டு கேட்டு அலுத்துபோன வசனத்தை மறுபடியும் கேட்டது வெறுப்பேற்றியதால் தொலைப்பேசி இணைப்பை துண்டித்தேன்.இதுவரை ஆறு பேரிடம் கேட்டாயிற்று,எல்லோருமே இதே ரீதியில், வெவ்வேறு வார்த்தை பிரயோகங்களில் தங்கள் இயலாமையை சொல்லிவிட்டார்கள்.எல்லோரும் இரண்டு விஷயத்தில் ஒற்றுமையை கடைப்பிடித்தார்கள், ஒன்று "பணம் இல்லை", அடுத்து "ஃபோன் செய்யாதே" என்பதை நாசூக்காக "நானே ஃபோன் செய்யறேன்"என்கிறார்கள். என் கடந்த கால நண்பர்கள்!

எனக்கும் அறிவில்லாமல் போய்விட்டது, பரீட்சை முடிந்ததும், கோடைக்கானல் போக திட்டமிட்டு , மூன்று பைக்குகளில் ஏழு பேர் சென்று சாகசம் புரிந்ததால் வந்த வினை.எல்லோரும் வர விருப்பம் உண்டு ஆனால்,தற்சமயம் கையில் பணம் இல்லை, திரும்பி வந்ததும் தங்கள் பங்கை தருவதாக, சூடம் தாண்டி, இல்லை துண்டை கொளுத்தி, (வேண்டாம் விடுங்கள் கோபத்தில் உளரல் அதிகமாகிறது) சத்தியம் செய்தார்கள்.

மேலும் "ஃப்ரெண்ட்ஸுக்கு ஒண்ணுன்னா நம்ம கோபி சும்மா இருக்க மாட்டான்டா" என்று சகவிரோதி உசுப்பேற்றியதன் விளைவு, துணிந்து மூன்று பவுன் சங்கிலியை சேட்டிடம் அடகு வைத்தேன்.நாங்கள் ஏழுபேர் தான் போகிறோம் என்று அதுவரை நம்பிக்கொண்டிருந்த எனக்கு ஏழரை சனியனும் உடன் வருவது தெரிந்திருக்கவில்லை.போகும் வழியில் போகக்கூடாத வேகம் போய், "கர்த்தரே" என்று நின்றிருந்த "மாதா லாரி சர்வீஸ்" லாரியில் மோதினான் என் அருமை நண்பன், குதித்து விட்டதால் அவனுக்கு ஒன்றும் ஆகவில்லை.

இரண்டு நாட்களுக்கான போதையையும், கோடைக்கானலின் குளுமையையும் தியாகம் செய்து என் செலவில் வண்டி பழுது பார்க்கப்பட்டது.திரும்பி வந்ததும் பணம் கொடுப்பதில் பெரும்பங்கு அவனுடையது,"இருந்தா தர மாட்டமா?" என்று நெஞ்சில் ஈட்டி பாய்ச்சுகிறான்.என் வேதனை புரியாமல் என் தந்தை "அந்த கரையாண் புத்துல மருந்தடிக்கனும், இல்லேன்னா கந்து வட்டி மாதிரி வளர்ந்துகிட்டே போகும்" என்றார் கொள்ளைபுறத்தில் இருந்த புற்றை நோக்கியவாரே.என் தில்லு முல்லு அவருக்கு தெரிந்து விட்டதோ என்று எனக்கு ஒரு திடுக், பின் எப்போதும் உவமையோடு பேசும்பழக்கம் கொண்டவர் என்பதால் கொஞ்சம் சமாதானம் அடைந்தேன்.

வீட்டில் "சங்கிலி எங்கேடா கோபி?" என்று கேட்டு தொலைத்தால் பதில் சொல்ல இயலாது என்பதால் எந்நேரமும் கழுத்தை மறைக்கும் சட்டையோடு இருந்தேன்.எண்ணெய் குளியலை தவிர்த்தேன்.என் தனியறையை சிறையறையாய் பாவித்து முடங்கி கிடந்தேன். ஒரு வாரம் கழிந்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. நடுத்தெருவில் யார் பார்வைக்கும் படாமல் ஒரு நான்காயிரத்து முன்னூறு ரூபாய் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றெல்லாம் நினைத்தேன். யார் பார்வைக்கு பட்டதோ இல்லையோ என் பார்வைக்கு பத்து பைசா கூட சிக்க வில்லை.யாராவது உதவ மாட்டார்களா? குலதெய்வத்தை முதன் முறையாக வேண்டினேன்.

ஒரு எலிகாப்டர் பறக்கும் ஓசை நெடுந்தூரத்தில் கேட்டு, அதன் வீரியம் பெருகி, என் வீட்டு வாசலில் அடங்கியது.வந்தது குலதெய்வமல்ல என் கல்லூரி நண்பன் உமேஷ், அது எலிகாப்டர் அல்ல அவன் பஜாஜ் எம்80."என்னடா கோபி டல்லா இருக்க?" என்றவாரே என் அறைக்குள் நுழைந்தான்.

நல்ல சட்டை, பேண்ட், ஷூ எல்லாம் அணிந்திருந்தான்.உமேஷ் இதுவரை அவ்வளவு நேர்த்தியாக உடை அணிந்து இப்பூவுலகம் பார்த்திருக்க வாய்ப்பில்லை."என்ன ஆச்சு உனக்கு எதையோ பரிகொடுத்தா மாதிரி இருக்க?" என்று அவன் கேட்டது தான் தாமதம் கோடைக்கானல் முதல் கரையான் புற்று வரை ஒப்பித்தேன்.இவனாவது எனக்கு உதவமாட்டானா என்று நினைக்கும்பொழுதே, "கோபி உன் பிரச்சனை தீர்ந்தது! கவலைய விடு" என்று தோளில் தட்டினான். நான் மெய் சிலிர்த்து நின்றேன்.கூடவே வந்து கூத்தும் கும்மாளமும் அடித்து பின்னர் கை விரிக்கும் துரோகிகள் மத்தியில் தானே வலிய வந்துதவும் உமேஷ் தன் உருவம் போலவே என் மனதில் விஷ்வரூபம் எடுத்து நின்றான்.மானசிகமாக புகழுரைப் புணைந்து கொண்டிருந்த என்னை திசை திருப்பியது அவனது செல்ஃபோன் சத்தம்."ஹலோ உமேஷ் ஹியர், சொல்லுங்க சதீஷ், உங்க செக் அனுப்பிட்டேன், ஓகே பை".மிக சுருக்கமான பேச்சுடன் வைத்து விட்டான்."செல்ஃபோன் வாங்கிட்டியா?" என்றபடி அவனது செல்ஃபோனை வாங்கி பார்த்தேன், எரிக்ஸன் ஒரு கரும்பலகை துடைப்பான் அளவில் கனமாக இருந்தது.ஒரு நிமிடம் வரும் இன்கமிங்க் அழைப்பிற்கு பத்து ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்ட காலம் அது.பங்களா, காருக்கு அடுத்தபடியான அந்தஸ்தைப் பெற்றிருந்தது செல்ஃபோன் என்று சொன்னால் நம்புவதற்கு இப்பொழுது கடினமாகத்தான் இருக்கும்.

"ஆமாம் மாப்ள,என்னோட பிஸ்ணஸுக்கு இது அவசியம் தேவை, மேலும் எனக்கு ஒரு பார்ட்னர் வேனும்,முதல் கூட ரொம்ப போட வேண்டாம், நல்லா உழைக்கிற புத்திசாலி தான் வேணும்,அதான் உன்ன பாக்க வந்தேன், ". என்னைத்தான் புத்திசாலி என்று சொன்னான்!

"ஆனா என்கிட்ட தான் காசில்லையே, ஏற்கனவே சேட்டுகிட்ட வாங்கின 4300 ரூ கடன்". இந்த பொன்னான வாய்ப்பை இழக்கவும் மனதில்லை.

"கஷ்டத்தோட கஷ்டமா, உன்னோட வண்டி புக்க அடமானம் வெய், எப்படியும் பதினஞ்சாயிரம் கெடைக்கும், மீதி பணத்துல ,வெறும் 5550 ரூ குடுத்தா போதும் எனக்கு நீ பார்ட்னர்". பதில் சொல்ல எத்தனிக்கும் முன் போட்டியாக ஒலித்தது, அவனது செல்ஃபோன், "ஹலோ , உமேஷ் ஹியர் நான் முக்கியமான ஒருத்தர்கிட்ட பேசிகிட்டு இருக்கேன், அப்புறமா பேசறேன், பை.".அவன் குறிப்பிட்ட அந்த 'முக்கியமான ஒருத்தர்' நான் தான் என்பது பேரின்பதிர்ச்சியாக இருந்தது,பெருமையாக இருந்தது."யாரு மச்சான் ஃபோன்ல?" என்று கேட்டதற்கு, என்னக்கு மேல ஒரு பாஸ் இருக்காரு அவரு தான் என்று அலட்சியமாக சொன்னான்.தனது பாஸை புறக்கணித்துவிட்டு என்னிடம் பேசுவதை எண்ணி எனக்கு உச்சந்தலையில் என்னவோ செய்தது.மேலும் சில நாட்களுக்கு முன் சாதாரணமாக இருந்தவன் இப்போது வசதியோடு கணப்படுவது தெம்பளித்தது."சரி உமேஷ் நான் முடிவு செஞ்சிட்டேன் "நாடகத்தனமாக கையை நீட்டினேன்."ஆனா, போட்ட பணத்தை எடுக்கலாமா?"

"கோபி, சர்கஸ்ல யானையை கயிறால தான் கட்டி வெப்பாங்க ஆனா அது தப்பிக்காது, குட்டி யானைய சங்கிலியால கட்டுவாங்க, ஏன் தெரியுமா?".

என் கேள்விக்கு தொடர்பின்றி ஒரு கேள்வி பதிலாக வந்ததில் கொஞ்சம் குழம்பினேன், ஒரு வேளை இதற்கு பதில் சொல்லா விட்டால் பார்ட்னர் ஆக்கி கொள்ள மாட்டானோ என்றும் ஒரு பயம். ஆகவே மையமாக மண்டயை ஆட்டி வைத்தேன்.குழப்பம் அறிந்து கொண்டு அவனே விடை முடிச்சை அவிழ்த்தான்."சின்ன வயசுல யானையை சங்கிலியால கட்டினதும் அதை தகர்த்து ஓட முயற்சி செய்யும்,அதால முடியாது, ஸோ எப்பவுமே நம்ம இந்த கட்டுலயிருந்து தப்பிக்க முடியாதுன்னு ஒரு முடிவுக்கு வரும், அப்படி முடிவு செஞ்ச யானைய கட்ட சங்கிலி ஏன் கயிறு கூட வேண்டாம், வெறும் நூலே போதும், மைன்ட் செட் புரியுதா? நல்லதே நெனைச்சா நல்லதே நடக்கும்". "அடேங்கப்பா என்னமா பேசுறான்" என்று வியந்தேன், எனக்கும் அவனது நம்பிக்கை தொற்றிக்கொண்டது, அதுவும் முழு நம்பிக்கை.மேலும் ஒரு நாய் கதை, ஒரு தவளைக் கதை மற்று சில மீன் கதைகளைச் சொல்லி என்னை உற்சாகபடுத்தினான்.

"சரி கோபி, நான் கெளம்புறேன், நாளைக்கு ஒரு கான்ஃபரன்ஸ் இருக்கு நீயும் வரணும்" என்று கூறி விட்டு தனது பஜாஜ் எம்80யை கிளப்பி சென்றான். வரும்போது எலிகாப்டர் போல் தொன்றிய அவன் வாகனம் இப்பொது எனக்கு புஷ்பகவிமானம் போல் தோன்றியது.தெருவில் யாரும் இல்லாதிருந்தால் அவன் வந்து சென்ற திசையை தலை தாழ்த்தி வணங்கியிருப்பேன்.கான்ஃபரன்ஸ் என்றதுமே இனிய உணர்வுகளும், கற்பனைகளும் ப்ரவகிக்க தொடங்கியது.

எனது கற்பனைக் கான்ஃபரன்ஸில் காரசாரமான விவாதம்,அத்தனை பொறுப்புகளையும் யார் சுமப்பது என்று சர்ச்சை, இறுதியில் கோபியை விட்டால் வேறு யாரும் இதை பேணி காக்க முடியாது என்று முடிவு செய்து என்னையே டைரக்டர் ஆக்கிவிடுகிரார்கள் மாதம் பதினைந்தாயிரம் சம்பளம்.நான் தங்குவதற்கு நீச்சல் குளம் கூடிய வீடு, ஃபியட் யூனோ வண்டி ,என்னை வஞ்சித்த அந்த ஆறு பேருக்கும் ,பியூன், செக்யூரிட்டி போன்ற வேலை, இதைத் தவிர ரொக்கமாக 4300ரூ பணம் என்று கற்பனை சென்று கொண்டிருந்தன.

மறுநாள் மாலை டை சகிதம் வந்த உமேஷ், எனக்கும் ஒரு டை கொடுத்து அணியச் சொன்னான்."கெளம்பலாமா?" என்றபடி தனது கருப்புப் பையை என்னிடம் கொடுத்தான்.அவனது சட்டைப் பையில் முக்கியமான காகிதங்கள் இருந்ததால்,அவனுடைய செல்ஃபோனும் என் சட்டைபையில் தஞ்சம் புகுந்தது.டை பை செல்லுடன் நானும் ஒரு தினுசாகத்தான் இருந்தேன்.எதிர் வீட்டு மாலதி முதன் முதலாக என்னைப் பார்த்து சிரித்ததே என் தோற்றத்து மேன்மைக்கு சாட்சி.கான்ஃபரன்ஸ் நடப்பதாக இருந்த ஹோட்டலை தவிர்த்து நேராகப் போனான்.

"என்ன மச்சி இந்த பக்கம் போற?".

"ஒரு சின்ன வேலை இருக்கு முடுச்சிட்டு வந்துடலாம், கான்ஃபரன்ஸ்க்கு இன்னும் நெறைய நேரம் இருக்கு", என்றவன் பஜாஜ் எம் 80ஐ நிறுத்திய இடம் ஒரு வண்டிப் பட்டறை."இது தான் நான் வாங்கியிருக்குற பைக்" என்று ஒரு யமஹாவை காட்டினான்,நாங்கள் யமஹாவிற்குத் தாவி "ஜென்னிஸ் ரெஸிடன்ஸீ" என்று நியான் விளக்குகள் உறுதி செய்த இடத்தை அடைந்தோம்.என் மூச்சே நின்றுவிடும்படி ஒரு அழகு தேவதை முண்டா சுடிதாரில் நின்றுகொண்டிருந்தாள்.எங்களைக் கண்டவுடன் அருகில் வந்தாள்."கோபி இதுதான் வித்யா,நம்ம கூட பிஸ்னஸ் செய்யறாங்க" என்று அறிமுகபடுத்தினான் உமேஷ்."ஓ! இவர் தான் கோபியா? ஸ்மார்ட்டா இருக்காரே" என்றபோது நான் இப்பூவுலகில் இல்லை.போதாக்குறைக்கு என் கையை பிடித்துக் கொண்டு "சரி நேரமாச்சு உள்ள போகலாம்" என்றபடி இழுத்துச் சென்றாள்,அந்த கான்ஃபரன்ஸ் அறையில் என்னருகிலே அமர்ந்தாள்.அதன் பிறகு யார் யாரோ வந்தார்கள்,என்னென்னவோ பேசினார்கள், எதுவும் எனக்கு எட்டவில்லை, எனது கனவு ஃபியட் யூனோ காரின் இடபக்க இருக்கைக்கு இவள் தான் பொறுத்தமானவள் என்று முடிவி செய்து விட்டேன்.அவளை மணம் முடிப்பதாக கற்பனையை துவக்கினால், அது நீண்டச் சங்கிலியைப் போல நீண்டது. களைப்பாக வீடு திரும்பும் நான் சொஃபாவில் அமர்கிறேன், எனது கழுத்து டையை தளர்த்திவிடுகிறாள்.

தனது சேலை தலைப்பால் என் வியர்வையை ஒற்றி எடுக்கிறாள்,தேநீர் கொடுத்து புத்துணர்ச்சி பெறச் செய்கிறாள்,"என்னங்க கோவில் கூட்டிகிட்டு போங்க" என்றதும் நான் குளித்து தயாராகிறேன்.அவள் பெரிய பொட்டும், தலையில் பூவோடும் பட்டுபுடவைக்குள் புகுந்து தேவதையாய் இருக்கிறாள்.இருவரும் காரில் புறப்பட்டு செல்கிறோம், வழியில் உமேஷ் தனது யமஹாவில் வருகிறான், என்னை வண்டியை நிறுத்த சொல்லி அவனோடு பைக்கில் போகிறாள் எனக்கு டாட்டா காட்டியவாபடி.விதிர்விதிர்த்து அசல் உலகுக்கு வந்தேன்.ஒரு வேளை உமேஷுக்கும் இவள் மீது நாட்டம் இருக்குமோ என்ற ஆழ்மதின் ஐயம் தான் இந்த அற்புதமான கற்பனையோட்டதை கெடுத்துவிட்டது.இது எதுவும் அறியாத வித்யா,"எதுக்கு அப்போ கை ஆட்டினீங்க?".

"நானா? எப்போ?"

"நம்ம சீனியர் பேசும்போது"

அப்போதுதான் உணர்ந்தேன், எனது கனவுலகின் அசைவுகள், நிஜத்திலும் பிரதிபளித்தது என்று.சரி சமாளிப்போம்,

"அது ஒண்ணும் இல்ல, ஒரு சந்தேகம்...இப்போ இல்ல..." என்றேன்.இதை விட மோசமாக உளர எவர்க்கும் வாய்ப்பு கிடைக்காது என்பது போல் சிரித்தால் வித்யா.

அப்போது தான் கவனித்தேன், எதிரே உள்ள வெள்ளைப் பலகையில், தடிமனான பேனாவால் சில உருண்டைகளும், ஒவ்வொரு உருண்டையையும் அம்புக்குறிகளால் சிறிய உருண்டைகள் மூன்றுடன் இணைக்கப்பட்டிருந்தன.ஒரு பக்கத்தில் ஆறு முதல் நூற்றியிருபது சதவிகிதம் வரை ஒழுங்கற்ற ஏற்றத்தில் எழுதப்பட்டிருந்தது. பலகையின் கீழ்ப் பகுதியில் ஒரு ஆறு இல்லக்க எண் இருந்தது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

உமேஷ் "எப்படி மீட்டிங்க்?" என்றான்.

"ஸூப்பர் டா"

"எப்போ சேரப் போறீங்க?" என்ற என் எதிர்கால மனைவியைப் பார்த்து "கூடிய சீக்கிரமே" என்றேன் அவள் கண்களை உற்று பார்த்தவாறு."இன்னிகே சேர்ந்தா ரொம்ப நல்லது" என்றாள் கள்ளி, நான் கிளர்ச்சியடைந்தேன் என்று நான் சொல்லி தான் உங்களுக்கு தெரிய வேண்டுமா?

அடுத்த நாளே வண்டியின் பத்திரம் அடகுக் கடையில் அடைக்கலம் பெற்றது சங்கிலி விடுதலை பெற்றது.உமேஷுக்கு பணம் கொடுத்தாயிற்று."சாயங்காலம் வருவேன்,அதுகுள்ள உன்னோட ரூமை ஆஃபீஸ் மாதிரி தயாரா வை"என்று விட்டு கிளம்பிவிட்டான்.நான்கு மணி நேரத்திற்குள் குறைந்தது இருபது முறை என் அறையின் உள்ளமைப்பை மாற்றி பின் ஒரு மாதிரி திருப்தி அடைந்தேன்.ஒரு (வெட்டி) கௌரவம் கருதி ஒரு பழைய ஹிண்டு செய்தித்தாளும் என் மேசையில் ஆஜர்!உமேஷ் எந்நேரமும் வரக்கூடும்,அது வரை கொஞ்சம் கற்பனைகள் வேண்டாமா?இதோ இங்கிருக்கிறேன் என்பது போல் வரத் தொடங்கின."அந்த மேத்தா அண்ட் மேத்தா ஃபைல் எங்க?","அந்த பத்து கோடி கான்ட்ராக்ட் நமக்கு தான்னு உறுதியாச்சு","ப்ரியா இன்டஸ்ட்ரீஸ் செக் வந்தாச்சா?","எனக்கு டெல்லியில ஒரு மீட்டிங்க் இருக்கு ஒரு தனி விமானம் ஏற்பாடு பண்ணுங்க" என்ற ரீதியில் என் கட்டளைகளும் ,கேள்விகளும் வந்தன வந்தன வந்து கொண்டே இருத்தன.
(நன்றி தமிழ் திரைப்படங்கள்).

"அட் எனி காஸ்ட் மந்திரிய பாத்தே ஆகணும்" என்றது கொஞ்சம் டூ மச் ரகம்."இன்னும் ஒரு வருஷத்துக்கு எந்த புது வேலையும் செய்ய முடியாது" இது கொஞ்சம் பரவாயில்லை ரகம்.

"ஏன்டா ஒரு மாவு மில்லுக்கு போய்ட்டு வர்றதுக்கு அவ்வளவு அலுப்பா? செய்ய முடியாதா?" என்றபடி என்னறையில் என் அம்மா.சட்டென என் சுழல் நாற்காலி சுருங்கி சூம்பிப்போன முக்காலியானது, அழகான காரியதரிசி (ரீட்டா என்று அழைத்தாக நியாபகம்) நின்ற இடத்தில் என் அம்மா கையில் அரிசி தூக்கோடு.

"சரி போறேன் உமேஷ் வந்த இருக்க சொல்லுமா" என்று கிளம்பினேன்.திரும்பி வரும்போது வீட்டு வாசலில் உமேஷின் யமஹா ஆறுதலளித்தது."ரூம் நல்லா இருக்கு," என்றவன் ஒரு அட்டைப் பெட்டியிலுருந்த நான்கு பாட்டில்களை எடுத்து எனக்கு விளக்கினான்.

"இது 'நோயின்ஃபெக்' திரவம், இதை காது குடைந்ததும், கொஞ்சம் காதில் விட்டு கொண்டால் இன்ஃபக்ஷன் வராது,இந்த சிகப்பு எண்ணெய் 'மல்டீபர்பஸ்' ஆயில்ன்னு பேரு, இத தினமும் மூனு வேளை சாப்பிட்டா, உடம்பு சூடு குறையும், தலைக்கும் தேய்க்கலாம் , புண்களுக்கும் போடலாம், அதோ அந்த கிரீம் நகத்தை சுத்தப்படுத்தும்"
"சரி இதெல்லாம் வெச்சி நான் என்ன பண்ணனும்?" கொஞ்சம் போல் அழுகை வந்தது.

"அன்னிக்கி மீட்டிங்க்ல கேட்டியேடா, இதெல்லாத்தையும் நீ உபயோகிக்கனும், அப்புறம் விக்கணும்"

என் கற்பனைகளுக்கும் இந்த தொழிலுக்கும் தொடர்பு எதுவும் இல்லை என்று உணர்ந்தேன்.

"5500 ரூபாய்க்கு இவ்வலவு தானா?"

"இங்க பாரு சில புத்தகங்கள், சில சீடீ எல்லாம் இருக்கு, இத கேளு அத படி, பிஸ்ணஸ் தன்னால நடக்கும்"

"ஐயா அம்மா எண்ணெய் வாங்கலியா தென்னைமரக்கொடி எண்ணெய் " என்பது போல் கூவிவிற்கும் எண்ணமே எனக்கு விரக்த்தியை கொடுத்தது.

காதுகுடைய பட் வாங்கினாலே எரிந்து விழும் என் அப்பாவிற்கு அந்த "நோஇன்ஃபெக்"கின் நான்கு இலக்க விலை தெரிய வந்தால், வீட்டில் ஒரு மரணம் உறுதி.என் குழப்பத்தை அறிந்தவனாக, "இன்னிக்கு ஒரு ஃபாலோ அப் இருக்கு நீயும் என் கூட வா, அப்போ தான் உனக்கு தெளிவு கிடைக்கும்"

இருவருமாக கிளம்பினோம்.பலத் தெருக்களை தாண்டியதும் வண்டியை நிறுத்தினான்."இன்னிக்கும் அதே ஹோட்டல்ல கான்ஃபரன்ஸ் இருக்கு" என்றான், உடனே வித்யா கண்முன் வந்து சென்றாள், அடுத்து அடகுகடைக்கார சேட்டும் வந்து சென்றார்.பத்து ரூபாய் தாளை என்னிடம் கொடுத்த உமேஷ்,"ஒரு ஓரமா நின்னு தம்மடிச்சிட்டு இரு, நான் வந்திடுவேன், அஞ்சு நிமிஷதுக்கு ஒரு தடவை எனக்கு ஃபோன் பண்ணுடா". என்றும் இல்லாத் திருநாளாக பணம் கொடுத்து விட்டு மறைந்து சென்றான்.

ஒரு ஆழ்ந்த புகை ஈர்ப்பு வைபோகத்தை கொண்டாடிவிட்டு, அவனுக்கு ஃபோன் செய்தேன் சில்லரை ஃபோனில்.

"ஹலோ உமேஷ் ஹியர்"

"உமேஷ், கோபி பேசறேன் டா, நான் இங்கியே தான் இருக்கேன்"

"அடடா சொல்லுங்க சார் எப்படி இருக்கீங்க?"

"மாப்ள நான் கோபிடா"

"அப்படியா? ஒரு டென் தௌசண்ட் செக்கா குடுங்க மீதிய பணமா குடுங்க, பை" துண்டித்து விட்டான்.

என்னாச்சு அவனுக்கு? ஒரு வேளை க்ராஸ்டாக்காக இருக்கலாம்,சிறிது நேரம் கழித்து செய்வோம் என்று நினைத்தேன்.இன்னுமொரு தம்மை அடித்து விட்டு, மறுபடியும் அழைத்தேன்.

"ஹலோ உமேஷ் ஹியர்"
"உமேஷ், கோபி பேசறேன்"

"நான் முக்கியமான ஒருத்தர் கூட பேசிகிட்டு இருக்கேன்,அப்புறமா கூப்பிடுங்க, பை".இணைப்பு இறந்தது.
அதற்கு பின் பலமுறை அழைத்தும் தவிர்த்தவன் ஒரு முறை மட்டும் எடுத்து கோபி நீ நேரா ஹோட்டலுக்கு போ, நானும் நேரா வர்றேன் என்று நடுத் தெருவில் விட்டுவிட்டு சென்றான். வீட்டுக்கு போய் என் வண்டியை எடுத்து செல்வதா அல்லது இப்போதே பேருந்து பிடித்து செல்வதா என்று குழம்பிய படி நின்றேன்.வித்யவின் நினைவு வரவே ஒரு ஹால்ஸ் வாங்கி போட்டுக்கொண்டு பஸ்ஸில் ஏறிச் சென்றேன்.

உமேஷுடனான அந்த சம்பாஷனைகள் முன்பே ஒரு முறை நடந்ததைபோலவும், ஆனால் இப்போது வேதனை அளிக்கும் அவைகள் முன்பு இன்பமாக இருந்ததும் சிற்றறிவுக்கு எட்டியது.எனது பலவீனமான தருணத்தை பயன்படுத்திக் கொண்டுவிட்டான்.இவனைப் பற்றி வித்யாவிடம் சொல்ல வேண்டும் அவளை இந்த கூட்டத்திலிருந்து காப்பாற்றவேண்டும், உணர்ச்சிவசப்பட்டு"கொஞ்சம் வேகமா போங்க" என்று கத்தி பேருந்தில் பல முறைப்புகளையும் நகைப்புகளையும் சம்பாதித்தது எரிந்த கொள்ளியில் எண்ணெய்.

நான் சென்றடையவும், உமேஷ் இன்னும் ஒரு பலிகடாவுடன் வந்து சேரவும் சரியாக இருந்தது. எல்லோரையும் வரவேற்றுக் கொன்டிருந்த என் தேவதை புடவையில் இருந்தாள்.என்னைப் பார்த்து லேசாக சிரித்து விட்டு உமேஷிடம் சென்றாள்.

"சந்தோஷ் இவங்க தான் வித்யா, நம்ம கூட பிஸ்னஸ் செய்யறாங்க", அதற்கு வித்யா "ஓ, இவர் தான் உங்க ஃப்ரெண்ட் சந்தோஷா, ரொம்ப ஸ்மார்ட்டா இருக்காரே!"

" யூ டூ வித்யா?" என்ன உலகம் இது, எப்படி என் கடன்களை அடைக்கப் போகிறேன்? தலையைச் சுற்றியது எனக்கு.

உங்களுக்கு ஒன்று மட்டும் சொல்கிறேன், "குலதெய்வமாகவே இருந்தாலும், டை அணிந்து கொண்டு, கருப்பு பையோடு, பஞ்ச தந்திரக் கதைகள் சொல்லிக் கொண்டு வீட்டு வாசலுக்கே வந்தாலும், கதவை உள்பக்கம் தாளிட்டு, பூட்டி, கருப்பு கம்பிளி போர்த்திக் கொண்டு கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொள்ளுங்கள்"