Thursday, May 3, 2012

முதல் படி - [2]

சனிக்கிழமைகளில் கொஞ்சம் பொறுமையாக எழுந்து , பல் துலக்காமல் காஃபி குடித்து ,என்று பல சோம்பல் நிறைந்த கமாக்களோடு எழுந்திருக்க நினைத்துகொண்டிருந்த என் எண்ணம் வழக்கம் போல் பலிக்கவில்லை. மற்ற நாட்களில் ஏழு மணி வரை அனத்திக்கொண்டே படுத்திருக்கும் தாத்தா பிரதி சனி ஞாயிறுகளில் ஐந்தரைக்கெல்லாம் எழுந்து சத்தமாக சுப்பிரபாதம் அலர வைப்பதும், வீடு முழுக்க தசாங்கமும் , ஊதுபத்தியும் ஏற்றி புகைய விடுவது ,பழைய ட்ரங்க் பெட்டியை கரகரவென்று ஓசைப் படுத்துவது என்று எல்லையில்லா தொல்லைகளைத் தர அவர் தவறுவதே இல்லை.அந்த எரிச்சலில் அவர் பல ஆண்டுகளாக உபயோகிக்கும் டீ.கே.எஸ் பட்டணம் பொடியோடு கொஞ்சம் சிங்கினி பொடியையும் சேர்த்து கலந்து விட்டு அன்றைய தினசரியை மேயத்துவங்கினேன்.சிங்கினியின் வீரியம் தாங்காமல் , கிரிஷ்ஷ்ஷ்ஷ், ப்ருஹாக் , த்ரிஷ்ஷ்ஷ்ஷ் என்று இடைவிடாது தும்மலிசை பின்னனியில் கேட்டுக் கொண்டேயிருந்தது.அவருடைய தும்மல் சத்தத்தையும் மீறி சன்னல் வழியாக ஒரு "ஐயோ: கேட்டது. மேலும் தொடர்ந்து "அம்மா... , இங்க பாரு , தோ பாரு, ஐயோ....".தினசரியை விட்டு விரைந்து எதிர் ஃப்ளாட்டுகுள் முதல் முறையாக கேள்வி கேட்பாரின்றி ஓடி சென்றேன்.என்னைத் தொடர்ந்தபடி அடுத்த சில வீடுகளிலிருந்தும் சிலர் வந்து விட்டனர்.கடைசியாக தாத்தாவும் வந்தார்.


வந்து ஆறு மாதங்களாகியும் சரியான அறிமுகம் இல்லாத அந்த வீட்டில் எண்பத்தியாறு வயது பாட்டியும், அறுபது வயது மகனும் மட்டும் இருந்தனர். எங்கள் முதல் சந்திப்பே மகனின் ஐயோ குரலுடனும் , பாட்டியின் உயிரற்ற உடலுடனும் நடைப்பெற்றது துரதிர்ஷ்டவசமானது தான்.சற்று சலசலப்பும், தழுதழுத்த அவர் குரலும் மட்டும் இருக்க மத்யே மத்யே தாத்தாவின் "இஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாக் , இஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹு" ஒலித்தது அசந்தர்ப்பமாக இருந்தது.எல்லோரும் அவருக்கு ஆறுதலாக ஏதேதோ பேச முற்பட "இன்று சனிக்கிழமை , சனிப்பிணம்..." என்பதை தாத்தாவின் காதுகளுக்கு மட்டும் கேட்பது போல் சொல்லி அவர் முக பாவனையைப் பார்த்தேன்.அவருக்கு தும்மல் நின்று விக்கல் வந்திருந்தது இப்போது.அப்பா தானே சென்று "நல்ல ஆத்மா பாவம் , அதான் கஷ்டப் படாம, போய் செந்துட்டா மகராஜி" என்று ஆறுதல்(!) சொல்லிக் கொண்டிருந்தார் அவரிடம்(வசதிக்காக அவர் பெயர் கண்ணன் என்று வைத்துக் கொண்டேன்.பாட்டிக்கி இனி பெயர் தேவை இல்லை, மேலும் நம்ம ஊரில் எழுபது வயசுக்கு மேலானாலே பெயருக்கு முக்கியத்துவமோ அவசியமோ இருப்பதில்லையே.பாட்டி அல்லது தாத்தா,பால் குறிப்பிடாமல் எங்க ஊர் பக்கம் 'கிழம்' , சென்னையில் "பெருசு" , ஆகவே பெயர் தேவை இல்லை.)."இந்த துணி உளர்த்தும்போது சண்ட போடுவா சனியன்னு அப்பா சொல்லுவாளே அந்த பாட்டி தான அது?" என்று அம்மாவிடம் கேட்க அம்மா பதில் சொல்லவில்லை.அதற்குள்ளாக ஒரு வழியாக தெற்கு திசையைக் கண்டு பிடித்து அல்லது நிர்ணையித்து ,அந்த பாட்டியின் உடலை கிடத்தி வெள்ளைத்துணி, பஞ்சு எல்லாம் தயாராக இருந்தது.இதற்கென்றே "டெத் கிட்" என்று வைத்திருப்பார்களோ என்று நான் அயர்ந்து போகும் வகையில் தயாராகி இருந்தது.துணிக் கொடி சண்டை இல்லை என்று உறுதியானதை அடுத்து அப்பாவின் பரோபகாரம் தொடர்ந்து கொண்டிருந்தது.

"யாருக்காவது ஃபோன் பண்ணனும்னா தாராளமா இங்கயிருந்து பண்ணுங்கோ, பால் வாங்கிண்டு வர்றேன் , வர்றவாளுக்கு , காஃபி இங்க போட்டுடறோம்".நம்மாளான உதவியை செய்வோமென்று நானும் அங்கேயே இருக்க, தம்மாலான உபத்திரவம் செய்ய தத்தாவும் உடனிருந்தார்..

கண்ணன் அப்பாவிடம் "அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் சார் , நீங்க இவ்வளவு சொன்னதே ரொம்ப தெம்பா இருக்கு. ஒரே ஒரு ஃபேவர் மட்டும் பண்ணுங்கோ".


"தயங்காம சொல்லுங்கோ"


"ஒரு கை குடுத்தேள்னா இத கீழ கொண்டு வெச்சுடளாம்" என்று அவர் அந்த பாட்டியின் உடலை கை காட்டியதும், தாத்தாவின் வயிற்றிலிருந்து தண்ணீர் வாலியில் தவக்களை விழுந்தது போல் சத்தம் வந்தது தெளிவாக கேட்டது.


எனது வார இறுதி அந்த இறுதிச் சடங்குகளோடு முடிய , தாத்தாவின் முகம் மிக வாடியிருந்தது. நாலடியில் இருந்த அந்த பாட்டியின் உடலை அந்த மாடிப்படி ஹேர் பின் பெண்டுகளில் திருப்ப முடியாமல் திணறியதைப் பார்த்து அடிக்கடி என்னை மௌனமாக பார்த்தார். அந்த மௌனத்திற்கு அர்த்தம் ""நான் தான் அப்பவே சொன்னேனே " என்பது எனக்கு புரிந்தது.இதுவரை நான் அவர் முகத்தில் பார்க்காத ஒரு இனம் புரியாத தவிப்பு அவரிடம் தெரிந்தது.மிகவும் வாடியிருந்த அவர் முகத்தைப் பார்க்க எனக்கு பாவமாக இல்லை.தனக்கும் மர அலமாரியின் கதி தானோ என்று அவர் நினைப்பது அப்படமாக முகத்தில் தெரிந்தது .

அன்று முதல், பதிப்பின் தலைப்பு அவருடைய தலைமைச் செயலகம் ஆகிவிட்டது.இரவு பத்து மணிக்கு ஆஃபீஸ் விட்டு திரும்பும்போது வீட்டுக்கு ஏறும் முதல் படியில் என்றும் இல்லாத திருநாளாய் உட்கார்ந்து பொட்டுக் கடலை சாப்பிட்டு கொண்டிருந்தார்.

"என்ன இங்க ஒக்காந்திருக்கேள்?ஆத்துக்குக்கு போங்கோ" என்றதற்கு சூள் கொட்டியபடி,

"ஆகமாம் பெரிய ஆகம், வீடுன்னு சொல்லு.மார லேச வலிச்சுது , அதான் இங்க வந்துடுவோம்னு வந்துட்டேன்" என்று இருப்பிடத்திற்கு கூட சாதியம் பூசினார். "அது சரி மாரு, வலிக்கு பொட்டு கடலை ரொம்ப நல்லது. (மனதிற்குள்:கண்டத திங்க வேண்டியது அப்புறம் ,சும்மா மாரு வலி, மயிறு வலிங்க வேண்டியது) " என்றவாறு நான் வீட்டுகுள் வந்து விட்டேன்.சின்ன தலைவலி, கால் குடைச்சல் என்றால் கூட அங்கு வந்து விடுவதை பாதுகாப்பாக கருதினார். மழைக்காலமாக இருந்ததால் ஒரு கருப்பு நாயும் மாடிப்படி வளைவில் தூங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்தது."நீங்க கெட்டது போறாதுன்னு அந்த கருப்பு நாயையும் சேத்து கெடுத்து வெச்சிருக்கேள்" என்று சொல்லியும் அவர் அங்கு செல்வதை நிறுத்தவில்லை. இரவு பத்தரைக்கு மேல மாடிப்படியில் விளக்கு எரிந்தால் , அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் சண்டைக்கு வருவார்கள்."காமன் கணக்குல பில்லு எகிறும்" என்பது அவர்களது வாதம்.விளக்கில்லாமல் இவர் போய் உட்காருவதுமில்லை.நாயை (அதற்கும் பெயர் அவசியமில்லை) மிதித்து விட்டால் என்ன ஆகும் என்ற அச்சத்தால், நான் விளக்கை அணைத்ததும், "டேய் கோபாலா விளக்கைப் போடு, தோ வந்துட்டேன்" என்று கத்திக் கொண்டே மேலே வந்தார்.அவர் மேலே ஏறுவதை பின்னாலிருந்து பார்க்க இடுப்புக்கு கீழே, மேல் பகுதி ட்ரௌசர் போலவும் கீழ் பகுதி மட்டும் வேட்டி போலவும் இருந்தது.
மேலே வந்ததும் வராததுமாக புலம்பினார்."பகவானே..செத்ததுக்கப்பறம் நாறாம போகனும்...".கேட்காதது போல் பாவனை செய்த நான் "அம்மா, பருப்பு உசிலி செய்யறன்னிக்கி ஏசீ போடாம, சன்னல் கதவ நன்னா தொறந்து வை.நாத்தம் கொடல பொரட்டறது."என்று ரூம் ஃப்ரெஷ்னர் அடித்து விட்டேன்."இருக்கும்போது எவ்வளவு வேணுமோ நாறலாம் , இல்ல?" என்பது என் செய்கை என்பது அவருக்கு புரிந்ததா என்பதை பற்றி எனக்கு கவலை இல்லை.பொதுவாக விளக்கை அணைப்பதை விட மிகவும் வீரியம் கொண்ட ஒரு உத்தியையும் கைவசம் வைத்திருக்கிறேன்."மெட்டியொலி" நெடுந்தொடரின் துவக்க பாடலை வேலை மெனக்கட்டு பதிவு செய்து வைத்திருக்கிறேன். அதை கொஞ்சம் சத்தமாக வைத்தால் போதும் , கருவாட்டு கூடையை வட்டமிடும் பூனைப் போல் எங்கிருந்தாலும் மேலே வந்துவிடுவார்.ஆச்சு பாட்டு முடியப் போகிறது, இன்னும் சத்ததைக் காணோம்.கீழே போய் பார்க்க எத்தனிக்கும் முன் ஊளை விட்டது பெயரிடப் படாத கருப்பு நாய்.
.

5 comments:

சிலுக்கு ஜிப்பான் said...

மறைந்த சுஜாதாவின் சிறுகதைகளை போலவே இருக்குது. இருந்தாலும் பொதுவா இந்த மாதிரி கிழவாடிங்க எல்லாம் நல்லா கின்னுனு தான் இருக்கும், எதிர் பாரா விதமா நடுவயதுகாரங்கத்தான் பொசுக்குனு போய்டுவாங்க

மதன் said...

அருமை அருமை நடுவுல நடுவுல நக்கலுக்கும் குறச்சலே இல்ல :) தாத்தா பாவம் தல இப்படியா பண்ணறது :)

சேக்காளி said...

தும்மலோசை,அவருக்கு தும்மல் நின்று விக்கல் வந்திருந்தது ,நம்மாளான உதவியை செய்வோமென்று நானும் அங்கேயே இருக்க, தம்மாலான உபத்திரவம் செய்ய தத்தாவும் உடனிருந்தார்.சிரிப்பை வரவழைத்த சொற்பிரயோகங்கள்.

மோகன்ஜி said...

நலமா சகோதரரே! வலைப் பக்கம் வந்து நாட்கள் பல ஆகுதே? வாரும்.. நல்ல எழுத்தை நாங்கள் படிக்காமல் இருக்கலாகுமோ?

பாரதசாரி said...

(Mohanji)மிக்க‌ ந‌ல‌ம் அண்ணா. :) ய‌ரும் ப‌டிப்ப‌தில்லையோ என்று நினைத்து எழுதுவதில் சற்று சுணக்கம் ஏற்பட்டுவிட்டது...இனி அடிக்கடி கடிக்கிறேன், அதாவது எழுதுவேன்:)

Post a Comment