Tuesday, July 27, 2010

கொள்கையின் நிறம் கருப்பு

வணக்கங்க,எனக்குன்னு யாருமே கெடையாதுங்க, அதான் சும்மா ஒங்ககிட்ட கொஞ்சம் பேசலாம்னு நெனைச்சேன்.எனக்கு சொந்தம்னு சொல்லிக்க என்னோட கொள்கைகள் தான் இருக்கு.யாரும் இல்லாத எனக்கு அதுங்க தான் அம்மா,அப்பா, பாட்டி, மச்சான், ஒண்ணு விட்ட சித்தி எல்லாமே.அப்படி என்னடா உன்னோட கொள்கைன்னு கேட்கற மூடுல நீங்க இல்லேன்னாலும் நான் சொல்ற மூட்ல இருக்கேன்.ஒன்னா ரெண்டா கூட்டு குடும்பம் மாதிரி நெறைய இருக்கு, முதன் முதலா ஒரு பதிமூனு வயசு இருக்கும், அப்ப என்னோட அம்மா உசுரோட இருந்துச்சு, கோவிலுக்கு போனோம். காசு குடுத்து நிக்குற வரிசையில வேகமா போகவிடுறாங்க, தர்ம தரிசனத்துல மட்டும் ஒரே தேக்கம். கொதிச்சி போய் கோபமா நான் வெளிய வந்திட்டேன்.அன்னிக்கு முழுக்க கோபமாவே இருந்தேன். என்னைப் பொறுத்தவரைக்கும் நீண்ட நேரக் கோபத்துக்கு பேரு தான் கொள்கை.கோயிலுக்கே இனி போகக்கூடாதுன்னு ஒரு கொள்கை சும்மா கம் போட்ட மாதிரி ஒட்டிகிச்சு. அடுத்த வருசமே அம்மாவும் போனதுனால யாரும் என்ன வற்புறுத்தலை.இப்படியே டீக்கடை , பஸ்ஸுன்னு போன இடம் எல்லாம் ஒரு கொள்கை வந்து சேர்ந்துகிச்சு. ஒரு சத்திரத்துல தங்கினேன்,ஒரு வக்கீல் எனக்கு பள்ளிகூட ஃபீஸ் எல்லாம் கட்டி படிக்க வெச்சாரு. சத்திரதுல சாப்பாடு, மதியம் சத்துணவு, செல நேரம் ராத்திரிக்கு வக்கீல் ஐயா வீட்ல சில்லரை வேலைகளிருந்தா செஞ்சிட்டு அங்கயே சாப்பாடு, இப்படி நல்லா போய்க்கிட்டு இருந்துச்சு பத்தாப்பு முடிக்குறவரை.அப்புறம் சத்திரத்தை யாரோ ஒரு மந்திரி வாங்கிட்டான்னு வெளிய பத்தி விட்டாங்கிய.ஒரு மாசம் வக்கீலோட வீட்டு திண்ணைல தங்கினேன், எதோ பட்டு புடவை காணாபோச்சுன்னு சொல்லி முதுகெல்லாம் சூடு வெச்சாங்க, வெளிய தொரத்திவிட்டுடாங்க, உங்களுக்கே தெரியும் திருடக்கூடாதுன்னு ஒரு அடிப்படை கொள்கை கூட எனக்கு இல்லாமலா ?.
ஒரு பேப்பர் ஏஜண்ட் கிட்ட காலைல பேப்பர் போடுற வேலைல சேர்ந்துகிட்டேன். ஒரு பெரிய கூடாரம் இருக்கும் அதுல என்ன மாதிரி பத்து பேரு தங்கியிருந்தோம்.வெறும் தரை தான்,நடு ராத்திரி பேப்பர் வந்ததும் எந்திரிச்சி, ஏரியா பிரிச்சி எடுத்துகிட்டு போகனும்.பகல்ல ஏஜண்டோட மச்சான் வெச்சிருக்குற ஹோடல்ல வேலை.குறிப்பா இது தான்னு சொல்லமுடியாது, என்ன வேணும்னாலும் செய்யனும், இந்த டேபிள் கூட தொடச்சிடலாங்க, அந்த கழிப்பறை கீளீனிங்க் தாங்க ரொம்ப கஷ்டம்.காய்கறி மூட்டைய கொண்டு போய் ஸ்டோர் ரூம்ல போடணும். இத்தனைக்கும் அங்க சம்பளம் இல்லை, ரெண்டு வேளை சாப்பாடு தான். பேப்பர் ஏஜண்ட் மாசத்துக்கு நானூறு ரூபாய் தருவாரு, அதுவும் மாசாமாசம் இல்ல, எப்போவாச்சும் , ஊருக்கு போகனும்னா அல்லது தீபாவளி , பொங்கல் பண்டிகைன்னா சேத்து வச்சி குடுப்பாரு, சம்பளம் கூடக் கேட்டா அப்போ தங்குற எடத்த நீயே பாத்துக்கன்னு சொன்னதுனால யாரும் பேச மாட்டோம். ஏஜண்ட் கூட பரவாயில்லைங்க, அந்த சூப்பர்வைசர் தான் ரொம்ப மோசம், அங்க இருந்தவங்கள்ல நான் தான் அதிகம் படிச்சவன், அப்படியும் என்ன மதிக்க மாட்டாரு சூப்பர்வைசர். ஒரு தடவை ஒரு நர்ஸ் வீட்ல பேப்பரோட சேர்த்து அவங்க புருஷனுக்கு தெரியாம ஒரு லெட்டர் தரனும்னு சொன்னாரு, சரியா என்னன்னு புரியலைன்னாலும், என்னோட ஏதாவதொரு கொள்கைக்கு அது எதிராயிருக்கும்னு தோணிச்சு.போயா நீயும் உன்னோட வேலையும்ன்னு விட்டுட்டேன்.சம்பளம் பாக்கி வாங்கும்போது நான் உண்மைய சொன்னா போலிஸ்ல பொய் வழ்க்கு போட்டு உள்ள வைப்பேனுட்டான் சூப்பர்வைசர்.

ஒரு கெமிகல்ஸ் கம்பெனில டெலிவரி பைய்யனா சேர்ந்தேனுங்க,பெரியவரு ஆரம்பிச்ச கம்பெனி அவரு மகங்க ரெண்டு பேரும் பாத்துகிட்டாங்க, மூத்த மகன், பொம்பளை சகவாசம்,ரெண்டாம் மகன் முழுக்குடிகாரன்.ராத்திரிக்கு அப்பாரு வீட்டுக்கு போனதும் ஒரே கூத்தும் கும்மாளமும் நடக்கும் குடௌன்ல,சின்னவருக்கு நான் தான் சரக்கு வாங்க போகனும் , பெரியமகனுக்கு மெடிக்கல் ஷாப்ல போய் அசிங்கம் புடிச்ச பலூன் வாங்கி வரனும். ரெண்டு நாள் பொறுத்து பாத்தேங்க. பொறுக்க முடியல, சரக்கு வாங்க குடுத்த காச நேரா பெரியவர் வீட்ல குடுத்துட்டு வேலைய விட்டே நிக்கலாம்னு போனேன்.அங்க போனா அந்த ராத்திரி நேரத்துல ஆபீஸ் டைபிஸ்ட் அக்கா நைட்டியோட கதவ தொறக்குறாங்க.ரெண்டு நாளைக்கு போய் என்ன சம்பளம் குடுப்பாருன்னு நெனைச்சேன்,ஆனா முன்னூறு ரூபாய் கொடுத்துட்டாரு பெரியவரு.ஒவ்வொரு தடவையும் வேலைய விடும்போது ஒரு அசரிரி சிரிப்பு சத்தம் கேட்கும் எனக்கு. அப்போ நெனைச்சிக்குவேன், செல்வம், கல்வி, வீரம், தரித்திரம்னு எல்லாத்துக்கு ஒரு தேவதை இருக்குறா மாதிரி கொள்கைக்குன்னு ஒரு தேவதை என்னை வாழ்த்துதோன்னு. நான் தான் கலியுகத்துல கொள்கி அவதாரம்னு கூட தோணும். ஊரைவிட்டு போய் சம்பாதிக்கலாம்னு முடிவு செஞ்சு, இருந்த மூனு சட்டை,ரெண்டு பேண்ட், மூனு கைலியோட, கெளம்பி செண்ட்ரல் பஸ் ஸ்டேண்ட்க்கு போய்ட்டேன். ராத்திரி பத்து மணிக்கு மறுபடியும் தேவதையோட சிரிப்பு கேட்டுச்சு அப்போ தான் புரிஞ்சிச்சு அது சிரிப்பு இல்லங்க, பசியில வயிறு சத்தம் போடுது.போய் ரோட்டோரக் கடைல நாளு இட்லி சாப்ட்டேன்.ரேடியோ பெட்டில "ஆனந்த தேன் காற்று தாளாட்டுதே, அலைபாயுதே" பாட்டு மணிப்பூர் மாமியார்ன்னு வெளிவராத ஒரு படத்துலேந்து ஓடிச்சு.பாட்டுல என் முழு வயிறும் நெரம்பிடிச்சுங்க.திரும்ப பஸ் ஸ்டேண்ட் வந்தா அங்க ஒரு நடுத்தர வயசுக்காரரு,இந்நேரத்துக்கு இங்க இருந்தா சந்தேக கேஸ்ல புடிச்சுகிட்டு போகும் போலீஸ் அதுனால பக்கத்துல இருக்குற கொட்டகைல படம் பாக்கலாம்னு சொன்னார். சினிமா பாக்ககூடாதுன்னு ஒரு கொள்கை சினிமா டிக்கெட் விலைய ஏத்தினப்போவே இருந்துச்சு, இப்போ போலிஸா கொள்கையான்னு பட்டி மன்றம் வச்சி பாத்தா, சாலமன் பாப்பையா மாதிரி "போலிஸ் கொள்கை"ன்னோ, "கொள்கையுள்ள போலிஸ்"ன்னோ குழப்பிக்காம, போலிஸ் பயம் தான் ஜெயிச்சுதுங்க."வறுமையின் நிறம் சிகப்பு" படம் ரொம்ப நல்லா இருந்துச்சு, என்ன பத்தின கதை மாதிரி தோணிச்சு எனக்கு.என்ன வித்தியாசம்? அதுல டெல்லி எனக்கு திருச்சி, அவர் எதொ பெரிய படிப்பு நான் பத்தாவது அவ்வளவு தான் வித்யாசம்.படம் பாத்ததும் அந்த நடுத்தரவயசுக்காரரு "நீ ஏன் விந்தி விந்தி நடக்குற ஒனக்கு ஹிரண்யா இருக்கா?"ன்னாரு."அதென்னங்க ஹிரன்யா?"ன்னு கேட்டேன், டாக்டர்கிட்ட போனா ரொம்ப துட்ட புடுங்குவாங்க, நானே பாத்து சொல்றேன், அந்த சந்து மறைவுக்கு வான்னு கூப்பிடாரு.நானும் நம்பி போனேன், நல்ல வேளையா அஹிம்சைக் கொள்கை இல்லாததுனால செவுத்தோட சேத்து நாளு சாத்து சாத்திட்டு வந்தேன்.எதோவொரு வண்டியை புடிச்சு எங்கயோ போகனும்போல இருந்துச்சு.மெட்ராஸ் பஸ்ல ஏறிட்டேன்.ரொம்ப பயமா இருந்துச்சு மெட்ராஸ் சேரும் வரைக்கும்,பஸ்ல பக்கத்துல யாரு உக்காந்தாலும் , நான் தூங்கவே இல்ல. பேரிஸ் கார்னர்ல ஒரு ஹோட்டல்ல வேலைக்கேட்டேன்,நான் ஒருத்தன் நிக்கிறமாதிரியே முதலாளி காட்டிக்கலை.அப்போ ஒரு வெள்ளைவேட்டி சட்டையோட ஒருத்தர் வந்தார், "தம்பி ஊருக்கு புதுசா? சாப்பிட்டியா?"ன்னு கேட்டாருங்க. என்னைய அம்மாவுக்கு அப்புறம் அப்படி கேட்டது அவரு தாங்க."வேலை வேனும்"னு சொன்னதும்,"நல்லா சாப்ட்டா தானே நல்லா வேலை செய்யலாம்"னு சொல்லி "பிடி காசு, சாப்பிடு" என்றார். பூரி கெழங்கு ஒரு பிலேட், ஒரு வெங்காய ஊத்தப்பம் சாப்ட்டேன், மறுபடியும் சிரிப்பு சத்தம் கேட்டுச்சு, வயிறு நன்றி சொல்ற சத்தங்க.ஆனா ஹோடல்ல பக்கத்துல இருந்தவங்க எல்லாம் என்ன மொறைச்சி பாத்து மூக்க மூடிக்கிட்டாங்க."என் மாப்ளை அண்ணா நகர்ல ஆட்டோ ஓட்டுறான் அவன்கிட்ட இந்த பலகாரத்தையும் என் மகளுக்கு கொஞ்சம் மருந்தும் கொடுத்துட்டு இங்க வா"ன்னாரு வெள்ளைவேட்டி சட்டை(பேரு தெரியலங்க)."இந்தா பிடி பைய"ன்னாரு, "எப்படி போனும் தெரியுமா? அதோ நிக்குது பாரு பிடி அந்த பஸ்ஸ, தண்ணி தொட்டி ஸ்டாப்ல எறங்கி ரோட்ட க்ராஸ் பண்ணா ஆட்டோ ஸ்டேண்ட் அங்க, வாசுன்னு ஒரு ஆட்டோ ட்ரைவர் இருப்பாரு அவர்கிட்ட இத கொடுக்கனும், அதே பக்கம் வரும் பஸ்ஸ பிடி திரும்பி இங்க வரலாம்".

பஸ்ஸுக்கும் பணம் குடுத்தாருங்க. அடிக்கடி "பிடி" "பிடி"ன்னு சொன்னதுனால அவர பிடியண்ணன்னு நான் மனசுல ஃபிக்ஸ் பண்ணிகிட்டேன்.பஸ்லயிருந்து கீழ எறங்குறதுதான் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.னல்ல கூட்டம் ஆனலும், பலகாரம் மருந்து பையை பத்திரமா வெச்சிருந்தேன், ரோடு தாண்டி அந்த பக்கம் போகும் போது நெறைய ஆட்டோ நின்னுகிட்டு இருந்துச்சு, எல்லா ஆட்டோகாரங்களும் ஒரு சஃபாரி சட்டைகாரர சுத்தி நின்னு பேசிகிட்டிருந்தாங்க, சவாரியா இருக்கும், வாசு சவாரில போய்ட்டார்ன்னா அப்புறம் புடிக்க முடியாதுன்னு, அவசர அவசரமா ஓடிப் போய் "இங்க யாருங்க வாசு?"ன்னேன். "நீங்க யாரு தொரை"ன்னு சம்மந்தமே இல்லாம அந்த சஃபாரி சட்டைக்காரரு கேட்டாரு," அவர் மாமனார் அனுப்பினாரு சார் இத கொடுக்கச் சொன்னார்"ன்னு சொன்னேன்.

அந்த பையையும் புடிங்கி வெச்சிகிட்டாரு.

"வாசு ஏற்கனவே மாமியார் வீட்ல தான் இருக்காரு , எந்த ஏரியால மாமனாரு இருக்காரு?".."பேரிஸ் கார்னர்லங்க, நான் ஊருக்கு புதுசு, இன்னைக்கி காலைல தான் வந்தேன்"ன்னு சொன்னேன்...

"மாட்டினா இப்படி சொல்லனும்னு சொல்லிக் கொடுத்தாங்களா?"ன்னு பேசிகிட்டே இருந்தவரு பளார்னு அறைஞ்சிட்டாருங்க என்னை.

இடுப்புலேந்து ஒரு பெரிய ஃபோன் எடுத்து, யாருக்கோ ஃபோன் பண்ணாரு,இன்னொரு தடவை ஃபோன எடுத்து "கம்"ன்னாரு ரெண்டு நிமிஷத்துக்கெல்லாம் ஒரு போலிஸ் ஜீப் வந்து நின்னுச்சு.

"பிடிங்க அவன"ன்னு என்ன கைய காட்டினதும், மூனு நோஞ்சான் ஏட்டு வந்து என்ன ஜீப்ல ஏத்திட்டாங்க. காலைலேயிருந்து பிடி பிடி ன்னு கேட்டவனுக்கு இந்த பிடி தாங்க பீதிய கெளப்பிடிச்சு.ஸ்டேஷன் கூட்டிகிட்டு போனாங்க.நம்ம பிடியண்ணே எனக்கு முன்னாடியே அங்க ஆஜர். டௌசரும் பனியனும் அவருக்கு அவ்வளவு நல்லா பொருந்தலைங்க.

பதினஞ்சு நாள் உள்ள வெச்சி நெனைக்கும்போதெல்லாம் அடிப்பாங்க.அப்புறம் வெளிய வந்து, ஊரெல்லாம் சுத்தி,என்னய நீங்க பாத்திருக்கலாம் ஹோட்டல்ல,வீட்டுக்கு தண்ணீ கேன் எடுத்துட்டு வர்றவனா,பார்கிங்க்ல கார் கழுவ கெஞ்சியிருப்பேன், பேப்பர் போட்டிருக்கலாம், சிக்னல்ல ஊதுபத்தியும் துண்டும் விக்கறவனா பாத்திருக்கலாம் அப்பாவியா இருக்கானே அடுத்த தடவை வரும்போது பழய சட்டை தரனும்னு நெனைச்சிருப்பீங்க அதுகுள்ள என் கொள்கை எதாவது என்னை வேலைய விட்டு தூக்கியிருக்கும்,"எங்க அந்த பையன்?"ன்னு நீங்க கடைல கேட்டா"அவன் கல்லால கை வெச்சிட்டான், அவன் ஏற்கனவே ஜெயில்ல இருந்தவன்னு எதாவது கேள்விப் பட்டிருப்பீங்க". இப்போ ரொம்ப வருஷமா இங்க இருக்கேங்க.காலைல குளதாங்கரையில குளியல் வேளைக்கு சோறு,ஒண்ணும் தொந்தரவு இல்லைங்க, எப்போ வந்தேன்னு நெனவு இல்ல,தலை தான் கொஞ்சம் பாரமா இருக்கு, முடி வெட்டனும், எவ்வளவு முடி வளந்திருக்குன்னு பாக்கலாம்னா, முடியல, கைய சங்கிலியால கட்டி வெச்சிருக்காங்க.

காரணமே இல்லாம ஒருத்தர் மட்டும் கையில பிரம்போட வந்து எல்லாரையும் அடிக்கிறாருங்க.

"ஒரு வேளை அவர் பைத்தியமோ?"

8 comments:

kashyapan said...

Red all four posting in a streach.I heard about agony and ecstacy.your postings are ecstatic followed by agonising experince.Fine-fine fine-keep it up---kashyapan

பாரதசாரி said...

Dear Shri Kashyapan, I feel elated and honoured by this comment from you.I have to prerve this comment and make sure I continue to do well in this

Hearty thanks!

Anonymous said...

வசிஷ்டர் வாயாலே கிடைத்த பட்டம் இது.. விடாதீங்க பாஸ் தொடர்ந்து எழுதவும்

Pradeep said...

Good one maplaaa

பாரதசாரி said...

Thanks maplai.
do u recognize the character in the other story in below link?

http://paadhasaary.blogspot.com/2010_07_26_archive.html

Anonymous said...

சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

தமிழன் ஒரு இளிச்சவாயன். ‍ ஜடம்.

.

Praveen said...

Padasaari.... arumai...nalla mozi nadai.... Salippindri padikka mudindhadhu....

innum periya siru kadhaiyaaga viriyum endru edhirpaarthen. ezuthil haasyam varuvadhu avvalavu elidhalla....ungalukku varugiradhu.... :)

பாரதசாரி said...

Thanks Praveen ;) pls post your blog link for the benefit of my friends :)

Post a Comment